புதைபடிவ எரிபொருளை அடிப்படையாகக் கொண்ட போக்குவரத்திலிருந்து மின்சக்தியை அடிப்படையாகக் கொண்ட போக்குவரத்திற்கு மாறுவது காலத்தின் தேவையாகும் என்று சீனாவின் நிலையான போக்குவரத்து மன்ற மாநாட்டில் சிறப்புரை ஆற்றிய அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன.
2023ம் ஆண்டின் உலகளாவிய நிலையான போக்குவரத்து மன்றத்தின் மாநாடு சீனாவின் பீஜிங் நகரில் வெற்றிகரமாக நிறைவடைந்தது. ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் சர்வதேச அமைப்புகள் பலவற்றின் பிரதிநிதிகள், பல வெளிநாடுகளின் போக்குவரத்து அமைச்சர்கள் உள்ளிட்ட விசேட பிரதிநிதிகள் 60க்கும் மேற்பட்டோர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டமை விசேட அம்சமாகும்.
‘நிலையான போக்குவரத்து – உலகளாவிய அபிவிருத்தியை ஊக்குவிப்பதற்காக ஒன்றிணைந்து செயல்படுதல்’ என்ற தொனிப்பொருளின் கீழ் இடம்பெற்ற இந்த மாநாட்டில், ஆரம்ப நிகழ்வு, பொதுக்குழுக் கூட்டம், சீனாவின் முன்னணி கட்டுமான நிறுவனங்களின் பிரதிநிதிகளின் கூட்டம் மற்றும் கண்காட்சி, போக்குவரத்து அமைச்சர்களின் வட்டமேசை மாநாடு உள்ளிட்ட பல சிறப்பு நிகழ்வுகள் உள்ளடங்கியிருந்தன.
இதனோடிணைந்து, 15வது சீன சர்வதேச போக்குவரத்து தொழில்நுட்பம் மற்றும் உபகரண கண்காட்சியும் (China TRANSPO) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன 2023ஆம் ஆண்டின் உலகளாவிய நிலையான போக்குவரத்து மன்றத்துக்காக இலங்கையைப் பிரதிநிதித்துவப் படுத்தி கலந்து கொண்டார்.
மாநாட்டில் சிறப்புக்குரிய முக்கியத்துவம் கிடைத்த “உயர்தர சர்வதேச உட்கட்டமைப்பு வசதிகள் உறவுகளை ஊக்குவித்தல் மற்றும் பிராந்திய பொருளாதார உறவுகளின் மேம்பாட்டை ஊக்குவித்தல்” என்ற தொனிப்பொருளின் கீழ் இடம்பெற்ற அமர்வில் முக்கிய சிறப்புரையினை ஆற்றியது அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவாகும்.
மாநாட்டில் கலந்து கொண்ட அனைத்து நாடுகளின் போக்குவரத்து அமைச்சர்கள் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகளின் விசேடக் கவனத்தை ஈர்த்த அமைச்சரின் உரையில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளடங்கியிருந்தன.
• போக்குவரத்து துறையின் தரத்தை மேம்படுத்துவதன் மூலம் பிராந்திய அபிவிருத்திக்கான ஒருங்கிணைப்பு, ஒத்துழைப்பு மற்றும் பங்கேற்பு.
• UNDP, UNEP, UNESCAP போன்ற சர்வதேச அமைப்புகள் மற்றும் ஏனைய அமைப்புக்களுடன் சிறந்த சர்வதேச உறவுகளை உருவாக்கிக் கொள்ளுதல்.
• புதைபடிவ எரிபொருளை அடிப்படையாகக் கொண்ட போக்குவரத்திலிருந்து மின்சக்தி அடிப்படையிலான போக்குவரத்து முறைகளுக்கு மாறுதல்.
• சர்வதேச நிபுணர்கள் மற்றும் நிபுணர் அமைப்புகளின் ஒத்துழைப்புடன் கொள்கைகள் மற்றும் உத்திகளை உருவாக்குதல்.
• போக்குவரத்துத் துறையுடன் தொடர்புடைய அனைத்து சேவைகளையும் டிஜிட்டல் மயமாக்குதல் மற்றும் குறிப்பாக அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு போக்குவரத்துத் துறையை நவீனமயமாக்குவதற்கு செயற்பாட்டுச் சூழலை உருவாக்குவதற்காக நிதி மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை மேம்படுத்தல்.
போன்ற விடயங்கள் தொடர்பில் அமைச்சர் இம்மாநாட்டில் கலந்து கொண்ட பிரதிநிதிகளின் கவனத்துக்குக் கொண்டு சென்றார்.
அத்துடன் காலநிலை மாற்றத்தின் காரணமாக மசகு எண்ணெய், நிலக்கரி அகழ்வு மற்றும் சுரங்கம், நீர்மின் உற்பத்தியில் காணப்படும் வரையறைகள் காரணமாக இலங்கையில் மாத்திரமன்றி உலகத்திற்கே பாரிய பிரச்சினையாக மாறிவரும் எரிசக்தி நெருக்கடி தொடர்பிலும் பல்வேறு விடயங்களை அமைச்சர் தனது உரையில் முன்வைத்தார்.
எரிசக்தி நெருக்கடி பற்றிய தெளிவான புரிதலுடன், புதைபடிவ எரிபொருளை அடிப்படையாகக் கொண்ட போக்குவரத்திலிருந்து மின்சக்தியை அடிப்படையாகக் கொண்ட போக்குவரத்து முறைக்கு மாறுவது இந்த நேரத்தில் காலச்சிறந்தது என்றும், இதற்காக, புதுப்பிக்கத்தக்க மின்சக்தி, சூரிய மின்சக்தி, காற்றாலை மின்சக்தி, அலை மின்சக்தி மற்றும் போக்குவரத்து துறைக்காக தேவைக்கு ஏற்ப மின்சார வாகனங்களை ஊக்குவிப்பது மிகவும் முக்கியமானது என்றும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
“பசுமைப் பொருளாதாரம்” மற்றும் “பசுமை போக்குவரத்து” எண்ணக்கருவை செயற்படுத்தும் போது புதிய தொழில்நுட்பம், ஆராய்ச்சி மற்றும் மேம்படுத்தல், முன்னேற்றம் அடைந்த உட்கட்டமைப்பு வசதிகள், கொள்கை மற்றும் சட்ட உருவாக்கம், கல்வி மற்றும் பயிற்சிகள் போன்ற துறைகளுக்கு முன்னுரிமை வழங்குவதற்கான முக்கியத்துவமும் இதன்போது அமைச்சரின் உரையில் உள்ளடக்கியிருந்தது.
இலங்கையின் பாரம்பரிய போக்குவரத்து முறைகளை நவீன போக்குவரத்து அமைப்புகளாக மாற்றும் போது, வீதி உட்கட்டமைப்பு வசதிகள் துறைகளுக்குத் தேவையான முதலீடுகளை பெற்றுக் கொள்வதில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பிலும் இதன்போது அமைச்சரால் வெளிநாட்டு பிரதிநிதிகளுக்குத் தெளிவுபடுத்தப்பட்டது. அபிவிருத்தியடைந்து வரும் நாடாக இலங்கையின் மேல் மாகாணத்தில் மேற்கொள்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ள இலகு இரயில் திட்டம் (LRT) மற்றும் அதிவேக நெடுஞ்சாலைகள் திட்டம், மீண்டும் ஆரம்பிப்பதற்காக அரச மட்டும் தனியார் ஒருங்கிணைப்பு திட்டம், ( PPP) BOO மற்றும் BOT போன்ற முதலீட்டுத் திட்டத்தின் கீழ் இவ்வாறான அபிவிருத்தி வேலைத் திட்டங்களை நடைமுறைப் படுத்துவதற்காக பலம்மிக்க நாடுகள் மற்றும் நன்கொடை நிறுவனங்களின் நிதிப் பங்களிப்பு இந்நேரத்தில் இலங்கைக்கு மிகவும் அவசியமானது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அந்நாட்டின் முன்னணி நிர்மாணத்துறை நிறுவனங்களான china communication construction company (CCCC) மற்றும் china harbor engineering company(CHEC) நிறுவனங்களின் விசேட கண்காணிப்பு செயற்பாடுகளிலும் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன கலந்து கொண்டார்.
போக்குவரத்து துறையின் முன்னேற்றத்துக்காக அந்த நிறுவனங்களால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய தொழில்நுட்ப கட்டுமான வடிவமைப்பு முறைகள் தொடர்பான அறிமுகம் அந்த நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பிரதானிகளால் செய்யப்பட்டது.
இந்த விஜயத்தின் போது, அமைச்சர் சீன வர்த்தக சம்மேளனத்தின் (TBD) பிரதிநிதிகள், இலங்கைக்கு சொகுசு பஸ்களை ஏற்றுமதி செய்யும் Yutong பஸ் நிறுவனத்தின் தலைவர்கள் உள்ளிட்ட பல நிறுவனங்களின் தலைவர்களுடன் இலங்கை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறைகளில் முதலீடு செய்வது தொடர்பாக பல கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டார்.
எம்.எஸ்.முஸப்பிர்