Home » மக்களை மரணப்பொறிக்குள் தள்ளும் பணிப்பகிஷ்கரிப்புகள்!

மக்களை மரணப்பொறிக்குள் தள்ளும் பணிப்பகிஷ்கரிப்புகள்!

by Damith Pushpika
September 17, 2023 5:35 am 0 comment

ரயில்வே திணைக்களத்தின் சில தொழிற்சங்கங்கள் இவ்வாரத்தின் ஆரம்பத்தில் முன்னெடுத்த திடீர் வேலைநிறுத்தப் போராட்டம் மக்களுக்குப் பாரிய சிரமங்களை ஏற்படுத்தியிருந்தது. ரயில்வே துறையில் லொக்கோமோட்டிவ் என்ஜின் சாரதிகளே இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதனால் 119 ரயில் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டது மாத்திரமன்றி, இரண்டு அப்பாவி உயிர்களையும் பலிகொடுக்க வேண்டியதாகி விட்டது. இலங்கையின் போக்குவரத்துத் துறையில் ரயில் பயணங்கள் ஒப்பீட்டளவில் செலவு குறைந்தவையாகக் காணப்படுவதால், நாட்டின் தற்போதைய பொருளாதார நிலையில் பெருமளவானவர்கள் ரயில் சேவையை நம்பியுள்ளனர்.

குறிப்பாக வேலைநாட்களில் காலையிலும், மாலையிலும் அதிகமானவர்கள் இதனைப் பயன்படுத்துவது நாம் அனைவரும் அறிந்த விடயம். இவ்வாறான பின்னணியில் கடந்த திங்கட்கிழமை ரயில்வே தொழிற்சங்கங்கள் சில திடீரென வேலைநிறுத்தத்தில் குதித்தன.

திடீரென ரயில் சேவைகள் இரத்துச் செய்யப்படும் நிலைமை ஏற்பட்டதால் நிர்க்கதிக்கு உள்ளான ஆயிரக்கணக்கான பயணிகள் கிடைக்கும் ரயில் சேவைகளில் முட்டியடித்துக் கொண்டும், சனநெரிசல்களிலும் பயணித்தனர். ரயில் பெட்டிகளுக்குள் காணப்பட்ட சனநெரிசல் காரணமாக பலர் பெட்டிகளுக்கு மேலே அமர்ந்து பயணித்தனர்.

இவ்வாறு பயணித்த 20 வயது பல்கலைக்கழக மாணவர் ஒருவர் ரயில்வே நிலையத்தின் கூரையுடன் மோதி கீழே வீழ்ந்து ரயிலில் சிக்குண்டு உயிரிழந்தார். மற்றுமொரு 41 வயதுடைய நபரும் ரயிலின் கூரையில் பயணிக்கும்போது வீழ்ந்து உயிரிழந்தார்.

உயிரிழப்புக்கு நஷ்டஈடாக ரயில்வே திணைக்களத்தினால் வழங்கப்படும் தொகை 5 இலட்சம் ரூபா மாத்திரமே. எனினும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஏற்பட்ட இழப்பு பன்மடங்காகும். பல்கலைக்கழக மாணவர் ஒருவரை நம்பியிருந்த குடும்பமொன்றின் கனவு தொழிற்சங்கப் போராட்டத்தினால் கலைக்கப்பட்டுள்ளது.

உயிரிழப்புகளுக்கு அப்பால் பெருமளவு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பல்வேறு பாதிப்புக்களும் ஏற்பட்டன. குறிப்பாக அலுவலகங்களுக்கு உரிய நேரத்துக்கு செல்ல முடியாமை, அலுவலகங்களில் பணியாளர்களின் வருகை குறைவாகக் காணப்பட்டமையால் ஏற்பட்ட சிக்கல்கள் எனப் பல்வேறு பாதிப்புக்களை நாடு எதிர்கொள்ளவேண்டி ஏற்பட்டது.

மூன்று நாட்களாகத் தொடர்ந்த போராட்டம் புதன்கிழமை இரவுடன் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தாலும், ஏற்பட்ட பாதிப்புக்களை யார் ஈடு செய்வது?

தொழிற்சங்கப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு அரசாங்கம் முதலிலேயே பேச்சுக்களை நடத்தியிருந்தபோதும், அது வெற்றியளிக்காத நிலையில், ரயில்வே சேவையை அத்தியாவசிய சேவையாக வர்த்தமானி மூலம் அறிவித்திருந்தது.

அது மாத்திரமன்றி ரயில் நிலையங்களின் பாதுகாப்புக்காக இராணுவத்தினரையும் கடமையில் ஈடுபடுத்தும் நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டது. பொருளாதார ரீதியில் பாதிப்புற்றுள்ள நாட்டைப் படிப்படியாக சரியான பாதைக்குக் கொண்டுவர அரசாங்கம் கடுமையான முயற்சிகளை எடுத்துவரும் நிலையில், இதுபோன்ற தொழிற்சங்க நடவடிக்கைகள் மற்றும் போராட்டங்கள் நாட்டின் முன்னேற்றத்துக்குத் தடையாக அமையும் என்பது நிதர்சனம். குறிப்பாகப் பொருளாதார ரீதியிலும் தாக்கம் செலுத்தும் என்பதை தொழிற்சங்கவாதிகள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இலங்கையின் ரயில் பயணங்கள் நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பிரபல்யமாகக் காணப்படுகின்றன. விசேடமாக மலைநாட்டுப் பகுதிகளுக்கான ரயில் சேவைகள் அதிகமாக அவர்களால் பயன்படுத்தப்படுகின்றன.

ஒன்லைன் மூலம் முற்பதிவு செய்துகொண்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் டிக்கட்டுக்கள் இரத்துச் செய்யப்பட்டமையால் அவர்கள் ரயில் நிலையங்களில் நிர்க்கதியாகி இருந்தமை தொலைக்காட்சி செய்திகளில் காண்பிக்கப்பட்டது.

அது மாத்திரமன்றி ரயில் சேவை இரத்துச் செய்யப்பட்டமையால் தொலைதூரப் பகுதியொன்றில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று தமது பயணப் பொதிகளையும் சுமந்துகொண்டு தண்டவாளங்களில் நடத்து சென்ற காட்சிகளும் செய்திகளில் காண்பிக்கப்பட்டன. இது போன்ற செய்திகள் சுற்றுலாத் துறைக்கு நேரடியான பாதிப்பை ஏற்படுத்தும். ஏற்கனவே வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலாத்துறை படிப்படியாகத் தலைதூக்கிவரும் சூழலில் இதுபோன்ற பாதகமான செய்திகள் அத்துறைக்குப் பாதிப்பை ஏற்படுத்தி நாட்டுக்குப் பொருளாதார ரீதியில் மேலும் பின்னடைவையே கொடுக்கும்.

ரயில்வே தொழிற்சங்கங்கள் இதற்கு முன்னர் மேற்கொண்ட தொழிற்சங்கப் போராட்டங்களாலும் மக்களுக்கு இதுபோன்ற பாதிப்புக்களும், சிரமங்களும் ஏற்பட்டிருந்தன. இதுபோன்ற தொழிற்சங்க நடவடிக்கைகளைத் தடுப்பதற்கு அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அத்தியாவசிய சேவையாக வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவது இதற்கு முன்னரும் எடுக்கப்பட்ட நடவடிக்கையாக இருந்தாலும், தொழிற்சங்கவாதிகள் அது குறித்துப் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. இதற்குக் காரணம் தமக்கு எதிராக எவ்வித கடுமையான நடவடிக்கையும் எடுக்கப்படாது என்பதை நன்கு அறிந்தவர்களாக அவர்கள் இருக்கின்றனர்.

அது மாத்திரமன்றி, தொழிற்சங்கங்களின் தலைவர்கள் உயர்மட்ட அரசியல் செல்வாக்கைக் கொண்டவர்களாக இருப்பதால் தமக்கு எதிராக எவ்வாறான நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் அதிலிருந்து இலகுவில் விடுபட்டுக் கொள்கின்றனர். எனவே அரசாங்கம் மக்கள் பற்றிச் சிந்தித்து உரிய நடவடிக்கைகளை விரைவில் எடுக்க வேண்டும். அதற்காக போராடுவதற்குத் தொழிற்சங்கங்கள் கொண்டிருக்கும் உரிமையை மறுப்பது ஜனநாயக நாட்டில் ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும். அதனால், தொழிற்சங்கங்களும் மக்களை சிரமங்களுக்குள் தள்ளாது தமது கோரிக்கைகளை அரசிடமிருந்து பெற்றுக் கொள்ளத் தெரிந்துகொள்ள வேண்டும்.

இதேவேளை, ஆயிரக்கணக்கானவர்கள் நம்பியிருக்கும் போக்குவரத்துச் சாதனமாக ரயில் காணப்படுவதால் இதன் சேவையை மேம்படுத்துவது குறித்தும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ரயில் என்ஜின் சாரதிகளுக்குக் காணப்படும் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு, புதியவர்களுக்கு விசேட பயிற்சிகளை வழங்கி அவர்களை உள்வாங்கி வெற்றிடங்களை நிரப்புவது, மற்றும் பயணிகளுக்கு நன்மை அளிக்கக் கூடிய வகையில் பயண நேரசூசிகளைத் தயாரித்து, மேலதிக ரயில்களை சேவையில் ஈடுபடுத்துவது குறித்தும் போக்குவரத்து அமைச்சு கவனம் செலுத்த வேண்டும்.

ஏற்கனவே குறிப்பிட்டது போன்று நாடு பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் சூழ்நிலையில் ஒப்பீட்டளவில் கட்டணம் குறைவான போக்குவரத்து சாதகமான ரயில் சேவை காணப்படுவதால் மக்களின் பயன்பாடும் அதிகரித்துள்ளது. இதுபோன்ற அனைத்துக் காரணிகளையும் கருத்தில் கொண்டு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுப்பது காலத்தின் கட்டாயமாகும்.

இவையெல்லாம் ஒருபுறமிருக்க ரயில்வே ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பின் பின்னால் அரசுக்கு எதிரான சக்திகளின் மறைமுகத் திட்டங்களும் உள்ளதாக செய்திகள் வெளிவந்தமை நினைவிருக்கலாம். அத்திணைக்களத்தின் சில தொழிற்சங்கங்கள் அரசுக்கு எதிராக அரசியல் சக்திகளின் செல்வாக்ைகப் பெற்றிருப்பதாக செய்திகள் உலவுகின்றன.

எது எவ்வாறானாலும் அப்பாவி மக்களைப் பாதிக்கும் வகையில் தொழிற்சங்க நடவடிக்ைககள் முன்னெடுக்கப்படுவதை ஒருபோதுமே அனுமதிக்க முடியாதென்பதே உண்மை!

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division