ருமேனியாவிலிருந்து இத்தாலிக்கு செல்ல முயன்ற 37 இலங்கையர் கைது | தினகரன் வாரமஞ்சரி

ருமேனியாவிலிருந்து இத்தாலிக்கு செல்ல முயன்ற 37 இலங்கையர் கைது

ருமேனியாவிலிருந்து இத்தாலி, போலந்து போன்ற ஐரோப்பிய நாடுகளுக்கு தப்பிச் செல்லும் நோக்குடன் சென்ற 37இலங்கையர் உட்பட 70க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.  

ஐரோப்பிய நாடொன்றுக்கு பொருட்களை ஏற்றிச்சென்ற மூன்று பாரவூர்திகளுக்குள் மறைந்து பயணித்தபோதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  

எனினும் அவர்கள், இலங்கையின் எந்த பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பது தொடர்பாக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.  

முதலாவது சம்பவத்தில், இத்தாலிக்கு குளிர்சாதனப் பெட்டிகளை ஏற்றிச் சென்ற பாரவூர்தியில் இருந்து 35பேர் கைதுசெய்யப்பட்டனர். ஹங்கேரி மேற்கு எல்லையில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

அதேநேரம் போலந்துக்கு குளிர்சாதனப் பெட்டிகளை ஏற்றிச்சென்ற இரண்டாவது பாரவூர்தியில் மறைந்திருந்த நிலையில் 20துருக்கியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

மூன்றாவது பாரவூர்தி, வாகன உதிரிபாகங்களை ஏற்றிக்கொண்டு இத்தாலிக்கு பயணித்த போது அதில் இருந்து 15 பங்களாதேஷ் மற்றும் எத்தியோப்பியர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

Comments