‘எனது கொள்ளுத் தாத்தா சுப்பிரமணிய பாரதியாரின் பெயரை ‘மகாகவி’ என்று முதன்முதலில் உலகத்துக்கு உச்சரித்தவர் இலங்கையின் கிழக்கு மண் பெற்றெடுத்த முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரேயாவார். பாரதியின் ஆக்கங்களை முதன்முதலில் உலகத்துக்கு எடுத்துக்காட்டிய பெருந்தகையும் சுவாமி விபுலானந்த அடிகளார் தான். இவ்வாறு மட்டக்களப்புக்கு வருகை தந்த எட்டயபுரத்து முண்டாசுக் கவிஞன், பாட்டுக்கொரு புலவன், புதுமைக் கவிஞன் சுப்பிரமணிய பாரதியாரின் கொள்ளுப் பேரன் கலாநிதி ராஜ்குமார் பாரதி தெரிவித்தார்.
மட்டக்களப்புக்கு சில தினங்களுக்கு முன்னர் வருகை தந்த ராஜ்குமார் பாரதி, மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் மகளான தங்கம்மாவின் புதல்வி லலிதா பாரதிக்கு மகனாகப் பிறந்தவர். ராஜ்குமார் அவர்கள் இலத்திரனியல் மற்றும் தொலைத்தொடர்பாடல் பொறியியலாளரும் இந்தியாவின் பிரபல கர்நாடக இசைக் கலைஞரும் பின்னணிப் பாடகரும் ஆவார்.
அவர் தனது வாழ்க்கையில் முதன் முறையாக மட்டக்களப்புக்கு விஜயம் செய்தார். அவருக்கு இங்கு பாரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருக்கு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திலும், கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தர் அழகியல் கற்கைகள் நிறுவனத்திலும், கல்லடி இராமகிருஷ்ண மிஷன் ஆச்சிரமத்திலும் பெருவரவேற்பளிக்கப்பட்டது.
அவரை கல்லடி இராமகிருஷ்ண மடத்தில் தினகரனுக்காக நான் சந்தித்து சிறிது நேரம் அளவளாவினேன்.
கேள்வி: மட்டக்களப்பு மண்ணில் காலடி பதித்த போது உங்களுக்கு ஏற்பட்ட உணர்வு எவ்வாறு இருந்தது?
பதில்: இந்த மண் சுவாமி விபுலாநந்தர் அவதரித்த மண் அல்லவா! அவர் பிறந்து வளர்ந்த இந்த மண்ணில் காலடி எடுத்து வைத்த பொழுது ஒருவித புத்துணர்ச்சியும் மகிழ்ச்சியும் எனக்கு ஏற்பட்டது. விபுலானந்த சுவாமிகள் எனது கொள்ளுத் தாத்தா பாரதிக்கு அளித்த மாபெரும் கௌரவத்தை நான் நினைத்துப் பார்க்கிறேன்.
முத்தமிழ் வித்தகர் விபுலாநந்த அடிகளாரை நினைவு கூருமுகமாக, நன்றி கூருமுகமாக நான் முதல் தடவையாக இங்கு வருகை தந்திருக்கின்றேன். எனது வாழ்க்கையில் இன்று மறக்க முடியாத நாள். மிகவும் சந்தோஷமாக உள்ளது. உண்மையிலேயே பாரதியாரை இன்றும் இலங்கை மக்கள் இத்துணை நேசிக்கின்றார்கள் என்றால் அதற்குக் காரணம் அவரது படைப்புகள்.
கேள்வி: பாரதிக்கும், விபுலாநந்த அடிகளாருக்கும் உள்ள தொடர்புகளைப் பற்றி சிறிது கூற முடியுமா?
பதில்: பாரதியின் படைப்புகளை உலகுக்கு வெளிக்கொணர்ந்தது விபுலாநந்த சுவாமிகளேயாவார்.
இந்த உண்மை இன்றைய தலைமுறையினர் பலருக்குத் தெரியாது. பாரதியார் ஒரு புதுமைக் கவிஞர், ஒரு நூற்றாண்டின் சிறந்த சிந்தனையாளர். அவர் கவிதைகளை எழுதிக் குவித்தார். ஆனால் அவரது படைப்புகள் வெளியுலகுக்குத் தெரியவராமலேயே இருந்தன. அவ்வாறான புதுமைக் கவிஞனின் அரிய படைப்புகளை தமிழுலகுக்கு, உலகின் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தவர் சுவாமி விபுலாநந்தர் என்பதை நான் பெருமையாக இங்கு கூறுகின்றேன்.
‘பாட்டுக்கு ஒரு புலவன் பாரதியார்’ என்று அன்று தொடக்கம் இன்றுவரை பேசப்பட்டு வருகின்ற எனது கொள்ளுத் தாத்தாவின் பெயரை முதன் முதலில் ‘மகாகவி’ என்று உச்சரித்தவர் சுவாமி விபுலானந்தர். எனவே அவரது நாமத்திலே இயங்கும் இந்தக் கல்வி நிறுவனத்திற்கு வருகை தந்து உரையாற்றியதையிட்டு மிகவும் சந்தோஷம் அடைகின்றேன்.
கேள்வி: பெண் விடுதலைக்காக அக்காலத்திலேயே உரத்துக் குரல் கொடுத்த புதுமைக் கவிஞன் பாரதி என்பதில் பெண் குலம் பெருமை கொள்கின்றது. இலங்கைக்கு வருகை தந்துள்ள நீங்கள் எமது பெண்களுக்கு ஏதாவது கூற விரும்புகின்றீர்களா?
பதில்: இலங்கையில் பெண் ஆளுமைகள் பலருடன் உரையாடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. பாரதி கண்ட புதுமைப் பெண்கள் பலரை நான் இங்கு சந்தித்தேன். இங்குள்ள பெண்கள் பலர் நவீன சிந்தனையும் ஆளுமையும் கொண்டவர்களாக விளங்குகின்றார்கள். அவர்களையிட்டு பெருமைப்படுகின்றேன். பாரதி இன்று உயிருடன் இருந்திருந்தால் இங்குள்ள பெண்கள் பலர் குறித்து மகிழ்ச்சியடைந்திருப்பார்.
இவ்வாறு பாரதியாரின் கொள்ளுப்பேரன் கலாநிதி ராஜ்குமார் பாரதி தினகரனுக்கான சந்திப்பின் போது கருத்துத் தெரிவித்தார். மட்டக்களப்பு, கல்லடி இராமகிருஷ்ண மிஷன் இல்லத்திற்கு வருகை தந்த கலாநிதி ராஜ்குமார் அவர்களை பாரதி இல்ல பொதுமுகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் வரவேற்றார்.
கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அடிகளார் அழகியல் கற்கை நிறுவகத்தின் பணிப்பாளர் பேராசிரியர் புளோரன்ஸ் பாரதி, பேராசிரியர் சி. மௌனகுரு, உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி. சகாதேவராஜா, காரைதீவு பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் ஆகியோரும் இந்நிகழ்வில் பங்கேற்றார்கள். இல்ல மாணவர்களுடன் அளவளாவிய கலாநிதி ராஜ்குமார் பாரதியாரின் பாரதியார் பாடல்களை நினைவுகூர்ந்தார்.
இதேவேளை மகாகவி பாரதியாருடைய கொள்ளுப்பேரன் கலாநிதி இராஜ்குமார் பாரதி மட்டக்களப்பு சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவனத்திற்கும் விஜயம் செய்தார்.
செப்டெம்பர் மாதம் 11ஆம் திகதி (நாளை) பாரதியாரின் நினைவு நாளாகும். இதனை முன்னிட்டே கலாநிதி ராஜ்குமார் பாரதி மட்டக்களப்புக்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் நிறுவகத்தின் பணிப்பாளர் பேராசிரியர் புளோரன்ஸ் பாரதி கென்னடி தலைமையில் மாபெரும் நிகழ்வு இடம்பெற்றது. அந்நிகழ்வுக்கு ஆன்மீக அதிதியாக சுவாமி நீலமாதவனானந்தஜீ மஹராஜ், முன்னிலை அதிதியாக கிழக்குப் பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் மா.செல்வராசா, பிரதம அதிதியாக கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வ.கனகசிங்கம், சிறப்பு அதிதியாக பேராசிரியர் சி. மௌனகுரு ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.
இந்நிகழ்வில் பாரதியாருடைய கவி வரிகளில் உருவாக்கப்பட்ட பாடல்களுக்கு இசையூட்டப்பட்டு இசை ஆற்றுகைகளாகவும் நடன ஆற்றுகைகளாகவும் இடம்பெற்றன.
அத்தோடு, மஹாகவி பாரதியாருடைய கொள்ளுபேரனாகிய கலாநிதி ராஜ்குமார் பாரதி அவர்களின் மட்டக்களப்பு வருகையைத் தடம்பதிக்கும் முகமாக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் முன்னால் அமைந்துள்ள பிரதான வீதியில் சுவாமி விபுலானந்தரினால் ஆராய்ச்சி செய்யப்பட்ட யாழ் ஒன்றும் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. ராஜ்குமார் பாரதிக்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜாவினால் கௌரவம் வழங்கப்பட்டது. மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.
வி.ரி.சகாதேவராஜா
காரைதீவு குறூப் நிருபர்