அ.தி.மு.க. பொன்னான்டு விழா; எம்.ஜி.ஆர். ஜெயாவினால் வளர்க்கப்பட்டு தலைமையின்றி தவிக்கும் கட்சி | Page 2 | தினகரன் வாரமஞ்சரி

அ.தி.மு.க. பொன்னான்டு விழா; எம்.ஜி.ஆர். ஜெயாவினால் வளர்க்கப்பட்டு தலைமையின்றி தவிக்கும் கட்சி

தமிழகத்தில் என்றென்றும் காங்கிரஸ் ஆட்சிதான் என்றிருந்த நிலையை மாற்றி தமிழகத்தில் ஆட்சி அமைப்பது சாத்தியமே இல்லை என காங்கிரசுக்கு உணர்த்தியவர் அறிஞர் அண்ணா. தி. மு.க.வை தோற்றுவித்தவர். அவரால் கட்சி தொடங்கி 18 வருடங்களில் ஆட்சியையும் கைப்பற்ற முடிந்ததும் அவரது குருநாதர் தந்தை பெரியார் அரசியலுக்கு வரவிரும்பாததால் அண்ணா பெரியாரின் திராவிட கழகத்தில் இருந்து வெளியே வந்தார். தி.மு.கவை ஆரம்பித்தார். ஆனால் தமிழகத்தில் திராவிட ஆட்சியை நிறுவியதன் மூலம் ஒரு அரசியல் சமூக மறுமலர்ச்சியை ஏற்படுத்திய அண்ணாவினால் இரண்டு ஆண்டுகளே ஆட்சியில் நீடிக்க முடிந்தது. 1969 பெப்ரவரி இரண்டாம் திகதி புற்றுநோய் காரணமாக மரணத்தைத் தழுவினார்.

இத்திராவிட பாரம்பரியத்தின் ஓர் அங்கமே, கடந்த 17 ஆம் திகதி தனது 50வது ஆண்டு பொன்விழாவைக் கொண்டாடிய அனைத்திந்திய அண்ணாதிராவிட கழகம். இது அண்ணாவின் பரமசீடரான எம்.ஜி.ஆரினால் ஆரம்பிக்கப்பட்ட கட்சி. இந்தப் பொன்விழா பிரமாண்டமாக நடந்திருக்க வேண்டிய ஒன்று. ஆனால் ஆட்சியில் இல்லாததால் எடப்பாடியாரும் பன்னீர்செல்வமும் பொன்விழாவை அடக்கி வாசிக்க வேண்டியதாயிற்று. எம்.ஜி.ஆர். கல்லறைக்கு மலர்தூவி, சிலைக்கு மாலையணிவித்து, தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கி விழாவை நிறைவுசெய்தார் எடப்பாடியார். ஆனால் இதற்கு மேல் ஒரு படி சென்று அ.தி.மு.க வரலாற்றை ஆய்வு கண்ணோட்டத்துடன் நோக்கி புதுத் தகவல்களை கருத்தரங்குகள் ஊடாக கொண்டு வந்திருக்கலாம்.

ஒரு சினிமா நடிகர் முதலமைச்சராகவும் மத்திய அரசியலில் முக்கிய நபராக விளங்குயதும் தான் மறையும் வரை அசைக்க முடியாத மக்கள் ஆதரவுடன் ஆட்சியில் நீடித்தார் என்பதும் உலகம் அறிய வேண்டிய முக்கியமான தகவல்கள். அவை ஏற்றியும் போற்றியும், மிகைப்படுத்தலும் இல்லாமல் ஆய்வு ரீதியாக சொல்லப்பட வேண்டியவை. சில சமயம், அ.தி.மு.க வின் வரலாற்றில் பெருமைப்பட்டுக்கொள்ள எதுவும் இல்லை என இன்றைய அதன் தலைவர்கள் கருதுகிறார்களோ தெரியவில்லை.

தி.க. எனப்படும் திராவிடர் கழகத்துக்கு தமிழக வரலாற்றில் என்றில்லாமல் இந்திய சரிதத்திலும் ஒரு தனியிடம் உண்டு. ஏனெனில் அதுதான் திராவிடம், திராவிட செழுமை, பாரம்பரியம் என்ற ஒன்றை முதன் முதலாக அறிமுகம் செய்தது இந்திய அரசியல் பண்பாட்டுத் தளங்களில் தமிழர் வரலாற்றையும், சங்ககால பெருமைகளையும், மொழியியில் சிறப்புகளையும் வெளிக்கொண்டு வந்தது என்பதோடு அது சுயமரியாதையையும் பேசியது. தமிழர் வாழ்வியல், பண்பாட்டியல், நம்பிக்கைகள் என்பனவற்றின் மீது கேள்விகளை எழுப்பியது.

அது போலவே தி,மு.கவுக்கும் ஒரு சிறப்பான வரலாறு உண்டு. திராவிட கழகத்தின் அரசியல் நீட்சி என்று தி.மு.கவைச் சொல்லலாம். இவ்விரு இயக்கங்களும் தமிழர் பரப்பில் பெருந் தலைவர்களையும், சாதனையாளர்களையும் பல துறைகளிலும் பல தளங்களிலும் உருவாக்கியது. அண்ணா, கருணாநிதி, நெடுஞ்செழியன், வை.கோ, கண்ணதாசன், சிவாஜிகணேசன், எம்.ஜி.ஆர்., எம்.ஆர். ராதா, பாரதிதாசன், முரசொலிமாறன், இலக்குவனார் எனப் பெரியதொரு பட்டியலைச் சொல்லிக்கொண்டே போகலாம். அரசியலில் தி.மு.கவின் ஊழல், குடும்பச் செல்வாக்கு, வன்முறை அரசியல் என இருண்ட பக்கங்களை புரட்ட முடிவது உண்மையானாலும் இன்னொரு பக்கத்தில் இந்தி எதிர்ப்பு, மொழி வளர்ச்சிப் பணிகள், மாநில உட்கட்டமைப்பு அபிவிருத்தி, தொழில் வளர்ச்சியில் ஆற்றியுள்ள பணிகள், சமூக சீர்திருத்த சிந்தனைகளை சட்ட வடிவத்தில் கொண்டு வந்தமை, ஏற்றுக்கொண்ட கொள்கைகளில் உறுதியுடன் நின்று போராடும் தன்மை, சீர்திருத்த திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் அளித்தல், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் நடைமுறைக்கு வந்தமை, தமிழில் அர்ச்சனை என்பனவற்றை உதாரணமாகச் சொல்லலாம்.

இத்தகைய பெருமைக்குரிய ஒரு வரலாற்றை அ.தி.மு.க. கொண்டுள்ளதா என்ற கேள்வி எழத்தான் செய்கிறது. எம்.ஜி.ஆர். மீளறிமுகம் செய்த சத்துணவு திட்டம், தமிழ் எழுத்து சீர்திருத்தம், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் என எம்.ஜி.ஆர். காலத்து சாதனைகளையும், ஜெயலலிதாவின் 69 சதவீத இட ஒதுக்கீடு, தொட்டில் குழந்தைத் திட்டம், தான் ஒரு பிராமணப் பெண்மணியாக இருந்த போதிலும் கொலைக் குற்றச்சாட்டில் காஞ்சி சங்கராச்சாரியாரைக் கைதுசெய்த துணிச்சல், அ.தி.மு.கவை பேரியக்கமாக கட்டி எழுப்பியமை, மத்திய அரசுகளையே ஆட்டிப் படைக்கும் துணிச்சல் என ஜெயலலிதாவின் சிறப்பான ஒரு பகுதியை சொல்ல முடிந்தாலும் அவரது இருண்ட பக்கங்கள், செய்யக்கூடாதவற்றை செய்தமை, காலில் விழும் கலாசாரத்தையும், தனிமனிதர் துதிபாடலையும் போற்றி வளர்த்தமை, குற்றவாளியாக மறைந்தமை என்பன அ.தி.மு.கவின் மாறா கதைகளாக விளங்குகின்றன. செயற்கரியனவற்றை செய்தல் அல்லது Path Breaking ஒரு கட்சியின் வளர்ச்சிக்கு முக்கியம். அது அ.தி.மு.கவில் குறைவாகவே காணப்படுகிறது.

எடப்பாடியாரும், பன்னீர்செல்வமும் திராவிட போராட்டக் களங்களில் நின்று வளர்ந்தவர்கள் அல்லர். ஜெயலலிதாவின் ஆமாம் சாமி தலைவர்களாக, காலால் இட்டதை தலையால் செய்யும் அமைச்சர்களாக, தி.மு.க.வை எதிர்ப்பதற்காக எந்தப் பிசாசுடனும், கொள்கை இடையூறு பார்க்காமல், இணையக்கூடியவர்களாகவும் வளர்க்கப்பட்டவர்கள். கட்சி அரசியல் என்பது பரந்து விரிந்த கொள்கைத் திட்டங்களைக் கொண்டதாகவும், கல்வி, கலாசாரம், விஞ்ஞானம், மொழி, அறிவியல், எதிர்கால வளர்ச்சி எனப் பல தளங்களில் சுயமாக செயற்படக்கூடிய துணிச்சலையும் வேலைத்திட்டங்களையும் கொண்டதாக இருக்க வேண்டும். அ.தி.மு.கவில் காணப்படும் பெரும் குறைபாடாக இது விளங்குகிறது.

ஏனெனில் கருணாநிதி எதிர்ப்பு என்பதை மட்டுமே பிரதான கொள்கையாகக் கொண்டு உருவானதே அ.தி.மு.க.

என் மடியில் விழுந்த கனியை நான் இதயத்தில் எடுத்து வைத்துக்கொண்டேன் என்று அண்ணாதுரை எம்.ஜி.ஆரைப் பற்றி புகழ்ந்துரைத்திருக்கிறார். நான் நூறு கூட்டங்களை நடத்துவதால் கிடைக்கும் பலன்களை எம்.ஜி.ஆரின் ஒரு படம் செய்யும் என்றும் அண்ணாவிடம் நற்பெயர் வாங்கியவர் எம்.ஜி.ஆர். கருணாநிதியும் எம்.ஜி.ஆரும் நெருங்கிய நண்பர்கள். அரசியலிலும் சினிமாவிலும் இருவரும் நெருக்கமாக பணியாற்றியிருக்கிறார்கள். அண்ணா மறைந்த பின்னர் அடுத்த முதல்வர் நெடுஞ்செழியனா அல்லது கலைஞரா என்ற கேள்வி எழும்பியபோது கலைஞர் பக்கம் நின்றவர் எம்.ஜி.ஆர். கலைஞர் முதல் போராடுவதற்கு இருந்த முட்டுக்கட்டைகளைத் தகர்ப்பதில் எம்.ஜி.ஆர் பெரும் பங்கு ஆற்றினார் என்பது உண்மை.

தமிழக முதல்வராக விளங்கிய அறிஞர் அண்ணா 1969 பெப்ரவரி இரண்டாம் திகதி நள்ளிரவில் புற்றுநோய் காரணமாக காலமானார். அதன் பின்னர் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வியுடன் கட்சி இரண்டாகப் பிளவுபடுமா என்ற எதிர்பார்ப்பும் தமிழகக் காங்கிரஸ்காரர்கள் மத்தியில் மட்டுமன்றி புதுடில்லி இந்திரா காந்தி அரசிடமும் அந்த 'நல்ல' செய்திக்கான எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால் கட்சி பிளவுபடாமல், நெடுஞ்செழியன் விட்டுக்கொடுக்க, கலைஞர் கருணாநிதி முதல்வரானார். எனினும் இரண்டாண்டுகள் முதல்வராகத் திகழ்ந்த கலைஞர் தனது தலைமைக்கென தமிழக மக்களிடம் தனி ஆணை கிடைக்க வேண்டும் என விரும்பியதாலும் தமிழகத்தில் தி.மு.க.வுக்கு சாதகமான சூழல் காணப்படுவதாலும் இந்திரா காந்தியுடன் நல்லுறவு காணப்பட்டதாலும் 1971 பாராளுமன்றத் தேர்தலைப் பயன்படுத்தி சட்டசபைத் தேர்தலையும் நடத்திவிடலாம் என கருணாநிதி கருதினார். அதன்படியே சட்டசபை கலைக்கப்பட்டது. 1971 மார்ச் சட்ட சபைக்கும் பாராளுமன்றத்துக்குமான வாக்கெடுப்பு நடந்தது.

தேர்தல் முடிவுகள் பிரமிக்கத்தக்கவையாக அமைந்தன. சட்ட சபையின் 234 தொகுதிகளில் 184 ஆசனங்களை தி.மு.க. பெற்றது. தமிழகத்துக்கான 39 பாராளுமன்ற தொகுதிகளில் தி.மு.க. - இந்திரா காங்கிரஸ் கூட்டணி 38 தொகுதிகளில் வெற்றியீட்டியது. நாகர்கோவில் தொகுதியில் காமராஜர் மட்டுமே வெற்றி பெற்றார். இது தி.மு.க.வின் உச்ச நிலை.

தேர்தல் முடிவுகள் வெளியானபோது காஷ்மீரில் ஒரு படப்பிடிப்பில் இருந்தார் எம்.ஜி.ஆர். பறங்கிமலைத் தொகுதியில் வெற்றிபெற்றிருந்த அவர் கருணாநிதியுடன் தொடர்புகொண்டு, தான் அமைச்சரவையில் இடம்பெற விரும்புவதாகவும் சுகாதார அமைச்சு தனக்கு தரப்பட வேண்டுமென்றும் கேட்டார். அமைச்சரவையில் எம்.ஜி.ஆருக்கு இடம் தருவது வழியில் சென்ற பாம்பை மடியில் போட்டுக்கொண்ட மாதிரியாகிவிடும் எனக் கருதிய கலைஞர், சென்னைக்கு வாருங்கள் பேசிக்கொள்ளலாம் என்றார்.

அமைச்சரவையில் இடம் தருவதில் பிரச்சினை கிடையாது. ஆனால் படம் நடிப்பதை நீங்கள் கைவிட்டு முழு நேர அரசியலுக்கு வரவேண்டும் என கலைஞர் விதித்த நிபந்தனையை எம்.ஜி.ஆர். ஏற்கவில்லை. பின்னர் நடித்துக் கொண்டே அமைச்சராக இருக்கலாமா என்ற இக் கேள்வி சட்ட நிபுணர் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. நடித்துக்கொண்டே அமைச்சராக இருக்க சட்டத்தில் இடமில்லை என்று அக்குழுவின் தீர்மானம் அமையவே அமைச்சராகும் எண்ணத்தை எம்.ஜி.ஆர். கைவிட்டார். எனினும் எம்.ஜி.ஆர். - கருதிநிதி உறவில் விழுந்த விரிசல் விரிசலாகவே நீடித்தது.

இதன் பின்னர் எம்.ஜி.ஆரின் போக்கில் மாற்றம் தெரிந்தது. அவர் க லைஞர் ஆட்சியில் குறைபாடுகளைத் தேடத் தொடங்கினார். கருணாநிதி யார் என்பதை விலாவரியாக அறிந்தவர் எம்.ஜி.ஆர். என்பதால் எம்.ஜி.ஆருக்கு சில அச்சங்களும் சந்தேகங்களும் தோன்றியிருக்கக்கூடும்.

ஒரு தி.மு.க. கூட்டமொன்றில் பேசிய எம்.ஜி.ஆர், இங்கே ஒரு தொண்டர் 'அண்ணா வாழ்க' எனக் கத்தினார். அவர் வாயில் சாராய வாடை வீசியது என்று குறிப்பிட்டார். அது, கலைஞர் மதுக்கடைகளை திறந்திருந்த நேரம். இன்னொரு பொதுக் கூட்டத்தில் தி.மு.க.வினர் ஊழல் செய்து சொத்து சேர்ப்பதாகவும் எனவே அவர்களும் அவர்களின் உறவினர்களும் கணக்கு காட்ட வேண்டும் என்றும் பேசினார். எம்.ஜி.ஆர். தி.மு.க.வுக்கு விரோதமாக வெளிப்படையாகவே செயற்படுகிறார் என்றும் அவர்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் தி.மு.க.வில் சலசலப்பும் எதிர்ப்பும் எழுந்தது.

கருணாநிதி 1969 இல் முதல்வராக பதவியேற்ற போது யார் இந்த மனிதர். எப்படிப்பட்டவர்? என்ற கேள்வியும் தேடலும் டில்லியில் எழுந்தது. கருணாநிதியின் பேச்சாற்றல், தமிழ்ப்பற்று. திராவிட சிந்தனை, போதிய கல்வியறிவும் ஆங்கில அறிவுமின்மை, திடீரென முடிவெடுக்கும் தன்மை, தீவிரப்போக்கு என்பன இந்திய தேசியத்துக்கு அவரால் குந்தகம் ஏற்படுமோ? என்ற சந்தேகத்தை இந்திரா காந்தியிடம் ஏற்படுத்தியதோடு இதுகுறித்து அவர் ஆலோசனையும் செய்திருக்கிறார். மேலும் 1971 தேர்தலில் தி.மு.க. பெற்ற அமோக வெற்றி இந்திரா காந்தியை பாதித்திருந்தது. மொழிப் பற்றும் பிராந்திய உணர்வும் கொண்ட ஒரு மாநிலக் கட்சியை இப்படியே சுதந்திரமாக இயங்கவிடுவது நல்லதல்ல என இந்திரா முடிவெடுத்திருக்கக் கூடும். இதன் விளைவாகத்தான் தி.மு.க.வின் இரண்டாவது செல்வாக்கு மிக்க தலைவரான எம்.ஜி.ஆருக்கு வலைவிரிக்கப்பட்டு ஒரு பிளவுக்கான திட்டம் புதுடில்லியின் வகுக்கப்பட்டதாகவும் அந்தத் துணிச்சலில்தான் தி.மு.கவை விட்டு வெளியேற்றப்பட்ட எம்.ஜி.ஆர் புதுக் கட்சியை ஆரம்பித்தார் என்றும் இன்றளவும் கூறப்படுகிறது. டில்லி ஆசீர்வாதத்துடன் நடந்த சதியே தி.மு.கவில் ஏற்பட்ட பிளவு என்ற கூற்றை எம்.ஜி.ஆர். ஏற்கவும் இல்லை நிராகரிக்கவும் இல்லை.

தி.மு.க. செயற்குழுவின் கோரிக்கையையடுத்து தி.மு.க.வில் இருந்து எம்.ஜி.ஆர். 1972 அக்டோபர் ஒன்பதாம் திகதி நீக்கப்பட்டார். சமரச முயற்சிகள் தோல்வியடைந்ததில் பிளவு நிரந்தரமானது.

1972 அக்டோபர் 17 ஆம் திகதி அண்ணா தி.மு.கவை மதுரையில் தொடக்கி வைத்தார் எம்.ஜி.ஆர். அண்ணா என்ற பெயரை கட்சியின் பெயரில் சேர்த்துக் கொண்டதும் அண்ணாவின் படத்தை கொடியில் பொறித்ததும் சட்டவிரோதமானது என்று அண்ணாவின் மனைவி ராணி அண்ணாதுரை வழக்கொன்றை தாக்கல் செய்தார். ராணி அண்ணாதுரை யுடன் எம்.ஜி.ஆர் என்ன பேசி என்ன சமரசத்துக்கு வந்தார்களோ தெரியவில்லை, அந்த வழக்கை ராணியார் வாபஸ் பெற்றுக்கொண்டார்.

கட்சி ஆரம்பித்த புதிதில் ஏராளமான எதிர்ப்புகளை அ.தி.மு.க. சந்திக்க வேண்டியிருந்தது. கருணாநிதி தன் அதிகார பலத்தையும் தன் பொலிஸ் துறையையும் எம்.ஜி.ஆரின் கட்சிக்கு எதிராகப் பயன்படுத்தி குரல்வளையை நெரிக்கவே முயற்சிசெய்தார். எம்.ஜி.ஆர். அளவற்ற மக்கள் செல்வாக்கைக் கொண்டிருந்ததால் கருணாநிதியின் அடாவடித்தனங்களை அவரால் தாக்கு பிடிக்க முடிந்தது.

இந்த நிலையில்தான் 1973 மே 21 ஆம் திகதி திண்டுக்கல்லில் இடைத்தேர்தல் நடைபெற்றது. 1971 சட்டசபைத் தேர்தலில் வெற்றிபெற்ற தி.மு.க. உறுப்பினர் மரணமடைந்ததையடுத்தே இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. எம்.ஜி.ஆர். இத் தேர்தலில் வேட்பாளரை நிறுத்தி பலப்பரீட்சை செய்வது என்று முடிவுசெய்து திண்டுக்கல்லில் மாயத்தேவரை களமிறக்கினார். ஆளும் கட்சியான தி.மு.க. எம்.ஜி.ஆருக்கு எதிராக சகல வில்லத்தனங்களையும் கட்டவிழ்த்து இம்சை கொடுத்தது.

தேர்தல் முடிவுகள் வெளியாயின. மாயத்தேவர் இரண்டு இலட்சத்து 60 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். தி.மு.க. 93 ஆயிரம் வாக்குகள் பெற்றது. ஒரு சோறு பதமாக தமிழகத்தில் தி.மு.க.வின் செல்வாக்கு பல்லிளிக்கவே, அ.தி.முக. மீதான தி.மு.கவின் அடக்குமுறைகளும் தளர்ந்துபோயின. பல முக்கியஸ்தர்கள் தி.மு.க.வை விட்டு வெளியேறினர். உலகம் சுற்றும் வாலிபன் திரையிடப்படுமானால் சேலைகட்டிக் கொண்டு மதுரை வீதிகளில் நடப்பேன் என சவால்விட்ட கருணாநிதியின் சகபாடியான மதுரை முத்துவே பின்னர் அ.தி.மு.கவில் இணைந்து கொள்ளுமளவுக்கு அ.தி.மு.க. செல்வாக்கு பெற்றது.

ஜெயலலிதா கட்சியின் கட்டுக்கோப்பைக் காப்பாற்றி மந்திரவாதிபோல கட்சியை வைத்திருந்தார். ஆனால் தனி மனித துதிபாடல், அடிமைத்தனம், பயங்கர ஊழல், சர்வாதிகாரம், ஒரு குடும்பத்தின் அநியாய வளர்ச்சி என்பன அக்கட்சியின் பாரம்பரியத்தையும், உயிர் வேர்களையும் அழித்துவிட்டன.

அருள் சத்தியநாதன்

Comments