இலங்கைக்கு IMF உதவியை பெற்றுக் கொடுப்பதில் இந்தியாவின் தீவிர கரிசனை | தினகரன் வாரமஞ்சரி

இலங்கைக்கு IMF உதவியை பெற்றுக் கொடுப்பதில் இந்தியாவின் தீவிர கரிசனை

இலங்கை மோசமானபொருளாதார நெருக்கடியில் திண்டாடுகின்றஇவ்வேளையில், இந்தியா இதுவரை வழங்கியுள்ள உதவிகள் அதிகமாகும். இந்தியாவின் இந்த உதவிகள்தொடர்பாக இலங்கையின் பிரபலங்கள் பலரும்இந்தியாவுக்கு நன்றியும் பாராட்டும்தெரிவித்துள்ளனர். இலங்கையின் முன்னாள் கிரிக்கட் ஜாம்பவான் சனத் ஜயசூரியவும் இவ்வாறு பாராட்டுத்தெரிவித்துள்ளவர்களில் ஒருவராவார்.

அவர் மாத்திரமன்றி இலங்கையின் கல்வியியலாளர்கள், புத்திஜீவிகள் உட்பட பல்துறை சார்ந்தோரும் இலங்கையின் இடர்காலத்தில் இந்தியா வழங்கிய அவசர உதவிகள் குறித்து பெரிதும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர். இலங்கையின் உண்மையான சகோதரன் இந்தியா ஒன்றேயாகும் என்பதே அவர்களது பொதுவான கருத்து ஆகும்.

டீசல் பற்றாக்குறை காரணமாக இலங்கையில் போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டிருந்தன. மின்சாரத்தை உற்பத்தி செய்வதும் கடினமாக இருந்தது. இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்ட இந்தியா விரைவாகவே எரிபொருள் கப்பலை இலங்கைக்கு அனுப்பியிருந்தது. இந்திய உதவியானது இலகு முறையிலான கடன் அடிப்படையிலானது. அதாவது குறைந்த வட்டி வீதத்தையும், நீண்ட காலத்துக்கு செலுத்கக் கூடியதுமான கடன் அடிப்படையிலான உதவிகளாகும்.

டீசல், பெற்றோல், நிதிக்கடன் மற்றும் ஒரு தொகை அரிசியையும் இலங்கைக்கென இந்தியா வழங்கியிருந்தது. அதிக வட்டி வீதத்தை விதித்து இலங்கையை கடன்பொறியில் சிக்க வைக்கும் தந்திரத்தை இந்தியா ஒருபோதுமே கையாண்டதில்லை. தனது அண்டைநாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்ற போது அந்நாட்டை துன்பத்திலிருந்து மீட்டெடுக்க வேண்டுமென்பதே இந்தியாவின் எண்ணமாகும். அதாவது பண்டைக் காலமாக இலங்கையுடன் நிலவி வருகின்ற நெருங்கிய நட்புறவை இந்தியா ஒருபோதுமே மறந்தபடி செயற்பட்டதில்லை என்பதே உண்மை.

இவ்வாறான நிலையில், இலங்கையின் பொருளாதாரத்தை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு இந்தியா ஒத்துழைப்பு வழங்குமென்ற உறுதிமொழியை புதுடில்லி தரப்பு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இலங்கை நிதியமைச்சரான அலி சப்ரி இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சில தினங்களுக்கு முன்னர் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

நிதியமைச்சர் அலி சப்ரி உள்ளிட்ட குழுவினர் சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடலுக்காக அமெரிக்காவுக்கு விஜயம் செய்திருந்த வேளையில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

அச்சந்திப்பின் போது இலங்கையின் பொருளாதாரத்தை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்காக இந்தியா முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என்று இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியை இலக்காக வைத்து இந்தியாவின் அர்ப்பணிப்பை அவர் இச்சந்திப்பின் போது உறுதி செய்துள்ளார்.

இலங்கை மீதான இந்தியாவின் அக்கறை இவ்வாறிருக்கையில், இலங்கைக்கு உதவி வழங்குமாறு சர்வதேச நாணய நிதியத்திடம் இந்தியா வலியுறுத்தி கோரிக்கை விடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் சில தினங்களுக்கு முன்னர் செய்தி வெளியிட்டிருந்தன.

இலங்கை தற்போது பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருப்பதனால் நிதி உதவிகளை துரிதமாக வழங்குமாறு சர்வதேச நாணய நிதியத்திடம் இந்தியா கேட்டுக் கொண்டுள்ளதாத அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியாவுடன் கடந்த செவ்வாய்க்கிழமை வொஷிங்டனில் இடம்பெற்ற சந்திப்பின் போது இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இவ்வாறு இலங்கைக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

இதேவேளை இலங்கை எதிர்கொண்டுள்ள கடினமான பொருளாதார நெருக்கடிகளுக்குத் தீர்வு காணும் வகையில் இந்தியா வழங்கி வரும் உதவிகள் குறித்தும் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியாவிற்கு இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார். இந்தியா கேட்டுக் கொண்டதற்கமைய, சர்வதேச நாணய நிதியம் தொடர்ந்தும் இலங்கையுடன் தீவிரமாக ஒன்றித்து செயற்படும் என்று அதன் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியா உறுதியளித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்காக உதவிகள் வழங்கி வருகின்ற இந்தியா, சர்வதேச நாணய நிதியத்திடமும் உதவி வழங்குவதற்கான கோரிக்கையை விடுத்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்க அம்சமாகும். இலங்கை மீது இந்தியா கொண்டுள்ள அக்கறையையே இந்நடவடிக்கைககள் எடுத்துக் காட்டுகின்றன.

அதேசமயம், கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ள இலங்கைக்கு தகுந்த நேரத்தில் இந்தியா வழங்கி வருகின்ற மனிதாபிமான உதவிகளுக்கு சர்வதேச நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளது.

கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ள இலங்கையில் அண்மையில் டீசல் நெருக்கடி ஏற்பட்டது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் இலங்கைக்கு இந்தியா 40,000தொன் டீசலை உடனடியாக வழங்கியிரந்தது. இந்தியாவின் அந்த உதவியானது பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு பெரும் ஆறுதலாக அமைந்திருந்தது.

இது ஒருபுறமிருக்க, பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு 1பில்லியன் டொலர் கடனை இந்தியா வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் இருநாடுகளும்அண்மையில் கையெழுத்திட்டிருந்தன. அதன்படி கடன் வரம்பு நிர்ணயிக்கப்பட்டு தொடர்ந்து பெட்ரோல், டீசல் வழங்கவும் இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்தியா எரிபொருள், மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை 500மில்லியன் டொலர் தொகை கடன் வரம்பில் இலங்கைக்கு வழங்கி வருகிறது. இதன்படி ஏப்ரல் 15- ஆம் திகதி, 18- ஆம் திகதிகளில் தலா 40,000தொன் டீசலை இந்தியா அனுப்பியிருந்தது. அதே அளவிலான பெட்ரோல் ஏப்ரல் 22ஆம் திகதி அனுப்பப்பட்டது. இவ்வாறு மனிதாபிமான அடிப்படையில் இந்தியா வழங்கி வரும் உதவிகள் குறித்து இலங்கையின் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், மக்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாகவே இலங்கைக்கு தக்க நேரத்தில் இந்தியா செய்து வரும் மனிதாபிமான உதவிக்கு சர்வதேச நாணய நிதியமும் பாராட்டு தெரிவித்துள்ளது.

இலங்கையில் தமிழ்_ சிங்களப் புத்தாண்டையொட்டி இந்தியா 11ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசியை கப்பல் மூலம் அனுப்பியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இதுபற்றி இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் கூறுகையில், 'இந்தியா கடந்த வாரத்தில் மட்டும் 16,000மெட்ரிக் தொன் அரிசியை இலங்கைக்கு அனுப்பியது. தற்போது 11ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசி வந்துள்ளது.              

இது இந்தியா_ -இலங்கை இடையேயான உறவை அதிகரிக்கும்' எனக் குறிப்பிட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை சார்பில் இந்தியாவும் கோரிக்கைகளை முன்வைத்திருப்பதானது இலங்கை மீது இந்தியா கொண்டிருக்கும் நெருங்கிய சகோதர உறவின் வெளிப்பாடாகுமென்று இலங்கையில் உள்ள புத்திஜீவிகள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

இலங்கையின் அண்டை நாடான இந்தியாவின் கருத்தையும் பரிசீலித்த பிறகே, இலங்கைக்கு நிதி உதவி வழங்குவதை சர்வதேச நாணய நிதியம் பரிசீலிக்கும் என்று  தகவல்கள் முன்னர் வெளியாகியிருந்தன. இந்நிலையில் இந்தியாவின் வேண்டுகோளுக்கிணங்க இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைப்பது இலகுவாகியுள்ளது.

இலங்கையின் நிதி நிலைமையை சீராக்க, இந்திய அரசு ஏற்கெனவே மேற்கொண்ட நடவடிக்கைகளை சர்வதேச நாணய நிதியம் பாராட்டியது எனவும், இலங்கையின் சார்பில் முன்வைக்கப்பட்ட சிறப்புக் கோரிக்கைகளை பரிசீலனை செய்ய நாணய நிதியம் உறுதியளித்திருப்பதாகவும் இலங்கை நிதி அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த 2021நவம்பரில், இரசாயன உரங்களின் இறக்குமதியை இலங்கை அரசாங்கம் நிறுத்தியதால், இந்தியா 100தொன் நனோ நைற்றிஜன் திரவ உரங்களை இலங்கைக்கு வழங்கியிருந்தது. 50நாட்களில் இலங்கை மக்களுக்கு இந்தியாவினால் வழங்கப்பட்ட மொத்த எரிபொருள், 200,000மெற்றிக் தொன் ஆகும். அத்துடன் இந்திய பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால், 40,000மெற்றிக் தொன் எரிபொருள் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்பதற்காக தொடர்ந்தும் ஒத்துழைப்புகளை வழங்குவதில் இந்தியா ஆர்வமாக உள்ளதாக புதுடில்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

"நாங்கள் நிச்சயமாக அவர்களுக்கு உதவுவோம் என்று நம்புகிறோம். மேலும் பரிமாற்றங்கள் மற்றும் கடன்களை வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்" என்று இந்தியாவின் மூத்த அரசாங்க வட்டாரம் தெரிவித்துள்ளதாக இந்திய செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இவை ஒருபுறமிருக்க இலங்கையின் பொருளாதார நெருக்கடியை வெற்றி கொள்வதற்காக இலங்கைக்கு இந்தியா வழங்கிய ஆதரவினை சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிரிஸ்டாலினா ஜோர்ஜிவா பாராட்டியுள்ளார். அதேசமயம், சர்வதேச நாணய நிதியம் இலங்கையுடன் தொடர்ச்சியான ஈடுபாட்டினை கொண்டிருக்கும் என்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் உறுதியளித்துள்ளார்.

ேவாஷிங்டன் டிசியில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியவற்றின் இளவேனில்கால கூட்டமொன்று இடம்பெற்றிருந்த நிலையில், நிர்மலா சீதாராமனை சந்தித்தபோதே ஜோர்ஜிவா இவ்வாறு கூறியுள்ளார்.

கொவிட் 19தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு இந்தியா தடுப்பூசித் திட்டத்தினை வெற்றிகரமாக முன்னெடுத்தமைக்காகவும் ஜோர்ஜிவா இந்தியாவைப் பாராட்டியுள்ளார். கொவிட்-19பெருநோயினை கட்டுப்படுத்துவதற்காக நலிவடைந்த நாடுகளுக்கு இந்தியா வழங்கிய உதவிகளுக்காகவும் அவர் இந்தியாவை பாராட்டியுள்ளார்.

இந்தியாவின் பொருளாதாரம் தொடர்ந்தும் உறுதியான நிலையில் இருப்பதற்கு நன்கு திட்டமிடப்பட்ட இந்தியாவின் கொள்கைகள் ஆதரவாக அமைந்திருப்பதாக ஜோர்ஜிவா சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் நெருக்கடியைத் தீர்ப்பதில் இந்தியா மேற்கொண்டுள்ள முயற்சியானது அண்டை நாட்டுக்கு முன்னுரிமையளிப்பதென்ற இந்தியாவின் தேசியக் கொள்கையையே வெளிப்படுத்துவதாக உள்ளது.

சாரங்கன்

Comments