இலங்கை திரைப்படத்துறையின் தனித்துவமான அரச அங்கீகாரமான ஜனாதிபதி திரைப்பட சினிமா விருது -2023 வழங்கும் விழா நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை (14) மாலை 6.30 மணிக்கு தாமரைத் தடாகம் அரங்கில் நடைபெறவுள்ளது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவின் வழிகாட்டலில் இம்மாபெரும் விருது விழா நடைபெறவுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ள இவ்விழாவில் பிரதமர் தினேஷ் குணவர்தனவும் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளார்.
1979ஆம் ஆண்டுஆரம்பிக்கப்பட்ட ஜனாதிபதி திரைப்பட விருதுகளின் 20ஆவது விழா இதுவாகும்.
இலங்கையின் திரைப்படக் கலை மற்றும் திரைப்பட தொழில்துறையை வளர்ப்பதற்காக திரைப்படங்களின் பல்வேறு துறைகளை மதிப்பீடு செய்து, உலகையே வெல்லும் தேசிய திரைப்படத்தை உருவாக்குவதே இதன் நோக்கமாகும். ‘லொவ தினனா லக் சினே வருண’ என்பது இந்த ஆண்டுக்கான விருது விழாவின் கருப்பொருளாகும்.
இந்த திரைப்பட விருது விழாவில், 2019 மற்றும் 2020ஆம் ஆண்டுகளில் திரையிடப்பட்ட 42 திரைப்படங்கள் மதிப்பீடு செய்யப்படுமென்பதுடன், குறிப்பாக, 3 ஸ்வர்ணசிங்க விருதுகள், 4 முன்னோடி விருதுகள் மற்றும் 2 யுனிவர்சல் ஃபேம் விருதுகள் இந்த ஆண்டு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன், இலங்கைத் திரையுலகின் பொற்காலத்தை வண்ணமயமாக்கிய திரைப்படத் தயாரிப்பாளருக்காக வழங்கப்படும் யுகாபிமானி சினிமா விருது, இவ்வருட விருது வழங்கும் நிகழ்வில் அங்கீகரிக்கப்படும் விசேட விருதாகும். இந்த விருது விழாவில் கௌரவப் பரிசுகளுடன் ரொக்கப் பணப் பரிசுகளும் வழங்கப்படுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.