தாய்நாட்டை மீளக்கட்டியெழுப்ப புலம்பெயர் உறவுகளுக்கு அழைப்பு! | தினகரன் வாரமஞ்சரி

தாய்நாட்டை மீளக்கட்டியெழுப்ப புலம்பெயர் உறவுகளுக்கு அழைப்பு!

நாடு தற்பொழுது எதிர்கொண்டுள்ள நெருக்கடிநிலையிலிருந்து மீள்வதற்கு புலம்பெயர்ந்துவாழும் இலங்கையர்களின் ஒத்துழைப்பு மீண்டும்ஒருமுறை கோரப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் மறைந்த இரண்டாவது எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக அங்கு சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரிட்டனில் உள்ள புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களை நேரில் சந்தித்து இந்தக் கோரிக்கையை முன்வைத்திருந்தார்.

நாட்டில் காணப்படும் முதலீட்டு வாய்ப்புக்களைப் பயன்படுத்தி முதலீடுகளை மேற்கொள்ள வருமாறும், நாட்டைக் கட்டியெழுப்ப ஒத்துழைப்பு வழங்குமாறும் அவர் அழைப்பு விடுத்திருந்தார்.

புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களிடம் கடந்த இரண்டு வருட காலப்பகுதியில் இவ்வாறான கோரிக்கையை விடுக்கும் இரண்டாவது ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க காணப்படுகின்றார்.

இதற்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களின் ஒத்துழைப்பை வேண்டியிருந்தார். தற்பொழுது நாடு எதிர்கொண்டுள்ள அந்நியச் செலாவணி நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு உதவக் கூடிய தரப்பினராக வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் காணப்படுகின்றனர். அங்கிருந்து அவர்கள் அனுப்பக் கூடிய ஒவ்வொரு அமெரிக்க டொலரும் நாட்டின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கு ஒத்துழைப்பாக அமையும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.

பிரித்தானியாவில் வாழும் இலங்கையர்கள் மத்தியில் உரையாற்றியிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிடுகையில், 'வெளிநாட்டில் வாழும் இலங்கையர் தம்மைப் புலம்பெயர் மக்களாக அடையாளப்படுத்துகின்றனர். இந்த நிலையில் புலம்பெயர் அலுவலகமொன்றை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் வெளிவிவகார அமைச்சினால் தொடங்கப்பட்டுள்ளன. இந்த அலுவலகம் ஜனாதிபதி அலுவலகத்தின் கீழ் சில காலம் இருக்கும். அதன் பின்னர் வெளிவிவகார அமைச்சின் கீழ் கொண்டு வரப்படும். இந்த அலுவலகம் வெற்றிபெற வேண்டும் என நாம் எதிர்பார்க்கின்றோம்' எனக் கூறியிருந்தார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்த இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தில் இந்த புலம்பெயர் அலுவலகம் அமைக்கும் விடயம் தொடர்பில் ஜனாதிபதி பிரஸ்தாபித்திருந்தார். இதற்கு முன்னரும் இது தொடர்பான கருத்தாடல்கள் இடம்பெற்றிருந்தாலும், இம்முறை இதனை நடைமுறைப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றமை வரவேற்கத்தக்கதாகும்.

பிரித்தானியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சந்திப்பில் அங்கு வாழும் இலங்கை வர்த்தகர்கள், முதலீட்டாளர்கள், தொழில் வல்லுநர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இங்கு மேலும் உரையாற்றியிருந்த ஜனாதிபதி “வடக்கில் காணப்படும் காணிப்பிரச்சினை, காணாமற் போனவர்கள் தொடர்பான பிரச்சினை, அவர்களுக்கு உரிய நட்டஈடு வழங்குவது தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை என்பவற்றுக்குத் தீர்வு வழங்க வேண்டும். அதிகாரப் பகிர்வின் சில அடிப்படைகளைக் கவனிக்க வேண்டும்.

2018ஆம் ஆண்டு அரசியலமைப்பை திருத்த நாம் நடவடிக்கை எடுத்த போது வடக்கு, கிழக்குக்கு வெளியில் உள்ள ஏழு முதலமைச்சர்களும் எதிர்க்கட்சித் தலைவரும் யோசனைகளை முன்வைத்தது மகிழ்ச்சியளிக்கிறது. வடக்கு, கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்களும், முதலமைச்சர்களும் அதற்கு உடன்பட்டுள்ளதால் எம்மால் அதனைத் தொடர முடியும். அதனை நிறைவேற்ற முடியும் என்றும் நம்புகிறேன்.

நாம் அனைவரும் ஒன்றிணைந்து வளமான தேசமாக எமது நாட்டை மாற்ற வேண்டும். இங்கே வாழ்வதால் நீங்கள் வெற்றி அடைந்திருப்பீர்கள். இங்கு வாழும் சுமார் 500,000இலங்கையர்கள், தங்களை முதல் அல்லது இரண்டாம் தலைமுறை இலங்கையர்களாக அடையாளப்படுத்துகின்றனர். வடக்கில் மட்டுமல்ல தெற்கிலும் முதலீடு செய்ய முடியும். உங்களில் சிலருக்கு தெற்கு அல்லது கிழக்கில் தொடர்புகள் இருக்கலாம். அவர்களுக்கு உதவியளிக்க விரும்பலாம். அதில் எந்த பிரச்சினையும் இல்லை. உங்களால் முடிந்த விதத்தில் இலங்கைக்கு உதவுங்கள்'' என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களைப் பொறுத்தவரையில் குறிப்பாக தமிழர்கள் நாட்டில் இடம்பெற்ற பல்வேறு குழப்பமான சூழ்நிலைகளால் நாட்டை விட்டு வெளியேறிச் சென்றவர்களாவர். விசேடமாக 83ஆம் ஆண்டு தமிழர்கள் மீதான வன்செயல்களின் பின்னரே பெரும் எண்ணிக்கையான தமிழர்கள் இலங்கையை விட்டு வெளிநாடுகளுக்குச் சென்று தஞ்சமடையத் தொடங்கினர். இந்த இனக்கலவரத்தின் போது அவர்களுக்கு ஏற்பட்ட மோசமான அனுபவம் இரண்டாம் மூன்றாம் தலைமுறையின் மீதும் காணப்படுகிறது.

அது மாத்திரமன்றி அதன் பின்னர் இடம்பெற்ற யுத்த சூழல்களால் பல்லாயிரக்கணக்கான இலங்கையர்கள் நாட்டைவிட்டுத் தப்பிச் சென்றனர். அருகிலுள்ள இந்தியாவுக்குப் படகு மூலம் சென்று தஞ்சமடைந்தவர்கள் இன்னமும் அகதிகளாக வாழ்ந்து வருகின்ற போதும், வெளிநாடுகளுக்குச் சென்ற பலர் பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பலம் பொருந்தியவர்களாகக் காணப்படுகின்றனர்.

பிரித்தானியா, அமெரிக்கா, கனடா, நோர்வே, சுவீடன், உள்ளிட்ட பல நாடுகளில் பரந்து விரிந்து வாழும் இலங்கை புலம்பெயர் தமிழர்கள் அந்நாட்டின் அரரசியலில் தாக்கம் செலுத்தும் சக்தியினராக விளங்குவதையும் காணக் கூடியதாகவுள்ளது. இலங்கை விவகாரங்களில் அழுத்தம் கொடுக்கக் கூடிய தரப்பினராக அவர்கள் இருப்பதையும் மறுக்க முடியாது.

தமிழர்கள் மாத்திரமன்றி இலங்கையைச் சேர்ந்த சிங்கள, முஸ்லிம் இனத்தவர்கள் பலரும் வெளிநாடுகளில் புலம்பெயர்ந்துள்ளனர். இத்தாலி, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் கணிசமான சிங்கள மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இவ்வாறு புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்கள் ஒரு சில தலைமுறைகளைக் கண்டிருந்தாலும் இந்நாட்டில் வழங்கப்பட்ட இலவசக் கல்வி, இலவச மருத்துவம் போன்ற நலன்புரி சேவைகளைப் பெற்றுச் சென்றவர்களே அதிகமாக இருக்கின்றனர். இவ்வாறான சலுகைகளைப் பெற்றவர்கள் என்ற ரீதியிலும், தமது உறவுகள் இன்னமும் இலங்கையில் வாழ்ந்து வருவதாலும் நாடு எதிர்கொண்டுள்ள இக்கட்டான சூழ்நிலையிலிருந்து மீட்சிபெற உதவுவதில் அவர்களுக்கும் கடமைப்பாடொன்று உள்ளது. தமது கடமைகளை அவர்கள் அவ்வப்போது நிறைவேற்றி வருகின்றமையை மறந்து விடலாகாது.

இது இவ்விதமிருக்க, வடக்கு, கிழக்கு மாத்திரமன்றின் நாட்டின் முன்னேற்றத்துக்கு முதலீடுகளை மேற்கொள்ள புலம்பெயர் தமிழர்கள் பலர் ஆர்வமாக இருக்கின்ற போதும், அவ்வப்போது முன்னெடுக்கப்படுகின்ற  இனவாதக் கண்ணோட்டத்திலான பிரசாரங்களால் அவர்கள் பெரும் தயக்கம் காட்டி வருகின்றனர்.

பொதுவாகவே வெளிநாட்டு முதலீடுகள் நாட்டுக்குள் கொண்டுவரப்படும் போது பின்பற்றப்படும் சிக்கல் நிறைந்த நடைமுறைகள் பல உள்ளன. இவ்வாறான சூழலில் புலம்பெயர்ந்த தமிழ்த் தரப்பினரால் முதலீடுகள் கொண்டு வரப்படும்போது ஏற்கனவே காணப்படும் கெடுபிடிகள் தீவிரமாக்கப்படுவதும் அவர்கள் ஆர்வம் காட்டாமல் இருப்பதற்கான காரணங்களில் ஒன்றாக உள்ளது.

இருந்தபோதும் யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ளவர்களுக்கு புலம்பெயர்ந்து வாழ் தமிழர்கள் பலர் தம்மாலான உதவிகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். புலம்பெயர்ந்து வாழ் தமிழர்கள் இலங்கையில் இடம்பெறும் முன்னேற்றங்களில் எப்பொழுதும் அக்கறை காண்பித்து வருபவர்கள் என்பதை நாம் மறுக்க முடியாது.

இதற்கு சிறந்த உதாரணமாக 2004ஆம் ஆண்டு சுனாமிப் பேரலை அனர்த்தத்தின் பின்னர் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு பகுதி உள்ளிட்ட நாட்டின் ஏனைய பகுதிகளைக் கட்டியெழுப்புவதற்கு குறிப்பாக பாதிக்கப்பட்ட மக்களை மீட்சியுறச் செய்வதற்கு புலம்பெயர்ந்த இலங்கையர்கள் பல்வேறு வகையில் உதவிகளைச் செய்திருந்தனர்.

இது தவிரவும் இறுதி யுத்தத்தின் பின்னர், இயற்கை அனர்த்தங்களின் போது எனப் பல்வேறு சந்தர்ப்பங்களில் புலம்பெயர்ந்து வாழ் தமிழர்கள் நாட்டுக்கு உதவி செய்துள்ளனர்.

அது மாத்திரமன்றி புலம்பெயர்ந்து வாழ் தமிழர்களால் மேற்கொள்ளப்படும் உதவிகளை இனவாத ரீதியில் பிரசாரங்களுக்குப் பயன்படுத்துவது நிறுத்தப்பட வேண்டும். அதற்கும் அப்பால் இலங்கையில் அதிகரித்துள்ள ஊழல்களால் தாம் வழங்கக் கூடிய உதவிகள் மக்களுக்கு நேரடியாகச் சென்றடையாது இடையிலுள்ள அரசியல்வாதிகளால் சூறையாடப்பட்டு விடும் என்ற சந்தேகமும் புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களிடம் காணப்படுகிறது.

இதுபோன்ற சந்தேகங்களைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் வெளிப்படையான பொறிமுறையொன்றை நடைமுறைப்படுத்துவதும் காலத்தின் தேவையாக உள்ளது.

இதுபோன்ற அடிப்படைப் பிரச்சினைகளையும், சந்தேகங்களையும் தீர்க்கும் வகையில் அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்கும் பட்சத்தில் வெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள் தமது முதலீடுகளைக் கொண்டு வருவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக ஏற்படும்.

சம்யுக்தன்

Comments