ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களினூடாக தமது நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் கூற்றுக்களை வெளியிட்டுள்ளமைக்காக ரயில்வே தொழிற்சங்க முக்கியஸ்தர் இந்திக தொடங்கொடவிடம் நட்டஈடாக ஒரு பில்லியன் ரூபா கோரி தனது சட்டத்தரணியினூடாக ஊடகத்துறை மற்றும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
ரயில்வே மேம்பாட்டு தொழிற்சங்க கூட்டமைப்பின் இணைப்பாளரான இந்திக தொடங்கொடவுக்கே அமைச்சர் பந்துல குணவர்தன இந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளார்.
அமைச்சர் பந்துல, தனது சட்டத்தரணி மினோலி ரொஷனாரா அலெக்சென்ட்ரா மூலம் செப்டெம்பர் 15ஆம் திகதியிடப்பட்டு அந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளதுடன், நட்டஈட்டை 14 நாட்களுக்குள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அவ்வாறு அதனை வழங்கத் தவறினால், அவரால் ஊடகங்கள் மூலம் வெளியிடப்பட்டுள்ள கூற்றுக்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப் போவதாகவும் தனது கடிதத்தில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இனியும் அவ்வாறான கூற்றுக்களை வெளியிட்டு தமது தரப்பின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதற்கு முயற்சித்தால், அது தொடர்பாக எந்த முன்னறிவித்தலுமின்றி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அமைச்சரின் சார்பாக அவரது சட்டத்தரணி அந்தக் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
மீரிகம முதல் மஹரவரை ரயில் பாதை சமிக்ஞை பொருத்தும் திட்டம் தொடர்பாக கடந்த செப்டெம்பர் 14ஆம் திகதி ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் இந்திக தொடங்கொட, அமைச்சர் பந்துல குணவர்தனவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் கூற்றுக்களை தெரிவித்துள்ளாரென்பதும் அவருக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அமைச்சருக்கு எதிராக மிக மோசமான வகையில் பாரிய குற்றச்சாட்டை முன்வைப்பதாக அவரது கூற்றுக்கள் அமைந்துள்ளதுடன், போக்குவரத்து அமைச்சர் என்ற முறையில் அவர் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக இந்திக தொடங்கொட தெரிவித்துள்ள கூற்று, ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளதையும் சட்டத்தரணி அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேற்படி மோசமான கூற்றுக்கள் மூலம் சிறந்த அரசியல்வாதியும் சிறந்த கல்விமானுமாகிய தமது தரப்பின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதை பொறுத்துக்கொள்ள முடியாத பெரும் பாதிப்பு மற்றும் இழிவு ஏற்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணி அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்