பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கிய மக்களுக்கு நிவாரணங்கள் வழங்க வேண்டியது அரசின் கடமை | தினகரன் வாரமஞ்சரி

பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கிய மக்களுக்கு நிவாரணங்கள் வழங்க வேண்டியது அரசின் கடமை

இலங்கை தற்போது தீவிரமான பல்முனை பொருளாதார சவால்களை எதிர்கொள்கிறது என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. அதன் பேரினப் பொருளாதார முகாமைத்துவம் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாகியிருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொவிட் நோய்த்தொற்று காரணமாக பொருளாதாரம் பாதிக்கப்பட்டமையே இப்போது ஏற்பட்டிருக்கிற நெருக்கடி நிலைமைகளுக்கு காரணம் என்று சமாதானம் கூற முற்பட்டாலும் இது இலங்கை தானே தன்வினையால் பொருளாதாரத்தை சரியாக முகாமை செய்யாமையால் தேடிப்பெற்றுக்கொண்ட ஒரு விவகாரம் என்று துறைசார்ந்த நிபுணர்கள் கூறுகின்றனர்.  

தற்போது பாரிய அந்நியச் செலாவணிப் பிரச்சினையை நாடு எதிர்கொள்கிறது. நாட்டின் ஏற்றுமதித் துறையில் சற்று விரிவாக்கம் ஏற்பட்டுள்ளதாக அண்மைகாலப் புள்ளிவிபரங்கள் கூறினாலும் நாட்டிலிருந்து வெளியேறவுள்ள டொலர்களின் அளவோடு ஒப்பிடுகையில் ஏற்றுமதி வருவாய் விரிவாக்கம் யானைப்பசிக்கு சோளப் பொரி போன்றதொரு நிலைதான்.  

வங்காள தேசத்திடமிருந்தான ஸ்வாப் முறையிலான (SWAP) கடன் மற்றும் இந்தியாவிடமிருந்து பெற முயற்சிக்கப்படும் கடன் என்பன இவ்வருட இறுதிக்குள் இலங்கை மீளச்செலுத்த வேண்டியுள்ள கடன் தவணைகளை பூர்த்தி செய்யப் போதுமானதாகத் தெரியவில்லை. இலங்கை கடன் மீளச்செலுத்தலில் இதுவரை நல்லபிள்ளை ஆகவே செயற்பட்டிருக்கிறது. கடன் தவணை மீளச்செலுத்தல் அண்மிக்கும் போது மற்றொரு கடனைப்பெற்று அதனை மீளச்செலுத்தி வந்திருக்கிறது.இதனால் இலங்கையின் வெளிநின்ற கடன்கள் தொடர்ச்சியாக அதிகரித்து வந்து தற்போது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 105 சதவீதத்தை எட்டியுள்ளது.  

கடந்த இரண்டு வருடங்களாக சர்வதேச கடன் தரமிடல் நிறுவனங்கள் இலங்கையின் கடன் மீளச் செலுத்தும் ஆற்றல் பற்றிய தரமிடலை தொடர்ச்சியாக கீழ்நோக்கி நகர்த்தி வந்துள்ளன. அப்போதெல்லாம் இலங்கைக்கு எதிரான மேற்குலக சதியின் ஓர் அங்கமாக குறித்த நிறுவனங்கள் இலங்கையின் பொருளாதார நிலை பற்றி சரியாகத் தெரிந்து கொள்ளாமல் நாட்டின் கடன் தரமிடல் நிலையினை கீழ்நோக்கி நகர்த்துவதாக அதிகாரத் தரப்பிலிருந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. ஆயினும் உள்நாட்டு நுகர்வுக்கு இக்குற்றச்சாட்டுகள் வெகுசுவையாக இருந்தாலும் சர்வதேச நியமங்களின் பிரகாரம் தரமிடலை மேற்கொள்ளும் நிறுவனங்கள் அதிகாரத்தரப்பின் இக்குற்றச்சாட்டுகளைப் பற்றி துளியளவும் கண்டுகொள்ளவே இல்லை.  

தற்போது கடன்களைத்தவிர உள்நாட்டுக்குள் நிதி வருவதற்கான மூலாதாரங்கள் வற்றிப்போயுள்ளன. திறைசேரி முறிகளைப் பயன்படுத்தி நிதி திரட்டும் முயற்சிகளும் முடங்கிப்போயுள்ளன. முன்னரெல்லாம் திறைசேரி முறிகளின் ஏலங்களின் போது விநியோகிக்க எதிர்பார்க்கப்படும் முறிகளின் தொகையை விட இரு மடங்கு கேள்வி அவற்றுக்கு காணப்பட்டது. உள்நாட்டு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இவற்றில் முதலீடு செய்ய அதிக ஆர்வம் காட்டினர். ஆனால் இலங்கையின் கடன் தரமிடல் தொடர்ச்சியாக கீழ் நோக்கி நகர்த்தப்பட்ட பின்னர் இவற்றின் மீதான ஆர்வம் படிப்படியாகக் குறைந்து போனது. அத்துடன் இலங்கையின் அரசாங்கம் தவிர்ந்த நிறுவனங்களின் கடன்பெறும் ஆற்றலும் கடுமையான பாதிப்புக்குள்ளானது.  

எனவேதான் இலங்கை தற்போது சர்வதேசத்தின் கந்துவட்டிக்கார நாடுகளிலும் விரும்பத்தகாத அதிகாரபூர்வமற்ற (unsolicited) நிறுவனங்களிலும் கடனுக்காகத் தங்கியிருக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை உருவாகியுள்ளது. அந்நியச்செலாவணி நெருக்கடியினால் இலங்கை ரூபாவின் நாணய மாற்றுவீதம் தொடர்ச்சியாகத் தேய்வடைந்து செல்கிறது. போதியளவு டொலர் உள்வருகை இன்மையால் இலங்கையின் வெளிநாட்டு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.  

குறிப்பாக எதிர்வரும் காலங்களில் நாட்டுக்குத் தேவையான அத்தியாவசிய இறக்குமதிகளையும் மேற்கொள்ள முடியாத நிலை உருவாகலாம். அண்மையில் இதேபோன்றதொரு சூழ்நிலை லிபியாவில் ஏற்பட்டது. எரிபொருளை இறக்குமதி செய்யப் போதுமான அந்நிய செலாவணி இன்மையால் அந்நாட்டின் போக்குவரத்துத் துறையும் மின்வலு உற்பத்தித்துறையும் முடங்கிப்போக நாட்டு மக்கள் தமது அன்றாட வாழ்க்கையைக் கொண்டு நடத்த முடியாத நிலை உருவாகியது.  

இலங்கையின் நிலைமையும் அத்தகைய ஒரு இக்கட்டான நிலைக்கு விழுந்து விடக்கூடாது என்பதே எதிர்பார்ப்பாக உள்ளது. சர்வதேச வர்த்தக நிதிப்படுத்தலில் ஈடுபடும் வங்கிகள் கடுமையான அந்நியச் செலாவணி கட்டுப்பாடுகளைப்் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன. தற்போது நாட்டின் இறக்குமதிகளில் 20 சதவீதம் மாத்திரமே நுகர்வுப்பொருள் இறக்குமதியாகும். ஏனையவை எரிபொருள் உள்ளிட்ட இடைநிலைப்பொருள்களும் மூலதனப்பொருள்களுமாகும்.  

எனவே அவற்றின் இறக்குமதி தடைப்படுமாயின் உள்நாட்டு கைத்தொழில் உற்பத்தித் துறை சரிவைச் சந்திக்கும். இதனால் இலங்கையின் மொத்த ஏற்றுமதிகளில் 75 சதவீதத்திற்கும் மேற்பட்ட பங்கை வகிக்கும் கைத்தொழில் துறை ஏற்றுமதிகள் கடுமையாகப் பாதிக்கப்படும். அத்துடன் அரசாங்கம் இரசாயன வளமாக்கிகளின் இறக்குமதியையும் பயன்பாட்டையும் தடைசெய்துள்ளது.  

இதனால் பெருந்தோட்டச் செய்கை உற்பத்திகளும் ஏனைய விவசாய ஏற்றுமதி உற்பத்திப் பொருள்களின் விளைச்சலும் மிகக்கடுமையான பின்னடைவைச் சந்திக்கக் கூடும். சேதனப்பசளை பிரயோகத்தில் முன்னணியிலுள்ள நாடுகளும் நுாறுவீதம் சேதனப்பசளை பிரயோகத்திற்கு மாறவில்லை என்பதும் இலங்கை போன்றதொரு நாடு சேதனப்பசளை உற்பத்தியில் தன்னிறைவடைவது உடனடியாகச் சாத்தியமில்லை என்பதும் துறைசார்ந்த நிபுணர்களில் பலரால் பலமுறை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  

இலங்கை மக்களின் முக்கிய அடிப்படை உணவாகிய நெல் உற்பத்தி இந்த நடவடிக்கையினால் எதிர்வரும் போகத்தில் கடும் வீழ்ச்சியைச் சந்திக்க நேரிடும். ஏற்கெனவே உள்நாட்டில் ஏற்பட்டுள்ள அரிசிப் பற்றாக்குறையை ஈடுசெய்ய அதனை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமையை இங்கு சுட்டிக்காட்டலாம்.

அரசாங்கம் கட்டுப்பாட்டு விலையினை அறிமுகப்படுத்தி அதனைக் கையாள முற்பட்டாலும் உள்நாட்டில் விளைச்சல் குறைந்து நிரம்பல் வீழ்ச்சியடையும் போது கட்டுப்பாட்டு விலையினால் அதனைச் சரிப்படுத்த முடியாது. அதுமட்டுமன்றி இரசாயன வளமாக்கி இன்மையால் ஏனைய உப உணவுப்பயிர்களின் விளைச்சலும் பாதிக்கப்படும்.  

இவற்றின் கூட்டுமொத்த விளைவாக உணவுப்பொருள் விலையதிகரிப்பு ஏற்படுவதுடன் எதிர்காலத்தில் நாட்டின் உணவுப் பாதுகாப்பையும் கேள்விக்குள்ளாக்கும். அது உணவு இறக்குமதிகளை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தையும் உருவாக்கும். இதனால் உணவு இறக்குமதிக்காக அதிகளவு டொலர்களைப் பயன்படுத்த வேண்டிய நிலை உருவாகும்.
மறுபுறம் சில நாட்களுக்கு முன்னர் எரிபொருள்களின் விலைகள் லீற்றர் ஒன்றுக்கு 7 ரூபா தொடக்கம் 23 ரூபா வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளன. உலக சந்தையில் பெற்றோலியப் பொருள்களின் விலைகள் அதிகரித்துள்ளதால் இலங்கையிலும் விலைகளை அதிகரிக்க வேண்டி ஏற்பட்டதாக அரசாங்கம் கூறியது. அதுவும் ஒரு அரசியல் நாடகத்தைப் போட்டு அவ்விலையதிகரிப்பிற்கான பழி ஒரு நபர்மீது சுமத்தப்பட்டது.  

கடந்த காலங்களில் உலக சந்தையில் எரிபொருள்களின் விலைகள் சடுதியாக வீழ்ச்சியடைந்த சந்தர்ப்பங்களில் அதன் நன்மைகள் பொதுமக்களைச் சென்றடையும் விதமாக எரிபொருள்களின் விலைக்குறைப்பு செய்யப்படவில்லை. அப்போது சேமிக்கப்பட்ட பணத்திற்கு என்ன நடந்தது என்றும் தெரியாது. அத்துடன் தற்போது உலக சந்தையில் எரிபொருள் விலைகள் படிப்படியாக அதிகரித்துச் செல்லும் நிலையில் விலை அதிகரிப்பு படிப்படியாக மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். ஒரே தடவையில் பெரிய தொகையில் எரிபொருள் விலைகளை் அதிகரிப்பது பொருளாதாரத்தில் மின்சாரம் தாக்குவது போன்றதொரு அதிர்ச்சியை ஏற்படுத்தும்.  

நாட்டின் எல்லாப் பொருளாதார நடவடிக்கைகளும் இதனால் மோசமான பாதிப்புகளை சந்திக்க நேரிடும். இதன் உடனடி விளைவாக உற்்பத்திச் செலவுகளும் போக்குவரத்துச்் செலவுகளும் அதிகரிக்கும்.

பொருள்களினதும் சேவைகளினதும் விலைகள் தவிர்க்க முடியாதவாறு அதிகரிக்கும். அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதித்து விலை அதிகரிப்பையும் போக்குவரத்துக் கட்டண அதிகரிப்பையும் கட்டுப்படுத்த முயன்றாலும் அந்நடவடிக்கை நீண்டகாலத்திற்கு தாக்குப்பிடிக்க முடியாது. உணவுப் பொருள்கள் உள்ளிட்ட சகல பொருள்களின் விலைகளும் அதிகரிப்பதைத் தடுக்க முடியாது.  

சமையல் எரிவாயுவின் விலையில் இப்போதைக்கு கைவைக்காமல் விட்டாலும் விரைவில் அதையும் அதிகரிக்கும் சாத்தியத்தை மறுக்கமுடியாது. இலங்கையின் பணவீக்கம் ஒற்றை இலக்கத்தில் 5 அல்லது 6 சதவீதமாக இருப்பதாகக் கூறப்பட்டாலும் சந்தையில் நுகர்வுப்பொருள்களின் விலைகள் சடுதியாக அதிகரித்துச் சென்றுள்ளமையை அவதானிக்க முடிகிறது. ஏரிபொருள் விலையதிகரிப்பு எரிகிற நெருப்பில் மேலும் எண்ணெய் ஊற்றுவதாகவே அமையும். மக்களின் கொள்வனவு சக்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டு வாழ்க்கைத்தரம் வீழ்ச்சியடையும். கடந்த இரு வருடங்களாக தமது வாழ்வாதாரத்தை இழந்து வாழ வழியற்று தத்தளிக்கும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்து நாட்டில் வறியவர்களின் சதவீதம் சடுதியாக உயர்வடைந்துள்ளது.  

இந்நிலையில் எரிபொருள் விலை உயர்வு இம்மக்களுக்கு மேலும் தாங்கமுடியாத சுமையை ஏற்படுத்தும். தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கும் கோரோனாவின் மூன்றாவது அலை தணிவதற்கான அறிகுறிகளைக் காணவில்லை. ஆனால் அதன் புதிய பிறழ்வுகள் நாட்டில் கண்டறியப்பட்ட நிலையில் மேலும் மோசமான ஒரு நான்காவது பேரலை ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. இந்நிலையில் சாதாரண மக்களின் வாழ்வாதாரத்தை மீள வழமைக்கு கொண்டு வருவது கடினமானதாக இருக்கலாம்.

எனவே மரமேறி விழுந்தவனை மாடேறிமிதிப்பது போல எரிபொருள் விலை அதிகரிப்பு சமூகத்தின் விளிம்பு நிலையில் பொருளாதாரப் பாதுகாப்பற்ற நிலையில் வாடி வதங்கும் மக்களை பேராபத்தில் தள்ளிவிடும்.  

எனவே பாதிக்கப்படும் நிலையில் உள்ள பொதுமக்களுக்கு நிவாரணங்களை வழங்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். மேற்குலக நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அந்நாட்டு அரசாங்கங்கள் நிதி நிவாரணங்களைத் தாராளமாக வழங்கி வருகின்றன.

கஜானா காலியாகியுள்ள இலங்கையில் அத்தகைய நிதி நிவாரணத்தை எல்லோருக்கும் வழங்குவது சாத்தியமில்லா விட்டாலும் அதிகம் பாதிக்கப்படும் விளிம்பு நிலை மக்களுக்கு எரிபொருள் மானியத்தையும் விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள மக்களுக்குத் தேவையான இரசாயன வளமாக்கி மானியத்தையும் மீண்டும் வழங்கி அவர்கள் தமது வாழ்வாதாரத்தை மீள ஆரம்பிப்பதற்கான உதவியை அரசாங்கம் செய்யலாம். சமுர்த்தி போன்ற சமூக பாதுகாப்பு நடைமுறைகளைப் பயன்படுத்தி உரிய நிவாரணங்களை வழங்கலாம்.

இட்டுகம நிதியினையும் மந்திரிமாருக்கு வாகனம் கொண்டுவர ஒதுக்கப்படவிருந்த நிதியினையும் இந்நிவாரண நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தலாம்.  

நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகளை பொசன் பூரணை தினத்தில் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கை பலதரப்பினரதும் பாராட்டைப் பெற்றது.பாராளுமன்றத்திலும் அதற்கு ஆதரவாகக் குரல்கள் எழுந்தமையை அவதானிக்க முடிந்தது.

கலாநிதி எம்.கணேசமூர்த்தி
பொருளியல்துறை
கொழும்பு பல்கலைக்கழகம்

 

Comments