06 மாதத்தினுள் 129 கோடி டொலர் வெளிநாட்டு முதலீடுகள் ஈர்ப்பு | தினகரன் வாரமஞ்சரி

06 மாதத்தினுள் 129 கோடி டொலர் வெளிநாட்டு முதலீடுகள் ஈர்ப்பு

இவ் வருட இறுதிக்குள் புதிய முதலீட்டு திட்டங்களின் கீழ் 200கோடி அமெரிக்க டொலர் பெறுமதியான முதலீடுகளை மேற்கொள்ளும் இலக்குடன் இலங்கை முதலீட்டுச் சபை செயற்பட்டு வருகிறது.

எதிர்பார்த்துள்ள இலக்கில் அரைவாசிக்கும் மேற்பட்ட முதலீடுகளை தற்போது கொண்டுவர முடிந்துள்ளதாக முதலீட்டு சபையின் பணிப்பாளர் நாயகம் ரேணுகா வீரக்கோன் தெரிவித்துள்ளார்.

இலங்கை முதலீட்டு சபை, தற்போது 75திட்டங்கள் தொடர்பில் ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளதுடன் அதன் மொத்த பெறுமதி 129கோடி டொலருக்கும் அதிகமானதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உத்தேச 75திட்டங்களில் 26திட்டங்கள் புதிதாக ஆரம்பிக்கப்படுபவையென தெரிவித்துள்ள அவர், மீதமான 49திட்டங்கள் நடைமுறையிலுள்ள திட்டங்களை விரிவுபடுத்தும் செயற்பாடுகளாகுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை இந்த வருடத்தின் முதல் காலாண்டில் நேரடியாக வெளிநாட்டு முதலீடுகளாக 228மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான முதலீடுகள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ள அவர், முதலீட்டுச் சபையின் இலக்குக்கிணங்க 200கோடி அமெரிக்க டொலர் என்ற இலக்கை அடைவது கடினமல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முதலீட்டுச் சபை உருவாக்கப்பட்டதன் பின்னர் இதுவரை 2,020கோடி அமெரிக்க டொலருக்கான நேரடி வெளிநாட்டு முதலீடுகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், இதுவரை 1,500தொழிற்சாலைகள் இலங்கை முதலீட்டு சபையின் கீழ் செயற்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திர வர்த்தக வலயத்தில் அந்த தொழில் முயற்சியாளர்களால் 280திட்டங்கள் செயற்படுத்தப்படுவதாகவும் அதன் மூலம் சுமார் 05இலட்சம் தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவற்றில் ஒரு இலட்சத்து 40 ஆயிரம் பேர் சுதந்திர வர்த்தக வலயத்தில் பணிபுரிவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்  

Comments