சிறுவர்களுக்கு பாதுகாப்பான இடமாக இந்த உலகை மாற்றும் நோக்கத்தில் பயணிக்கும் பேபி செரமி, இலங்கையில் சிறுவர்களுக்கு ஏற்படும் காயங்களுக்கு முக்கிய காரணமான, வீட்டில் ஏற்படும் விபத்துகளைத் தடுப்பது தொடர்பில் பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, இலங்கை சிறுவர் நல மருத்துவக் கல்லூரியுடன் கைகோர்த்துள்ளது. சிறுவர்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில் இந்த ஒத்துழைப்பை உறுதிப்படுத்தும் வகையில், 2023 நவம்பர் 07ஆம் திகதி புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று (MoU) கைச்சாத்திடப்பட்டது. இந்நிகழ்வில், சிறுவர்களை பாதுகாப்பாக வைத்திருக்கும் வகையில் வீட்டில் ஏற்படும் விபத்துகளை எவ்வாறு தடுப்பது என்பது குறித்து, சிறுவர் நல மருத்துவப் பேராசிரியர் மனோரி கமகே மற்றும் சிறுவர் நல ஆலோசகர் வைத்தியர் கல்யாணி குருகே ஆகியோரால் எழுதப்பட்ட பெற்றோர் வழிகாட்டல் கையேடும் வெளியிடப்பட்டது. அதிக விபரங்களைக் கொண்ட, இலகுவாக புரிந்துகொள்ளும் வகையில் எழுதப்பட்டு, இனிய கவிதைகள் மற்றும் கண் கவரும் சித்திரங்களுடன், சிறுவர்களுக்கு ஏற்ற வகையிலான மொழியில் எழுதப்பட்டுள்ள இந்த சிறிய புத்தகமானது, பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரம் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் கீழுள்ள தேசிய சிறுவர்கள் செயலகத்தின் அனுமதியைப் பெற்றுள்ளது.
சிறுவர் பராமரிப்பு வர்த்தக நாமமான பேபி செரமி, நாடு முழுவதும் உள்ள பெற்றோர் மற்றும் சிறுவர்களின் நலனுக்கான மற்றுமொரு செயற்பாடாக இந்நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.