1987ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 15ம் திகதி யாழ்ப்பாணத்தில் உண்ணாவிரதத்தை ஆரம்பித்து 12 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த திலீபன் என்கிற இராசையா பார்த்திபன் மீண்டும் அரங்கில் பேசுபொருளாகியுள்ளார். அவர் இறந்து 37 வருடங்களுக்குப் பின்னர் இடம்பெறவிருந்த நினைவேந்தல் நிகழ்வைத் தொடர்ந்தே அவர் இப்போது பேசுபொருளாகியிருக்கின்றார். தமிழ் மக்களுக்காக 5 கோரிக்கைகளை முன்வைத்து திலீபனின் உண்ணாவிரதம் தொடங்கியது.
30 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த கொடூர யுத்தம் தொடர்பில் யாருக்கும் நினைவுக்கு வருவதில்லை. 1983ல் ஆரம்பித்த யுத்தம் தொடர்பான செய்திகளை வழங்குவதற்காக வடக்கு கிழக்கின் மூலை முடுக்கெல்லாம் சென்று செய்திகளைச் சேகரித்த எமக்கு அதை மறக்க முடியாதிருப்பது பயங்கரமான, சிலிர்ப்பான, மறக்க முடியாத நினைவுகள் இன்னும் நம் இதயத்தில் புதைந்து கிடப்பதனாலாகும்.
அக்காலத்தில் யுத்தம் இடம்பெற்ற பயங்கரமான சூழலினுள்ளும் கூட வடக்கில் தங்கியிருந்து ஒளிப்பதிவுகளை மேற்கொள்ளும் வாய்ப்பு அன்று ரூபவாஹினிக்கு மட்டுமே கிடைத்தது. நாளாந்தம் வடக்கின் நிலைமைகள் பற்றிய செய்திகளை ஒளிப்பதிவு செய்து கொழும்புக்கு அனுப்புவதே எங்களது முக்கிய பணியாக இருந்தது. இன்று போல் செய்திகளை உடனுக்குடன் அனுப்பும் வசதி அன்று இல்லாதிருந்த நிலையில் நாம் ஒளிப்பதிவு செய்யும் காட்சிகள் அடங்கிய கெசட்டினை பலாலி விமானப்படை முகாமிலிருந்து ஒன்றுவிட்ட ஒருநாள் கொழும்பு வரும் விமானத்தில் கொழும்பு நிறுவனத்திற்கு அனுப்பி வந்தோம். அன்று கையடக்கத் தொலைபேசியோ, நேரடித் தொலைபேசி வசதியோ இல்லாதிருந்ததுடன், கொழும்பில் உள்ள பிரதான அலுவலகத்திற்கு வாரத்திற்கு ஒருமுறையே அழைப்பு எடுக்கும் வசதி இருந்தது. அதுவும் இரவு நேரத்தில்.
இவ்வாறு ஒரு மாதத்துக்கு அதிக காலம் நாம் தங்கியிருந்தது பலாலி இராணுவ முகாமில் எமக்கென ஒதுக்கப்பட்டிருந்த வீட்டிலாகும். இந்தக் காலப் பகுதியில் யுத்த நிறுத்த ஒப்பந்தம் ஒன்று நடைமுறையில் இருந்த போதிலும் யாழ்பாணத்துக்குள் எந்த பாதுகாப்பு அதிகாரிகளும் அல்லது வேறு எவரும் நுழைவதை விடுதலைப் புலிகள் தடை செய்திருந்தனர். எமக்கு மாத்திரம் யாழ்ப்பாணத்தில் எந்த ஒரு இடத்திற்கும் பயணிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்ததோடு, அவ்வாறு வழங்கப்பட்டிருந்தது விடுதலைப் புலிகளின் சின்னத்துடன் கூடிய கொடியேயாகும். நாங்கள் வெளியே செல்லும் போதெல்லாம் அந்த கொடியை ரூபவாஹினி வாகனத்தில் காட்சிப்படுத்தியிருக்க வேண்டும்.
இவ்வாறு காட்சிகளை ஒளிப்பதிவு செய்ய இருந்த நாம் ஒரு நாள் விடுதலைப்புலிகளின் பிரதான அலுவலகத்திற்குச் சென்ற போது விடுதலைப் புலிகள் அமைப்பின் இரண்டாவது நிலைத் தலைவர் தமிழில் முக்கிய விடயம் ஒன்றைக் கூறினார். இந்திய அமைதி காக்கும் படைகளால் தங்களுக்கு அதிகளவில் கொடுமைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், அதனால் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து தமது உறுப்பினர் ஒருவர் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கவுள்ளதாகவுமே அவர் கூறினார். இவ்விடயம் தொடர்பில் கொழும்பு ஊடகங்களில் பரவலான பிரசாரங்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அவர் எம்மிடம் கோரிக்கை விடுத்தார். உண்மையில், அது ஒரு கோரிக்கை என்பதை விட ஒரு உத்தரவு என்று சொல்வதே சரியானதாகும்.
அதனடிப்படையில் மறுநாள் காலையிலேயே நல்லூர் கோவிலுக்கு அருகில் சென்ற போதிலும் உண்ணாவிரதம் இருக்கப் போகும் நபர் யார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. அங்கு பெரியதொரு மேடை அமைக்கப்பட்டிருந்ததோடு, அந்த மேடை விடுதலைப் புலிகளின் சின்னம் மற்றும் சிகப்பு பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்ததது. அத்துடன் அப்பகுதி முழுவதும் கேட்கும் படி அமைப்பின் பாடல்கள் எனப்படும் சோக கீதங்கள் ஒலிபரப்பப்பட்டன. உண்ணாவிரதம் இருந்த திலீபன் நாற்காலி ஒன்றில் அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்ததோடு, அமைப்பைச் சேர்ந்த பலர் உரத்த குரலில் திலீபனைப் பாராட்டி உரை நிகழ்த்தினர். அவரது உண்ணாவிரதத்தின் ஆரம்ப சில நாட்களாக அதைப் பதிவு செய்ய எங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த போதிலும், கடைசி இரண்டு நாட்கள் பதிவு செய்வதற்கு எமக்கு அனுமதி கிடைக்கவில்லை.
திலீபன் தனது உண்ணாவிரததத்தை நல்லூர் கோவிலுக்கு அருகில் ஆரம்பித்தார். 12 நாட்களாகத் தொடர்ந்த உண்ணாவிரதத்தை செய்தியாக்குவதற்காக என்னுடன் புகைப்படக் கலைஞர் சமன் வன்னியாராச்சி உள்ளிட்ட ஏனைய கலைஞர்களும் இணைந்து கொண்டிருந்தனர். பெருமளவிலான மக்கள் அந்த மேடைக்கு அருகில் தொடர்ந்தும் நிலத்தில் அமர்ந்து சோக கீதத்தைப் பாடிக் கொண்டிருந்ததோடு, ஆரம்ப மூன்று, நான்கு நாட்களாக திலீபன் கதிரை ஒன்றில் அமர்ந்து புத்தகம் வாசித்துக் கொண்டிருந்தார். ஒருபோதும் நிறைவேற்றப்படாத கோரிக்கைகளுக்காக அவர் ஏன் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார் என நாட்டில் பேசப்பட்டதுடன், அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தததாகவும் பேசப்பட்டது. இதன் உண்மைத்தன்மை தொடர்பில் யாழில் தங்கியிருந்த நாமும் அறிந்திருக்கவில்லை என்றாலும், உண்ணாவிரதத்தின் போது அவருக்கு தலையை கோதிவிடுவதற்கோ ஏன் பார்ப்பதற்கோ கூட பிரபாகரன் என்ற ஒருவர் அங்கு வரவில்லை. உண்மையிலேயே இது தென்னிலங்கையில் சில பிக்குகள் மற்றும் அரசியல்வாதிகள் நடத்தும் உண்ணாவிரத நடிப்புக்களுக்கு முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. திலீபனின் உடல் மெல்ல மெல்ல வலுவிழந்து கோமா நிலைக்குச் சென்று கடைசியில் திலீபன் உயிரிழந்து விட்டார்.
திலீபனின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அடிப்படையாக அமைந்த எதனையும் நிறைவேற்றிக் கொள்ள முடியாது போனாலும், வடக்கில் அன்றைய காலப்பகுதியில் மக்கள் மத்தியில் திலீபன் மாவீரனாக திகழ்ந்தார். பல ஆண்டுகளாக எல்.ரீ.ரீ.ஈ அமைப்புக்கு இளைஞர்களை இணைத்துக் கொள்வதற்கு திலீபனின் தியாகம் உதவியது. அவரது உடல் யாழ்ப்பாணம் மருத்துவக் கல்லூரியில் ஒப்படைக்கப்பட்டது.
ஷேர்லி அனில் த சில்வா தமிழில் - எம். எஸ். முஸப்பிர்