இ.போச., தனியார் பஸ்கள் இன்று முதல் சேவையில் | தினகரன் வாரமஞ்சரி

இ.போச., தனியார் பஸ்கள் இன்று முதல் சேவையில்

தனியார் பஸ் உரிமையாளர் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன அறிவிப்பு

பஸ் போக்குவரத்து சேவைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில். தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்கள் தனியார் பஸ்களில் அனுமதிக்கப்படமாட்டார்கள். அவ்வாறு  ஒரு தடுப்பூசியைக் கூட பெற்றுக் கொள்ளாதவர்களிடம் பொது போக்குவரத்து பஸ் வண்டியில் பஸ் கட்டணத்தை இரண்டு மடங்காக அறவிடப்பட நேரும்  என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இன்று முதல் மாகாணங்களுக்கு இடையிலான மட்டுப்படுத்த ப்பட்ட பஸ் போக்குவரத்து
சேவைகள் ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில் நேற்று அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அத்துடன் இன்று முதல் இலங்கை போக்குவரத்து சபை பஸ்களையும் சேவையில் ஈடுபடுத்த உள்ளதாக சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.

அதிவேக நெடுஞ்சாலையிலும் பஸ் போக்குவரத்து இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தனியார் பஸ் நடைமுறைகள் தொடர்பில் மேற்படி சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெளிவுபடுத்துகையில்:

பயணி ஒருவர் பஸ்ஸில் ஏறும்போது அவரிடம் தடுப்பூசி பெற்றுக் கொண்டதற்கான அத்தாட்சியாக வழங்கப்பட்டுள்ள அட்டையின் பிரதி ஒன்றை கையில் வைத்திருத்தல் அவசியம்.

நாடளாவிய ரீதியில் டெல்டா திரிபு வைரஸ் பரவல் நிலை காணப்படுகின்றது.அதனால் பொறுப்புள்ள பஸ் உரிமையாளர்கள் என்ற வகையில் மேற்படி யோசனையை முன்வைத்துள்ளோம். அது தொடர்பில் போக்குவரத்து அமைச்சர் மற்றும் ஜனாதிபதிக்கும் எழுத்து மூலம் அறிவிக்கவுள்ளோம்.

30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் தடுப்பூசி வழங்கப்பட்ட அத்தாட்சி பத்திரமான அட்டையின் பிரதி ஒன்று அவர்கள் கையில் வைத்திருக்க வேண்டும் என நாம் யோசனை முன்வைத்துள்ளோம்.

அவ்வாறு அந்த பிரதியை பயணிகள் கையில் வைத்திருக்காவிட்டால் அவர்களை பஸ்ஸில் ஏற்றுவதில்லை என முடிவு செய்துள்ளோம்.

குளிரூட்டப்பட்ட பஸ்களில் ஆசனத்துக்கு ஒருவர் என்ற ரீதியிலேயே பயணிகள் ஏற்றுக்கொள்ளப்படுவர். அவ்வாறு பயணிப்போரிடம் ஒன்றரைக் கட்டணம் அறவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.  அந்த பஸ்களிலும் மேற்படி அட்டையின் பிரதி அவசியமாகும்.

அதேவேளை இன்றைய தினம் முதல் இலங்கை போக்குவரத்து பஸ்களை சேவையில் ஈடுபடுத்த தீர்மானித்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க  தெரிவித்துள்ளார்.

அதேபோன்று அதிவேக நெடுஞ்சாலையில் இன்று முதல் பஸ் போக்குவரத்துக்கள் இடம்பெறும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

 

Comments