Home » ஆசிய கிண்ணம்: முடிவை தீர்மானிக்கும் மழை

ஆசிய கிண்ணம்: முடிவை தீர்மானிக்கும் மழை

by admin
September 10, 2023 11:32 am 0 comment

ஆசிய கிண்ண போட்டி இப்போது இறுதிக் கட்டத்தை எட்டி இருக்கிறது. சுப்பர் போஃர் சுற்றின் எஞ்சிய நான்கு போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டியே மிச்சம். அதிலும் இன்று (10) பரபரப்பான இந்திய–பாகிஸ்தான் போட்டி நடைபெறுகிறது.

யார் ஆசிய கிண்ணத்தை வெல்வார்கள், எந்த அணி சிறப்பாக செயற்படுகிறது, எந்த அணி தடுமாறுகிறது என்ற கதைகள் ஒரு பக்கம் இருக்க மழையின் ஆட்டம் பற்றிய கவலை தான் இப்போது எல்லோருக்கும் பெரிதாக தெரிகிறது.

ஆசிய கிண்ணத்தின் எஞ்சிய போட்டிகள் அனைத்தும் கொழும்பு, ஆர். பிரேமதாச மைதானத்தில் தான் நடைபெறப்போகிறது. கொழும்பு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் அடுத்த 10 நாட்களுக்கு மழையுடன் கூடிய காலநிலை தான் நிலவும் என்று காலநிலை அவதான நிலையம் தெளிவாகச் சொல்லிவிட்டது.

என்றாலும் போட்டிகளை திட்டமிட்டபடி கொழும்பிலேயே தொடர்வதற்கு பிரதானமாக ஆசிய கிரிக்கெட் கெளன்சில் தீர்மானித்துவிட்டது. எனவே, போட்டியின் தலைவிதி என்பது முழுக்க முழுக்க மழையின் கையிலேயே தங்கியிருக்கிறது.

இம்முறை ஆசிய கிண்ணப் போட்டியை நடத்துவதற்கு பாகிஸ்தான் தேர்வு செய்யப்பட்டது தொடக்கம் இருந்து வந்த பனிப் போரின் உச்சம் தான் இந்த மழையா? கிரிக்கெட்டா? என்ற போட்டிக்குக் காரணம்.
ஆரம்ப சுற்றில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போட்டியை பார்த்து மழை பெய்ய காலநிலை பற்றிய கவலை எல்லோருக்கும் எழுந்தது.

கண்டி, பல்லேகலவில் செப்டெம்பர் 2 ஆம் திகதி நடைபெற்ற அந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸ் நன்றாகத்தான் இருந்தது. இந்தியா 267 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்த நிலையில் அந்த ஆடு களத்தில் அது ஒரு சரிசமமான வெற்றி இலக்காக இருந்ததால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

என்றாலும் இடைவிடாது பெய்த மழையால் பாகிஸ்தானால் துடுப்பெடுத்தாடவே முடியாமல் போனது. அதாவது சுமார் நான்கு ஆண்டுகளின் பின் ஒருநாள் சர்வதேச போட்டி ஒன்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் எதிர்த்தாடிய போட்டி இப்படி வீணானது என்பது பெருத்த ஏமாற்றம்.
தொடர்ந்து இந்தியா மற்றும் நேபாள அணிகளுக்கு இடையிலான போட்டியிலும் மழை தலைகாட்டிவிட்டு சென்றது. ஓவர்கள் குறைக்கப்பட்டு போட்டி தப்பித்துக்கொண்டது.

இத்தனை காலமும் வெய்யில் சுட்டெரித்த நிலையில் எப்போது ஆசிய கிண்ணம் ஆரம்பித்ததோ அப்போது இலங்கையின் பல பகுதிகளில் மழை கொட்டுகிறது. அதிலும் கொழும்பில் ஒரு வாரத்திற்கு முன் இருட்டிய வானம் இன்னும் முழுமையாக விடியவில்லை. கடந்த வாரம் பெய்த கனத்த மழையால் கொழும்பின் சில பகுதிகளில் மழை நீர் தேங்கி முழங்காலுக்கு மேலே வெள்ளம் ஏற்பட்டது. அதுவும் ஆசிய கிண்ணப் போட்டியின் இறுதிக் கட்ட ஆட்டங்கள் நடைபெறும் ஆர். பிரேமதாச மைதானத்திற்கு அருகில் தான் பாதிப்பு அதிகம்.

ஆசியக் கிண்ணத் தொடரை கலப்பு முறையில் நடத்தி அதன் பெரும்பாலான போட்டிகளை இலங்கைக்கு மாற்றியது பற்றி பாகிஸ்தான் கிரிக்கெட் சபை முழு திருப்தி அடையவில்லை. இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்ததை அடுத்தே போட்டிகள் இலங்கை பக்கம் திரும்பியது.
ஆசிய கிண்ணத்தை நடத்தும் நாடாக பாகிஸ்தான் இருந்தபோதும் அங்கே நான்கு போட்டிகள் மாத்திரமே ஒதுக்கப்பட்டன. எஞ்சிய போட்டிகள் அனைத்தும் இலங்கையில் நடைபெறுகின்றன.
இந்த முடிவுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் செல்வாக்கு மிக முக்கிய பங்கு வகிப்பது தெளிவானது.

கலப்பு முறையில் நடத்துவதாக இருந்தால் போட்டிகளை டுபாய்க்கு கொண்டு செல்ல பாகிஸ்தான் பரிந்துரைத்தபோதும் ஆசிய கிரிக்கெட் கெளன்சில் சம்மதிக்கவில்லை. செப்டெம்பரில் டுபாயில் அதிக வெப்பமாக இருக்கும் என்பது தான் அதனை மறுப்பதற்கு கூறப்பட்ட பிரதான காரணம்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் செயலாளர் ஜெய் ஷா தான், ஆசிய கிரிக்கெட் கெளன்ஸின் தலைவராகவும் இருக்கிறார் என்ற பின்னணியில் பெரும் இழுபறிக்குப் பின்னர் தான் போட்டிகள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டன.

என்றாலும் இலங்கையில் மழை பெய்வதை பார்த்த பாகிஸ்தான் கிரிக்கெட் சபை ஏமாற்றத்தை வெளியிட்டதோடு, போட்டிகளின் இடங்களை மாற்றவும், ஏன் போட்டிகளை இலங்கையில் இருந்து வெளியே கொண்டு செல்லவும் கடந்த சில நாட்களாக முயன்றது.

இலங்கையில் வடகிழக்கு பருவமழை பொதுவாக ஒக்டோபர் மாதத்திலேயே உருவாகும் என்றபோதும் அதனை ஒட்டிய செப்டெம்பர் மாதம் என்பது உண்மையில் நிச்சயமற்ற காலப்பகுதி தான். பொதுவாக ஒகஸ்ட், செப்டெம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்கள் என்பது மழை எப்போது பெய்யும், எப்போது நிற்கும் என்று தெரியாத காலம்.

என்றாலும் அண்மைய ஆண்டுகளில் செப்டெம்பர் மாதங்களில் ஆர். பிரேமதாச அரங்கில் நடைபெற்ற ஆட்டங்கள் முழுமை பெற்றிருக்கின்றமை ஆறுதல் செய்தி. அதாவது 2015 ஆம் ஆண்டு தொடக்கம் ஐந்து டி20 சர்வதேச போட்டிகள் மற்றும் நான்கு ஒருநாள் சர்வதேச போட்டிகள் இடம்பெற்றிருக்கின்றன. இதில் இரண்டு போட்டிகள் மழையால் ஓவர்கள் குறைக்கப்பட்டபோதும் அனைத்து போட்டிகளும் முழுமையாக நடைபெற்றிருக்கின்றன.

காலநிலையை பொறுத்தவரை இப்படியான புள்ளிவிபரங்கள் என்பது பொத்தாம் பொதுவானது. கடந்த எட்டு ஆண்டுகளில் எத்தனை செப்டெம்பர் மாதங்களில் கிரிக்கெட் போட்டிகள் கொழும்பில் நடைபெற்றிருக்கின்றன? என்று கேள்வி எழுப்பினால் புள்ளிவிபரம் பொய்த்துவிடும்.

2002 செப்டெம்பர் மாதம் இலங்கையில் நடந்த சம்பியன்ஸ் கிண்ணப் போட்டி நல்ல உதாரணம். ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி இரண்டு நாட்கள் நடத்தப்பட்டன. என்றாலும் இரண்டு நாட்களும் மழை குறுக்கிட்டதால் கிண்ணத்தை இரு அணிகளும் பகிர்ந்துகொள்ள வேண்டி ஏற்பட்டது.

2012 செப்டெம்பர் மற்றும் ஒக்டோபர் மாதத்தில் இலங்கையில் டி20 உலகக் கிண்ணம் நடைபெற்றபோது கூட சில போட்டிகளுக்கு மழை தடங்கலாக இருந்தது. என்றாலும் கூறுகிய கால போட்டி என்பதால் ஆட்டத்தை அது பெரிதாகப் பாதிக்கவில்லை.

எனவே செப்டெம்பர் மாதத்தில் கொழும்பில் போட்டிகளை நடத்துவது என்பது மழையால் இடையூறு ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம் இருப்பதாக அர்த்தம். கண்டி பல்லேகலவிலும் இதே நிலைமை தான். மாற்றாக தம்புள்ளை மற்றும் ஹம்பாந்தோட்டை இருக்கின்றன, ஆனால் அதிலும் எத்தனையோ நடைமுறை சிக்கல்கள்.

உண்மையில் சுப்பர் போர் போட்டிகளை கொழும்புக்கு வெளியில் நடத்துவதற்கு கடந்த சில நாட்கள் தீவிர பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கும் ஆசிய கிரிக்கெட் கெளன்சிலுக்கும் போட்டியை ஹம்பாந்தோட்டைக்கு மாற்றுவதற்கு இணக்கமும் எட்பட்டது. என்றாலும் கடைசி நேரத்தில் ஆசிய கிரிக்கெட் கெளன்சில் தனது முடிவை மாற்றிக் கொண்டது பாகிஸ்தானுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் கடந்த திங்கட்கிழமை (04) வழங்கிய முன்னறிவித்தலில் அடுத்த பத்து நாட்களுக்கு கொழும்பில் மழை பெய்வதாக கூறி இருந்தது. திங்கட்கிழமை மாலையாகும்போது போட்டியை ஹம்பாந்தோட்டைக்கு மாற்றுவது கிட்டத்தட்ட நிச்சயமாகி இருந்தது.
என்றாலும் அடுத்த நாள் நண்பகல் தாண்டும்போது ஆசிய கிரிக்கெட் கெளன்சிலின் நிலைப்பாட்டில் திடீர் மாற்றம் ஏற்பட்டது. உறுப்பு நாடுகளுக்கு அது அனுப்பிய மின்னஞ்சலில் போட்டிகள் திட்டமிட்டபடி கொழும்பிலேயே நடைபெறும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த முடிவு பாகிஸ்தானுக்கு தலைகால் புரியவில்லை. முடிவு எடுக்கப்படும் முன் அது பற்றி போட்டியை நடத்தும் நாடு என்ற வாகையில் பாகிஸ்தானுடன் ஆலோசிக்கப்படவில்லை.
முடிவை எதிர்த்து ஜெய் ஷாவுக்கு கடிதம் அனுப்பிய பாகிஸ்தான் கிரிக்கெட் சபை, ஆசிய கிரிக்கெட் கெளன்சிலின் அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. என்றாலும் இது தொடர்பில் பாகிஸ்தான் எதிர்ப்புக் காட்ட முடியுமான வரம்பு என்பது மிக மட்டுப்படுத்தப்பட்டது. போட்டிகளில் இருந்து வெளியேறுவது போன்ற தீவிர முடிவுகளுக்கு செல்ல முடியது. எனவே, அது இந்த முடிவையும் ஏற்றது எதிர்பார்த்ததே.

உண்மையில் ஹம்பாந்தோட்டை மற்றும் தம்புள்ளையில் போட்டியை நடத்துவது இந்தக் காலப்பகுதியில் பொருத்தமானது. அதிலும் தம்புள்ளை உலர் வலயத்தில் இருப்பதால் மழை பற்றி பயப்படத் தேவையில்லை. ஆனால் தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் மின் விளக்கு என்பது இரவில் விளையாடுவதற்கு போதுமான வெளிச்சம் தருவதாக இல்லை. இங்கு பகலிரவு போட்டி ஒன்று நடத்தப்பட்டு ஐந்து ஆண்டுகள் ஆகிறது. மின் விளக்குகளை மேம்படுத்தும் பணிகளை இலங்கை கிரிக்கெட் சபை தற்போது செய்து வருகிறது.

மற்றது உலர் வலயத்திற்கு அருகில் இருக்கும் ஹம்பாந்தோட்டை. இங்கே காட்டுப் பகுதி ஒன்றை அண்டிய சூரியவெவ சிறு நகரிலேயே மஹிந்த ராஜபக்ஷ கிரிக்கெட் மைதானம் இருக்கிறது. மைதானத்திற்கு அருகில் நட்சத்திர ஹோட்டல் வசதிகள் இல்லை. அதற்கு கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் வரை பயணிக்க வேண்டி இருக்கும்.

எனவே திடுதிடுப்பென்று போட்டியை ஹம்பாந்தோட்டைக்கு மாற்றுவது என்பது சாத்தியம் குறைவு. முதலில் கிரிக்கெட் வீரர்கள், அதிகாரிகள், வர்ணனையாளர்கள் மற்றும் ஒளிபரப்பு பணியாளர்களுக்கு தங்குவதற்கு வசதி இருக்க வேண்டும். முன்பதிவு இன்றி ஹோட்டல்களில் இட வசதி தேடுவது கடினமானது. அதேபோன்று ஒளிபரப்பாளர்கள் அதற்கான சாதனங்களை எடுத்துச் செல்வது, வைத்திருப்பது என்று எத்தனையோ பிரச்சினைகள் இருக்கின்றன.

மற்ற மிகப்பெரிய பிரச்சியை ரசிகர்கள். வெளிநாட்டில் இருந்து போட்டியை பார்க்க வந்த ரசிகர்கள். ஏற்கனவே கொழும்பில் போட்டியை பார்ப்பதற்கு ரசிகர்கள் தயாராகிவிட்டார்கள். இந்த நிலையில் அதனை வேறு இடத்திற்கு மாற்றுவது என்பது அவர்களுக்கும் சிரமத்தை ஏற்படுத்தும்.
எனவே, ஆசிய கிரிக்கெட் கெளன்ஸில் எடுத்த முடிவின் நடைமுறை சாத்தியம் புரிந்துகொள்ளக் கூடியதாகவே இருக்கிறது.

என்றாலும் கிரிக்கெட் போட்டிகள் என்று வரும்போது மழை என்பது அதிகம் தாக்கம் செலுத்தும் ஒன்று. அடிப்படையில் மழை பெய்யும்போது கிரிக்கெட் ஆட முடியாது. முதலில் வீரர்களின் பாதுகாப்புக்கு அது அச்சுறுத்தலானது. மைதானம் ஈரலிப்பாவதால் களத்தடுப்பில் ஈடுபடும் வீரர்கள் மற்றும் துடுப்பெடுத்தாடும் வீரர்கள் ஓடும்போது வழுக்கி விழும் ஆபத்து இருக்கிறது. மற்றது மழையால் ஆடுகளம் சேதமடைவது முழு போட்டி முடிவிலும் பாதிப்பு செலுத்தும் ஒன்று.

ஹம்பாந்தோட்டை மற்றும் தம்புள்ளை போன்ற பகுதிகளில் சர்வதேச மைதானங்கள் கட்டப்பட்டது இந்தப் பிரச்சினைக்கு தீர்வாகவே பார்க்கப்பட்டது. என்றாலும் இந்த மைதானங்கள் அதன் முழுப் பயனையும் பெறாமல் இருப்பது யாருடைய தவறு என்று புரியவில்லை.

ஆரம்பத்தில் இருந்தே இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான அரசியல் குழப்பம் இம்முறை ஆசிய கிண்ணத்தை முழுமையாக குழப்பிவிட்டது. இந்தியா பாகிஸ்தான் செல்ல மறுத்தது தொடக்கம் இப்போது மழை குறுக்கிடும் வரை விடாப்பிடி முடிவுகளும், அவசரத் தீர்வுகளும் போட்டியை பாதித்திருக்கிறது.

பாகிஸ்தானில் நிலவும் பாதுகாப்பு மற்றும் பொருளாதார பிரச்சினைகளே கலப்பு முறையில் போட்டியை நடத்துவதற்கு காரணம் என்று ஜெய்ஷா குறிப்பிடுகிறார். என்றாலும் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் 2019 தொடக்கம் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் ஆடுகின்றன.

அதேபோன்று இம்முறை ஆசிய கிண்ண தொடரின் நான்கு போட்டிகள் பாகிஸ்தானில் நடந்தபோது எந்த பிரச்சினையும் ஏற்பட்டதாக தெரியவில்லை. அது பற்றி அங்கு சென்ற அணிகளும் எதுவும் கூறவில்லை.

ஆசிய கிண்ண தொடரில் கலந்திருக்கும் அரசியல் இப்போது போட்டி முடிவுகளையும் பாதிக்கும் அளவுக்கு மாறிவிட்டது.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division