போதைப் பழக்கமும் மனிதவள சீர்குலைவும் | தினகரன் வாரமஞ்சரி

போதைப் பழக்கமும் மனிதவள சீர்குலைவும்

தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை 1984ஆம் ஆண்டு 11ஆம் இலக்க அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபைச் சட்டத்தின் கீழ் விசேடமாக உருவாக்கப்பட்ட ஒரு சபையாகும். இச்சட்டத்தின் மூலம் சட்ட விரோத போதைப் பொருட்களுக்கு எதிராக செயற்படுவதற்குத் தேவையான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 

போதைப்பொருட்கள் சம்பந்தமான சட்ட உருவாக்கம், போதைப் பொருளுக்கு எதிரான தேசிய கொள்கை உருவாக்கம், போதைப்பொருள் சம்பந்தப்பட்ட சர்வதேச உடன்படிக்கைகளை இலங்கையில் செயற்படுத்தல், மருத்துவத் துறையில் பயன்படுத்தும் போதைப்பொருட்களாக துஸ்பிரயோகப்படுத்தப்படக்கூடிய இரசாயனங்களை கட்டுப்படுத்தல் மற்றும் விநியோகத்தினை மேற்பார்வை செய்தல், போதைப் பொருள் உற்பத்திக்கான மூலப்பொருட்களாக பயன்படுத்தப்படக்கூடிய இரசாயனங்களின் இறக்குமதி, விநியோகம், களஞ்சியப்படுத்தல் மற்றும் பயன்பாடு தொடர்பான கட்டுப்பாடுகளை விதித்தல் போன்ற சட்ட நடவடிக்கைகளோடு, சம்பந்தப்பட்ட தடுப்பு அதிகாரங்களைப் போன்றே போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கான சிகிச்சை மற்றும் புனர்வாழ்வளித்தல், போதைப்பொருள் சிகிச்சை மற்றும் புனர்வாழ்வுச் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனங்களை தரக் கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப மேற்பார்வை செய்தல், சமூகத்தில் பல்வேறுபட்ட தரங்களிலும் போதைப்பொருளுக்கு எதிரான அறிவூட்டல் நிகழ்வுகளை முன்னெடுத்தல், சமூக மட்டத்தில் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கான சிகிச்சைகளை மேற்கொள்ளல் மற்றும் சிகிச்சைக்குப் பின்னரான தொடர் கண்காணிப்புகளைச் செய்தல் போன்ற சமூகநலன் சம்பந்தப்பட்ட விடயங்களை செயற்படுத்துகின்றது. 

முன்னைய காலத்தில் ஒரு சில வகையிலான போதைப்பொருட்களே பாவனையில் இருந்தாலும்  தற்போது புதுப்புது போதைப்பொருட்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை காணக்கூடியதாக இருக்கின்றது. இவற்றுள் சிறு பிள்ளைகள் உண்ணக்கூடிய உணவு வகைகள் முதல் பல இலட்சக் கணக்கான பெறுமதி வாய்ந்த இரசாயனங்கள் வரைக்கும் உள்ளன. 

மன அழுத்தத்தினை ஏற்படுத்தக்கூடியவை, தூண்டிகளாக செயற்படக் கூடியவை, கஞ்சா சார்ந்த உற்பத்திப் பொருட்கள், மாயத் தோற்றத்தினை உண்டு பண்ணக்கூடியவை,   அபின்  சார்ந்த உற்பத்திகள், தடை செய்யப்பட்ட ஊக்கமருந்துகள் என ஆறு வகைக்குள் போதைப்பொருட்களை உள்ளடக்க முடியும். 

 

இலங்கையைப் பொறுத்தவரை பிரதானமாக இரு வகையான போதைப்பொருட்களே பயன்பாட்டில் உள்ளன. அவை சட்ட ரீதியாகக் கட்டுப்படுத்தப்பட்ட போதைப்பொருட்கள். மற்றும் சட்ட விரோதப் போதைப்பொருட்கள்.     இலங்கை கலால் வரித் திணைக்களம் மற்றும் புகையிலை, மதுபானங்கள் மீதான தேசிய அதிகார சபை மற்றும்  பொலிஸ்துறை போன்றவையும் சட்ட விரோத போதைப்பொருள் தொடர்பாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையும் செயற்படுகின்றன.

இலங்கையைப் பொறுத்தவரை ஒரு இலட்சத்திற்கும் அதிகமான போதைப்பொருள் பயன்பாட்டாளர்கள் இருப்பதாக    ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இப்பாவனையினால் பொருளாதார அழிவுகள் ஏற்படுத்தப்படுவது போன்றே சுகாதார சமூக ஆன்மீகப் பாதிப்புக்களும் ஏற்படுவதுடன் கலாசார சீர்குலைவும் சட்ட விரோத செயற்பாடுகளின் அதிகரிப்பும் ஏற்படுத்தப்படுகிறது. 

மேலும் இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகும் போது நாட்டின் தொழிற் படையணி குறைவடைவதுடன் தங்கி வாழ்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது. போதைப் பொருளின் நீண்டகால பயன்பாட்டின் விளைவாக இளவயது உள நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து செல்கின்றது. மேலும் மலட்டுத்தன்மை, புற்று நோய் போன்ற பிரச்சினைகள் பயன்படுத்துபவருக்கு மாத்திரமன்றி பயன்படுத்தக்கூடியவர்களை அண்டி வாழக்கூடியவர்களுக்கும் ஏற்படும் வாய்ப்புக் காணப்படுகின்றது. 

போதைப்பொருள் பயன்படுத்தும் ஒருவருக்கு மருத்துவச் சிகிச்சை, உளவளத்துணை, தொழில் முன்நிலைச் சிகிச்சை முறைமை, உதவிக் குழுக்களைக் கொண்டு சிகிச்சையளித்தல் அல்லது மேற்குறிப்பிட்டவற்றில் ஒன்றுக்கு மேற்பட்ட கலப்புச் சிகிச்சை முறைகளை செய்வதன் மூலம் சிகிச்சையளிக்க முடியும். இதில் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் சிகிச்சை நிலையங்களில் உளவளத்துணை சிகிச்சை முறையே பின்பற்றப்படுகின்றது. 

போதைப்பொருள் பாவனையில் இருந்து விடுபடக்கூடிய ஒருவர் உடல் நடுக்கம், காய்ச்சல், மூட்டு வலி, தசைப்பிறழ்வு, வாந்தி, வயிற்றோட்டம், பசியின்மை, தூக்கமின்மை, அதீத கோபம் போன்ற பல்வேறு அசெளகரியங்களை தான் மீண்டு வரும்போது  அனுபவிப்பார்.

இத்தகைய அசெளகரியங்களை விட்டு வெளிவருவது கடினமான ஒரு விடயமல்ல. இருந்தாலும் இச்சந்தர்ப்பங்களில் வைத்திய உதவிகளை போன்றே குடும்பத்தினரின் உதவியும் குறித்த நபருக்கு தேவைப்படக்கூடிய அத்தியாவசிய விடயமாக காணப்படும். இவ்விடயங்கள் இரண்டும் சரியான முறையில் கிடைக்கப்பெறும் போது குறித்த நபர் போதைப்பொருள் பாவனையை விட்டு மீளக் கூடியதாக இருக்கும். பெரும்பாலும் போதைப்பொருள் பயன்பாட்டினை நிறுத்த முயற்சிப்பவர்கள் மீண்டும் போதைப் பாவனையின் பக்கம் செல்வதற்கான பிரதான காரணிகளுள் ஒன்றாக கருதப்படுவது  சரியான உதவிகள் கிடைக்காமையே என்ற இரு வழிகளின் மூலம் மட்டுமே சாத்தியம்.    இதில் போதைப்பொருளுக்கான கேள்வியைக் குறைத்தல் அல்லது இல்லாது ஒழித்தல் என்பது நூறு வீதம் போதையற்ற சமூகத்தை உருவாக்குவதற்கான  மிகச் சிறந்த முறையாகும்.  

மேலும் இதற்கான உளவியல் ரீதியான அடித்தளம் ஆரம்பத்திலேயே அமைக்கப்பட வேண்டும்.   கருத்தரித்த தாய் ஒருவர் தொலைக்காட்சிகளில் காட்டப்படும் போதைப் பொருள் பயன்படுத்தக்கூடிய காட்சிகளை பார்த்து ரசிக்கும் பொழுது கருவிலே இருக்கக் கூடிய குழந்தையும் அதே விடயத்தினை கற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுகின்றது.

ஆகவே அடுத்த கட்டமாக குழந்தைக்கு இரண்டு வருடங்கள் புூரணமாக தாய்ப்பால் ஊட்டுவது, அக்குழந்தை எதிர்காலத்தில் போதைப்பொருள் பாவனையை விட்டு தடுக்கக் கூடிய விடயமாக இருக்கும். அதே போன்று குழந்தைகளிடத்தில் தோல்வியை தாங்கக் கூடிய மனப்பாங்கை வளர்த்தல், பிழையானவற்றிற்கு எவ்விதப் பயமும் இன்றி இல்லை என்று சொல்லக் கூடிய தைரியத்தை வழங்கல் போன்றவற்றை பெற்றோர்களே வழிகாட்டிகளாக இருந்து வழிப்படுத்த வேண்டும்.

மண்டூர் குறூப் நிருபர்    

Comments