தங்களை எப்போதுதான் திருத்தி கொள்ள போகிறார்கள் இவர்கள்? | தினகரன் வாரமஞ்சரி

தங்களை எப்போதுதான் திருத்தி கொள்ள போகிறார்கள் இவர்கள்?

எதிர்க் கட்சியில் உள்ள தமிழ் பேசும் அரசியல்வாதிகள் பலரும் இன்று தெரிவித்து வரும் கருத்துகள் மற்றும் அவர்களது ஊடக அறிக்கைகள், உரைகள் பலவும் அவர்களுக்கு வாக்களித்த தமிழ் பேசும் மக்களை வியப்பில் ஆழ்த்துவதாக உள்ளன. யுத்தம் முடிவடைந்து 15 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும், இன்னமும் அன்றைய இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற இருதரப்பு மோதலில் சிக்குண்டு உயிரிழந்த தமிழ் மக்களைப் பற்றிய ஞாபகமூட்டல் பேச்சுக்களை அவர்கள் கைவிடுவதாக இல்லை.

யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த இன்றைய அரசாங்கத்தை எதிர்க்க வேண்டுமென்ற ஒரே ஒரு காரணத்திற்காக தமிழ்க் கட்சிகள் எதிர்க்கட்சிகள் போன்று செயற்படுவதற்கு ஆசைப்படுகின்றன. ஆனால் அவர்கள் எதிர்பார்த்தது மட்டுமன்றி எதிர்பார்ப்பதுவும் கூட நடந்தேறுவதாக இல்லை. மாறாக, அரசாங்கம் தமிழ் மக்களது குறைபாடுகளை தீர்த்து மக்களது மனங்களில் ஆழமாக பதிந்து வருகிறது.

மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான அன்றைய அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு சூழ்ச்சிகள் பல செய்து ஆட்சியைக் கைப்பற்றிய நல்லாட்சி கூட்டு அரசாங்கம் தமக்கு வாக்களித்த மக்களின் நலனுக்காக எதனையுமே செய்யாது அதிகாரத்தை இழந்தது. நாட்டின் அபிவிருத்தியைக் கூட முன்னெடுத்துச் செல்ல முடியாத ஒரு அரசாங்கமாக நல்நல்லாட்சி அரசாங்கத்தில் தமது எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படும் என்ற தமிழ் பேசும் மக்களின் எண்ணங்கள் தவிடுபொடியாகின.  அரசியல் தீர்வு, தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை, தமிழர் பிரதேசங்கள் அபிவிருத்தி எனும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள் எதுவுமே நல்லாட்சி அரசின் காலத்தில் நிறைவேறவில்லை.

மைத்திரி- ரணில் தலைமையிலான நல்லாட்சியில் எதனையுமே வென்றெடுக்க முடியாமல் தமிழ்த் தலைமைகள் வெட்கித் தலைகுனிந்த காலமாக ஐந்து வருடங்கள் கழிந்தது.

தாங்களேதான் நல்லாட்சி அரசாங்கத்தை அமைக்கக் காரணமாக இருந்தோம் எனக் கூறிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடக்கம், நல்லாட்சி அமைய நானே காரணம் எனக் கூறிய தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் மற்றும் முஸ்லிம் மக்களின் ஒட்டுமொத்த வாக்குகளும் நல்லாட்சி அரசாங்கத்திற்குக் கிடைத்தன எனக் கூறிய முஸ்லிம் கட்சிகளும் வெட்கித் தலைகுனியும் அளவிற்கு நல்லாட்சி அரசாங்கத்தில் எந்தவொரு சமூகத்திற்கும் நல்லது எதுவுமே நடைபெறவே இல்லை, அதுவே உண்மை.

ஐந்து வருட கால நல்லாட்சியின் போது நினைத்திருந்தால் முழு தமிழ் அரசியல் கைதிகளையும் அவர்கள் விடுவித்து இருக்கலாம். அது மாத்திரமன்றி அரசியல் தீர்வொன்றை சிறுபான்மை இனங்களுக்கு வாய்ப்பாக ஏற்படுத்தியிருக்கவும் முடியும். ஆனால் அவை எவற்றையுமே நல்லாட்சி அரசாங்கம் செய்யவில்லை. அதனை செய்வதற்கு இடமளிக்கவும் இல்லை.

தமிழ் மற்றும் தமிழ் பேசும் தலைமைகளை இரகசியமாக சூட்கேஸ் பெட்டிகளை வாங்கும் அரசியல்வாதிகளாக மாற்றி தாம் நினைத்ததை நல்லாட்சி அரசு அரங்கேற்றி வந்தது. இதற்கு தமிழ் பேசும் தலைமைகள் இணங்கிச் செல்ல வேண்டிய கட்டாய சூழல் செயற்கையாக உருவாக்கப்பட்டது.

ஆனால் இன்றைய அரசாங்கம் இவை எல்லாவற்றுக்கும் முற்றிலும் மாறுபட்ட விதத்தில் தமிழ் அரசியல் தலைவர்களை, தமிழ் அரசியல் கட்சிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்து வருகிறது. ஆனால் தமிழ்த் தலைமைகள் இவ்விடயத்தில் தயக்கம் காட்டி அழைப்பைப் புறக்கணித்து வரும் ஒரு சூழலை காண்கின்றோம்.

இந்தத் தொடர் புறக்கணிப்பை நோக்குகின்ற போது, நாட்டில் பிரச்சினைகள் தீர்வுக்கு வந்து விடக் கூடாது எனும் மனோபாவத்தில் அவர்கள் இருக்கிறார்களோ என்னும் சந்தேகம் தோன்றுகின்றது.

நல்லாட்சியில் ஐந்து வருடங்கள் மௌனமாக இருந்து விட்டு, இன்று உலகையே உலுக்கி வரும் கொடிய கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் மக்களாட்சி செய்து நாட்டில் அபிவிருத்திகளை முன்னெடுத்து வரும் அரசாங்கத்தின் மீது வசைபாடி வருகிறார்கள்.

நல்லாட்சி அரசு அதிகாரத்தில் இருந்த போதும் இதே பிரச்சினைகள் நிலவின. ஆனால் சந்தர்ப்பம் இருந்த போதிலும் அன்றைய ஆட்சியினர் பிரச்சினைகளை தீர்த்து வைக்கவில்லை. ஆனால் அதே பிரச்சினைகளுக்கு தீர்வினைத் தருமாறு இன்றைய அரசாங்கத்திடம் அவர்கள் கேள்விக்கணைகளை முன்வைக்கிறார்கள்.

உண்மையில் அரசாங்கம் இவர்களது கேள்விக்கு முன்னதாகவே அதற்குரிய நடவடிக்கைகளில் இறங்கி செயற்பட்டு வருகின்றது. இவ்வாறிருக்கையில் 18, 20 வருடங்களாக வசதிகள் எதுவும் இன்றி சிறைகளில் வாடுகின்ற தமிழ் இளைஞர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்று ரிசாத் பதியுதீன் எம்.பி உயர் சபையிலே கோரிக்கை விடுகிறார். நல்லாட்சியில் சகல அதிகாரங்களும் கொண்ட அமைச்சரவை அமைச்சராக இருந்த ஒருவர் அதே ஆட்சியில் இந்த விடயத்தைப் பற்றி வாய் திறக்காத நிலையில் இன்று கேள்வி எழுப்புகிறார்.

அதேபோன்று தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண கிடைத்த சந்தர்ப்பங்களை நழுவ விட்டு விட்டு அந்த விடயத்திற்கு முக்கியத்துவம் அளித்து முயற்சிகள் எடுத்து வரும் இந்த அரசாங்கத்தை பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் எப்பொழுதுமே சவால் விடும் வகையில் குற்றம்சாட்டி வருகிறார்.

இந்த அரசாங்கத்தை மிகவும் தரக்குறைவாக யாழ்ப்பாணத்திலுள்ள அரசியல்வாதிகள் பலரும் விமர்சித்து வருகிறார்கள். இவர்கள் அனைவருமே நல்லாட்சி அரசாங்கத்தில் பங்காளிகளாக இருந்து பணியாற்றியவர்கள். உண்மையில் இவர்களது நோக்கம் என்ன? இவர்களை இவ்வாறு இயக்கும் செயற்பாடுகளின் பின்னணியில் இருப்பவர்கள் யார்? அவர்களது தேவைதான் என்ன? இவர்கள் எல்லோருமே தமிழ் பேசும் மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்களா? இவை குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அடுத்த தேர்தலில் தமிழ் பேசும் மக்கள் தமக்கு சரியான தலைமைத்துவம் வழங்கக் கூடிய உண்மையான அரசியல் எண்ணங்களைக் கொண்ட அரசியல்வாதிகளை தெரிவு செய்ய வேண்டும். அதன் மூலம் நீண்ட காலப் பிரச்சினைகளுக்கு தீர்வினை காண முன்வர வேண்டும். வெறுமனே வீரவசனங்கள் பேசி அறிக்கைகளை விட்டு வருகின்ற அரசியல்வாதிகளால் தமக்கு எந்தவிதமான பிரயோசனமும் இல்லை என்பதை தமிழ் பேசும் மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதே எமது கருத்தாகும்.

Comments