உயர்நீதிமன்றத்தின் வரலாற்று முக்கியத்துவம் நிறைந்த தீர்ப்பு! | தினகரன் வாரமஞ்சரி

உயர்நீதிமன்றத்தின் வரலாற்று முக்கியத்துவம் நிறைந்த தீர்ப்பு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தைத் தடுப்பதற்குப் போதிய உளவுத் தகவல்கள் வெளியாகியிருந்த போதிலும், அதனைத் தடுக்கத் தவறியமைக்காக நஷ்டஈடு வழங்குமாறு உயர்நீதிமன்றம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தீர்ப்பு வழங்கியது.

இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 100 மில்லியன் ரூபா நஷ்ட ஈட்டை வழங்க வேண்டும் என்று இத்தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதுமான உளவுத் தகவல்கள் இருந்தும் உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதல்களைத் தடுக்கத் தவறியதன் ஊடாக, தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளன எனத் தெரிவித்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட பலருக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 12 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணைகள் குறித்த தீர்ப்பிலேயே உச்சநீதிமன்றம் இவ்வாறு அறிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி தவிர, முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் நிலந்த ஜயவர்தன ஆகியோர் தலா 75 மில்லியன் ரூபாவை நட்டஈடாக செலுத்த வேண்டுமெனவும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ 50 மில்லியன் ரூபாவை நட்டஈடாக செலுத்த வேண்டுமெனவும், தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் சிசிர மென்டிஸ் 10 மில்லியன் ரூபாவை நட்டஈடாக செலுத்த வேண்டுமெனவும் உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நஷ்டஈடுகளை அறவிட்டு கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு மில்லியன் ரூபாவை அரசாங்கம் செலுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்ற நீதியரசர்கள் குழாம், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 5 இலட்சம் ரூபா வீதம் நட்டஈடு செலுத்த வேண்டுமெனவும் உத்தரவிட்டது.

குறித்த மனுக்களை விசாரணை செய்த நீதியரசர்கள் குழாமில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, புவனேக அலுவிஹார, எல்.டி.பி.தெஹிதெனிய, முர்து பெர்னாண்டோ, எஸ். துரைராஜா, ஏ.எச்.எம்.டி. நவாஸ், ஷிரான் குணரத்ன ஆகியோர் இந்தத் தீர்ப்பை வழங்கியிருந்தனர்.

உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் தனது இரு பிள்ளைகளை இழந்த தந்தையான நந்தன சிறிமான்ன, சுற்றுலாத்துறை வர்த்தகர் ஜனக விதானகே, இரு கத்தோலிக்க மதகுருமார், ஷங்ரில்லா ஹோட்டல் குண்டுத் தாக்குதலில் சிக்கிய சட்டத்தரணி மோதித்த ஏக்கநாயக்க, கத்தோலிக்க மதத் தலைவர்கள், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட 12 தரப்பினரால் இந்த அடிப்படை உரிமைமீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த வழக்கில் பிரதிவாதிகள் தரப்பினராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமரும் தற்போதைய ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர, தேசிய புலனாய்வுச் சேவையின் பணிப்பாளராக இருந்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா நிலந்த ஜயவர்தன, தேசிய உளவுச் சேவை பிரதானியாக இருந்த சிசிர மெண்டிஸ் மற்றும் சட்டமா அதிபர் உள்ளிட்டோர் பெயரிடப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், பிரதிவாதிகளில் ஒருவராகப் பெயரிடப்பட்டிருந்த தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக வழக்குகளை முன்னெடுத்துச் செல்ல முடியாது என உயர்நீதிமன்றம் கடந்த 2022 செப்டம்பர் 26 ஆம் திகதி அறிவித்தது.

பதவியில் இருக்கும் ஜனாதிபதிக்கு எதிராக அரசமைப்பின் 35 (1) உறுப்புரை பிரகாரம் வழக்கொன்றை முன்னெடுத்துச் செல்ல முடியாது என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் ஏனையவர்கள் நஷ்டஈடு வழங்க வேண்டுமென்று நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பானது நாட்டில் நீதியையும் நியாயத்தையும் பாராட்டும் அனைவருக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பென பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாகவோ அல்லது எத்தகைய உயர்ந்த பதவியை வகித்தாலும் குற்றம் செய்தால் சட்டத்திலிருந்து தப்பிக்க முடியாதென்ற செய்தி இந்த தீர்ப்பின் மூலம் வழங்கப்பட்டுள்ளது என்றும் பேராயர் தெரிவித்துள்ளார்.

2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கிறிஸ்தவ தேவாலயங்கள், நட்சத்திர ஹோட்டல்களை இலக்குவைத்து இஸ்லாமிய அடிப்படைவாதம் கொண்ட பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் 269 பேர் கொல்லப்பட்டிருந்ததுடன், 500 இற்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். இதில் பலர் அங்கவீனமானவர்களாக இன்னமும் வாழ்ந்து வருகின்றனர்.

இவ்வாறானதொரு தாக்குதல் நடத்தப்படலாம் என்று முன்னரே புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்தபோதும், சம்பந்தப்பட்டவர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லையென்று தொடர்ச்சியான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வந்தன.

அது மாத்திரமன்றி, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டு பாரிய அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலானது இலங்கையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. குறிப்பாக சுற்றுலாத்துறையை கடுமையாகப் பாதித்திருந்தது.

இலங்கையில் பல தசாப்தங்களாக நிலவி வந்த பயங்கரவாத யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் இடம்பெற்ற இந்தக் குண்டுத் தாக்குதல்கள் இலங்கையில் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தன.

இந்த நிலையிலேயே இத்தாக்குதல் குறித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈட்டை வழங்குவதற்காக உயர்நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியுள்ளது.

பி.ஹர்ஷன்

Comments