அவதூறான விஷமப் பிரசாரங்களை முறியடிக்கும் முயற்சியில் அரசாங்கம்! | தினகரன் வாரமஞ்சரி

அவதூறான விஷமப் பிரசாரங்களை முறியடிக்கும் முயற்சியில் அரசாங்கம்!

ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கூட்டத் தொடர் ஜெனீவாவில் ஆரம்பித்து நடைபெற்று வரும் இந்நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இத்தாலி விஜயம் பற்றியும் அதிகம் பேசப்படுகின்றது.

ஐரோப்பாவின் மிக முக்கிய பல்கலைக்கழகமான போலோக்னா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் தலைமையுரை நிகழ்த்துவதற்காகவும், இராஜதந்திர சந்திப்புக்களை மேற்கொள்வதற்காகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்த விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.

கொவிட்-19 உலகப் பெருந் தொற்று காரணமாக வெளிநாட்டு விஜயங்கள் பலவும் மட்டுப்படுத்தப்பட்டுள்ள சூழ்நிலையில், சர்வதேசத்துடனான உறவுகளைப் பலப்படுத்த வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு உள்ளது. குறிப்பாக ஜெனீவா மாநாடு நடைபெற்று வரும் பின்னணியில், சர்வதேசத்தின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. இலங்கை மீது திட்டமிட்ட அடிப்படையில் முன்வைக்கப்படுகின்ற ஆதாரமற்ற பிரசாரங்களை முறியடிப்பதற்கு இவ்வாறான விஜயங்கள் அவசியமாகின்றன. ஜெனீவா மாநாடு ஆரம்பமாகின்ற வேளையில் இலங்கை அரசாங்கத்தின் மீது சேறுபூசும் வகையில் விஷமப் பிரசாரங்கள் சர்வதேசத்தில் சில தரப்பினரால் முன்னெடுக்கப்படுகின்றன.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோர் மேற்கொண்டுள்ள இந்த விஜயத்தின் மூலம் தாய்நாட்டுக்கு ஏற்படும் கீர்த்தி மற்றும் புகழ் என்பன குறித்து பிரஜைகளும் மக்கள் பிரதிநிதிகளும் மதத் தலைவர்களும் பெருமை கொள்ள வேண்டும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

எந்தவொரு நாடும் தனித்து நின்று வெற்றி பெறுவது நடைமுறைக்குச் சாத்தியமற்றது என்பதால் ஏனைய சர்வதேச நாடுகளுடனான நட்புகளைப் பலப்படுத்த வேண்டிய தேவைப்பாடு உள்ளது. இதனாலேயே ஒவ்வொரு நாடுகளின் அரசாங்கமும் வெளிநாடுகளுடனான உறவுகளை விஸ்தரிப்பதற்கு முயற்சிகளை முன்னெடுக்கின்றன. இதன் ஒரு அங்கமாகவே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இத்தாலி விஜயமும் அமைந்துள்ளது.

இந்த சர்வதேச மாநாட்டில் தலைமை உரையாற்றியிருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இன மத சமூக ஒற்றுமைக்காக நிகழ்த்தப்படும் குறித்த மாநாட்டின் மையப்பொருளை இலங்கையில் வாழும் பல்வேறு இன மத சமூகக் குழுக்களின்வாழ்வியல் சூழலுடன் ஒப்பிட்டுப் பேசியிருந்தார்.

குறித்த வேறுபாடுகளைக் களைவது தொடர்பாக ஓர் முதிர்நிலை சமூகமாக நாம் ஒன்றுபட வேண்டியதன் அவசியம் குறித்தும் இதன் போது பிரதமர் சுட்டிக் காட்டினார்.

உலகளாவிய ரீதியில் பல பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள கொவிட் 19 பரவல் குறித்தும் தனது நிலைப்பாடுகளை முன்வைத்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, எல்லைகளை முடக்குவது குறித்து சில தரப்பினரால் முன்வைக்கப்பட்டு வரும் அழுத்தங்களும், எல்லைகளை முடக்கும் தீர்மானங்கள் குறித்தும் தனது கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

அதன்படி எல்லைகளை முடக்குவது என்பது, ஒரு நாட்டிற்கான அல்லது நாடுகளுக்கிடையிலான தற்காலிக தீரவாக மட்டுமே அமைய முடியுமேயன்றி, அவ்வாறான தீர்மானங்கள் ஒருபோது நிரந்தர தீர்வை வழங்காது என்றும் வலியுறுத்தினார்.

இலங்கையிலும் கொவிட் தடுப்பு நடவடிக்கைக்கான நிரந்தரத் தீர்வாக நாடளாவிய முடக்கத்தை பல தரப்பினர் வலியுறுத்தி வரும் நிலையில், அரசாங்கம் குறித்த முடிவை தற்காலிக நடவடிக்கையாக கருதுவது மட்டுமல்லாமல், நாடளாவிய ரீதியாக அனைவருக்கும் தடுப்பூசி வழங்குவதே குறித்த நெருக்கடியை வெற்றி கொள்வதற்கான நிரந்தரத் தீர்வாக அமையும் என்பதில் உறுதியாக எடுத்துள்ள நிலைப்பாடானது குறித்த கருத்தினூடாக அழுத்தம் திருத்தமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகுபாடுகளுக்கு எதிராகவும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பிலும் எமது அரசாங்கம் மிகுந்த அவதானத்துடன் உள்ளது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதன் போது தெரிவித்திருந்த நிலையில், சிறுவர்களை வேலைக்கு அமர்த்துதல் மற்றும் அவர்களை துஷ்பிரயோக நடவடிக்கைகளுக்கு உட்படுத்துதல் ஆகிய நடவடிக்கைகளுக்கு எதிராக அரசாங்கம் எடுத்து நடவடிக்கைகள் பற்றியும் குறிப்பிட்டிருந்தார்.

காலநிலை மாற்றம் மற்றும் பிற சுற்றுச்சூழல் பிரச்சினைகள், மனிதவள அபிவிருத்தி தொடர்பில் ஒரு சீரான அணுகுமுறை, நல்லிணக்கம் ஆகியவை தொடர்பாக இலங்கை மிக அவதானமாக செயற்பட்டு வரும் அதேவேளை நாடு என்ற ரீதியில் வலுவாக உடன்படாதவர்கள் உட்பட நம் நாடுகளில் வாழும் அனைவருடனுமான சிறந்த உறவின் மூலமே சமாதானமும், ஸ்திரத்தன்மையும் ஏற்படுவதாகவும் பிரதமர் சுட்டிக் காட்டியிருந்தார்.

இந்த பின்னணியில் நல்லிணக்கம் குறித்தும், பொருளாதார நெருக்கடி, கல்வி மற்றும் சமத்துவம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்தும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் நிகழ்த்தப்பட்டுள்ள உரையானது சர்வதேச கவனத்தை ஈர்த்திருந்தது.

இவ்வாறான நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இத்தாலி விஜயம் தொடர்பில் உண்மைக்குப் புறம்பான செய்திகள் வெளியாகியிருப்பதாக பிரதமரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. அவருடைய விஜயத்தின் போது வத்திக்கானில் புனித பாப்பரசரைச் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் உள்ளதாக வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லையென்றும், அவ்வாறான சந்திப்புக்கான ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லையென்றும் பிரதமரின் ஊடகப் பிரிவு சுட்டிக் காட்டியுள்ளது.

அரசாங்கம் மீது சேறுபூசும் வகையிலேயே இவ்வாறான போலிப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இதன் ஒரு அங்கமாகவே பிரதமரின் இத்தாலி விஜயத்தை வைத்துக் கொண்டும் எதிர்க் கட்சியினர் தமது வழமையான பாணியில், அரசுக்கு எதிரான பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். அரசுக்கு எதிராக கற்பனையான விதத்தில் மக்கள் மத்தியில் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதை இந்நாட்களில் காண முடிகின்றது.

கொவிட்-19 என்ற உலகத் தொற்றுநோய்க்கு நாடு முகங் கொடுத்திருப்பதால் ஏற்பட்டிருக்கும் சவால்களிலிருந்து மீண்டெழுவதில் கவனம் செலுத்த வேண்டிய இத்தருணத்தில் அரசின் மீது சேறு பூசி, அதிலிருந்து அரசியல் ஆதாயம் தேடுவதற்கு எதிர்க் கட்சி முயற்சித்து வருவதை அவதானிக்க முடிகின்றது.

குறிப்பாக நாடு எதிர்கொண்டுள்ள சவால்களிலிருந்து மீள்வதற்கு ஆக்கபூர்வமான திட்டங்களையோ அல்லது மாற்று நடவடிக்கைகள் எது பற்றியுமோ பேசாத எதிர்க் கட்சியினர் அரசாங்கத்தை விமர்சிப்பதை மாத்திரமே வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

கொவிட் நெருக்கடி நிலவுகின்ற இவ்வேளையில், ஆக்கபூர்வமான விமர்சனங்களை முன்வைக்காமல் வெறுமனே சேறுபூசும் வகையில் அரசியல் ஆதாயம் கருதி பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இது நாட்டின் முன்னேற்றத்துக்கு ஆரோக்கியமானதாக அமையாது.

பி.ஹர்ஷன்
 

Comments