இனப்பிரச்சினைக்கான தீர்வே நிலையான சுபீட்சத்தை ஏற்படுத்தும் | தினகரன் வாரமஞ்சரி

இனப்பிரச்சினைக்கான தீர்வே நிலையான சுபீட்சத்தை ஏற்படுத்தும்

நம் நாடு ஒரு பாரிய நிதி மற்றும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருப்பதும் அதன் விளைவாக மக்களின் வாங்கும் சக்தி குறைவடைந்து பொருட்களின் விலை அதிகரிக்கத் தொடங்கியிருப்பதும் நாட்டு மக்கள் அறிந்ததே. இது போன்றதொரு நிலையை 1974ம் ஆண்டளவில் இலங்கை மக்கள் எதிர்கொண்டனர். அக்காலப் பகுதியில் பணப் புழக்கம் குறைவு. விற்பனை நிலையங்களில் அத்தியாவசிய உணவுப் பண்டங்கள் கிடைப்பதில்லை. குறிப்பாக, கோதுமை மா மற்றும் அரிசி. மேலும் சாதாரண மக்களிடம் எதையேனும் வாங்கி சாப்பிடுவதற்கான போதுமான பணமும் கையில் இருக்கவில்லை. குடும்பத்தில் ஒருவருக்கு தினமொன்றுக்கு அரை இறாத்தல் பாண் மட்டுமே குடும்ப அட்டைகளின் பேரில் வழங்கப்பட்டது. மக்கள் விரக்தி அடைந்த நிலையில் அக்காலத்தைக் கடந்து சென்றார்கள். ‘பாண் வரிசை யுகம்’ என அக் காலப்பகுதியை மக்கள் அழைத்தார்கள். 

ஏறக்குறைய அத்தகைய ஒரு காலப்பகுதியை நோக்கி நாம் நகர்ந்து கொண்டிருப்பதாகவே கருத வேண்டியிருக்கிறது. கொவிட் முடக்கம் காரணமாக உலகளவில் சுற்றுலாத்துறை மிகக் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளதும், ஏற்றுமதித்துறையில் காணப்படும் மந்த நிலையும் எமது அந்திய செலாவணி வருமானத்தைக் கடுமையாக பாதித்துள்ளது. கொவிட் முடக்கம், அந்திய செலாவணி கையிறுப்பில் ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சி, தொடர்ந்து அதிகரித்துவரும் தொழிற்சங்கப் போராட்டங்கள், அதிகாரித்துவரும் வாழ்க்கைச் செலவு என்பன நாடு மிகப் பெரிய நெருக்கடி நிலை நோக்கி நகர்த்து செல்கிறது என்பதையே புலப்படுத்துகிறது.

இந்த நிலைக்கு யார் காரணம் என்பதைக் கண்டு பிடிப்பதால் எந்தப் பயனும் விளையப்போவதில்லை. ஏனெனில் இது இரண்டே இரண்டு ஆண்டுகளில் மட்டும் நிகழ்ந்தவை அல்ல. சுதந்திரம் பெற்றது முதல் இந்நாடு சுதேசிகளின் ஆட்சியில் படிப்படியான வீழ்ச்சியை நோக்கியே பயணித்து வந்திருக்கிறது. 1948ம் ஆண்டில் இலங்கையிடம் இருந்த அந்நிய செலாவணி கையிறுப்பு படிப்படியாக தேய்முகத்தை சந்தித்ததும் கடன்கள் அபிவிருத்தி காணாமலேயே அதிகரித்துச் சென்றதும் வரலாறு பேசும் உண்மைகள். வளர்ச்சி வேகத்தைவிட பின்னடைவு வேகம் வலுப்பெற்றதன் விளைவைத்தான் நாம் இப்போது அனுபவிக்கிறோம். உலகில் உள்ள பெரும்பாலான நாடுகள் முன்னேறிச் செய்கையில் இலங்கை பின்நோக்கி நகர்ந்திருப்பது கூர்ந்து ஆராயப்பட வேண்டிய ஒன்று. ஆட்சியாளர்கள் தொடர்ச்சியாக தூரநோக்கின்றியும் கட்சி நலன்கள் சார்ந்தும் மேலும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்காக இனவாதத்தை நம்பி ஆட்சி நடத்தியதும் நாடு வீழ்ச்சியை நோக்கி நகர காரணங்களாகின.

எனவே நாடு சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் ஏற்றுமதி பொருளாதார விருத்தி ஏற்பட்டால் மட்டும் பழைய நிலையை அடைந்துவிடும் என்பது பலரது நம்பிக்கையாக இருக்கின்றபோதிலும் அது உண்மையல்ல என்பதை அனுபவரீதியாக நாம் உணர்ந்துள்ளோம். சுற்றுலாத்துறை உச்சத்தைத் தொட்ட ஒரு காலமிருந்தது. தேயிலை விலை அதிகரித்து நின்ற காலமொன்றிருந்தது. உள்ளூர் உற்பத்திகள் சிறப்பாகத் திகழ்ந்த காலமிருந்தது. ஆனால் அந்த வருமானங்கள் இலங்கையின் அபிவிருத்திக்கும் தனிநபர் வருமான அதிகரிப்புக்கம் எவ்வளவு தூரம் உதவியது என்ற கேள்விக்கு பொருத்தமான பதில் கிடையாது. எனவே ஒரு நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரிப்பும், உற்பத்தி வருமான அதிகரிப்பும் மட்டுமே நாட்டின் சுபீட்சத்துக்கு வழிவகுக்கப் போவதில்லை. நாம் சுதந்திரம் பெற்றதில் இருந்து ஒரு பிரச்சினை எம்மைத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. தமிழர்கள் தாம் இரண்டாம் பட்சமாக நடத்தப்படுவதாக கருதிவர அனுமதிக்கப்பட்டமை பாரிய எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி ஒரு யுத்தத்தையே உருவாக்கியதையும் அது எமது சுபீட்சத்துக்கான செலவீனங்களை விழுங்கியதையும் நேரிடையாகவே பார்த்துள்ளோம்.

இன்று சுபீட்சமடைந்த அல்லது வளர்ந்த நாடுகளை எடுத்துக் கொண்டால் அந்நாடுகளில் மத ரீதியான அல்லது இன ரீதியான பிரச்சினைகளைக் காணமுடியாது. அவற்றை எக்காலத்திலேயோ அந்நாடுகள் தீர்த்து வைத்துவிட்டன. எனவே அபிவிருத்தி, உற்பத்தி அதிகரிப்பு, மக்கள் நலன் பேணல் என்பனவற்றில் அந்நாடுகளால் தீவிரமாகக் கவனம் செலுத்த முடிகிறது. சிங்களம் மட்டும் சட்டம், உண்மையாகவே நோக்குவோமானால், மிகச் சரியான சட்டமே. சுதேச மொழியை விட்டுவிட்டு ஆங்கிலத்தையே தொடர்ந்தும் உத்தியோக மொழியாக உபயோகிப்பது சரியானது அல்ல. ஆனால் தமிழுக்கும் அதே அந்தஸ்து அளிக்கப்பட்டிருக்குமானால் நாடு எதிர்நோக்கியிருந்த மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டிருக்கும். எனினும் கொம்பு சீவி வளர்க்கப்பட்ட இனவாதம் அதைச் செய்ய விடாதது, தொடர் பொருளாதார வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

தற்போது நாடு பல தொழிற்சங்க போராட்டங்களையும் விவசாயிகளின் போராட்டங்களையும் எதிர்கொண்டு வருகிறது. வாழ்க்கைச் செலவு உயர்வு தவிர்க்க முடியாதது. இந்த நிலையில் நாடு என்ற நிலையில் தொழிற்சங்கங்கள் சில விட்டுக்கொடுப்புகளைச் செய்ய வேண்டியது அவசியம். நாடா உரிமைகளா என்று வரும்போது நாடு என்ற முடிவுக்கு உலக நாட்டு மக்கள் வந்திருக்கிறார்கள் என்பதற்கு முன் உதாரணங்கள் உள்ளன. சிக்கலான நிலையில் ஒரு அரசாங்கத்தின் கழுத்தை நெரிக்க முயல்வது சரியானது அல்ல. இதேசமயம் அரசும் சில படிகள் இறங்கிவர வேண்டும். ஏனெனில் நீயா நானா என்ற நிலைப்பாடு தொடர்வது எந்தப் பலனையும் தராது.

இந் நெருக்கடிகள் தற்காலிகமானவையே. ஓரளவுக்கு பிரச்சினைகள் தீர்ந்த பின்னர் அரசு முதல் விஷயமாக இனப் பிரச்சினைக்கு முடிவு காண்பதில் ஈடுபாடு காட்ட வேண்டும். ஏனெனில் அது  நாட்டின் நிரந்தர சுபீட்சத்துடன் தொடர்புபட்டது.

Comments