கொவிட் நெருக்கடியை சாதகமாக பயன்படுத்த முற்படும் எதிரணிகள்! | தினகரன் வாரமஞ்சரி

கொவிட் நெருக்கடியை சாதகமாக பயன்படுத்த முற்படும் எதிரணிகள்!

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக வெற்றி பெற்ற பின்னர் நடைபெற்ற பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சி வெற்றி பெற்று, மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்து ஒரு வருடம் பூர்த்தியடைந்துள்ளது.

இன்று நிலவுகின்ற நிலைமை தொடர்பாக உண்மையில் கூறுவதாயின், அரசாங்கம் தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு ஏற்ற உகந்த சூழல் தற்போது இல்லையென்பதே பொருத்தமாகும்.

இதற்கு தற்பொழுது நிலவுகின்ற கொவிட்-19 தீவிரமான தொற்று சூழல் பிரதான காரணமாக அமைந்துள்ளது. இந்த கொடிய பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் கடுமையான பிரயத்தனங்களை மேற்கொண்டுள்ள போதிலும், அம்முயற்சிக்கு எதிரான சவால்கள் இன்னமும் முடிவுக்குக் கொண்டு வரப்படவில்லை.
கொரோனா வைரஸின் திரிபடைந்த பிறழ்வு வைரஸால் தொற்று நிலைமை மோசமடைந்து வருகிறது என சுகாதாரத் தரப்பினர் எச்சரித்து வரும் நிலையில், மக்களைப் பாதுகாக்கும் நோக்கில் அரசாங்கம் தடுப்பூசி ஏற்றும் திட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றது.

யுத்தமானாலும் சரி, அனர்த்தமானாலும் சரி முன்வந்து தோள்கொடுக்கும் பாதுகாப்புத் தரப்பினரின் உதவியுடன் கொவிட் ஒழிப்புக்கான வேலைத் திட்டங்களை அரசாங்கம் மிகத் தீவிரமாக முன்னெடுத்துள்ளது. டெல்டா திரிபின் பரவல் தீவிரமடைந்துள்ளது என சுகாதாரத் துறையினர் எச்சரித்துள்ள நிலையில், நாட்டில் உள்ள மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் துரித கதியில் மேற்கொண்டு வருகின்றது.

இதற்காக  தடுப்பூசிகளைத் தயாரிக்கும் உலகநாடுகள் பலவற்றிலிருந்தும், உலக சுகாதார ஸ்தாபனம் உள்ளிட்ட நிறுவனங்களின் ஒத்துழைப்புடனும், தடுப்பூசிகளை வழங்கும் கொவக்ஸ் திட்டத்தின் ஊடாகவும் அரசு தடுப்பூசி மருந்துகளைப் பெற்று வருகிறது. இலங்கையைப் பொறுத்த வரையில் பைசர், அஸ்ட்ராசெனிகா, மொடேனா, சினோபார்ம் உள்ளிட்ட பல தடுப்பூசிகள் மக்களுக்கு வழங்கப்படுகின்றன. இது விடயத்தில் பொதுமக்களும் சாதகமாகச் சிந்தித்து தாமாக முன்வந்து தடுப்பூசிகளை ஏற்றிக் கொள்வதில் ஆர்வம் காட்டி வருவதை காணக் கூடியதாகவுள்ளது.
தற்போதைய தொற்றுநோய் சூழல் அரசாங்கத்துக்கு சவாலாக இருந்த போதும், கடந்த ஒரு வருட காலத்தில் கொள்கையளவில் பல்வேறு திட்டங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ளமையை எவரும் மறுக்க முடியாது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தேர்தலின் போது முன்வைத்த ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கைத் திட்டத்தில் குறிப்பிடப்பட்ட பல விடயங்கள் ஒன்றன்பின் ஒன்றாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

நாட்டின் நிலப் பகுதிக்கும், மக்களின் சுகாதாரத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய இரசாயன உரங்களைக் கட்டுப்படுத்துவதற்கு அரசு எடுத்துள்ள திட்டம் உண்மையிலேயே தூரநோக்கம் கொண்டதாகும். விவசாயத்துக்கு இலங்கையர்கள் வகைதொகையின்றி அதிகமான இரசாயன உரங்களைப் பயன்படுத்துவதால் எதிர்கால சந்ததிக்கு வளமான மண்வளத்தை வழங்காமல் இன்றைய தலைமுறை செல்வதற்கான வாய்ப்பே அதிகம் காணப்படுகிறது.

அது மாத்திரமன்றி, அதிக இரசாயனப் பசளைகள் மற்றும் பீடைநாசினிகள் பயன்படுத்தப்படுகின்ற மரக்கறிகளை உட்கொள்வதால் ஏற்படக் கூடிய சுகாதாரப் பிரச்சினைகளும் ஏராளம். இதனால் ஏற்படுகின்ற மருத்துவச் செலவுகளும் அரசாங்கத்துக்குப் பாரிய சுமையாக அமைகின்றன. இதுபோன்ற விடயங்களைக் கவனத்தில் கொண்டே அரசாங்கம் இரசாயன பசளைகளின் இறக்குமதிக்குத் தடை விதித்து, இயற்கையான சேதனப் பசளை உற்பத்தியை ஊக்குவிக்கும் வேலைத் திட்டத்தை ஆரம்பித்துள்ளது.

எனினும் பாரியளவில் இரசாயன உரங்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் விவசாயிகளைத் தூண்டி விட்டு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதையும் காணக் கூடியதாகவுள்ளது. இரசாயனப் பசளைகளை கட்டுப்பாடின்றி விவசாயத்தில் பயன்படுத்துகின்ற நாடுகளில் தெற்காசியாவில் இலங்கை முதலாவது இடத்தில் உள்ளதாக சமீபத்தில் அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டிருந்தது. இலங்கையில் சிறுநீரக செயலிழப்பு வியாதி, கொடிய புற்றுநோய்கள், ஈரல் அழற்சி போன்றன அதிகரித்து வருவதற்கும் இரசாயனப் பசளைகளே காரணமென்பதே மருத்துவ நிபுணர்களின் கருத்தாகும்.

அதேசமயம் இரசாயனப் பசளை இறக்குமதியினால் சில நிறுவனங்கள் பெருந்தொகைப் பணம் சம்பாதிக்கின்றன. இரசாயன உரங்களை தடை செய்துள்ளதால் இறக்குமதி நிறுவனங்களின் வருமானம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவேதான் அந்நிறுவனங்கள் விவசாயிகளைத் தூண்டி விட்டு அதன் பின்னணியில் செயற்படுகின்றன என்பதே உண்மையாகும்.

இது திட்டமிட்டு அரசாங்கத்தின் செயற்பாடுகளைக் குழப்பும் நடவடிக்கை என ஆளும் கட்சி உறுப்பினர்கள் பலரும் குற்றஞ் சாட்டியுள்ளனர். இவ்வாறான சூழலில் இரசாயன உரத்தை முழுமையாக, உடனடியாக தடை செய்வதால் ஏற்படக் கூடிய நடைமுறைப் பிரச்சினைகளையும் கருத்தில் கொண்டு மாற்றுத் தீர்வுகள் குறித்து அரசாங்கம் சிந்தித்தால் இவ்விடயத்தை சுமுகமாகத் தீர்க்க முடியும் என்பதே பலரதும் கருத்தாகும்.
அதே போல, சுற்றுச்சூழல் தொடர்பில் அக்கறை காண்பிக்கும் அரசாங்கமாக இது இருப்பதால், பொலித்தீன் தடை எதிர்வரும் மாதத்திலிருந்து கடுமையாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. பிளாஸ்டிக், பொலித்தீன் மற்றும் ரிஷு பைகளின் பயன்பாடு நாட்டின் சுற்றாடலுக்கு மாத்திரமன்றி புவிக்கோளுக்கே ஆபத்தை ஏற்படுத்துவனவாகக் காணப்படுகின்றன.

இவற்றைக் கவனத்தில் கொண்டு பொலித்தீன் பாவனைக்கான தடையை அரசாங்கம் திட்டமிட்டபடி நடைமுறைப்படுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. எதிர்கால சந்ததிக்காக உறுதியான மற்றும் வளமான நாட்டை ஒப்படைக்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வை இதன் ஊடாகப் புலப்படுகிறது.
கொவிட்-19 தொற்றுநோய் சூழலில் அரசாங்கம் பாரிய பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருந்தாலும் கடந்த ஒரு வருட ஆட்சிக் காலத்தில் மக்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக் கொடுப்பதில் அரசாங்கம் குறை வைக்கவில்லை.
சுகாதாரத்தை கருத்தில் கொண்டு முடக்கங்கள் நடைமுறைப்படுத்தப்பட்ட போது, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்கள் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டன. விமர்சனங்களை அரசு எதிர்கொண்டிருந்தாலும் மக்களுக்கான பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தப் பின்னிற்கவில்லை.

அரசாங்கம் இவ்வாறு சவால்களுக்கு மத்தியில் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்ற போதும், அரசு தோல்வியடைந்துள்ளது எனக் காண்பிப்பதற்கு எதிர்த் தரப்பினர் கடுமையாக முயற்சிக்கின்றனர். அதாவது இன்றைய கொரோனா தொற்று காரணமான நெருக்கடி சூழலை எதிரணி தரப்பினர் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதற்கு முற்படுவது தெரிகின்றது.

இதன் ஒரு அங்கமாகவே ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள உயர்வுப் போராட்டமும் காணப்படுகிறது. கொரோனா சவால் நிறைந்த சூழ்நிலையில் அவர்களை ஆர்ப்பாட்டம் செய்யுமாறு தூண்டுவதில் அரசியல் சக்திகள் பின்புலத்தில் உள்ளன என்பதை மறுக்க முடியாது. நாட்டின் சுகாதாரம் தொடர்பில் எதிர்கால சந்ததியினரான மாணவர்களுக்கு புத்திமதி கூற வேண்டியவர்கள், சுகாதார வழிகாட்டல்களையும் மதிக்காமல் வீதியில் இறங்கிப் போராட்டங்களை நடத்தியிருந்தனர். இப்பிரச்சினைக்கு அடுத்த வரவுசெலவுத் திட்டத்தின் ஊடாகத் தீர்வைப் பெற்றுக் கொடுக்க அரசாங்கம் முன்வந்துள்ள போதிலும் ஆசிரிய தொழிற்சங்கங்கள் அந்த வார்த்தைக்கு மதிப்பளிப்பதாகத் தெரியவில்லை.

அதேநேரம், என்னதான் சவால்கள் இருந்தாலும் பௌதீக ரீதியான அபிவிருத்திகளிலும் அரசாங்கம் தொடர்ந்தும் அக்கறை காண்பித்து வருகிறது. இதற்கு சிறந்த உதாரணமாக மத்திய அதிவேக நெடுஞ்சாலை அபிவிருத்திப் பணிகளைக் கூற முடியும். இவ்வீதியின் பணிகள் துரித கதியில் மேற்கொள்ளப்படுவதுடன், அதன் சில கட்டங்கள் விரைவில் பூர்த்தியடையும் நிலையையும் எட்டியுள்ளன. இது இவ்விதமிருக்க சர்வதேச கடன் தவணையை அரசாங்கம் சவால்களுக்கு மத்தியிலும் திருப்பிச் செலுத்தியுள்ளது.

ஒரு வருடம் மாத்திரமே பூர்த்தியடைந்துள்ள இந்த அரசாங்கம் சவால்களுக்கு மத்தியிலும் மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றுவதில் அதிக அக்கறை காண்பித்து வருகின்றது என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்தாக இருக்கின்றது.

பி.ஹர்ஷன்

Comments