இலங்கையின் அரசியல் நிலைமாற்றம் | தினகரன் வாரமஞ்சரி

இலங்கையின் அரசியல் நிலைமாற்றம்

எழுந்தமானமாக அலையெனத் திரண்டு பொருத்தமற்றவர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கான அதிகாரத்தைக் கொடுத்து விட்டால், அதிலிருந்து அவர்களை விலக்குவதற்குப் பெரும்பாடு பட வேண்டும் என்ற உண்மை நிரூபிக்கப்பட்டுள்ளது.

அரசியல் நிலைமாற்ற அதிரடிகளின் மத்தியில் ரணில் விக்கிரமசிங்க பதில் ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ளார். சரி, அடுத்து என்ன நடக்கப்போகிறது? நிலைமை சீரடையுமா? அல்லது மேலும் மோசமடையுமா? அவர் இந்தப் பதவியில் எவ்வளவு காலம் நீடிப்பார்? அதற்கு மக்களும் போராட்டக்கார்களும் அனுமதிப்பார்களா? அல்லது அரசியலமைப்பின் பிரகாரமே எல்லாமே நடக்கப்போகிறதா? சபாநாயகர் விடுத்த ஏராளம் அறிவிப்புகளில் எவையெல்லாம் நடக்கும்? எவையெல்லாம் நடக்காது? அடுத்த பிரதமர் யார்? அடுத்து எப்படி ஆட்சிக் கட்டமைப்பு நடக்கும்? புதிய அமைச்சரவை உருவாக்கப்படுமா? அல்லது உள்ள அமைச்சரவையில் திருத்தம் நிகழுமா? இப்படி ஏராளம் கேள்விகளோடுதான் நாட்டிலுள்ள மக்கள் அனைவரும் உள்ளனர். எந்தக் கேள்விக்கும் யாராலும் சரியான பதிலைச்  சொல்ல முடியாது. காரணம், முடிவற்ற குழப்பத்திற்குள்ளாகியுள்ளது நாடு. குழப்பத்திலிருக்கும்போது எதைப்பற்றியும் சரியாகச் சிந்திக்கவும் முடியாது. எதிர்வு கூறவும் முடியாது.

பதில் ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்க உடனடியாகவே நிலைமையைக் கட்டுப்படுத்தும் வகையில் சில நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார். இதில் முக்கியமானது இயல்பு நிலையை வழமைக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகள். இது எவ்வளவுக்கு உடனடிச் சாத்தியத்தைத் தரும் என்பது கேள்வியே. முதலில் இயல்பு நிலை என்பது எது என்ற விளக்கம் தேவை. அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் இயல்பு நிலை என்பது எதிர்ப்பாளர்கள் அல்லது போராட்டக்காரர்கள் தமது எதிர்ப்பு நடவடிக்கைகளைக் கைவிட்டு வீட்டுக்குச் செல்வது என்றே கருதுகிறது. அது அப்படித்தான் கருதும். அதிகாரத் தரப்பின் உளவியல் அது. அதோடு அரசியல் உறுதிப்பாடு ஏற்பட்டு, அமைச்சரவை சீராக இயங்குவது. பாராளுமன்றம் வழமைக்குத் திரும்பிக் கூடுவது. அரச நிர்வாக இயந்திரம் ஒழுங்காக இயங்குவது என இது அமையும். மக்களுடைய நோக்கு நிலையில் இயல்பு நிலை என்பது பொருளாதார நெருக்கடி தீருவது. அடுத்ததாக அரசியல் நெருக்கடி தணிவது என்பதாகும்.  

எப்படியோ பதில் ஜனாதிபதியின் முயற்சியில் அல்லது அவருடைய நடவடிக்கையில் நிலைமையை வழமைக்குக் கொண்டு வரவேண்டுமானால் இரண்டு வழிகள் உண்டு. ஒன்று படைத்தரப்பையும் பொலிஸையும் பயன்படுத்தி அதிகாரத்தின் மூலமாக – ஏறக்குறைய பலத்தின் மூலமாக இயல்பு நிலையை உருவாக்குவது. இது இன்றைய நிலையில் கொஞ்சம் கடினமான விசயம். கொஞ்சம் இறுக்கினால் அல்லது எங்காவது உராய்வு ஏற்பட்டால் அது அவர் மீதான எதிர்ப்பலைப் படு வேகமாகக் கிளப்பி விடும். ஆனாலும் ரணில் விக்கிரமசிங்க கொஞ்சம் அனுபவம் உள்ள அரசியலாளர் என்பதால் அதற்கான நுட்பங்களைப் பயன்படுத்தி, சாத்தியங்களை எட்டுவதற்கு முயற்சிக்கக் கூடும்.  

அடுத்தது, மக்கள் சந்திக்கும் நெருக்கடிகளுக்கான தீர்வைக் கண்டு சனங்களின் கொதிப்பைத் தணிப்பது. இதற்கு உடனடியாக அவர் பல வேலைகளைச்செய்ய வேண்டும். எரிபொருள், எரிவாயு போன்றவற்றின் பற்றாக்குறையை நீக்கி பொதுப்போக்குவரத்து உட்பட அனைத்தையும் உறை நிலையிலிருந்து மீட்டெடுக்க வேண்டும். கூடவே ஏனைய வருவாயைப் பெறும் வகையிலான  திட்டங்களை விரைந்து உருவாக்க வேண்டும். அத்துடன் கடன் உதவிகளை முடிந்தளவுக்குப் பெற்றுக் கொள்ள வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் நிதிப்புழக்கத்தையும் பொருட்புழக்கத்தையும் அதிகரிக்க முடியும். இரண்டும் தாராளமாகினால் சனங்கள் இப்போதுள்ள அளவுக்கு அரசுக்கு எதிராக உற்சாகத்தோடு திரள மாட்டார்கள்.  

ஆகவே அப்படியொரு சூழலில் சனங்களின் கொதிப்பு அடங்குமானால் இந்தளவுக்கு மக்களின் எழுச்சியோ, எதிர்ப்போ இருக்காது. இதை நன்கறிந்தவர் ரணில் விக்கிரமசிங்க. ஒரு உடன்படிக்கையின் மூலம் போர் தவிர்ப்பைச் செய்து, சமாதான முயற்சிக்கான பொறியில் புலிகளை வீழ்த்தியவர். போர் செய்ய முடியாத புலிகளால் தாக்குப் பிடித்து நிற்க முடியாது என்று அவருக்கு நன்றாகவே தெரியும். புலிகளின் பலம் என்பது அவர்களுடைய போரிடும் ஆற்றலே. ஆகவே அதைச் சரியாக மதிப்பிட்டு அதற்கு ஆணி வைத்தவர் அவர். அதன்மூலம் போரிடும் மனநிலையிலிருந்து வெளியேற்றி – விலக வைத்து வேறு வாழ்க்கைக்குள் – சமாதான கால வாழ்க்கைக்குள்  - திளைக்க வைத்து நெருக்கடியை உண்டாக்கியவர். அத்துடன், புலிகளுக்குள் கருணா – பிரபாகரன் - பிளவையும் மிகச் சிம்பிளாக உருவாக்கியவர். இதற்கு யாரையெல்லாம் எப்படிக் கையாள முடியுமோ அவர்களையெல்லாம் மிகச் சாதுரியமாகக் கையாண்டு வெற்றியடைந்தவர்.

இந்த மாதிரியான அனுபவங்கள் ரணில் விக்கிரமசிங்கவுக்குக் கைகூடக் கூடியவை. ஆகவே அவர் இனி வரும் நாட்களை தனக்கானதாக மாற்றிடவே யோசிப்பார். சர்வதேச  சமூகமும் இலங்கை நிலவரத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருமாறு பொதுவாகக் கோரியுள்ளது. ரஷ்யா, அமெரிக்கா,  சீனா, இந்தியா,  சீனா  தொடக்கம் அனைத்து நாடுகளும் இதைக் கேட்டுள்ளன. ஐ.நாவும் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளது. உள் நாட்டிலும் மத அமைப்புகள் தொடக்கம் சட்டத்தரணிகள் சங்கம், மற்றும் சில பல தொழிற்சங்கள் வரையில் நாட்டின் நிலைமை விரைவாகச் சீரடைய வேண்டும் என்று கேட்டிருக்கின்றன.

ஆனால் பதில் ஜனாதிபதி எதிர்பார்ப்பதற்கேற்ற மாதிரி இந்த ஆட்டக் களம் இருக்குமா என்பது கேள்வியே. ஏனெனில் இன்னும் கொதி நிலை ஆறவில்லை. இப்போதைக்கு – உடனடியாக அது ஆறக்கூடிய நிலையிலும் இல்லை. அதற்குள் போராட்டக்காரர்களின் திட்டப்படி ரணில் விக்கிரமசிங்க பதவி விலகினால் அடுத்தது என்ன என்ற கேள்வியும் உண்டு. அப்பொழுது அந்த இடத்தை நிரப்பக் கூடியவர்கள் யார் என்பதும் தொடரும் கேள்வியாகும்.

இதேவேளை யார் அதிகாரத்துக்கு வந்தாலும் ஆட்சி கலைக்கப்பட்டு தேர்தல் மூலமாகப் புதிய ஆட்சி ஒன்று அமைந்தால்தான் ஏதாவது புதிதாக நடக்கும் என்று பலரும் நம்புகிறார்கள். அது ஓளரவு உண்மையே. அதைச் செய்வது கூட அவ்வளவு சுலபமானது அல்ல. மிக நுட்பமாக ஒருங்கிணைந்து ஆற்ற வேண்டிய மிகப் பெரிய பணி அது.

ஆனால்  அதற்கு மக்கள் எந்தத் தரப்பை – யாரை தேர்வு செய்யப்போகிறார்கள் என்ற கேள்வியும் உண்டு. மீண்டும் பழைய – தவறானவர்களையே தெரிவு  செய்தால் மறுபடியும் நெருக்கடியும் தவறுகளுமே விளையும்.

ஆகவே இப்பொழுது அரசாங்கத்துக்கும் அரசியற் கட்சிகளுக்கும் ஆட்சித் தலைவர்களுக்கும் மட்டுமல்ல, மக்களுக்கும் பாரிய பொறுப்புகள் வந்துள்ளன.

நினைத்த மாதிரி, கண்ட பாட்டுக்கு அதிகாரத்தை யாருக்கும் வழங்கக் கூடாது என்ற உண்மை உணர்த்தப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவுக்கு மட்டுமல்ல, அதற்கு முன்னிருந்தவர்களுக்கும் அதிகாரத்தை வழங்கி விட்டுப் பட்ட அனுபவங்களை மக்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்.

வரமளிப்பதற்கு முன்பு அந்த வரத்தைப் பெறுகின்றவர் தகுதியானவர்தானா? அவர் உண்மையிலேயே காத்தற் கடவுள்தானா என்று ஒன்றுக்குப் பல தடவை சிந்திக்க வேண்டும். அப்படிச் சிந்தித்த பிறகே யாருக்கு வாக்களிப்பது? எதற்கு வாக்களிப்பது? யாரை ஆதரிப்பது? எதனை ஆதரிப்பது என்று தீர்மானிக்க வேண்டும்.

எழுந்தமானமாக அலையெனத் திரண்டு பொருத்தமற்றவர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கான அதிகாரத்தைக் கொடுத்து விட்டால், அதிலிருந்து அவர்களை விலக்குவதற்குப் பெரும்பாடு பட வேண்டும் என்ற உண்மை நிரூபிக்கப்பட்டுள்ளது. என்பதால் தொடர்ந்தும் தொடர்ந்தும் மக்கள் தவறிழைக்கக் கூடாது. தவறுகளிலிருந்து பாடத்தைப் படித்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக இனவாதத்தை யாரும் முன்னிறுத்தி நாட்டைப் பாதுகாக்க முடியாது. வேண்டுமானால் அவர்களுடைய வயிற்றை நிரப்பிக் கொள்ளலாம். அவர்களுடைய வாழ்க்கையை வளமாக வைத்திருக்கலாம். இதுதான் நடந்து கொண்டிருக்கிறது.

இப்பொழுது பாதிக்கிணறுதான் தாண்டப்பட்டுள்ளது. அப்படிக் கூடச் சொல்ல முடியாது. காற்பங்கை மக்கள் போராட்டம் கடந்திருக்கிறது. அதிகாரத்தரப்பை அது ஆட்டம் காண வைத்திருக்கிறது. அப்படியென்றாலும் அது பாதிக்கிணறுதான்.

பாதிக்கிணறு என்பதை நடுக்கிணறு என்றும் வைத்துக் கொள்ள முடியும். மீதியைக் கடக்கவில்லை என்றால் கிணற்றில் விழுவதாகவே முடியும். அப்படி நேர்ந்தால் எல்லாமே பாழ். இப்போது விரைவாகச் செயற்படுத்தப்பட வேண்டியவை புதிய அரசியலமைப்புத் திருத்தம்.

அது தனியே நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையை நீக்குவதோடு மட்டுப்பட முடியாது. அதற்கு அப்பால், இந்த நாட்டைப் பீடித்துள்ள அத்தனை பிணி, பீடைகள், சிக்கல்களுக்கும் தீர்வைத் தரும் வகையில் திருத்தம் செய்யப்படுவது அவசியம். முக்கியமாக  இனப் பாகுபாட்டை மறுதலித்து பன்மைத்துவத் தேசமாக இலங்கையை எடுத்துக்கொண்டு உருவாக்கப்பட வேண்டும்.

இல்லையென்றால் மீள மீளப் பிரச்சினையும் துயரமுமே நீடிக்கும். இது எல்லாப் பிரச்சினைகளுக்கும் நிவாரணமளிக்க வேண்டிய, தீர்வு காண வேண்டிய சூழல். காலமும் அதற்கிணையாகக் கனிந்துள்ளது.

இதை மறுதலிக்கும் விதமாக எந்தத் தலைமையாவது, எந்தக்  கட்சியாவது சிந்தித்தால் அதற்குத் தண்டணை அளிக்கப்பட வேண்டும். மக்கள் அவற்றை இனங்கண்டு விலக்க வேண்டும். மாயமான்களில் மீள மீள மயங்கி விடக் கூடாது.

கருணாகரன்

Comments