டென்மார்க், வயன் நகரில் வாழும் புலம்பெயர் தமிழரும் சமூக செயற்பாட்டாளருமான தருமன் தர்மகுலசிங்கம் வெஸ்டெர் லாண்ட் நீதிமன்றத்தின் ஜூரராக மூன்றாண்டு காலத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளார். டென்மார்க் சோஷல் டெமக்கிரட்டி கட்சியின் முக்கிய உறுப்பினரான தருமன் தர்மகுலசிங்கம், கடந்த 12 வருடங்களாக நீதிமன்ற ஜூரர் பதவி வகித்து வந்ததுடன், அவருக்கு இந்தப் பதவி நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.
டென்மார்க்கின் மிகப்பெரிய வழக்குகளை விசாரிக்கும் மன்றமாக வெஸ்டெர் லாண்ட் நீதிமன்றம் திகழ்கின்றது. இவ்வாறானதொரு முக்கியமான நீதிமன்றத்தில் தமிழர் ஒருவர் ஜூரர் பதவிக்கு நியமனமாகியுள்ளமை உலகத் தமிழருக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகும். டென்மார்க்கின் அரசியல், சமுதாயம், கலை, இலக்கிய வரலாற்றில் பல காத்திரமான பணிகளை செய்துவரும் தர்மகுலசிங்கம், டெனிஸ் மொழியின் அற்புதமான படைப்புகளை படைத்த ‘அனசன்’ கதைகளை தமிழ் இலக்கிய உலகுக்கு வழங்கியுள்ளார்.
அத்துடன், 2002ஆம் ஆண்டு காலப்பகுதியில் இவர் தலைமை தாங்கிய லயன் நகர கலை இலக்கிய மன்றம், இலங்கைக்கு சமாதான பயணத்தை மேற்கொண்டு, தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் விடுதலைப் புலிகளின் தலைவரையும் சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. நீதித்துறையில் நீண்டகால அனுபவமுள்ள தர்மகுலசிங்கம், டென்மார்க்கில் நீதியின் பாதையில் தமிழர்கள் பயணிக்கிறார்கள் என்பதற்கு சிறந்த முன்னுதாரணமாக விளங்கி வருகிறார்.
சிறுபராயம் முதல் இடதுசாரி கொள்கையை பற்றிப் பிடித்த அவர், இன்றும் அதே பாதையில் பயணித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.