கரும் பூஞ்சை; இந்தியாவைத் தாக்கிய மற்றொரு பேராபத்து | தினகரன் வாரமஞ்சரி

கரும் பூஞ்சை; இந்தியாவைத் தாக்கிய மற்றொரு பேராபத்து

உலகின் பல்வேறு பகுதிகளிலும் கொவிட் 19 தொற்று கோரத்தாண்டவமாடிக் கொண்டிருக்கும் தற்போதைய சூழலில் கறுப்பு பூஞ்சை (Black Fungas - Mucormycosis) பங்கசு நோய் குறித்தும் கவனம் செலுத்தப்பட வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. கொவிட் 19 தொற்றின் இரண்டாவது அலை இந்தியாவில் தற்போது தீவிரமடைநதுள்ளது. இப்பின்னணியில் தமிழகம் உட்பட பல மாநிலங்களில் கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்கள் மத்தியில் இப்பூஞ்சை நோய் பதிவாகியுள்ளது. இற்றை வரையும் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்நோய்க்குள்ளாகியுள்ளதாக இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனாலும் இலங்கையில் 2019 இல் 42 பேரும், 2020 இல் 24 பேரும், 2021 இல் மே மாதம் வரையும் 24 பேரும் இப்பூஞ்சை நோய்க்கு உள்ளாகியுள்ளனர். அவர்களில் எவரும் கொவிட் 19 தொற்றுக்கு உள்ளானவர்கள் அல்லர். ஆனால் நோயெதிர்ப்புச்சக்தி குறைந்தும் பலவீனமடைந்தும் காணப்பட்டவர்களே இந்நோய்க்கு உள்ளாகியுள்ளனர் என்று குறிப்பிட்டிருக்கின்றார் இலங்கை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் விஷேட மருத்துவ நிபுணர் பிரிமாலி ஜயசேகர.

இதேவேளை The College of Otorhinolaryngologists & Head and Neck Surgeons of Sri lanka என்ற அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில், 'கருப்பூஞ்சை இந்நாட்டில் பல தசாப்தங்களாகக் காணப்படுகின்ற போதிலும் இங்கு இற்றை வரையும் தீவிர நோயாகப் பரவியதற்கான சான்றுகள் இல்லை' என்று சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்வாறான சூழலில் கருப்பு புஞ்சை பங்கசு தொடர்பில் கவனம் செலுத்துவது பயன்மிக்கதாக இருக்கும். இது கருப்பு பூஞ்சை என்ற பெயரைப் பெற்றுள்ள போதிலும் அது வெள்ளை நிறப்பூஞ்சையேயாகும். ஆனால் இப்பூஞ்சையின் தாக்கம் உடலில் ஏற்படும் பகுதி கருப்பு நிறமடைவதாலும் கருப்பு நிறத்தில் சளி அல்லது மூக்கிலிருந்து திரவம் வெளிப்படல், வாய் மற்றும் மூக்கின் உட்பகுதியில் கருப்பு நிறப் புள்ளிகள் வெளிப்படல் என்பன காரணமாகவும் தான் இந்நோய் இப்பெயரைப் பெற்றிருக்கின்றது. இது மிகவும் அரிதான, ஆனால் ஆபத்தான நோய் என்றாலும் பால், வயது வேறுபாடின்றி எல்லோரையும் பாதிக்கக்கூடியதோ ஆளுக்காள் தொற்றக்கூடியதோ அல்ல.

அதேநேரம் இப்பூஞ்சையானது புதிதாகத் தோற்றம் பெற்ற ஒன்றுமல்ல. இது சுற்றுப்புறச் சூழலில் பரவலாகக் காணப்படக்கூடியதாகும்.  குறிப்பாக மண், தாவரங்கள், பசளை, அழுகும் பழங்கள் மற்றும் மரக்கறிகளில் இது பொதுவாகக் காணப்படும். அத்தோடு மனிதனின் மூக்கிலும் உடலிலும் கூட இப்பூஞ்சை காணப்படலாம். சுற்றுச்சூழலில் காணப்படும் இப்பூஞ்சை காற்றின் மூலம் காயங்கள், மூக்குத் துவாரம் ஊடாக உடலினுள் செல்லவும் முடியும். ஆனால் எல்லாரையும் தாக்கக்கூடியதல்ல இப்பூஞ்சை. உடலில் நோயெதிர்ப்புச்சக்தி  வீழ்ச்சியடைந்து, பலவீனமடைந்து காணப்படுபவர்களையே இது குறிப்பாகத் தாக்கும். அதாவது உடல் நலக் குறைபாடுகளுக்கு மருந்துகளை உட்கொண்டு சுற்றுச்சூழலிலுள்ள நோய்க் கிருமிகளின் தாக்கத்தை எதிர்கொள்ளக்கூடிய ஆற்றல் குறைந்தவர்களையே இத்தொற்று குறிப்பாக இலக்கு வைக்கும்.

அச்சுறுத்தலை எதிர்கொள்பவர்கள்

அந்த வகையில் நீரிழிவு நோயாளர்கள், சிறுநீரகம் உள்ளிட்ட நாட்பட்ட தொற்றா நோய்களுக்கு உள்ளாகியுள்ளவர்கள், நீண்ட காலம் தீவிர சிகிச்சை பிரிவுகளில் சிகிச்சை பெற்றவர்கள், ஸ்டீரொய்ட் மருந்துகளை தொடராகப் பாவித்ததால் நோயெதிர்ப்பு சக்தி பலவீனமடைந்துள்ளவர்கள், உடலில் நோயெதிப்புச்சக்தி குறைவடைந்துள்ளவர்கள், புற்றுநோய், எயிட்ஸ் மற்றும் பூஞ்சை நோய்களுக்கு சிகிச்சை பெற்றவர்கள், சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்பு மாற்று சிகிச்சை செய்து கொண்டவர்கள், முதியவர்கள்  போன்றோர் இப்பூஞ்சை நோயின் அச்சுறுத்தலைப் பெரிதும் எதிர்கொள்கின்றனர். இந்நிலையில் இவ்வாறானவர்கள் கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி குணமடையும் போது அவர்களது நோயெதிர்ப்புச்சக்தி மேலும் பலவீனமடைந்து காணப்படும். அதனை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறது இப்பூஞ்சை.

அதேநேரம் உடலில் நோயெதிர்ப்புச்சக்தி பலவீனமடைந்துள்ளவர்கள் இப்பூஞ்சை தொற்று காணப்படும் காற்றைச் சுவாசித்தால் கூட அது நுரையீரலுக்கு சென்று நுரையீரலையும் பாதிக்கலாம்.  அதனால் கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி குணமடையும் நீரிழிவு நோயாளர்கள் தம் குருதியில் குளுக்கோஸின் அளவைத் தினமும் பரீட்சித்து கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதில் அக்கறை காட்ட வேண்டும். குருதியில் குளுக்கோஸின் அளவு கட்டுப்பாட்டு நிலையை அடையாவிட்டால் அது தொடர்பில் தாமதியாது மருத்துவ ஆலோசனையுடன் சிகிச்சை  பெற்றுக்கொள்வதோடு தூய நீரைப் பருகுவதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.

அறிகுறிகள்

இருப்பினும் இப்பூஞ்சை நோய்க்கு உள்ளானவர்களுக்கு தொண்டையில் கெட்டித்தன்மையுடனான சளி, மூக்கடைப்பு, தலைவலி போன்ற அறிகுறிகள் முதலில் வெளிப்படும். இவ்வறிகுறிகள் தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்பட வேண்டும்.  தவறும் பட்சத்தில் கண் இமைப் பகுதி தாக்கப்பட்டு கண் சிவப்படையும் அல்லது வீக்கமடையும். கண்பார்வையும் சம நிலையை இழக்கும்.  பார்வை நரம்பு பாதிக்கப்படுவதன் வெளிப்பாடாகும். இதன் விளைவாக பார்வையை இழக்க நேரிடலாம்.  கண்ணையும் கூட அப்புறப்படுத்த வேண்டிய நிலைமையும் கூட ஏற்படலாம். அதனால் அதற்குரிய சிகிச்சையை உரிய நேர காலத்தில் பெற்றுக்கொள்வது இன்றியமையாததாகும். 

மேலும் இப்பூஞ்சையின் தாக்கம் ஆரம்பமாகி இரண்டு மூன்று நாட்கள் செல்லும் போது அது மூளைக்கும் கூட பரவி உயிராபத்தை ஏற்படுத்தலாம். எனினும் இந்நோய்க்கு உள்ளானவர்கள் மத்தியில் தலைவலி, இருமல், கண் வலி, காய்ச்சல், முகத்தில் வலி, மூச்சுத் திணறல், கண்களின் கீழ் பகுதியில் வலி, கண்களைச் சுற்றி சிகப்பு நிறத்தில் தடிப்பு, மனப்பதற்றம், மூக்கடைப்பு, கறுப்பு நிறத்தில் சளி அல்லது திரவம் வெளிப்படல், கண்களின் மேல் இமை இறங்குதல், கண் பார்வையில் குழப்பம் ஏற்படல், உணர்வின்மை, வீக்கம், வாய் மற்றும் மூக்கின் உட்பகுதியில் கரும் புள்ளிகள் ஏற்படல், பற்கள் ஆடுதல் போன்றவாறான அறிகுறிகள் வெ ளிப்படலாம்.

இந்நோயானது முதலில் மூக்கு, வாய்ப்பகுதியைத் தான் பாதிக்கும். அதன் பாதிப்பு ஏற்பட்ட இடத்தின் கலங்கள் அழிந்து அவ்விடம் கறுப்பு நிறமாக மாறும். அத்தோடு மூக்கிலிருந்து வடியும் திரவமும் கருப்பு நிறமாகவே இருக்கும்.
இவ்வாறான அறிகுறிகள் தென்படுமாயின் தாமதியாது மருத்துவ ஆலோசனையுடன் சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் உயிராபத்துக்கு அல்லது அவயவங்களை அகற்ற வேண்டிய நிலைக்கு முகம்கொடுக்க நேரலாம்.

தவிர்ப்புக்கான வழிகள்

அதனால் நீரிழிவு போன்ற நாட்பட்ட தொற்றா நோய்களுக்கு உள்ளாகியுள்ளவர்கள் தம் நோயெதிர்ப்புச்சக்தியை மேம்படுத்திக் கொள்வதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி குணமடைபவர்கள் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்திக் கொள்வதற்கான உணவுகளை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளத் தவறக்கூடாது.

தொடர்ந்து முகக்கவசம் அணிந்திருப்பது அவசியம். அத்தோடு கட்டுமாணப் பணிகள், தோட்ட வேலைகள், மண்ணுடன் புழங்கும் வேலைகளில் ஈடுபடுபவர்கள் கை, கால்களையும் உடம்பையும் முகத்தையும் நன்கு மறைத்துக் கொள்ள வேண்டும்.  இவர்கள் நீண்ட காலணிகளை அணிந்து கொள்ளவும் தவறக்கூடாது. அதேநேரம் வீட்டையும் வீட்டு சுற்றுச்சூழலையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்பது தான் மருத்துவ நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

தற்போது இந்தியாவில் கொவிட் 19 தொற்றின் பி.1.617 என்ற திரிபடைந்த வைரஸே பரவி வருகின்றது. இது ஏற்கனவே பரவிய கொவிட் 19 தொற்றினை விடவும் அதிக தாக்கமிக்கதாகும். இத்திரிபு பரவுதல் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் கூட அச்சம் தெரிவித்திருக்கின்றது. இருப்பினும் உலகில் 50 க்கும் ​மேற்பட்ட நாடுகளுக்கு இத்திரிபு பரவி விட்டது. இலங்கையிலும் இத்திரிபு அடையாளம் காணப்பட்டுள்ளன. இத்திரிபின் தாக்கத்தின் விளைவாக நோயெதிரிப்புச்சக்தி பெரிதும் பலவீனமடைவதை இப்பூஞ்சை தமக்கு சாதகமாக்கிக் கொள்வதை மறந்துவிடலாகாது.

ஆகவே கொவிட் 19 தொற்றின் தாக்கத்தை பலவீனமடையச் செய்வதற்கும் கருப்பு பூஞ்சை பங்கசு நோயை தவிர்த்துக் கொள்வதற்கும் உடலின் நோயெதிர்ப்புச்சக்தியை பலமான நிலையில் வைத்திருக்க வேண்டும். இது தொடர்பில் சுகாதார மற்றும் மருத்துவ அறிவுரைகளுக்கு ஏற்ப ஒவ்வொருவரும் செயற்படுவது மிகவும் முக்கியமானது. அப்போது கொவிட் 19 தொற்றும் இல்லாமற்போவதோடு  கரும் பூஞ்சை நோயும் தூர விலகிச் சென்றுவிடும்.

நோயெதிர்ப்புச்சக்தியை பலப்படுத்தினால் அஞ்சத் தேவையில்லை

- சுகாதார அமைச்சின் தொற்றுநோய்கள் தடுப்பு பிரிவின் பிரதம தொற்றுநோயியல் நிபுணர் டொக்டர் சுதத் சமரவீர
 
கேள்வி: - தற்போது இந்தியாவில் கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி குணமடைபவர்கள் மத்தியில் பதிவாகும் கரும் பூஞ்சை தொடர்பில் குறிப்பிட முடியுமா? 
 
பதில்: - ஆம். இது ஒரு பங்கசு நோய். இப்பங்கசு சாதாரணமாக மனித உடலில் காணப்படக்கூடியதாகும். உடலில் நோயெதிர்ப்புச்சக்தி பலவீனமடையுமாயின் 
இப்பங்கசு நோய்நிலையை ஏற்படுத்தும். உடலிலும் அதன் தாக்கம் பரவலாம். குறிப்பாக மூளையிலும் பாதிப்பை ஏற்படுத்தலாம். 
 
உடலில் கொவிட் 19 தொற்றினால் மாத்திரமல்லாமன்றி வேறு ஏதாவது காரணத்தினாலோ அல்லது நோய்களாலோ அல்லது  நோயெதிர்ப்புச்சக்தியைக் குறைக்கக்கூடிய மருந்துகளை உட்கொள்வதாலோ நோயெதிர்ப்புச்சக்தி வீழ்ச்சியடைய முடியும். இந்த சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக்கொண்டு இப்பூஞ்சை நோய் தலைதூக்கலாம். 
 
இதேபோன்று 'கண்டிடா' என்றொரு பங்கசு உள்ளது. அதுவும் எமது உடலில் காணப்படக்கூடியதாகும். புற்று நோயாளர்களுக்கு இந்த 'கண்டிடா' பங்கசு காரணமாக வாயில் காயங்கள் ஏற்படலாம். இவ்வாறு நீரிழிவு போன்ற நாட்பட்ட தொற்றா நோய்களுக்கு உள்ளாகியுள்ளவர்களுக்கே இப்பங்கசுகள் நோய்களை ஏற்படுத்துமே தவிர  சாதாரண தேகாரோக்கியம் கொண்டவர்களுக்கு இவற்றினால் பாதிப்புகள் ஏற்படாது. குறிப்பாக உடலில் நோயெதிர்ப்புச்சக்தி வீழ்ச்சியடைந்தவர்களுக்கே பூஞ்சை நோய்கள் பாதிப்பாக அமையுமே தவிர கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி குணமடைபவர்களுக்கு தான் இப்பூஞ்சை நோய் ஏற்படும் என்றில்லை. 
 
இந்தியாவில் இப்பூஞ்சை நோய்க்கு உள்ளானவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதால் அது பேசுபொருளாகியுள்ளது. ஆனாலும் கொவிட் 19 தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்துள்ள அத்தனை பேருக்கும் அங்கு இப்பூஞ்சை நோய் ஏற்பட்டதாக இல்லை. இதன்படி உடலில் நோயெதிர்ப்பு சக்தி பெரிதும் வீழ்ச்சியடைந்திருப்பவர்களையே இப்பூஞ்சை தாக்குகின்றது என்ற முடிவுக்கு வரலாம். 
 
கேள்வி: - கறுப்பு பூஞ்சை நோய் மிக ஆபத்தானதெனக் கூறப்படுகிறதே?
 
பதில்: - எந்தவொரு நோய் தாக்கத்தினாலும் மரணம் ஏற்டலாம். அதனைத் தவிர்ப்பதற்கு தேவையான கட்டமைப்புகளை உடலின் நோயெதிர்ப்புச்சக்தி கனகச்சிதமாக மேற்கொள்கின்றது. என்றாலும் சில நோய்க்கிருமிகள் உடலில் நோயெதிர்ப்பச்சக்தியைப் பலமாகக் கொண்டிருப்பவர்களுக்கும் கூட உயிராபத்து அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம். இன்னும் சில நோய்கள் உள்ளன. அவை உடலில் நோயெதிர்ப்புச்சக்தி வீழ்ச்சியுடைமாயின் விரைவாக நோய் நிலையை ஏற்படுத்திவிடும். மேலும் சில நோய்க்காரணிகள் உள்ளன. அவை உடலில் நோயெதிர்ப்புச்சக்தி வீழ்ச்சியடையும்போது  நோய் நிலையை ஏற்படுத்தும். அவ்வாறான ஒன்று தான் இந்த கறுப்பு பூஞ்சை. இது உடலிலும், மூக்கிலும் மற்றும் சுற்றுச்சூழலிலும் காணப்படக்கூடிய ஒன்றாகும். என்றாலும் அது தேகாரோக்கியம் மிக்கவர்களிடம்   நோய் நிலையை ஏற்படுத்துவதில்லை.  
 
கேள்வி: - இது தொடர்பில் நீங்கள் மக்களுக்கு கூற விரும்புவதென்ன?
 
பதில் -: கறுப்பு பூஞ்சை உள்ளிட்ட பங்கசுகள் உடலில் நோயெதிர்ப்புச்சக்தி வீழச்சியடைந்துள்ளவர்களுக்கு தான் அச்சுறுத்தல் மிக்கதாகும். குறிப்பாக நீரிழிவு, புற்றுநோய் உள்ளிட்ட பல தொற்றா நோயாளர்கள் மத்தியில் நோயெதிர்ப்புச்சக்தி குறைவடைந்து காணப்படும். அதனால்  நாட்பட்ட தொற்றா நோய்களுக்கு உள்ளாகியுள்ளவர்கள் தம் நோய் நிலையை கட்டுப்படுத்துவதில்   அதிக கவனம் செலுத்த வேண்டும். தேவைப்படும் சந்தர்ப்பங்களில் மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளத் தவறக்கூடாது.   நுண்ணுயிர்க்கொல்லி (Antibiotic) மருந்துகளை அடிக்கடி பயன்படுத்துவதும் இவ்வாறான நோய்களுக்கு காரணமாக அமைகின்றன. அதாவது மருத்துவரின் சிபாரிசுகளின்றி எந்தவொரு நுண்ணுயிர்க்கொல்லி மருந்தையும் பயன்படுத்தலாகாது. அத்தோடு மருத்துவரின் சிபாரிசுக்கு அமைய உரிய அளவில் உரிய கால அளவுகளில் அம் மருந்துகளைப் பாவிக்கவும் வேண்டும். சிலர் நோய் குணமடைந்ததும் டொக்டரின் சிபாரிசினையும் கருத்தில் கொள்ளாது இவ்வகை மருந்துகளை இடைநடுவில் கை விடுகின்றனர். மீண்டும் நோய் தலைதூக்கும் போது இம்மருந்துகளை அவர்கள் திரும்பவும் பாவிக்கின்றனர். இது முற்றிலும் தவறான செயற்பாடாகும். நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகளை அவ்வாறு பாவிக்கக்கூடாது. அதன் விளைவாகவும் இவ்வாறான நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

மர்லின் மரிக்கார்

Comments