சுயாதீன ஆணைக்குழுக்கள் சுதந்திரமாக இயங்க வாய்ப்பு | தினகரன் வாரமஞ்சரி

சுயாதீன ஆணைக்குழுக்கள் சுதந்திரமாக இயங்க வாய்ப்பு

- 22 ஆவது திருத்தத்துக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை;
- இலங்கைக்கு சர்வதேச அரங்கிலும் அங்கீகாரம்
- தேர்தல், நிதி,பொலிஸ், அரச சேவை,  கணக்காய்வு, இலஞ்ச ஊழல்  ஆகியன பக்கச்சார்பின்றி சுதந்திரமாக  இயங்க சந்தர்ப்பம்

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச்சட்டம் பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டதையடுத்து அனைத்து சுயாதீன ஆணைக்குழுக்களும் மீண்டும் இயங்கக்கூடிய சந்தப்பம் உருவாகியுள்ளது.

இதன்படி தேர்தல் ஆணைக்குழு, நீதிச் சேவைகள் ஆணைக்குழு, தேசிய பொலிஸ் ஆணைக்குழு, அரச சேவைகள் ஆணைக்குழு, கணக்காய்வு சேவைகள் ஆணைக்குழு, மனித உரிமைகள் ஆணைக்குழு, இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு, நிதி ஆணைக்குழு, தேசிய திட்டமிடல் ஆணைக்குழு என்பன 22ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டதையடுத்து சுயாதீனமான பக்கச் சார்பற்ற ஆணைக்குழுக்களாக நிறுவுவதற்கான பின்னணி உருவாகியுள்ளது.

19ஆவது திருத்தச் சட்டத்தினூடாக உருவாக்கப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்களை நிறுவுவதற்கு மீண்டும் கிடைத்துள்ளமை இலங்கைக்கு சர்வதேச ரீதியில் அங்கீகாரம் கிடைக்கும் விடயமென அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் பிரதான எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் நேற்று முன்தினம் 178மேலதிக வாக்குகளினால் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சட்டமூலத்துக்கு ஆதரவாக 179வாக்குகள் அளிக்கப்பட்ட நிலையில் எதிராக 01வாக்கு மட்டுமே பதிவானது.

கடந்த 20ஆம் திகதியும் 21ஆம் திகதியும் இரண்டு நாட்கள் 22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூல இரண்டாம் வாசிப்பு மீதான விவாதங்கள் நடைபெற்றன. நேற்று முன்தினம் மாலை 6.15மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இலத்திரனியல் முறையிலான வாக்கெடுப்பில் 22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக 179வாக்குகளும் எதிராக ஒரு வாக்கும் அளிக்கப்பட்டன.

சட்ட மூலத்துக்கு ஆதரவாக ஆளும் கட்சியுடன் இணைந்து எதிர்க்கட்சிகளான ஐக்கிய மக்கள் சக்தி , தமிழ் தேசியக் கூட்டமைப்பு,ஜே .வி.பி , தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, ஜீ.எல் பீரிஸ் , விமல் வீரவன்ச,வாசுதேவ நாணயக்கார தலைமையிலான சுயாதீன எதிர்க்கட்சி எம்.பிக்கள் வாக்களித்த அதேவேளை ஆளும் தரப்பில் முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேக்கர எம் பி மட்டுமே எதிராக வாக்களித்திருந்தார்.

22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையான 151வாக்குகள் தேவையாக இருந்த போதும் 179வாக்குகள் கிடைத்தன.

22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பி.க்களான செல்வம் அடைக்கலநாதன் , சித்தார்த்தன்,ஸ்ரீதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், கோவிந்தன் கருணாகரன், கலையரசன் ஆகியோர் வாக்களித்த நிலையில் சுமந்திரன் எம்.பி.வாக்களிப்பில் பங்கேற்கவில்லை. அத்துடன் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தன், விநோ நோகராதலிங்கம் ஆகியோர் சுகவீமனமுற்றிருப்பதாலும் சாணக்கியன் எம்.பி. வெளிநாடு சென்றுள்ளதாலும் வாக்களிப்பில் இவர்கள் பங்கேற்கவில்லை.

அதேவேளை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் எம்.பி.க்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கஜேந்திரன் ஆகியோர் நேற்று சபையில் சமுகமளித்திருந்தபோதும் அவர் வாக்களிப்பின் போது சபையிலிருந்து வெளியேறியிருந்தனர்.

அதேவேளை, 22ஆவது திருத்த சட்ட மூல விவாதத்திலோ வாக்கெடுப்பிலோ பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தலைமையிலான பசில் ராஜபக்ஷ ஆதரவு அணியினர் பங்கேற்கவில்லை.

அவர்களுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ,ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ரோஹித அபேகுணவர்த்தன,அரச தரப்பு பிரதம கொறடாவான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, அமைச்சர் மஹிந்த அமரவீர உள்ளிட்டவர்களும் பங்கேற்கவில்லை.

அதேவேளை சமல் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ, சஷீந்திர ராஜபக்ஷ ஆகியோர் வாக்களிப்பில் பங்கேற்று 22ஆவது அரசியலமைப்பு திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர். எதிர்க் கட்சியில் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸும் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.

22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற நடைபெற்ற வாக்களிப்பில் ஆதரவாக 179வாக்குகளும் எதிராக ஒரு வாக்கும் கிடைத்தன. ஆளும் மற்றும் எதிர்க்கட்சி தரப்பு 44எம்.பி.க்கள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.

அதேவேளை 22ஆவது அரசியலமைப்பின் 03ஆவது வாசிப்பின் போது 21ஆவது திருத்தமாக மாற்றப்பட்டு நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் ஆதரவாக 174வாக்குகள் கிடைத்தன. எதிராக ஒரு வாக்கும் பதிவாகியிருந்தது.

எனவே 178 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்ட 22 ஆவது திருத்தச்சட்ட மூலத்தினூடாக அனைத்து சுயாதீன ஆணைக்குழுக்களும் நிறுவப்பட்டு விடும் என்றும் சர்வதேசத்தில் இலங்கைக்கு ஒரு அங்கீகாரம் இதனூடாக கிடைக்கும் என அரசியில் ஆய்வாளர்கள் எதிர்வு கூறியுள்ளனர்.

Comments