ஆர்ப்பாட்டங்களின் பின்னணியில் அரசியல் நிகழ்ச்சித் திட்டம்! | தினகரன் வாரமஞ்சரி

ஆர்ப்பாட்டங்களின் பின்னணியில் அரசியல் நிகழ்ச்சித் திட்டம்!

கொவிட் தொற்று இலங்கை மாத்திரமன்றி உலக நாடுகள் பலவற்றுக்கும் சவால் விடுக்கும் ஒன்றாக உருவெடுத்து ஏறத்தாழ ஒன்றரை வருடங்கள் கடந்து விட்டன. இதன் பாதிப்புக்கள் இன்னும் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன. இதனால் இலங்கை போன்ற அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் சுகாதார ரீதியாக மாத்திரமன்றி பொருளாதார ரீதியாகவும் பல சாவல்களை எதிர்கொண்டிருக்கின்றன.

இந்தத் தொற்று நோயைக் கட்டுப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் கடும் பிரயத்தனங்களை முன்னெடுத்துள்ளது. மூன்றாவது அலையினைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் ஏறத்தாழ ஒரு மாத கால பயணத் தடையை விதித்திருந்தது. கடுமையான சுகாதார வழிகாட்டல்கள் பின்பற்றப்பட வேண்டும் என்ற சுகாதாரத் தரப்பினரின் அறிவுறுத்தலின் பேரிலேயே இந்தப் பயணத்தடை இப்போது தளர்த்தப்பட்டுள்ளது.

இதற்கும் அப்பால் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் வேகமாக முன்னெடுத்துள்ளது. இதுவரை 48 இலட்சத்து 78 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு முதலாவது டோஸ் தடுப்பூசியும், 15 இலட்சத்து 83 ஆயிரம் பேருக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசியும் வழங்கப்பட்டுள்ளன.
அதேநேரம், வேகமாகப் பரவக் கூடிய டெல்டா வேரியன்ட் வைரஸ் கொழும்பு, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில்

அடையாளம் காணப்பட்டுள்ளது. இத்தொற்றைக் கொண்ட 19 பேர் அடையாளம் காணப்பட்டிருப்பதாக சுகாதாரப் பணிப்பாளர் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொவிட் வைரஸ் பரவுதவதைத் தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தாலும், இன்னும் பலர் தடுப்பூசிகளைப் பெற வேண்டியிருப்பதால் தொற்றுக்கான ஆபத்து முழுமையாக முடிவுக்கு வரவில்லையென்றே கூற வேண்டும்.

இவ்வாறான நிலையில் தம்மையும் தம்மைச் சார்ந்த சமூகத்தையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவரிடமும் காணப்படுகிறது. சுகாதார அதிகாரிகள் வழங்கியுள்ள சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களை முழுமையாகப் பின்பற்றுவதுடன், சமூக இடைவெளி பேணப்படுவதை உறுதி செய்ய வேண்டிய கடப்பாடும் நம் ஒருவருக்கும் காணப்படுகிறது. எனினும், நாட்டில் நிகழும் சம்பவங்கள் சிலவற்றைப் பார்க்கும் போது இவ்வாறான கூட்டுப் பொறுப்பை மீறி சில தரப்பினர் செயற்படுவதாகத் தெரிகிறது.

குறிப்பாக தொற்றுநோய் சூழலில் முன்னெடுக்கப்படும் தொழிற்சங்கப் போராட்டங்கள் மக்கள் மத்தியில் அச்சத்தை அதிகரித்துள்ளன என்றே கூற வேண்டும். பாரிய ஒன்றுகூடல்களைத் தவிர்க்குமாறு அரசாங்கம் வலியுறுத்தியிருக்கும் நிலையில், அதனையும் மீறி கொரோனா என்ற கொடிய நோய்த் தொற்று தீவிரமாகப் பரவக் கூடிய வகையில் பெரும் எண்ணிக்கையானவர்கள் நெருக்கமாக ஓரிடத்தில் கூடி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதை அண்மைய நாட்களில் காண முடிந்தது.

அடிப்படைத் தேவைகளுக்காகவும், அநீதிகளுக்காகவும் குரல் கொடுப்பதற்கு எந்தவொரு தரப்பினருக்கும் உரிமை உள்ளது. இது அரசியலமைப்பிலேயே குறிப்பிடப்பட்டிருப்பதால் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கான உரிமை மறுக்கப்பட வேண்டும் எனக் கூறுவதற்கில்லை. இருந்த போதும் நாடு எதிர்கொண்டுள்ள இன்றைய இக்கட்டான சுகாதார சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு ஒவ்வொருவரும் சமூகப் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகவுள்ளது.

எதிர்ப்பினைத் தெரிவிப்பதற்கும், தமது உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பதற்கும் பயன்படுத்தக் கூடிய மாற்றுவழிகள் பற்றி சிந்திப்பதற்கான காலமாகவே இது பார்க்கப்படுகிறது. பௌதீக ரீதியான பிரசன்னம் தொற்றுநோயை அதிகரிப்பதற்கான வாய்ப்புக்களையே அதிகப்படுத்தும். ‘சமூக இடைவெளியைப் பேணும் வகையிலேயே போராட்டத்தில் ஈடுபடுகின்றோம்’ எனக் கூறினாலும் அதில் நடைமுறைச் சாத்தியத்துக்கான வாய்ப்புக்கள் மிகவும் குறைவாக இருப்பதையும் அவதானிக்க முடிகிறது.
இந்த தொற்றுநோயின் காரணமாக நாளாந்த வருமானம் ஈட்டுபவர்கள், கூலி ஆட்கள் எனப் பல்வேறு தரப்பினர் வருமான இழப்புப் போன்ற இன்னோரன்ன பிரச்சினைகளுக்கு முகங் கொடுத்திருக்கின்றனர். இவ்வாறான நிலையில் நோய் தொற்றின் வேகம் மீண்டும் அதிகரித்து அதனைக் கட்டுப்படுத்துவதற்காக மீண்டுமொரு முடக்கம் அல்லது பயணக் கட்டுப்பாட்டுக்குச் செல்லும் நிலைமை ஏற்பட்டால் அது அவர்களால் தாங்கக் கூடியதாகவிருக்காது.

மக்களின் அவலங்களைக் குறைப்பதற்கு அரசின் செலவினங்கள் அதிகரிக்கலாம். இது மக்கள் மீது சுமையாக மாறுவதற்கான வாய்ப்புக்களும் அதிகம். எனவே, கொவிட் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளுக்கு ஒத்துழைக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டிய கடப்பாடு எமக்கிருக்கின்றது என்பதை தொழிற்சங்கங்களும், அவற்றின் பின்னணியில் செயற்படுகின்ற அரசியல் கட்சிகளும் மறந்து விடக் கூடாது.

இந்த அறிவுரையானது தொழிற்சங்கவாதிகளுக்கு மாத்திரமன்றி சாதாரண பொதுமக்களுக்கும் பொருந்தும். பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது என்பதற்காகத் தேவையற்ற உல்லாசப் பயணங்கள் போன்றவற்றைத் தவிர்த்து அத்தியாவசியமான பயணங்களுக்காக மாத்திரம் வெளியில் நடமாடுவதே காலத்தின் தேவையாகும். பொதுப் போக்குவரத்துக்களைப் பயன்படுத்தும்போது சமூக இடைவெளியைப் பேணுவது மற்றும் முகக்கவசங்களை அணிவது போன்ற வழிகாட்டல்கள் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும்.

கொவிட் தொற்றுநோயென்பது கட்டுப்பாடுகளையோ அல்லது சட்டங்களையோ விதிப்பதினால் மாத்திரம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படக் கூடியதொன்றல்ல. மக்களின் நடைமுறைகள் மற்றும் செயற்பாடுகளும் ஒத்துழைப்பு வழங்குவதாக இருக்க வேண்டும்.

அதேநேரம், அரசியல்வாதிகளும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். தமது குறுகிய அரசியல் நோக்கங்களுக்கும், அதிகார ஆசைகளுக்குமாக மக்களை வீணாக உருவேற்றி வீதிகளில் இறக்கி அவர்களை சுகாதார ரீதியான அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்காமலிருப்பதற்கான பொறுப்பையும் ஏற்க வேண்டும்.
தற்பொழுது தோன்றியுள்ள சூழ்நிலை இலங்கைக்கு மாத்திரமன்றி உலக நாடுகள் பலவற்றுக்கு சவாலானதாகவே அமைந்துள்ளது. ஏற்கனவே குறிப்பிட்டதைப் போன்று பொருளாதார சவால்களால் பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்டுள்ளனர். என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

மறுபக்கத்தில் அரசாங்கம் தற்பொழுது ஆரம்பித்துள்ள அனைவருக்கும் தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டும். பொது மக்களும் இதனை உணர்ந்து விமர்சனங்களைப் பொருட்படுத்தாது தம்மை பாதுகாக்க தடுப்பூசிகளை ஏற்றிக் கொள்ள முன்வர வேண்டும். இந்த சவாலில் இருந்து வெளிவருவதற்கு அனைவரும் கூட்டுப்பொறுப்புடன் நடந்து கொள்வதே தற்போதைய தேவையாகும்.

சமீபத்தில் நடந்த ஆர்ப்பாட்டங்களின் பின்னணியில் அரசுக்கு எதிரான அரசியல் சக்திகள் உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ஆர்ப்பாட்டத்தின் போது கைதாகி தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகியிருப்போர் விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தை நாடப் போவதாக எதிரணியினர் கூறியிருந்ததையும் இவ்விடத்தில் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
கொவிட் இடர்காலத்தையும் பொருட்படுத்தாமல் அரசியலில் அறுவடையில் ஈடுபடுவதற்கே எதிரணியினர் முற்படுவதாகத் தெரிகின்றது. இதேவேளை ஆர்ப்பாட்டக்காரர்களை பொலிசார் கைது செய்தனர் என்பதற்காக மாணவர்களுக்கான ஒன்லைன் வகுப்புகளை ஆசிரியர்கள் பகிஷ்கரிக்க வேண்டுமென்ற கூற்றிலுள்ள பொறுப்பற்ற தன்மையையும் இவ்விடத்தில் சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது. இன்றைய சூழலில் மாணவர்களின் கல்வியை விட, அவர்கள் எதனை முன்னிலைப்படுத்துகின்றனரென்பது நன்றாகவே புரிகின்றது.

பி.ஹர்ஷன்

Comments