கர்ணனுக்கு 58 ஆண்டுகள் | தினகரன் வாரமஞ்சரி

கர்ணனுக்கு 58 ஆண்டுகள்

தமிழ்த்திரையின் வரலாறு படைத்த மாபெரும் காவியமான நடிகர்  திலகம் சிவாஜி கணேசன் வள்ளல் "கர்ணனா"க பாத்திரமேற்று நடித்த  பிரமாண்ட படைப்பான "கர்ணன்" திரைப்படம் வெள்ளித் திரைக்கு வந்து வசூலை அள்ளித் தந்து   58ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. (14.01.1964...........14.01.2022)

1964இல் 40லட்சம் ரூபா செலவில்  தயாரிக்கப்பட்டது. இப்போது இதன் மதிப்பு 500கோடி. பத்மினி பிக்ஸர்ஸ் சார்பில் பி.ஆர்.பந்துலு அவர்களின் தயாரிப்பு இயக்கத்தில் வெளியான வெற்றிப்படம் "கர்ணன் ". மகாபாரத காவியத்தில் மிக முக்கிய கதாபாத்திரமான கர்ணனை, அதுவரை ஹிந்தி,தெலுங்கு, கன்னடம், மலையாளமொழிகளில் எவரும் தயாரிக்கவோ அப்பாத்திரத்தில் துணிந்து எந்த நடிகரும் நடிக்கவோ தயங்கிய நிலையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அசாத்திய துணிவுடன் நடித்தார்.பாண்டவர்களுக்கு அநீதி இழைக்கும் கௌரவர்களின் தலைவனான துரியோதனனுக்கு உயிர் நண்பனாக கர்ணன் பாத்திரம் அமைந்தமையினால் அக்காலத்தில் தைரியமாக இப்பாத்திரத்தில் எந்த முன்னணி நடிகரும் நடிக்க முன் வராத தருணத்தில் இப்பாத்திரத்தின் இயல்பான தன்மையை நன்கு உள்வாங்கிக் கொண்ட நடிப்பின் இமயம் சிவாஜி கணேசன் துணிந்து நடித்து  இப்படத்தில் கர்ணனாகவே வாழ்ந்து காட்டினார்.இந்திய சினிமா வரலாற்றை "கர்ணன்"திரைப்படத்தை தவிர்த்து எழுத முடியாது. இப்படத்தில் ஆரம்பத்தில் கிருஷ்ணராக நடிக்க தேர்வானவர் ஜெமினி கணேசனே. சிவாஜி கணேசனின் வேண்டுகோளுக்கிணங்க ஜெமினி கணேசன்  ஒதுங்கவே அப்பாத்திரத்தில் ராமர்,கிருஷ்ணர் வேடத்திற்கென்றே பிறந்தவராகக் கருதப்படுகின்ற என்.டி.ராமராவ் நடித்தார்.இவரை பிடிவாதமாக தேர்வு  செய்தவர் சிவாஜி கணேசனே.தெலுங்கு திரையுலகில் வேலைப்பளு மிகவும் அதிகமாக  இருந்ததனால் என்.டி.ராமராவ் ஆரம்பத்தில் நடிக்க மறுத்தார். பின் சிவாஜி கணேசனின் விடாப்பிடியால்  "கர்ணன்" படத்தில் கிருஷ்ணர் வேடத்தில் நடிக்க காலத்தை ஒதுக்கிக் கொடுத்தார் என்.டி.ராமராவ்.

சிவாஜிக்கு இணையாக என்.டி.ராமராவிற்கு இப்படத்தில் முக்கியத்துவம் வழங்கப்பட்டது. படத்தில் என்.டி.ராமராவ் வரும் கட்டத்திலிருந்து உச்சக்காட்சி வரை சிவாஜிக்கு இணையாக இவர் பயன் படுத்தப்பட்டு உரிய கௌரவம் ஆற்றினார் சிவாஜி கணேசன். படத்தின் இறுதிக்கட்ட காட்சியில் "மரணத்தை எண்ணி கலங்கிடும் விஜயா"மற்றும் "உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது"போன்ற காலத்தால் அழியாத பாடல்களை என்.டி.ராமராவ் சீர்காழி கோவிந்தராஜனின் கணீர் குரலில் பின்னணி  பாடுவதாக அமைத்தார் இயக்குனர் பி.ஆர்.பந்துலு. .இந்நிகழ்வால் நெகிழ்சியடைந்த என்.டி.ராமராவ்  சிவாஜி கணேசனின் பெருந்தன்மையை பல மேடைகளில் கூறி பெருமையடைந்தார்.வேறு நடிகர்களாக இருப்பின் தன்னை முன்னிலைப் படுத்தி மற்றவர் திறமையை மழுங்கடித்திருப்பர். ஆனால் சிவாஜி கணேசனுக்கு சக நடிகர்களின் திறமையை ஆர்வமுடன் வரவேற்கும் பண்பு நிறையவே உண்டு. "கப்பலோட்டிய தமிழன்"படத்தில் எஸ்.வி.சுப்பையாவின்  பாரதியார் வேடத்தை உயர்ந்த எண்ணத்துடன் திரையில் அனைத்து காட்சிகளும் இடம் பெற உத்தரவிட்டார்சிவாஜி. அது போல் "திருவிளையாடல் "படத்தில் தருமியாக நாகேஷ்  நடித்த  அனைத்து காட்சிகளும் திரையில் இருக்கும்படி செய்தவர் சிவாஜி கணேசன். "கர்ணன்" படத்தில் பெரும்பாலான காட்சிகள் ராஜஸ்தான் மாநிலத்தில் சரித்திரப் புகழ் மிக்க  மாளிகைகளும்,கோட்டைகளும் கொண்ட ஜெய்ப்பூரில் படப்பிடிப்பு நடத்தினார் பி.ஆர்.பந்துலு. தேர்கள்,போர்க்கருவிகள்

உட்பட அனைத்தையும் சென்னையிலேயே தயார் செய்து ரயில் மூலம் ஜெய்ப்பூர் கொண்டு சேர்த்து படமாக்கினார். போர் காட்சியில் ராஜஸ்தான் மாநில துணைப் பொலிஸார்களையும்,ஆயிரக்கணக்கான துணை  நடிகர்களையும் நடிக்க வைத்தார் பந்துலு.   மகாபாரத போர் நடைபெற்ற அதே  குருஷேத்திரத்தில் "கர்ணன் "திரைப்பட போர்க்காட்சியும் படமாக்கப்பட்டது. இக்காட்சியில் 80

யானைகளும்,400குதிரைகளும் பயன் படுத்தப்பட்டன. இப்படத்தின் அனைத்து பாடல்களும் கவியரசு கண்ணதாசன் எழுதியவைகளே. இதற்காக பெங்களூரு உட்லண்ட்ஸ் ஹோட்டலில் இரண்டே நாட்கள் தங்கியிருந்து எல்லாப் பாடல்களையும் எழுதி முடித்தார் கவியரசு . இது வட நாட்டில் இடம் பெற்ற ஓர் புராண இதிகாச காவியம் என்பதால் ஷெனாய்,புல்புல்தாரா போன்ற வாத்யங்களை படம் முழுக்க பயன்படுத்தி இப்படத்தின் வெற்றிக்கு வழு சேர்த்தனர் மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி ."இரவும் நிலவும்"பாடல் காட்சியில் சிவாஜி கணேசன் நடக்கும் ராஜநடை அவருக்கேயுரிய தனித்துவம். வில்வித்தை அரங்கிலே தனக்கேற்பட்ட அவமானத்தை தன் விழிகளின் மூலம் வசனமின்றி துயரத்தை வெளிபடுத்தியிருப்பார் சிவாஜி.ஏழு குதிரைகள் பூட்டிய சூரியபகவானை கர்ணன் மலர் தூவி வழிபடும் போது சிவாஜியின் கம்பீரம் மிக்க தோற்றம் பிரமிப்பானது.

தேவேந்திரனிடம்(எஸ்.வி.ராம்தாஸ்) கவச  குண்டலங்கலை அறுத்து தானமாக அளிக்கும் காட்சியில் சிவாஜி முத்திரை பதிக்கின்றார்.

கௌரவர்களின் சபையில் கிருஷ்ணர் தூது வரும்போது விதுரரின்  (வி.எஸ்.ராகவன்) தாயாரைப் பற்றி துரியோதனன் அவதூறு வார்த்தைகளை அள்ளி வீச,விதுரர் கண்கலங்கி  அவமானப்படும்போது, சிவாஜியின் துடிப்பு நிறைந்த முகபாவம் உணர்ச்சி மிகுந்ததாக அமைந்திருக்கும்.

சினங் கொண்ட விதுரர்,விஷ்ணு பகவான் தனக்களித்த"உலகை அழிக்கும் ஆற்றல் கொண்ட வில்லினை" இரண்டாக முறித்து உடைத்தெரியும் கட்டம் அபாரம்.   தன் மருமகன் ஓர் தேரோட்டி என அறிந்த சந்திரசைல தேச மன்னன் கனகன் (ஓ.ஏ.கே.தேவர்)தன் மகளான சுபாங்கியை(தேவிகா) மீண்டும் தன் தேசத்திற்கு அழைத்து வரும் கட்டத்தில் சிவாஜியும்,ஓ.ஏ.கே.தேவரும் பேசிக்கொள்ளும் வசனங்கள் அனல் கக்கும்,அங்கிருக்கும் சிம்ம பொம்மையினை தன் கரத்தால் உடைத்து துகள்களாக்கி    கோபத்தில் பற்களை நற நறவென கடித்தபடி சிம்மம் போல் சிவாஜி கர்ஜனை செய்யும் கட்டம் அமர்க்களம்.பரசுராமரிடம் வில்வித்தை  (ஆர்.பாலசுப்பிரமணியம்)பயில்கின்ற போது கர்ணன் காட்டும் குருபக்தி நெகிழ்சியானது.

ராட்ஷத வண்டு கர்ணனின் தொடையைத் துளைக்கும் போது வலியைத் தாங்கி கொண்டு,தன் மடியில் உறங்கும் குருவானவரின் உறக்கத்திற்கு ஊறு வராத வண்ணம் முகபாவத்தில் காட்டுகின்ற நடிப்பு அருமை.சுபாங்கி (தேவிகா),தேரினைச் செலுத்தும் போது குதிரைகள் மிரண்டோடும் காட்சியில் கர்ணன் தேரைத் தடுத்து நிறுத்தி சுபாங்கியை காக்கும் கட்டமும்,பின் இருவரும் பேசும் காதல் உரையாடல்களும் தென்றல் தவழுவதாக அமைந்திருக்கும்.

துரியோதனன்(எஸ்.ஏ.அசோகன்) மனைவி பானுமதியுடன் (சாவித்திரி) பகடை விளையாடும் போது ஆட்டத்தின் உத்வேகத்தில் அவளின் மடியைப் பிடித்து கர்ணன் இழுக்க,அந்த மேகலையில் இருந்த முத்துக்கள் அறுந்து சிதறிக்கிடக்கும் நேரத்தில்  சிவாஜி தன் உணர்ச்சி மிகு நடிப்பை வியாபிக்கும் தன்மை பூரிப்பு நிறைந்த காட்சியாகும்.யுத்தத்துக்கு வீரர்களை நியமிக்கும் காட்சியில் படைத் தளபதி பீஷ்மர்(ஜாவர்சீதாராமன்),"கடைத்தொகுதியில்பெரும் கூட்டத்தோடு கூட்டமாக நின்று போர் புரியும் அட்த ரதனாக கர்ணனை நியமிக்கின்றேன்"எனக்கூறி கர்ணனை புறக்கணிக்கும் போது,கர்ணன்  வெகுண்டெழுந்து உடை வாளையுருவி மீண்டும் ஆக்ரோஷத்துடன் வாளை உறையில் இடுவதும்,"பீஷ்மர் உயிரோடு இருக்கும் வரை நான் போர்க்களம் புகேன் இது சத்தியம் "என சூழுரைத்து கோபத்துடன் நடந்து வாளை மேசை மீது வைக்கும்  கட்டமும் படு உத்வேகம். இப்படத்தில் குந்திதேவி(எம்.வி.ராஜம்பா) கர்ணனை சந்திக்கும் காட்சி முக்கியத்துவம் வாய்ந்தது. மஞ்சத்தில் இருவரும் பாசப்பிணைப்பால் ஒன்றித்து வசனம் பேசும் காட்சியை ஒளிப்பதிவாளர் வி. ராமமூர்த்தி அழகாக மஞ்சத்தைச் சுற்றி  வலம் வந்த விதத்தில் படமாக்கியது அபாரம்.குழந்தையாக தன்னை கங்கையில் ஏந்தி வந்த பேழையைக் குந்திதேவியிடம் காட்டி கர்ணன் பேசும் வசனங்கள் படத்தின் சிறப்பான கட்டமாக வலுவுற்றிருக்கும். "சக்தி"கிருஷ்ணசாமியின் வசனங்கள் "கர்ணன்" படத்திற்கு சிறப்புச் சீர் செய்தன. "உள்ளத்தில் நல்ல உள்ளம்" பாடலின் போது அர்ஜுனனின் (ஆர்.முத்துராமன்) கணைகளால் கர்ணனின் உடல் துளைக்கப்பட்டு,ரணமாகித் தவிக்கும்  கட்டத்தில்  கர்ணன் இடும் முனங்கல் சப்தத்தை பாடலுடன் இணைத்து

சிறந்த முறையில் ஒலிப்பதிவு செய்த ஒலிப்பதிவாளர் டி.எஸ்.ரங்கசாமியின் அனுபவம் நேர்த்தியானது.  இப்படத்திற்கு பின்னணி இசை வழங்கிய விஸ்வநாதன் ராமமூர்த்தியின் திறமையான யுக்தியும் பாராட்டுக்குறியது. தன் மார்பைத் துளைத்திருக்கும் காண்டீபனின் கணையை அகற்றி,வழியும் குருதியை கிருஷ்ணனுக்கு (என்.டி.ராமராவ்) தத்தம் அளித்து தான் செய்த தர்மத்தின் பலன் அனைத்தையும் தானம் வழங்கும் காட்சியில் சிவாஜி கணேசன் குற்றுயிராக விழிகள்  கலங்கி நடிக்கும் காட்சி திரையரங்குகளில் அனைவரையும் விழி கலங்க வைத்திருக்கும். கர்ணன் இறக்கும் தருணத்தில் கிருஷ்ண பகவான் விஷ்வரூபம் எடுத்து கர்ணனுக்கு முக்தி பேறு அளிக்கும் காட்சி அற்புதம்.சகுனியாக நடித்துள்ள பழம்பெரும் நடிகர் முத்தையாவின் நடிப்பு அருமை.

பீஷ்மர் வேடம் ஜாவர் சீதாராமனுக்கு வெகு பொருத்தம். கிருஷ்ணனாக பாத்திரமேற்ற என்.டி.ராமராவின் வருகைக்குப் பின் "கர்ணன்" படம் அமர்க்களப்படுகின்றது.

கௌரவர்கள் சபையில் தூதராக கிருஷ்ணர் தோன்றும் காட்சிகளிலும், கௌரவர்கள் வீற்றிருக்கும் அரண்மனை மண்டபங்களும்,

துரியோதனனின் அந்தப்புர அமைப்புகளும்,

கர்ணனின் அங்க தேசத்து அரண்மனை நிர்மானிப்பும்,சிற்ப வேலைப் பாடுகளும், வில் வித்தைப் போட்டி நடக்கும் அரங்கமும், நேர்த்தியாக அமைக்கப்பட்டிருக்கும் தேர்களும்,ஏழு குதிரைகளுடன் சூரிய பகவான் அமர்ந்திருக்கும் ரதமும் மிகுந்த பொருட் செலவில் ரம்மியாக  நிர்மானம் செய்யப்பட்டிருக்கும்.இப்பணிகளை சிறப்புடன் மேற்கொண்ட ஏ.நாகரத்தினம்,

கே.ஜி.வேலுச்சாமி ஆகிய கலைஞர்கள் வரவேற்புற்குரியவர்கள்.இப்படத்தில் என்.டி.ராமராவிற்கு கிருஷ்ணர்

வேட ஒப்பனையிட்டவர் இயக்குனர்

பி.வாசுவின் தந்தை ஒப்பனை மேதை

பீதாம்பரம் அசல் கிருஷ்ணரே நேரில் வந்தது போல என்.டி.ராமராவ் காட்சியளிப்பார்.சிவாஜி கணேசனுக்கு ஒப்பனை செய்தவர் சிவாஜியின் ஆஸ்தான ஒப்பனையாளர் ஆர்.ரெங்கசாமி.சிவாஜி கணேசன் அணியும் ராஜ உடைகளும்,

ஆபரணங்களும் சிவாஜிக்கு கம்பீரமாக பொருந்தியிருக்கும்.ஒவ்வொரு காட்சிகளையும்  அணுவணுவாக செதுக்கியுள்ளார் பி.ஆர்.பந்துலு.யுத்தம் தொடங்கும் முன் பீஷ்மரையும்,

துரோணரையும்,கௌரவ சகோதரர்களையும்  எப்படி என் அம்புகளால் எதிர்ப்பேன் என பாசத்தால்  அர்ஜுனன்(முத்துராமன்) மதிமயங்கி காண்டீபத்தை கீழே வைக்க.. அப்போது கிருஷ்ணர்(என்.டி.ராமராவ்) அர்ஜுனனுக்கு கீதோபதேத்தை உபதேசிக்கின்றார்.அதன் சாராம்சத்தை கவியரசு கண்ணதாசன் தன் வைர வரிகளில் "மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஐயா"என கீதையின் தத்துவத்தை  உணர்த்தும் விதமாக அமைத்த ரத்தின வரிகள் இக்காட்சிக்கு மிகப்பொருத்தமாக அமைந்தது. அர்ஜுனனின் கணைகளால் துளைக்கப்பட்டு அம்புப் படுக்கையில் பீஷ்மர் (ஜாவர் சீதாராமன்)ரணமாகி மரணத்துடன் போராடும் கட்டம் தத்ரூபமாக அமைந்த காட்சி. இக்கட்டம் ஜாவர் சீதாராமனின் பண்பட்ட நடிப்பினை புடம் போட்டு காட்டுகின்றது. 

1964களில் இன்றைய காலங்களில் இருக்கும் கணிணி தொழில் நுட்பங்கள் போல் நவீன வசதிகள் அற்ற அக்காலகட்டத்தில் "கர்ணன்"போன்ற புராண இதிகாச சரித்திர படங்களை எவ்வளவு கடின உழைப்பிற்கு மத்தியில் உருவாக்கியிருப்பர் என்பதை தற்காலத்தவர்கள் உணரந்து பார்ப்பது அவசியமாகிறது.

"பாகுபலி"போன்ற படங்கள் எடுக்கப்பட்ட வசதிகள் அக்காலத்தில் இருந்திருப்பின்"கர்ணன்"திரைப்படம் "பென்ஹர்","டென் கமன்ட்மென்ட்ஸ்"போன்ற ஹொலிவுட் படங்களின் சிறப்புக்கு மேலாக சர்வதேச அளவில் பேசப்பட்டிருக்கும்.

இப்படத்தின் நீளம் கருதி "மகாராஜன் உலகை ஆளுவார் "என்ற அருமையான பாடல் நீக்கப்பட்டது.

ஆயினும் இசைத்தட்டுகளில் பதிவாகி வெளியானது.இப்படத்தில் இடம்பெற்ற அத்தனை பாடல்களும் பெரும் சிறப்பு கொண்டது. 1964இல்

சிவாஜி கணேசனின் மகள் தேன்மொழியும்,

என்.டி.ராமராவின் மகள் புரந்தரேஷ்வரியும் சென்னையில் ஒரே பள்ளித்தோழிகள். "கர்ணன்" படத்தில் புரந்தரேஷ்வரியின் அப்பா என்.டி.ராமராவ்  கர்ணனைக் கொன்றுவிட்டார் என வருந்திய பள்ளி மாணவிகள் புரந்தரேஷ்வரியுடன் பேசுவதை நிறுத்தி விட்டார்களாம். விடயத்தை புரந்தரேஷ்வரி என்.டி.ராமராவிடம் கூற மறுநாளே பள்ளிக்கு வந்த என்.டி. ராமராவ் நடிப்பிற்காகவே அவ்வாறு செய்ததாக கூறி மன்னிப்புக் கேட்டு மாணவிகளை சமாதானப்படுத்தினார்.

இப்படம் தெலுங்கு, ஹிந்தி,மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு  வெளியாகி வெற்றி பெற்றது.கர்ணனும்,மக்கள் திலகம் எம்ஜியாரின் "வேட்டைக்காரனு"ம் 14.01.1964இல் ஓர் தைப்பொங்கல் நாளில் ஒன்றாக.வெளியானது.இரண்டு படங்களுமே அமோக வெற்றி பெற்றது.சமீபத்தில் டிஜிட்டல் வடிவில் "கர்ணன்"புதுப்பொழிவுடன் வெளியாகி அமோக வெற்றி பெற்று சாதனை படைத்தது.  மொத்தத்தில் தமிழ் சினிமாவில் "கர்ணன்"படம் ஓர் வரலாறு போற்றும் சரித்திரம்.....!

இப்படத்தில் யாரும் சிவாஜி கணேசனைக் காணவில்லை....!

கர்ணனைத் தான் கண்டனர்.....!

எஸ்.கணேசன் ஆச்சாரி சதீஷ்.

Comments