சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் வகையில் சுற்றுலா பயணிகளுக்கு ஒரு வருட வீஸா | தினகரன் வாரமஞ்சரி

சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் வகையில் சுற்றுலா பயணிகளுக்கு ஒரு வருட வீஸா

வீஸா கட்டண அறவீடுகளிலும் எளிமையான நடைமுறைக்கு ஏற்பாடு

சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் வகையில், சுற்றுலா வீஸாக்கள் செல்லுபடியாகும் காலத்தை 270நாட்களிலிருந்து ஒரு வருடமாக நீடிக்கவும், வீஸாக்களுக்கான கட்டணம் அறிவிடும் முறையை எளிமைப்படுத்தவும் அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, இலத்திரனியல் பயண அங்கீகாரத்தின் (Electronic Travel Authoization ) கீழ், நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரே தடவையில் 180நாட்களுக்கு வீசா வழங்குவதற்கு 35அமெரிக்க டொலர்களும், பல தடவைகள் வந்து செல்வதற்காக ஒரு வருட விசாவைக் கோரும் பயணிகளுக்கு 200அமெரிக்க டொலர்களும் அறிவிட அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 1948ஆம் ஆண்டின் 20ஆம் இலக்க குடிவரவு - குடியகல்வு சட்டத்தின் திருத்தப்பட்ட ஒழுங்குமுறை 15இன் படி இலங்கைக்கு வரும் சுற்றுலாப்பயணி ஒருவர், வருகை தந்த நாளிலிருந்து 270நாட்களுக்கு செல்லுபடியாகும் சுற்றுலா வீசாவில் தங்கலாம்.

அந்த கால எல்லை தனி நுழைவுக்கு (Single entry) மாத்திரமேயாகும். புதிய அமைச்சரவை அங்கீகாரத்தின் மூலம் இக்கால எல்லை ஒரு வருடமாக நீடிக்கப்பட்டுள்ளது, இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் ஜனாதிபதி மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்ட தையடுத்து, அதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் தற்போதைய வீஸா கட்டண முறையின் கீழ், ஒரு சுற்றுலாப் பயணி இலங்கைக்கு வந்து 180நாட்கள் (06மாதங்கள்) தங்கியிருக்கும் போது, முதல் 30நாட்களுக்கு இலத்திரனியல் பயண அங்கீகாரம் (Electronic Travel Authoization) 35அமெரிக்க டொலர்களாகும். மேலும் அடுத்த 60நாட்களுக்கு விசா கட்டணம் 60அமெரிக்க டொலர்களும் இறுதி 90நாட்களுக்கு 150அமெரிக்க டொலர்களும் விசா கட்டணமாக அறவிடப்பட்டது.

புதிய அமைச்சரவை அங்கீகாரத்தின் படி, விஸா கட்டணக் குறைப்பின் மூலம் ஒரு சுற்றுலாப் பயணிக்கு 180நாட்களுக்கு மொத்த விசாக் கட்டணமான 245அமெரிக்க டொலர்களுக்குப் பதிலாக 35அமெரிக்க டொலர் அறவிடப்படும்.

ஒரு சுற்றுலாப் பயணியால் 210அமெரிக்க டொலர்கள் நஷ்டம் ஏற்பட்டாலும், 180நாட்கள் நாட்டில் தங்கியிருப்பதன் மூலம், உணவு, போக்குவரத்து மற்றும் தங்குமிடங்களுக்கு செலவிடும் பணத்திலிருந்து அதிக வருமானத்தை ஈட்ட முடியுமென்று அரசாங்கம் நம்புகிறது.

ஒரு வருட காலத்துக்கு பல நுழைவுகளைக் கொண்ட விசா (multiple entry visa) அனுமதி மற்றும் வணிக அனுமதிக்கு, இதற்கு முன்னர் 685அமெரிக்க டொலர் அறவிடப்பட்டதோடு இதனை 200அமெரிக்க டொலராக குறைக்க அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. "கொவிட்-19" உலகளாவிய தொற்றுநோயால் வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலாத் துறையை, புதிய விசா கட்டணத் திட்டம் மேம்படுத்துமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

485அமெரிக்க டொலர்கள் நஷ்டம் ஏற்பட்டாலும், அந்த சுற்றுலாப் பயணி நாட்டில் ஒரு வருட காலம் தங்கியிருப்பதன் மூலம், உணவு, போக்குவரத்து மற்றும் தங்குமிடங்களுக்கு செலவிடும் பணத்தில் அதிக வருமானத்தை ஈட்ட முடியுமென அரசாங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

மேலும், வெளிநாட்டவர்களுக்கு கூட்டு ஆதனங்களில் (Condominium) முதலீடு செய்வதற்கான வாய்ப்புகளை வழங்கும் வகையில், 2,50,000அமெரிக்க டொலர்களை முதலீடு செய்யும் ஒரு வெளிநாட்டவருக்கு பத்து வருட விசா வழங்கவும் மற்றும் ஒரு வெளிநாட்டவர் 1,50,000அமெரிக்க டொலர்களை முதலீடு செய்தால் 05வருட விசா வழங்கவும், கொழும்புக்கு வெளியே கூட்டு ஆதனங்களில் முதலீடு செய்பவர்களுக்கு (Condominium) 75,000அமெரிக்க டொலர்களுக்கு 05வருடம் மற்றும் நீடிக்கக்கூடிய விசா வழங்குவதற்கும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் "Gold paradise" இன் கீழ் ஒரு வெளிநாட்டவர் 1,00,000அமெரிக்க டொலர்களை கொண்டு வந்து இலங்கை மத்திய வங்கியினால் அங்கீகரிக்கப்பட்ட வர்த்தக வங்கியில் 10வருடங்கள் வைப்பிலிட்டால் "Ranparadise Residence Visa" வழங்கப்படும்.

இந்த அமைச்சரவை தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கான அதிகாரபூர்வ நிறுவனங்களாக, முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு, சுற்றுலா மற்றும் காணி அமைச்சு, குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஆகியன பெயரிடப்பட்டுள்ளன.

தற்போது முடங்கியுள்ள சுற்றுலாத் துறையை மீட்டெடுப்பதே இந்த செயல்முறையின் முதன்மை நோக்கமாகுமென்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

Comments