நியூசிலாந்து தாக்குதல்தாரி அஹமட் ஆதில் இலங்கையிலும் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தாரா? | தினகரன் வாரமஞ்சரி

நியூசிலாந்து தாக்குதல்தாரி அஹமட் ஆதில் இலங்கையிலும் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தாரா?

நியூசிலாந்து சுப்பர் மார்க்கட்டில் கத்திக்குத்து தாக்குதல் நடத்திய ஆதில் இலங்கையில் தாக்குதல் ஒன்றினை நடாத்த திட்டமிட்டாரா என விசாரணைகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையரான மொஹம்மட் சம்சுதீன் அஹமட் ஆதில் தொடர்பிலான சி.ஐ.டி. மற்றும் எஸ்.ஐ.எஸ். விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

ஆதிலின் முகப்புத்தக பதிவொன்றினை மையப்படுத்தி, அவருக்கு இலங்கையில் உள்ள நியூசிலாந்து நாட்டவர்களுக்கு எதிராக தாக்குதல் ஒன்றினை நடாத்தும் எண்ணம் இருந்தது என தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் விசாரணைகள் நடைபெற்று வருவதாக தெரிகிறது.

மேற்கோள் காட்டி, ஆதில், இலங்கைக்கு வந்து இங்குள்ள நியூசிலாந்து நாட்டவர்களுக்கு நல்ல பாடம் ஒன்றினை புகட்ட வேண்டும் என முகப்புத்தகத்தில் பதிவிட்டிருந்ததாகவும், அதனூடாக அவர் இலங்கையில் தாக்குதல் ஒன்றுக்கு திட்டமிட்டிருந்ததாகவும் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்நிலையில் இது தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவயிடம் கேட்டபோது,குறித்த விடயம் உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் வெளிப்படுத்த விசாரணைகள் இடம்பெறுவதாக குறிப்பிட்டார்.இலங்கையின் காத்தான்குடி, பண்டாரகம - அட்டுலுகம, மொரட்டுவ, கொழும்பு பகுதிகளில் வசித்துள்ள ஆதில் தொடர்பில், தற்போது காத்தான்குடியில் வசிக்கும் அவரது தாயாரான இஸ்மாயில் பரீதாவிடம் எஸ்.ஐ.எஸ். எனும் தேசிய உளவு சேவையும், சி.ஐ.டி. அதிகாரிகளும் தனித்தனியாக வாக்கு மூலம் பதிவு செய்துள்ளனர். அதனைவிட ஆதிலின் இலங்கை நண்பர்கள், நெருக்கமானவர்களிடமும் வாக்கு மூலங்கள் சில பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

Comments