புலம்பெயர் தமிழர்களை அரவணைக்கும் காத்திரமான முயற்சியில் புதிய அரசாங்கம்! | தினகரன் வாரமஞ்சரி

புலம்பெயர் தமிழர்களை அரவணைக்கும் காத்திரமான முயற்சியில் புதிய அரசாங்கம்!

இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதாரசவால்களிலிருந்து மீள்வதற்குப் பல்வேறுமாற்றுவழிகள் தொடர்பில் ஆராயப்பட்டுவரும் நிலையில், புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள்சிலவற்றின் மீது விதிக்கப்பட்டிருந்த தடைகளைநீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது.கடந்த கால அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்டஆறு அமைப்புக்கள் மீதான தடையை நீக்கிஅரசாங்கம் அண்மையில் வர்த்தமானிஅறிவித்தலை வெளியிட்டிருந்தது.

1968ஆம் ஆண்டின் 45ஆம் இலக்க, ஐக்கிய நாடுகள் சபைச் சட்டம் 2012ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க, ஐக்கிய நாடுகள் சபை ஒழுங்குவிதிகளின் 4(7) ஆம் ஒழுங்குவிதியின் கீழ் தடை செய்யப்பட்ட அமைப்புக்களின் பட்டியலிலிருந்து ஆறு அமைப்புகள் நீக்கப்பட்டுள்ளன. அவுஸ்திரேலிய தமிழ்க் காங்கிரஸ், உலகத் தமிழர் பேரவை, உலகத் தமிழ் ஒருங்கிணைப்புக் குழு, கனேடிய தமிழ் காங்கிரஸ், பிரித்தானிய தமிழர் பேரவை உள்ளிட்ட ஆறு அமைப்புக்கள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தடை நீக்கப்பட்ட விடயம் நாட்டின் இனநல்லுறவு முயற்சிகளைப் பொறுத்தவரை சாதகமாக நோக்கப்பட வேண்டியதாகும்.

அந்நிய செலாவணிக் கையிருப்பு குறைவடைந்தமையால் ஏற்பட்டுள்ள டொலர் பிரச்சினை போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் ஒத்துழைப்பு பெருமளவு எதிர்பார்க்கப்படுகிறது. வெளிநாடுகளில் வேலைவாய்ப்புகளுக்காகச் சென்றவர்கள் அனுப்பும் டொலர்களுக்கு அப்பால், கடந்தகால யுத்த அச்சுறுத்தல் மற்றும் இனவன்செயல்கள் காரணமாக புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களின் ஒத்துழைப்பே இலங்கைக்கு அதிகம் தேவையாக உள்ளது.

குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட உலகின் முன்னணி நாடுகளில் பொருளாதா ரீதியில் ஸ்திரமான நிலையில் உள்ள புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் பலரின் ஒத்துழைப்பை இலங்கையர்கள் எதிர்பார்க்க வேண்டிய காலமாகவும் இது அமைந்துள்ளது. இவ்வாறான பின்னணியில் புலம்பெயர் அமைப்புக்கள் சிலவற்றின் மீதான தடையை அரசாங்கம் நீக்கியிருப்பது வரவேற்கத்தக்க விடயமாகுமென்று சர்வதேச ரீதியில் தமிழ் அமைப்புகளும், மனிதஉரிமை அமைப்புகளும் கருத்துத் தெரிவித்துள்ளன.

இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியில் புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்ளுமாறு நீண்ட காலமாக ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் பல்வேறு அமைப்புக்கள் மீதான தடைகள் விதிக்கப்பட்டிருந்தாலும், புலம்பெயர்ந்துவாழ் தமிழ் அமைப்புக்களுடன் இணைந்து செயற்படத் தயார் என ஐ.நா பேரவையில் கலந்து கொள்ளச் சென்றிருந்த போது அவர் கூறியிருந்தார். இதற்கான அழைப்பையும் அவர் விடுத்திருந்தார்.

முன்னாள் ஜனாதிபதி அப்போது விடுத்திருந்த அழைப்பை உலகத் தமிழர் பேரவை போன்ற அமைப்புக்கள் வரவேற்றிருந்த போதும், தங்கள் மீதான தடைகள் காணப்படும் சந்தர்ப்பத்தில் எவ்வாறு கலந்துரையாடல்களை அல்லது பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பது என்ற கேள்வி அவர்கள் மத்தியில் காணப்பட்டது.

அது மாத்திரமன்றி, புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்கள் அனைத்தும் பயங்கரவாதத்துடன் தொடர்புபட்ட அமைப்புக்கள் என சிலர் அர்த்தம் கற்பித்து வருவதால், அந்த அமைப்புகள் தொடர்பில் பலரும் சந்தேகக் கண்கொண்டு பார்க்கும் நிலையே காணப்படுகிறது. இருந்தபோதும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் இலங்கையின் குறிப்பாக வடக்கு, கிழக்கின் முன்னேற்றங்களில் கணிசமான பங்களிப்புக்களைச் செலுத்தியிருப்பதுடன், தொடர்ந்தும் தமது ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றன.

வடக்கு, கிழக்கு மாத்திரமன்றின் நாட்டின் முன்னேற்றத்துக்கு முதலீடுகளை மேற்கொள்ள புலம்பெயர் தமிழர்கள் பலர் ஆர்வமாக இருக்கின்ற போதும், அவ்வப்போது முன்னெடுக்கப்படுகின்றன இனவாதக் கண்ணோட்டத்திலான பிரசாரங்களால் அவர்கள் பெரும் தயக்கம் காட்டி வருகின்றனர்.

பொதுவாகவே வெளிநாட்டு முதலீடுகள் நாட்டுக்குள் கொண்டுவரப்படும் போது பின்பற்றப்படும் சிக்கல் நிறைந்த நடைமுறைகள் பல உள்ளன. இவ்வாறான சூழலில் புலம்பெயர்ந்த தமிழ் தரப்பினரால் முதலீடுகள் கொண்டுவரப்படும் போது ஏற்கனவே காணப்படும் கெடுபிடிகள் தீவிரமாக்கப்படுவதும் அவர்கள் ஆர்வம் காட்டாமல் இருப்பதற்கான காரணங்களில் ஒன்றாக உள்ளது.

இருந்தபோதும், யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ளவர்களுக்காக புலம்பெயர்ந்து வாழ் தமிழர்கள் பலர் தம்மாலான உதவிகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். புலம்பெயர்ந்து வாழ் தமிழர்கள் இலங்கையில் இடம்பெறும் முன்னேற்றங்களில் எப்பொழுதும் அக்கறை காண்பித்து வருபவர்கள் என்பதை நாம் மறுக்க முடியாது. இதற்கு சிறந்த உதாரணமாக 2004ஆம் ஆண்டு சுனாமிப் பேரலை அனர்த்தத்தின் பின்னர் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு பகுதி உள்ளிட்ட நாட்டின் ஏனைய பகுதிகளைக் கட்டியெழுப்புவதற்கு குறிப்பாக பாதிக்கப்பட்ட மக்களை மீட்சியுறச் செய்வதற்கு புலம்பெயர்ந்த இலங்கையர்கள் பல்வேறு வகையில் உதவிகளைச் செய்திருந்தனர். இது தவிரவும் இறுதி யுத்தத்தின் பின்னர் மற்றும் இயற்கை அனர்த்தங்களின் போது எனப் பல்வேறு சந்தர்ப்பங்களில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் நாட்டுக்கு உதவி செய்துள்ளனர்.

இருந்தபோதும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் மற்றும் தமிழ் அமைப்புகளால் மேற்கொள்ளப்படும் உதவிகளை பெரும்பான்மை இன அரசியல்வாதிகள் சிலர் இனவாதத்துடன் இணைத்துப் பிரசாரம் செய்வதால் சிங்கள மக்கள் மத்தியில் அவ்வாறான உதவிகள் குறித்த சந்தேகப் பார்வை காணப்படுகிறது. இந்த நிலைமை தொடர்ந்தும் நீடித்தால் பாதிப்பு ஏற்படப் போவது என்னவோ எமக்கும் எமது நாட்டுக்கும் மாத்திரமேயாகும்.

புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கு இதனால் எவ்வித பாதிப்பும் இல்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். தற்பொழுது வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழ் தமிழர்களாக வசித்து வருபவர்கள் அனைவரும் இனவாதத்தை அடிப்படையாகக் கொண்ட சிக்கல்கள் காரணமாக நாட்டை விட்டு வெளியேறி வசிப்பவர்களாவர்.

1983ஆம் ஆண்டு இனக்கலவரத்தினைத் தொடர்ந்தே பெரும்பாலான தமிழர்கள் நாட்டைவிட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். அன்றைய காலகட்டத்தில் அவர்கள் முகங்கொடுத்த கொடூரங்கள் மீண்டும் அவர்கள் நாட்டுக்குத் திரும்புவதில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தன.

அவ்வாறு சென்றவர்களின் மூன்றாவது தலைமுறை அங்கு வாழ்கின்றது. அவர்கள் நாடு திரும்புவதில் இப்போது ஆர்வம் இல்லாமல் இருந்தாலும், நாட்டின் மீதான அக்கறை அவர்களிடம் முற்றாக நீங்கி விடவில்லையென்றே கூற வேண்டும்.

மேற்கு நாடுகளுக்குச் சென்றுள்ள இலங்கைத் தமிழர்கள் தாம் வாழும் நாடுகளில் பொருளாதார ரீதியில் பலம் பொருந்தியவர்களாகவும், அந்நாட்டு அரசியலில் ஆதிக்கம் செலுத்தக் கூடியவர்களாகவும் வளர்ச்சி கண்டுள்ளனர்.

அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, நோர்வே போன்ற பல்வேறு மேலைத்தேய நாடுகளில் அரசியல்வாதிகளாகவும், நிர்வாகத்தில் உயர் பதவிகளை வகிப்பவர்களாகவும் புலம்பெயர்ந்து வாழ் தமிழர்கள் காணப்படுகின்றனர். அந்த நாடுகள் அவர்களை அங்கீகரித்துள்ள போதும், இலங்கையில் உள்ள ஒரு பிரிவினர் ஏன் அவர்களை வரவேற்வதில் தயக்கம் காட்டுகின்றனர் என்பது முக்கிய வினா ஆகும்.

நாட்டை அழிவுப் பாதையிலிருந்து மீட்பதற்கு இவ்வாறான தரப்பினரை ஏணிப்படியாகப் பயன்படுத்துவதற்கு ஏன் இலங்கை இன்னமும் தயாராக இல்லையென்பதைச் சிந்திக்க வேண்டும். புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் நிதிப் பங்களிப்பு மாத்திரமன்றி அவர்கள் பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் மிக்கவர்களாகக் காணப்படுகின்றனர். நாடு எதிர்கொண்டுள்ள சவால்களைச் சமாளிப்பதற்கு நிதி ரீதியான உதவியை மாத்திரமன்றி நிபுணத்துவ உதவிகளையும் அவர்களிடமிருந்து பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.

இவ்வாறான நிலையில், புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வசிப்பவர்களிடமிருந்து உதவிகளைப் பெறுவதற்காக கொழும்பில் தனியான அலுவலகமொன்று அமைக்கப்படவிருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார். ஜனாதிபதியின் இந்த யோசனை காலத்துக்கு ஏற்ற விடயமாகப் பார்க்கப்பட்டாலும், இதனை இனவாதமாக மாற்றி நிலைமைகளை சீர்குலைக்கும் மற்றொரு தரப்பினரின் முயற்சிகளுக்கும் அரசியல் ரீதியாக முற்றுப்புள்ளி வைக்கவேண்டியது தேவையாக உள்ளது.

இது தொடர்பிலும் அரசாங்கம் குறிப்பாக ஜனாதிபதி கவனம் செலுத்துவது கட்டாயமாகும். ஒரு சிலரின் அரசியல் பிழைப்புக்காக மீண்டும் மீண்டும் இனவாதத்தையும், அடிப்படைவாதத்தையும் தூண்டும் முயற்சிகளுக்கு இனியாவது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு அனைவரையும் ஒன்றிணைத்து நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்லும் முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என்பதே நாட்டை நேசிக்கும் மக்களின் கோரிக்கையாகும்.

சம்யுக்தன்

Comments