இலங்கைக்கு கைகொடுப்பதில் சர்வதேசம் பெரிதும் ஆர்வம்! | Page 2 | தினகரன் வாரமஞ்சரி

இலங்கைக்கு கைகொடுப்பதில் சர்வதேசம் பெரிதும் ஆர்வம்!

இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கு தேசிய ரீதியில் பல்வேறு முயற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டு வந்தாலும், சர்வதேசத்தின் உதவி பெருமளவில் எதிர்பார்க்கப்படும் நாடாக இலங்கை காணப்படுகிறது. இந்தியா, சீனா உள்ளிட்ட நட்பு நாடுகள் மாத்திரமன்றி பல்வேறு உலக நாடுகள் எமது நிலைமை குறித்து கவலையடைந்திருப்பதுடன், பல்வேறு வழிகளில் உதவியளித்தும் வருகின்றன.

இந்த வரிசையில் அமெரிக்காவின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கதாக அமைந்துள்ளது. அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரமைப்பின் யூ.எஸ்.எயிட் நிறுவனத்தின் நிர்வாகி சமந்தா பவர், அமெரிக்காவின் மேலதிக உதவிகள் பற்றிய அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

பொருளாதார நெருக்கடி காரணமாக உணவு உற்பத்திகள் பாதிக்கப்பட்டு நுகர்வோர் மாத்திரமன்றி விவசாயிகளும் கணிசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே விவசாயத்துறையைப் பலப்படுத்தி அதன் ஊடாக அனைவருக்கும் உணவு கிடைப்பதை உறுதி செய்வதற்காக யூ.எஸ்.எயிட் நிறுவனம் விவசாயிகளுக்கான உரத்தேவையை நிவர்த்தி செய்ய 40மில்லியன் அமெரிக்க டொலர்களையும், இதற்கு மேலதிகமாக மனிதாபிமான செயற்பாடுகளுக்காக 20மில்லியன் அமெரிக்க டொலர்களையும் வழங்குவதாக சமந்தா பவர் அறிவித்திருந்தார்.

அவருடைய இந்த விஜயத்தின் பின்னர் அமெரிக்க அரசாங்கம் மேலும் 65மில்லியன் அமெரிக்க டொலர்களை ஐந்தாண்டு காலப் பகுதியில் உதவியாக வழங்கும் எனத் தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது. யு.எஸ்.எயிட் நிறுவனத்துக்கும் நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த உதவி வழங்கப்படுகிறது.

 அமெரிக்க அரசாங்கம் 1956ஆம் ஆண்டு முதல் இதுவரை 2பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான உதவிகளை இலங்கைக்கு வழங்கியுள்ளது. இலங்கை பொருளாதார ரீதியில் நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் சூழ்நிலையில், சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரமைப்பின் பிரதானி சமந்தா பவர் இங்கு வந்து சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கதொரு நிகழ்வாக அமைந்துள்ளது.

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் நிர்வாகத்தில் இணைந்து கொண்டிருந்த சமந்தா பவர், 2013முதல் 2017ஆம் ஆண்டு வரை ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் தூதுவராகப் பணியாற்றியிருந்தார்.

 அதன் பின்னர் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகத்தில் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் அதாவது யூ.எஸ்.எயிட் நிறுவனத்தின் நிர்வாகியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவராக இருந்தபோது, கடந்த காலங்களில் இலங்கையுடன் இணைந்து செயற்படுவதற்கான சந்தர்ப்பம் சமந்தா பவருக்குக் கிடைத்திருந்தது.

 குறிப்பாக இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் குறித்து சர்வதேச அரங்கத்தில் பேசப்பட்ட சந்தர்ப்பங்களில் தமிழர் தரப்புப் பிரதிநிதிகள் சமந்தா பவரைப் பல தடவை சந்தித்திருந்தனர். இது மாத்திரமன்றி, மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் நண்பரான சமந்தா பவர், கொரோனா தாக்கம் அதிகரித்திருந்த காலப் பகுதியில் இலங்கைக்குத் தடுப்பூசியைப் பெற்றுக் கொடுப்பதற்குப் பெரிதும் உதவியிருந்தார்.

 இவ்வாறு இலங்கை குறித்து சிறந்ததொரு புரிதலைக் கொண்டுள்ள சமந்தா பவரின் இலங்கை விஜயத்தின் போது பல்வேறு விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டிருந்தது. குறிப்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பில் நாட்டில் நிலவும் நெருக்கடிகள் மாத்திரமன்றி, பல்வேறு விடயங்கள் பற்றியும் கவனம் செலுத்தப்பட்டிருந்தது.

 “இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி உலகளாவிய ரீதியில் தலைப்புச் செய்திகளாகியிருப்பதுடன், துரதிர்ஷ்டவசமாக, இலங்கை கற்றுக் கொண்டிருக்கும் கடினமான பாடங்களை மற்றவர்களும் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறான தருணத்தில் அரசியல் பிளவுகள் இன்றி ஒற்றுமையுடன் இருப்பது அவசியமாகிறது.

இந்தக் கடினமான தருணத்தில் சீர்திருத்தங்கள் பல வழிக்குக் கொண்டுவரப்பட வேண்டும். இதன் ஊடாகவே இந்நிலையை மாற்றுவதற்கான முயற்சிகளைத் தொடர்ந்தும் முன்கொண்டு செல்ல முடியும்” என சமந்தா பவர் சுட்டிக் காட்டியிருந்தார்.

  “சர்வதேச நாணய நிதியத்துடன் இணங்கக் கூடிய சீர்திருத்தங்களின் தொகுப்புடன் முன்னேறுவதற்கான தனது நோக்கத்தை ஜனாதிபதி தெளிவுபடுத்தியுள்ளார். அந்தச் சீர்திருத்தங்களைச் செயற்படுத்தும் நிலையில் இருக்கும் பணியாளர்கள், மிகச் சவாலான சூழலை எதிர்கொண்டிருந்தாலும் இவை மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்களாகும்” எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

 “முதலீட்டாளர்களும் அரசியல் ஸ்திரத்தன்மையை எதிர்பார்க்கிறார்கள் என்பதை இங்கும், சர்வதேச ரீதியிலும் தனியார் துறையுடன் பேசுவதன் மூலம் நான் அறிவேன். ஊழலுக்கு எதிரான சீர்திருத்தங்களில் முன்னேற்றம் ஏற்படுவதைக் காண அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

அது மாத்திரமன்றி, நிலைமாறுகால நீதி மற்றும் முந்திய மனிதஉரிமை மீறல்கள் குறித்த கேள்விகளுக்கான பதில்களில் முன்னேற்றங்கள் காணத் தொடங்க வேண்டும்.

ஏறத்தாழ 15வருடங்களாக நான் இங்கு வந்து சென்று வரும் நிலையில், பயங்கரவாதத் தடைச்சட்டம் குறித்த கருத்தாடல்கள் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன.

இது நீக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாடு காணப்படும் நிலையில் இதற்கான உறுதிமொழியை ஜனாதிபதி வழங்கியுள்ளார்.

நாட்டை மீண்டும் ஒரு நிலையான, சட்டபூர்வ அடித்தளத்தில் சர்வதேச தரங்களுக்கு இணங்க வைக்கிறது. எனது விஜயத்தின் போது இதுபற்றிய கலந்துரையாடல்கள் இடம்பெற்றிருந்தாலும், இது பெரியதொரு நிகழ்ச்சி நிரல்” என்பதையும் அவர் கூறினார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தனது அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும், எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவிருக்கும் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்தும் சமந்தா பவருக்கு விளக்கமளித்திருந்தார்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் பற்றிய விசாரணைகளைத் துரிதப்படுத்தி, அத்தாக்குதலுக்குக் காரணமானவர்களுக்குத் தண்டனை வழங்கப்படுவது உள்ளிட்ட பல்வேறு முயற்சிகள் பற்றியும் இருவருக்கிடையிலான சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

 “இலங்கை அரசாங்கம் மிகவும் பாதிக்கப்படக் கூடியவர்களுக்கு ஆதரவை வழங்குவது முக்கியமானது என்பதால், மிகவும் பாதிக்கப்படக் கூடியவர்களின் உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் நோக்கம் தொடர்பில் ஜனாதிபதியிடமிருந்து கேட்டறிந்து கொண்டோம்.

நோக்கத்தை நாங்கள் கேட்டோம், ஆனால் நிரல் வடிவமைப்பிற்கு நாங்கள் உதவ முடியும்.

 உலகின் பிற பகுதிகளில் நாங்கள் ஆதரிக்கும் பிறசமூக பாதுகாப்பு வலைத் திட்டங்களை வரைதல். மீண்டும், சிவில் சேவை இலங்கையில் மிகப் பெரியதாக இருந்தாலும், இந்தத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு மனிதத்திறன் இருப்பதை உறுதிசெய்து, உத்தேசிக்கப்பட்ட பயனாளிகளை அடையும் விதத்தில் அதைச் செய்ய வேண்டும். மேலும், சில அரசியல் ஆதரவின் காரணமாக, சில அரசியல் விருப்பங்களின் காரணமாக, உதவி வழங்கப்படாத இடத்தில், ஆனால் அது தேவையின் அடிப்படையில் பயன்படுத்தப்படுகிறது” என்ற விடயத்தையும் சமந்தா பவர் தெரிவித்திருந்தார்.  ஜனாதிபதி மற்றும் அரசியல் தலைவர்கள் மாத்திரமன்றி, சிவில் சமூகப் பிரதிநிதிகள், விவசாயிகள் உள்ளிட்ட தரப்பினரையும் சமந்தா பவர் நேரடியாகச் சென்று சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பி.ஹர்ஷன்

Comments