அகதிகளை பழைய படகுகளில் அழைத்துச் செல்லும் ஆட்கடத்தல்காரர்கள் | தினகரன் வாரமஞ்சரி

அகதிகளை பழைய படகுகளில் அழைத்துச் செல்லும் ஆட்கடத்தல்காரர்கள்

இலங்கையின்  கிழக்கு கடற்பரப்பில் கடற்படையினால் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல்  நடவடிக்கைகளின்போது, சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயற்சித்த 38  சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சந்தேகநபர்கள் ஜூன் 11கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

அம்பாறை பிரதேசத்தை அண்மித்த கடற்பரப்பில் சந்தேகத்திற்கிடமான படகொன்று பயணிப்பதை கடற்படையினர் அவதானித்துள்ளனர்.

இதையடுத்து, குறித்த படகு கடற்படை அதிகாரிகளினால் சுற்றி வளைக்கப்பட்டு, சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி,  குறித்த படகில் சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்த 38  பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவிக்கின்றது.

அத்துடன், ஆட்கடத்தலுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மேலும் 6பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை பொருளாதார நெருக்கடிக்குள் சிக்குண்டுள்ள இந்த தருணத்தில், இலங்கையை விட்டு வெளியேறுவோரின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துள்ளது.

இந்த  ஆண்டில் கடந்த மே மாத இறுதி வரை 2,88,645கடவுச்சீட்டுக்கள் (பாஸ்போர்ட்)  விநியோகிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு, குடியகல்வு திணைக்கள தகவல்கள்  தெரிவிக்கின்றன.

2021ம் ஆண்டு முழுவதும் 3,82,506கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

எனினும், இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் மாத்திரம் மூன்று லட்சத்தை அண்மித்த கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

அத்துடன்,  கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்வதற்காக, குடிவரவு குடியகல்வு திணைக்கள  வளாகத்தில் பெரும் எண்ணிக்கையிலானோர் தொடர்ந்தும் காத்திருப்பதை நாளாந்தம்  அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

இந்த ஆண்டில் மாத்திரம் சுமார் ஐந்து லட்சத்தை அண்மித்தோர் வெளிநாடுகளுக்கு செல்லக்கூடும் என அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

இலங்கையின்  பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில், வேலைவாய்ப்புகளை  எதிர்பார்த்து வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை பல மடங்குகளாக  அதிகரித்துள்ளன.

இந்த  ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் மாத்திரம் 1,20,000க்கும் அதிகமானோர்  வேலைவாய்ப்புக்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு  வேலைவாய்ப்பு பணியகம் தெரிவிக்கின்றது.  இந்த  எண்ணிக்கையானது, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 100வீதம் அதிகரிப்பு என  இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இலங்கையிலிருந்து தற்போது அதிகளவிலானோர் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு செல்ல முயற்சித்து வருவதை அவதானிக்க முடிகின்றது.

குறிப்பாக,  இந்த ஆண்டின் இதுவரையான காலம் வரை சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு செல்ல  முயற்சித்த சுமார் 300பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்  பேச்சாளர் கேப்டன் இந்திக்க டி சில்வா தெரிவித்தார்.

ஆட்கடத்தல்  நடவடிக்கைகளுக்காக பாவனைக்கு உதவாத பழைய படகுகளே பயன்படுகின்றமை  உறுதியாகியுள்ளதாக கடற்படை பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.

''ஆட்கடத்தல்காரர்களே  மக்களை தவறான வழிக்கு அழைத்துச் செல்வதாக உணர முடிகின்றது. மக்கள்  கஷ்டத்தில் உள்ள இந்த சந்தர்ப்பத்தில், நல்லதொரு நாடு இருக்கின்றது என  போலியாக அவர்களை தவறான வழிக்கு அழைத்துச் செல்ல முயற்சிக்கின்றனர்.  வெளிநாடுகளுக்கு பழைய படகுகளை பயன்படுத்தியே, இவர்கள் அழைத்துச்  செல்லப்படுகின்றார்கள். அது மிகவும் அபாயகரமானது. அதுவே அச்சப்படக்கூடியதாக  உள்ளது. பழைய படகுகளில் செல்லும் போது, கடல் சீற்றம் அடைந்தால், அனைத்தும்  முடிந்து விடும். இந்த படகு வெளிநாட்டு கடல் எல்லைக்குள் சென்றதன்  பின்னர், மீண்டும் ஆட்கடத்தல்காரர்களுக்கு கிடைப்பதில்லை. அதனால்,  பாவனைக்கு உதவாத பழைய படகுகளையே இதற்காக பயன்படுத்துகின்றனர்" என கடற்படை  பேச்சாளர் தெரிவிக்கின்றார்.

சட்டவிரோதமான  வெளிநாடுகளுக்கு செல்வோரை, அந்தந்த நாடுகள் உடனடியாக திருப்பி அனுப்பி  வைக்கும் என கடற்படை ஊடகப் பேச்சாளர் கேப்டன் இந்திக்க டி சில்வா  கூறுகின்றார்.

''இவ்வாறு  வெளிநாடுகளுக்கு செல்வோரை, அந்த நாடு மீண்டும் இலங்கைக்கு திருப்பி  அனுப்பி விடும். இதனால், தேவையற்ற விதத்தில் பணத்தை வீண்விரயமாக்க வேண்டாம்  என்றே கூற வேண்டியுள்ளது. இவ்வாறு செல்வோரை நாம் எப்படியாவது கைது  செய்வோம். இல்லையென்றால், கடலில் செல்லும் போது, அவர்கள்  உயிரிழக்கக்கூடும். அவர்களை பாதுகாக்க வேண்டும்" என அவர் குறிப்பிட்டார்.

இலங்கையிலிருந்து  சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா சென்ற இரு குழுக்களை, அவுஸ்திரேலிய அரசாங்கம்  அண்மையில் விமானம் மூலம் நாடு கடத்தியிருந்தது.  12  பேரை கொண்ட இலங்கையர்களை கடந்த மே மாதம் 24ம் திகதியும், 15பேரை கொண்ட  இலங்கையர்களை கடந்த 9ம் திகதியும் ஆஸ்திரேலிய அரசாங்கம் நாடு  கடத்தியிருந்தது.

இதேவேளை, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு கடல் மார்க்கமாக சட்டவிரோதமான முறையில்  செல்வதற்கு அதிகபட்சமாக சுமார் 10லட்சம் இலங்கை ரூபாய்,  ஆட்கடத்தல்காரர்களினால் கோரப்பட்டு வருகின்றமை தொடர்பில் தகவல்  கிடைக்கின்றது.

இவ்வாறு  ஆட்கடத்தல்காரர்களுக்கு வழங்கப்படும் பணம் முழுமையாக வீண்விரயமாகும்  எனவும், அந்த பணத்தை மீளப் பெற்றுக்கொள்ள முடியாது எனவும் அதிகாரிகள்  குறிப்பிடுகின்றனர்.

இதனால், சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு இலங்கை அதிகாரிகள், பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.

ஆ. கனகசூரியர்

Comments