பெருந்தொற்று மக்களுக்கு கற்றுத் தரும் பாடங்கள் | தினகரன் வாரமஞ்சரி

பெருந்தொற்று மக்களுக்கு கற்றுத் தரும் பாடங்கள்

நாம் இந்த ஆசிரிய தலையங்கத்தின் வாயிலாக உங்களுடன் தொடர்பு கொள்ளும் இக்காலம், இந் நாடும் உலகமும் முன்னெப்பொழுதுமே சந்தித்திராத உலக நெருக்கடியொன்றை கடந்து கொண்டிருக்கும் ஒரு சந்தர்ப்பத்திலாகும். இந் நெருக்கடியில் இருந்து எப்போது மீண்டுவரும் இவ்வுலகம் என்ற கேள்விக்கு பதிலளிப்பது, பல தடுப்பூசிகள் கண்டு பிடிக்கப்பட்டு பயன்பாட்டில் இருக்கும் இச் சந்தர்ப்பத்திலும் கூட சிரமமானதே. ஏனெனில் நோயின் தீவிரத்தை இவை குறைக்கலாமே தவிர முற்றுமுழுதாக தொற்றில் இருந்து நீங்கிவிட்டதாக நாம் பொருள் கொள்ள முடியாது. எனவே நாம் என்னென்ன காப்பு நடவடிக்கைகளை இப்போது கைகொண்டு வருகிறோமோ அவற்றையே, குறைந்த பட்சம், 2023 வரையில் கடைபிடிக்க வேண்டியது அவசியம் என்பது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மறந்து விடலாகாது.

நாம் இப்போது எதிர்கொண்டிருக்கும் இயற்கை மற்றும் செயற்கையான எதிரிகளைவிட மிக மோசமான எதிரிகளையும், சூழல்களையும் ஆதி மனிதன் எதிர்கொண்டுதான் கற்காலம், இரும்பாயுத காலம், நதிக்கரைக் காலம் என்பனவற்றைத் தாண்டி நவீன காலத்துக்கு வந்தான் என்பது எமது வரலாற்று வாசிப்பாக இருந்தாலும், சுக தேகியாக வாழ்வதற்கான போராட்டம் இன்றைக்கும் கண்களுக்குப் புலப்படாத எதிரிகளுடன் இடையறா நடந்து கொண்டு தான் இருந்திருக்கிறது. உலக தொற்று நோய் வரலாற்றை வாசிக்கும்போது கோடி கோடியான மக்களை கொத்து கொத்தாக அவை கொன்றொழித்த போதிலும் மனிதனின் கண்டு பிடிக்கும் அறிவு, அத் தொற்றுகளைத் தாண்டி வர மனித குலத்துக்கு உதவியது.

ஆனால் இங்கே நாம் அவதானிக்கும் வித்தியாசம் என்னவென்றால், அவற்றில் எதுவுமே உலகப் பெருந்தொற்றாக உருவெடுக்கவில்லை என்பது தான். ஆசியாவின் கொலரா, மலேரியா ஐரோப்பாவை எட்டவும் இல்லை; ஐரோப்பாவின் பிளேக் ஆசிய நாடுகளை அண்டவும் இல்லை. அக் காலத்தில் விமான பயணம் சாத்தியமானதாகவும் இருக்கவில்லை.

அன்றைய பெருந்தொற்றுகள் பிராந்திய பொருளாதாரத்தையே பாதித்தன. இன்றைய கொவிட் பெருந்தொற்று மூலம் உலகப் பொருளாதாரம் முதல் தடவையாக பாதிப்படைந்திருக்கிறது. இழப்புகளுக்கு மத்தியிலும் வளர்ந்த நாடுகளால் இப் பாதிப்புகளை நீடித்த நிலையில் தாக்குப் பிடிக்கக் கூடும். அதே சமயம் இலங்கையைப் போன்ற பின் தங்கிய நாடுகள் வரலாறு காணாத பெரும் பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றன.

எனவே பெருந்தொற்றில் இருந்து நம்மை நாமே எல்லா நேரங்களிலும் காத்துக் கொள்வதன் மூலம் நாம் நமது சுய பொருளாதாரத்தை மட்டுமின்றி நாட்டின் பொருளாதாரத்தையும் காப்பாற்றிக் கொள்கிறோம் என்பதை கை கழுவும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாம் உணர்ந்து கொள்வது அவசியம். முகக் கவசம் அணிவது, இடைவெளி பேணுவது, கை கழுவுவது என்பது நம்மை மட்டுமல்ல; நாட்டின் பொருளாதாரத்தையும் காப்பாற்றும் என்பது மக்களால் இன்னும் புரிந்து கொள்ளப்படவில்லை என்பதைத் தான் வேகமாக தொற்று பரவுவதையும் மரணங்கள் அதிகரிப்பதையும் எடுத்துக் காட்டுகின்றது.

அரசு எம்மை வெளியே செல்லவிடாமல் கட்டுப்படுத்துகிறது; முன்பே செய்திருக்க வேண்டியவற்றை இப்போது செய்கிறது; தனி மனிதவாழ்வாதாரம் சீர்கெட்டிருக்கிறது; முகத்தை மூடு, கையைக் கழுவு என்றெல்லாம் நிர்ப்பந்திக்கப்படுகிறோம் என்றெல்லாம் மக்கள் மத்தியில் சகிப்பு தன்மையற்ற எண்ணங்கள் காணப்படுகின்றன. அரசும், அரசு அதிகாரிகளும் தவறுகள் இழைத்திருக்கலாம். ஏனெனில் முன் அனுபவப்படாத புதிய தொற்று என்பதாலும், மேலார்ந்த ரீதியாக பார்த்தோமானால் ஒரு எளிய நோயைப் போல இது தோற்றமளிப்பதாலும், உஷ்ண வலய பிராந்தியத்திலும் இது எத்தகைய விளைவுகளைச் செய்யும் என்பதை எவரும் மிகச் சரியாக அறிந்திருக்கவில்லை என்பதும் பரவலுக்கான காரணமாக சுட்ட முடியும்.

அரசும் மக்களும் விட்ட எளிமையான சில தவறுகள் – பெருங் கூட்டங்களாகக் கூடி கொண்டாடத் தலைப்பட்டது. நாட்டை பூட்டி வைக்க வேண்டிய நிலைக்கு தள்ளிவிட்டுள்ளன. இப்போது நாம் இதில் இருந்து மீண்டு வர வேண்டும். கை கழுவி முகக் கவசம் அணிவதும், முடிந்தவரை பயணங்களைத் தவிர்ப்பதும், தடுப்பூசியை ஏற்றிக் கொள்வது மட்டுமே நம் முன்னிருக்கும் தெரிவுகளாகும். தடுப்பூசியும் எமக்கு முற்று முழுதான பாதுகாப்பைத் தராது என்ற நிலையில் சுய பாதுகாப்பு முறைகளைக் கண்டிப்பாக கைகொள்ள வேண்டியது மிக முக்கியம்.

ஐரோப்பாவில் பிளேக் கொத்து கொத்தாகக் கொன்றொழித்த போது தான் எலிகளைக் கட்டுப்படுத்த வேண்டும்; பாதுகாப்பான தானியக் களஞ்சியங்களை அமைக்க வேண்டும், வீட்டையும் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் ஐரோப்பியர் மத்தியில் ஏற்பட்டது. இன்றளவும் அவற்றை அவர்கள் வெகு சிறப்பாகவே கையாள்கிறார்கள். மருத்துவ விஞ்ஞானம் வேகமாக வளர்வதற்கும், புதிய கண்டு பிடிப்புகள் நிகழ்வதற்கும், சுகாதார கலாசாரம் சமூகத்தின் மத்தியில் நீக்கமற நிறைந்திருப்பதற்கும் அவர்கள் நூற்றாண்டுகளுக்கு முன்னர் சந்தித்த அழிவுகளே காரணமாயின என்பது உணர்ந்து கொள்ளப்பட வேண்டும்.

கொவிட் 19 இந்தியாவில் நுழைந்ததும் அது அந் நாட்டில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்றே பலரும் எதிர்பார்த்திருந்தனர். மும்பை தாராவி சேரிப்பகுதியை விநாசம் செய்யும் என்றும் நம்பப்பட்டது. முதலாம் அலை பாரிய விளைவுகளை ஏற்படுத்தாததால் தொற்றின் வலிமையை குறைத்து அரசியல் தலைமைகள் மதிப்பிட்டதால் தான் இந்திய மக்கள் பெருந்தொற்றுடன் கடும் போராட்டத்தை மேற்கொள்ள வேண்டியதாயிற்று.

காலந் தாழ்த்தியாவது இலங்கை, இந்திய பாடங்களை நாம் கற்றுக் கொண்டேயாக வேண்டும். இப் பெருந்தொற்றில் இருந்து நாம் விடுபட வேண்டுமானால். அரசுகள் வழிகாட்டத்தான் முடியும், மக்கள் மட்டுமே தமது பழக்க வழக்கங்களின் ஊடாக மீண்டு வர வேண்டும். பிளேக் தொற்றில் இருந்து அன்றைய ஐரோப்பியரால் பாடம் கற்று, மீண்டுவர முடிந்ததையும் மருத்துவ விஞ்ஞானத்தில் அவர்கள் எங்கேயோ உச்சத்துக்கு சென்று விட்டதையும் எண்ணிப் பாருங்கள்.

சோதனைகளும், பின்னடைவுகளும் வெற்றி கொள்வதற்காகவே உள்ளன. வெற்றிகள் பாடங்களாக அமைய வேண்டும். கடந்த மூன்று நாட்களாக அமுலில் இருந்த ஊரடங்கு இப் பாடத்தைத்தான் புகட்டியிருப்பதாக நாம் கருதுகிறோம்.

65 மில்லியின் ஆண்டுகளுக்கு முன்னர் பூமியின் மீது விண் கற்கள் வெடித்துச் சிதறிய போது உலகெங்கும் ஆட்சிசெய்து வந்த டைனோசர்கள் அழிந்து போயின. அப்பேரழிவு என்ன செய்தது என்றால், தலைதூக்க முடியாமல் இருந்த பாலூட்டிகளின் வளர்ச்சியை ஊக்குவித்தது. மனிதன் தோன்றுவதற்கான பாதை இந்த பேரழிவில் இருந்து தான் போடப்பட்டது.

எனவே இலங்கையின் இந்த பெருந்தொற்றையும் ஆக்க பூர்வமான ஒன்றாகக் கருதி நாம் கைகளைக் கழுவி முகக் கவசம் அணிவோம்.

Comments