விடுதலை பெற்றோரை அரவணைப்போம் | தினகரன் வாரமஞ்சரி

விடுதலை பெற்றோரை அரவணைப்போம்

கடந்த 24ம் திகதி பொசன் பௌர்ணமி தினத்தன்று நிகழ்ந்த பல்வேறு புண்ணிய காரியங்களில் ஒன்றாக 16 முன்னாள் விடுதலை புலிகளுக்கும் மன்னிப்பு வழங்கி விடுவிக்கப்பட்டதைக் குறிப்பிட வேண்டும். ஒவ்வொரு வருடமும் முக்கியமான தினங்களில் சிறைக் கைதிகள் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்படுவது வழமையானாலும் வடக்கு கிழக்கு தீவிரவாதத்துடன் தொடர்புடைய தண்டனை பெற்ற கைதிகளை விடுவிக்கப்படுவோர் பட்டியலில் சேர்த்துக்கொள்வதில்லை.

யுத்தம் முடிவடைந்த பின்னர் கைதான விடுதலைப்புலிகள் 12 ஆயிரம் பேர் புனர்வாழ்வுக்கு உட்படுத்தி விடுதலை செய்யப்பட்ட பின்னர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தண்டனைக் கைதிகளாகவும், விசாரணைக் கைதிகளாகவும், எந்த விசாரணையுமின்றியும் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ்க் கைதிகள் அல்லது அரசியல் கைதிகள் என்ற பெயரால் அழைக்கப்பட்டவர்கள் மன்னிப்பு என்ற அடிப்படையில் விடுவிக்கப்படவே இல்லை. தன்னைக் கொலை செய்ய வந்தவர் என்று கூறி ஒரு விடுதலைபுலி கைதியை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன பொது மேடையில் விடுதலை செய்ததை நாம் பார்த்தோம். ஆனால் தாயை இழந்த ஒரு குழந்தையின் அப்பாவான தமிழ்க் கைதிக்கு கருணை அடிப்படையில் அவர் மன்னிப்பு வழங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட போதும் அவர் அதைச் செய்யாமல். பதவியை விட்டுப் போகும்போது ஒரு மரண தண்டனைக் கைதிக்கு மன்னிப்பு வழங்கியதை மக்கள் ஆச்சரியத்துடன் கவனித்தார்கள். 

எந்த ஆட்சியில் தமக்கு விமோசனம் கிடைக்காது என்று தமிழ்க் கைதிகள் நம்பினார்களோ அந்த ஆட்சியில் தான் 12 ஆயிரம் விடுதலைப் புலிகளுக்கு விடுதலைக் கதவு திறந்தது. தற்போது, விடுதலைக்காக போராடிக்களைத்திருந்த தமிழ்க் கைதிகளில் ஒரு பகுதியினருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. நல்லாட்சி அரசு காலத்தில் நடந்திருக்க வேண்டிய ஒன்று ராஜபக்ச அரசில் நிகழ்ந்திருக்கிறது. 

இவ்வாறு தமிழ்க் கைதிகள் விடுவிக்கப்பட்டிருப்பதை நாட்டின் மிகப் பெரும்பான்மையான மக்கள் வரவேற்றிருப்பார்கள். தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட அல்லது சம்பந்தப்பட்ட தமிழ்க் கைதிகளும், தடுத்து வைக்கப்பட்டவர்களும் பொது மன்னிப்பில் அல்லது புனர்வாழ்வின் பின்னர் விடுதலை செய்யப்பட வேண்டும். ஏனெனில் இறுதி யுத்தம் முடிவடைந்து 12 ஆண்டுகளாகி விட்டன. அன்றைய சூழல் எதுவும் இன்றில்லை. அன்றைய வெஞ்சினமும் கொலைவெறியும் தணிந்தும் அர்த்தமிழுந்தும் பன்னெடுங்காலமாகியும் விட்டது. அன்றைய சூழல்கள் அனைத்தும் பொருளற்று போய்விட, எய்தவனும் இல்லை; வில்லும் இல்லை; அம்பும் இல்லை என்றாகிவிட்ட பின்னர் சம்பந்தப்பட்டவர்களை இன்றைக்கும் ஏன் அடைத்துவைத்து அதில் குரூரம் தணிக்கவேண்டும்? 

அபிப்பிராயம் தேடும் வகையிலோ என்னவோ, தமிழ்க் கைதிகளை விடுதலை செய்வது தொடர்பான யோசனையை அமைச்சர் நாமல் ராஜபக்ச பாராளுமன்றத்தில் நகர்த்தியபோது, அதற்கு ஏகோபித்த வரவேற்பு கிடைத்ததை நாம் அவதானித்தோம். கடந்த அரசு காலத்தில் தானும் சிறைவாசம் அனுபவித்ததாகவும் அவ்வாறு அங்கே செல்லக்கிடைத்ததால் சிறைவாழ்க்கை, கைதிகள், அவர்களுக்கு இழைக்கப்படும் அநியாயங்கள் எனப் பலவற்றை அறிந்து கொள்ள முடிந்தது எனவும் நாமல் ராஜபக்ச கூறியதை சிறைவாசத்தின் ஊடாக அனுபவங்களைப் பெற்றிருக்கும் மற்றொருவரான பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவும் ஆமோதித்தார். தன்னைக் கொலை செய்ய எத்தனித்திருந்த ஒரு தமிழ்க் கைதியின் அருகே தான் அமர்ந்திருந்ததாகவும் இப்போதும் அவருடன் தான் தொடர்பில் இருப்பதாகவும் தெரிவித்த சரத்பொன்சேகா, இக் கைதிகளை தொடர்ந்தும் பூட்டி வைப்பதால் பயன் இல்லை என்றும் கூறினார். 

உள்ளே இருக்கும் தமிழ்க் கைதிகள் அனைவருமே பித்தம் தெளிந்தவர்களாகத்தான் இருக்கிறார்கள். விடுதலையை எதிர்பார்த்து. வெளியே இருப்போர்தான் ‘கைதி அரசியலை’ தொடர வேண்டும் என பித்தம் தெளியாதவர்களாக உள்ளனர். 
தமிழ் மக்கள் அரசாங்கத்தின் இந்த சமிக்ஞயை நல்லெண்ண அடையாளமாகக் கொள்ள வேண்டும். அமைச்சர்களான நாமல் ராஜபக்சவும் நீதி அமைச்சர் அலி சப்ரியும் பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்துகளை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டால் மேலும் பல தமிழ்க் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்றே தெரிகிறது. தீர்ப்பில் வழங்கப்பட்ட தண்டனைக் காலத்தை விட அதிக காலத்தை சில தமிழ்க் கைதிகள் சிறையில் கழித்திருப்பதாகவும். விசாரணையில் இருக்கும் வழக்குகளை விரைவில் முடிக்க வேண்டும்; மற்றும் வழக்கு தொடுக்கப்படாதவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்ற அமைச்சர் அலி சப்ரியின் கூற்றில் இருந்து, கைதிகள் விடுதலை தொடரும் என்ற நல்ல செய்தியைக் காணமுடிகிறது. மேலும் இந்த அரசு, ஜே.ஆர். ஜயவர்தனவினால் அக்காலச் சூழல்களுக்கு ஏற்ப கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டத்தில் மாற்றங்களை செய்யவிருப்பதாகவும் நீதியமைச்சர் தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. 

பயங்கரவாத தடைச்சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டுமென்பது ஒட்டுமொத்தத் தமிழர்களின் நாற்பது ஆண்டுகால கோரிக்கை என்று கூட சொல்லலாம். அச்சட்டத்தின் பிரயோகத்துக்கான சூழல்கள் இன்று ஓய்ந்து போயுள்ள நிலையில் இக்கடுமையான சட்டம் அவசியம் இல்லை. ஏனெனில் அரசியல் பழிவாங்கலுக்காகவே தற்போது இச்சட்டம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. முற்றிலும் நீக்கப்படாவிடின், அதன் கடுமையான ஷரத்துகளாவது நீக்கப்படவேண்டும். அசுரத்தனமான சிந்தனைகளும் சட்டங்களும் எமக்குத் தேவையில்லை. இச் சட்டத்தின் மீதான திருத்தங்கள் அல்லது சட்டமே நீக்கப்படுதல் என்பது நல்லாட்சி காலத்தில் கொண்டுவரப்பட்டிருக்க வேண்டும் என்பதையும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறோம். 

தமிழர்களுக்கு விடுதலை கிடைக்க வேண்டும் என்பதற்காக உயிரைப் பணயமாக வைத்து களத்தில் நின்ற இளைஞர்களுக்கு இன்று சமூகம் எத்தகைய மரியாதையை வழங்கியிருக்கிறது என்பதை நாம் விவரமாகச் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. தற்போது விடுதலைப் பெற்று ஊர் திரும்பும் அந்த 16 முன்னாள் போராளிகளுக்கும் பாராமுகம் காட்டப்படக்கூடாது என்பதை இங்கே வலியுறுத்தி சொல்ல விரும்புகிறோம்.

Comments