முதலில் நடைபெற போவது பாராளுமன்றத் தேர்தலா, ஜனாதிபதித் தேர்தலா? | தினகரன் வாரமஞ்சரி

முதலில் நடைபெற போவது பாராளுமன்றத் தேர்தலா, ஜனாதிபதித் தேர்தலா?

பொருளாதார நெருக்கடிகளைச் சமாளிப்பதற்கான பிரயத்தனங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்த ஆண்டாக 2023 ஆம் ஆண்டு காணப்படும் நிலையில், இந்த வருடம் எந்தவொரு தேர்தலும் நடத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் தென்படவில்லை.

இருந்தபோதும், நாடு அடுத்த வருடம் இரண்டு பிரதான தேர்தல்களுக்கு முகங்கொடுக்க இருப்பதால், திரைமறைவில் அரசியல் கட்சிகள் அதற்கான தயார்படுத்தல்களில் இறங்கியிருப்பதைக் காணக் கூடியதாகவுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத்துக்கான பொதுத்தேர்தல் ஆகியவற்றைப் பொறுத்தவரை, எந்தத் தேர்தல் முதலில் வரும் என்பதை உறுதிபடக் கூறமுடியாதிருப்பதால் இதனை அடிப்படையாகக் கொண்டுள்ள அரசியல் கட்சிகளுக்குள் சலசலப்பு ஏற்படத் தொடங்கியுள்ளது.

ஜனாதிபதி பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய தேசியக் கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகள் உள்ளகப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கத் தொடங்கியுள்ளன.

அடுத்த வருடம் நடைபெறக் கூடிய தேர்தலை அடிப்படையாகக் கொண்டு கூட்டணி அமைப்பதற்கான ஆரம்பகட்டப் பேச்சுக்கள் அனைத்துக் கட்சி மட்டங்களிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காகத் தமது கட்சிகளைப் பலப்படுத்தும் பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப்போகும் வேட்பாளர்கள் குறித்தும் அவ்வப்போது செய்திகள் வெளியாகி வருகின்றன.

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுவார் என ஐக்கிய தேசியக் கட்சி உறுதிபடக் கூறியுள்ள நிலையில், தேசிய மக்கள் கட்சியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்கவும் போட்டியிடுவார் என அக்கட்சி திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இருந்தபோதும் ஏனைய வேட்பாளர்கள் குறித்த எந்தத் தகவல்களும் உத்தியோகபூர்வமாகவோ அல்லது உறுதிபடவோ அறிவிக்கப்படவில்லை.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார் என அவருடைய கட்சியைச் சேர்ந்த ஒருசிலர் கூறிவருகின்ற போதும், அது தொடர்பில் எந்த உத்தியோகபூர்வ அறிவிப்பும் இன்னும் வெளியிடப்படவில்லை.

இவ்வாறான பின்னணியில், மக்கள் மத்தியில் தம்மைக் கொண்டு செல்வதற்கான பிரயத்தனங்களில் சில அரசியல் சக்திகள் முயற்சிக்கின்றன. குறிப்பாக விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றவர்கள் அடிப்படைவாதமான ஏதாவது ஒரு விடயத்தைக் கையில் எடுத்து அதனை வைத்துக் கொண்டு மக்கள் மத்தியில் செல்வதற்கான முனைப்புக்களில் ஈடுபட்டிருப்பதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இவர்கள் மாத்திரமன்றி வேறுசில தரப்பினரும் மத அடிப்படையிலான விடயத்தைப் பெரிதுபடுத்தி மக்கள் மத்தியில் அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பதாகத் தெரியவருகிறது. குறிப்பாக குருந்தூர்மலை விவகாரம் போன்ற சம்பவங்களை தமக்கான அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்துவதற்கு முயற்சிப்பதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. இருந்தாலும் கடந்தகாலங்களைப் போன்று மக்கள் இவ்வாறான அரசியல் பிரசாரங்களுக்கு எந்தளவு முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்பதும் கேள்விக்குறியே.

அதேநேரம், இரண்டு பிரதான கட்சிகளின் வருடாந்த மாநாடுகள் நடைபெறவுள்ளன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வருடாந்த மாநாடு செப்டெம்பர் 03 ஆம் திகதி கொழும்பில் நடைபெறுகிறது. கட்சிக்குள் ஒற்றுமையை நிலைநாட்டும் வகையில் இந்த மாநாடு வெற்றிகரமாக நடத்தப்படும் என அக்கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஊடகங்களுக்குக் கூறியிருந்தார்.

தமது கட்சி எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும், எதிர்காலத்தில் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான உத்திகள் கையாளப்படும் என்றும் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போது மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டிருந்தார்.

இருந்தபோதும் கட்சிக்குள் முரண்பாடு இருப்பது தற்பொழுது தெரியவந்துள்ளது. குறிப்பாக சுதந்திரக் கட்சியின் தற்போதைய பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர, தன்னை அந்தப் பொறுப்பிலிருந்து நீக்குவதற்கு மேலிடத்தில் உள்ள ஒருசிலர் முயற்சிக்கின்றனர் என்ற குற்றச்சாட்டைப் பகிரங்கமாக முன்வைத்திருந்தார். வருடாந்த மாநாட்டுக்கு சுதந்திரக் கட்சி தயாராகின்ற போதும், கட்சி உறுப்பினர்கள் மத்தியில் முரண்பாடு காணப்படுவது இதன் மூலம் தெளிவாகிறது.

சுதந்திரக் கட்சியிலிருந்த பெரும்பாலான உறுப்பினர்கள் பிரிந்து சென்றே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை உருவாக்கியிருந்தனர். இந்தப் பிரிவால் முற்றுமுழுதாக வீழ்ச்சியடையும் நிலைக்கு சுதந்திரக் கட்சி சென்றது. கடந்த தேர்தலில் பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைத்திருந்தாலும், தேர்தலின் பின்னர் அவர்களுக்கிடையில் சுமுகமான உறவு காணப்படவில்லை.

சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவம் தற்போதைய அரசாங்கத்தில் அங்கம் வகிக்காது எதிர்க்கட்சியில் அமர்வதற்குத் தீர்மானித்தபோதும், சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலர் அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சுப் பதவிகளை ஏற்றனர். இதனால் சுதந்திரக் கட்சிக்குள் மேலும் பிளவு ஏற்பட்டது.

இவ்வாறான பின்னணியில் எதிர்வரும் தேர்தலில் பொதுஜன பெரமுனவுடன் இணையும் எண்ணம் இல்லையென்றும், ஏனைய கட்சிகளுடன் இணைந்து பலமான கூட்டணியை அமைக்கப் போவதாகவும் அக்கட்சி கூறியுள்ளது.

இதுஇவ்வாறிருக்க, பொதுஜன பெரமுன கட்சியும் பல்வேறு பிளவுகளுக்கு முகங்கொடுத்துள்ளது. கடந்த பொதுத்தேர்தலில் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரித்து தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்த கட்சியாக இருந்தபோதும், அக்கட்சியில் தற்போது பாரிய பிளவுகள் ஏற்பட்டுள்ளன.

குறிப்பாக கடந்த வருடம் இடம்பெற்ற போராட்டங்களின் பின்னர் அக்கட்சி மீது மக்கள் வைத்திருந்த பாரியதொரு நம்பிக்கை இழக்கப்பட்டமையால், கட்சியின் உறுப்பினர்களும் தமது நிலைப்பாடுகளை மாற்றியுள்ளனர். பொதுஜன பெரமுன தனியான கட்சி என்பதைவிட சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களாக இருந்தவர்கள் மற்றும் விமல் வீரவன்ச, கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார, திஸ்ஸ விதாரண போன்றவர்கள் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளை உள்ளடக்கிய பாரியதொரு கூட்டணியாகவே காணப்பட்டது.

கூட்டணியாகக் காண்பிக்கப்பட்டபோதும் எடுக்கப்படும் தீர்மானம் ராஜபக்ஷக்களின் விருப்பத்துக்கு அமைய எடுக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இதனாலேயே, அந்தக் கட்சியிலிருந்து 40 இற்கும் மேற்பட்டவர்கள் பிரிந்து சென்று சுயாதீனமாகச் செயற்படப் போவதாக அறிவித்து தற்பொழுது செயற்பட்டு வருகின்றனர். குறிப்பாக கடந்த பொதுத்தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவாகச் செயற்பட்ட வியத்மக குழுவினர் அதிலிருந்து பிரிந்து சென்றவர்களில் முக்கியமானவர்களாகக் காணப்படுகின்றனர்.

பொதுஜன பெரமுனவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் பிரதானமாக இரண்டு அணியாக இயங்கி வருகின்றனர். விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார உள்ளிட்டவர்களைக் கொண்ட அணியொன்றும் தனியாக இயங்கி வருகிறது. மறுபக்கத்தில் டலஸ் அழகப்பெருமவைத் தலைமையாகக் கொண்ட மற்றுமொரு அணியும் இயங்கி வருகிறது.

அது மாத்திரமன்றி, ஆளும் கட்சியில் உள்ள பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் மத்தியிலும் மாற்றுக்கருத்துக்களைக் கொண்டவர்கள் இருக்கின்றனர். இவர்களில் சிலர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு முழுமையான ஆதரவைத் தெரிவித்து அவருடன் இணைந்து செயற்பட்டு வருகின்றனர். பிறிதொரு தரப்பினர் கட்சியின் தலைமைத்துவத்தின் கட்டளைகளுக்கு இணங்கவும் செயற்பட்டு வருகின்றனர்.

இதனால் எதிர்வரும் தேர்தலில் வொறொரு கட்சியுடன் கூட்டணி அமைத்தாலே அரசியல் இருப்பை உறுதிப்படுத்த முடியும் என்ற நிலை அக்கட்சிக்கு ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில், கடந்த பொதுத்தேர்தலில் பாரிய பின்னடைவைச் சந்தித்த ஐக்கிய தேசியக் கட்சி தன்னை மீண்டும் பலப்படுத்துவதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் அவரை முன்னிலைப்படுத்தி பாரியதொரு கூட்டணியை அமைக்க முடியும் என்ற வியூகத்தை அக்கட்சி வகுத்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி இம்மாதம் 10 ஆம் திகதி தனது வருடாந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்கு ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. கொழும்பு- 10 இல் பாரியதொரு மாநாட்டை நடத்தவும், இதில் கட்சியின் புதிய யாப்பை நிறைவேற்றுவதற்கும் அக்கட்சி எதிர்பார்த்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அதிகாரத்தை பலப்படுத்தும் அதேவேளையில், அக்கட்சியின் புதிய யாப்பு இரண்டாம் நிலை தலைமைத்துவத்திற்கு வழிவகுக்கும்.

தலைமைத்துவத்திற்கான வாரிசுத் திட்டங்கள் நடைமுறையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். இது ஒரு தலைமைத்துவ சபை வடிவில் இருக்கும். இவ்வாறு புதிய யாப்பு கொண்டுவரப்பட்டு கட்சி பலப்படுத்தப்படுமாயின் அது பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்திக்கே பாதகமானதாக அமையும்.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்திக்குள்ளும் மாற்றுக் கருத்துக்கள் ஏற்படத் தொடங்கியுள்ளன. அக்கட்சியின் உறுப்பினர்கள் பலர் அதிலிருந்து வெளியேறியுள்ளனர். குறிப்பாக ஹரீன் பெர்னாண்டோ, மனுஷ நாணயக்கார, டயானா கமகே போன்றவர்கள் வெளியேறி அரசாங்கத்தில் அமைச்சுப் பொறுப்புக்களைப் பெற்றுள்ளனர்.

அத்துடன், சம்பிக்க ரணவக்க, குமார வெல்கம போன்ற அதன் பங்காளிக் கட்சிளின் தலைவர்களும் ஏற்கனவே அதிலிருந்து விலகி சுயாதீனமாகச் செயற்படுவதாக அறிவித்து விட்டனர்.

இது போன்ற பின்னணியில், ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து செயற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் ஏற்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த அதாவது ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் உறுப்பினர்கள் பலர் மீண்டும் தமது தாய்க்கட்சியுடன் இணைவதற்கு விருப்பம் தெரிவித்திருப்பதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர். இதனை ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ரோஹினி கவிரத்ன எம்பியும் கூறியிருந்தார்.

எனவே, எதிர்வரும் ஐக்கிய தேசியக் கட்சியின் வருடாந்த மாநாட்டில் புதிய யாப்புக் கொண்டுவரப்பட்டு அக்கட்சி பலமான நிலைக்கு வருமாயின் எதிர்காலத்தில் ஐ.தே.கவும், ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து கூட்டணி அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் உள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் பலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அவ்வாறு கூட்டணியொன்று அமையும் பட்சத்தில், தேசிய மக்கள் சக்தியின் எதிர்பார்ப்புக்கள் எந்தளவுக்கு சாத்தியமாகும் என்பது கேள்விக்குறியே. அடுத்த தேர்தல் தமக்கு கணிசமான வாக்குகளை வழங்கும் என கணிப்பீடு செய்திருக்கும் தேசிய மக்கள் சக்தியினர் எந்தளவுக்கு மக்கள் மத்தியில் சென்றுள்ளார்கள் என்பது தெரியவரும். இதுபோன்ற ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கான ஆயத்தங்களில் ஈடுபட்டிருந்தாலும், எந்தத் தேர்தலை நாடு முதலில் எதிர்கொள்ளப் போகின்றது என்பது இன்னமும் உறுதியாகத் தெரியவில்லை.

Comments