மலையக மக்களுக்கு இன்றும் சுதந்திரம் கிட்டியதாக இல்லை; பெயரளவு சுதந்திரத்துக்கு யார் காரணம் ? | தினகரன் வாரமஞ்சரி

மலையக மக்களுக்கு இன்றும் சுதந்திரம் கிட்டியதாக இல்லை; பெயரளவு சுதந்திரத்துக்கு யார் காரணம் ?

சில காலத்துக்கு முன்பு சர்வதேச ஊடகமான ரொய்ட்டர் பெருந்தோட்டத் தொழிலாளர்களது சமகால நிலைமை பற்றி ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டிருந்தது. இலங்கை வந்து மலையகப் பகுதிகளுக்கு நேரடி விஜயம் மேற்கொண்டு தோட்ட மக்களின் வாழ்வியல் சம்பந்தமான தகவல்களை ஆய்வுமூலம் திரட்டி யதார்த்த நிலையை வெளிக்கொணர வழிவகுத்தவர் லிசால்புளர் என்னும் ஆய்வாளர்.

அவரது ஆய்வின் பெறுபேறாக கண்டறியப்பட்ட உண்மை இன்னும் இம்மக்கள் அடிமை சமூகமாகவே வாழ்கிறார்கள் என்பதுதான். கூடவே வாழ்ந்தும் இங்குள்ள யாருமே கண்டுகொள்ள துணியாத ஒரு சங்கதியை வெளிநாட்டு ஆய்வாளர் ஒருவர் வெளிப்படுத்தி இருந்தார். அப்போதும் கூட இங்கு எவருக்குமே அது உறைக்கவில்லை. உண்மையை மறைத்து தோட்டத் தொழிலாளாின் வாழ்வியலில் மாற்றம் நிகழ்ந்து வருவது போல ஒரு பொய்த் தோற்றத்தை உருவகப்படுத்திக் கொண்டிருந்தார்கள் மலையக அரசியல் தலைவர்கள்.

சர்வதேச சமூகத்தை கம்பனி தரப்பு ஏமாற்றி தமது உற்பத்தியை சந்தைப் படுத்துவதிலேயே முனைப்பாக இருக்கின்றது. ஆங்கிலேய கம்பனிகள் பெருந்தோட்டங்களை நிர்வகித்த போதும் கூட இவ்வாறான ஏய்ப்பு நடவடிக்கைகள் இடம்பெறவே செய்தன. இலங்கை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மனிதாபிமான ரீதியிலும் சர்வதேச தொழில் நியதிகளுக்கு உட்பட்ட வகையிலும் நடத்தப்படுவதாக காட்டிக்கொள்ள வேண்டி அவ்வப்போது சட்டங்களை இயற்றுவதில் மட்டமே ஆங்கிலேயர் ஆட்சி கவனம் செலுத்தி வந்தது. ஆனால் உண்மையிலேயே தோட்டத் தொழிலாளர்கள் அடிமைகளாகவே நடாத்தப்பட்டனர்.

இலங்கைத் தேயிலைக்கு சர்வதேச ரீதியில் நிலைபேறான ஒரு சந்தை வாய்ப்பை ஏற்படுத்த சர்வதேச சான்றுகளைப் பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. இதனால் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி வர்த்தகத்தில் ஈடுபடும் தேயிலை துறைசார் நிறுவனங்கள் சர்வதேச தர நிர்ணய சான்றுகளைப் பெற முயல்வது இயல்பே. ஆனால் இதற்காக பொய்யானதும் தவறானதுமான தகவல்களை தருவதன் மூலம் இதனைப் பெற முயல்வதுதான் அபத்தம். தோட்டத் தொழிலாளர்கள் நல்லமுறையில் நடத்தப்படுவதாக கூறப்படுவது அப்பட்டமான பொய் என்பதே ஆய்வாளர் லிசால் புளர் சுட்டிக்காட்டியுள்ள உண்மை.

இவ்வாறான ஏமாற்றுதல்கள் மூலம் பெருந்தோட்டச் சமூகம் அடிமை சாசனத்துக்கு ஆட்பட்டவர்களாகவே காணப்படுவதை மறைக்கவே முயற்சிகள் இடம்பெற்று வந்துள்ளன. பொய்யான தகவல்களும் போலியான சான்றுகளும் ஆங்கிலேயர் காலத்திலும் சர்வதேசத்தை ஏமாற்றின. நாடு சுதந்திரம் அடைந்த பின்னரும் பெருந்தோட்டங்கள் யாவும் அரசுடைமையாக்கப்பட்ட நிலையிலும் கூட இன்றும் அதே போக்குத்தான் நீடிக்கின்றது.

தேயிலை ஏற்றுமதியில் தேய்வு ஏற்பட்டு விடக்கூடாது என்பதிலேயே துறைசார் நிறுவனங்களும் ஆட்சிக்கு வரும் அரசாங்கங்களும் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கின்றனவே தவிர, உற்பத்திக்கு உயிர் கொடுக்கும் தோட்டத் தொழிலாளர்களது நலன் பற்றி கவலைப்படுவதே இல்லை. வாக்கு வங்கி சரிந்து போய்விடக்கூடாது என்பற்காக காலம் காலமாக மலையக அரசியல் தலைமைகள் அவிழ்த்துவிடும் புளுகு மூட்டைகளை சுமப்பதிலேயே கனவு சுகம் கண்டு பழகிப் போயிருக்கிறார்கள்.

அடிமை விலங்கு அறுத்தெறியப்படுவதிலேயே சுதந்திரம் நிரந்தரமாக முடிகின்றது. நாடு சுதந்திரம் அடைந்து 74அகவை அண்மையில் கொண்டாடப்பட்டது. சுதந்திர நாட்டு அடிமைகளாக ஒரு சமூகம் வாழ்ந்து கொண்டிருப்பதை முழு நாடுமே மறந்து போய்விடுகின்றது. ஆளும் கட்சியில் இருக்கும்போது ஒரு கண்ணோட்டமும் எதிரணியில் இருக்கும்போது ஒரு கருத்தும் கொண்டிருப்பதே மலையகத் தலைமைகளின் பழக்கமாகியுள்ளது.

ஆனால் அந்த நடைமுறையை ஒரு இளந்தலைவர் மாற்றிக் காட்டியுள்ளார். அவர்தான் இராஜாங்க அமைச்சரும் இ.தொ.காவின் பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான். நுவரெலியாவில் இடம்பெற்ற சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டு அவர் மனந்திறந்து சில கருத்துக்களை சொன்னார். இதில் நுவரெலியா மாவட்டச் செயலாளரும் பங்கேற்றிருந்தார். இங்கு பேசிய ஜீவன் தொண்டமான் நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்து 74 வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால் மலையக மக்களுக்கு இன்னும் சுதந்திரம் கிடைக்கவில்லை என்னும் உண்மையைப் போட்டு உடைத்துள்ளார். ஆட்சியில் பங்காளிக் கட்சியாக இருந்துகொண்டு இப்படி உண்மையை உள்ளபடியே உரைத்த அவரது துணிவைப் பாராட்டத்தான் வேண்டும். அவரது தந்தை அமரர் ஆறுமுகன் தொண்டமானும் இவ்வாறான ஆளுமை கொண்டவர்தான்.

இப்போது ஒரு கேள்வி எழுகிறது. சரி.. பெருந்தோட்ட மக்கள் சுதந்திர நாட்டு அடிமைகளாக வாழ்வதற்கு யார் காரணம்? மக்களா? மாறிமாறி ஆட்சிக்கு வரும் அரசாங்கங்களா? தொழிற்சங்கவாதிகளா? மலையக அரசியல் தலைமைகளா? இதையும் ஜீவன் சொல்லியிருந்தால் இன்னுமொரு சபாஷ் போட்டிருக்கலாமே!

1948ஆம் ஆண்டு பெருந்தோட்ட மக்களின் வாக்குரிமையும் பிரஜாவுரிமையும் அன்றைய ஆட்சியாளரால் பறிக்கப்பட்டு ஏதிலிகளாக்கப்பட்டார்கள். முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவின் ஆட்சிக் காலத்தில் அமரர் செளமியமூர்த்தி தொண்டமானின் சாணக்கியத்தால் வாக்களிக்கும் உரிமை மீண்டும் கிடைத்தது.

படிப்படியாக பிரஜாவுரிமையும் வந்து சேர்ந்தது. மேலோட்டமாக தேசிய ரீதியிலான சமூக அந்தஸ்து பெற்ற இதர இனங்களோடு சமதையான ஒரு நிலைமை கிடைத்திருப்பதான தோற்றப்பாடே நிலவியது. ஆனால் வாக்குரிமை பயன்படுத்தப்படும் பாக்கியம் கிடைத்தாலும் அதனால் பயனடைந்து விடாதபடி பக்குவமாக தோட்டக் கட்டமைப்பு தடைபோட்டு வைத்தது. இதனால் வாக்குரிமையின் பலாபலன்கள் எட்டப்படாமலேயே போயின.

கடந்தகால அரசியல் பிரதிநிதித்துவங்கள் அர்த்தமுள்ளவையாக அமையாமல் போனதும் பெருங்குறையே. ஆட்சிக்கு வரும் அரசாங்கங்களுக்கு முண்டு கொடுப்பதிலேயே அந்தப் பிரதிநிதித்துவங்களின் முழுக் கவனமும் இருந்தது. இ.தொ.கா இன்று 82ஆவது அகவையைக் கண்டுள்ளது. நாடு சுதந்திரமடைந்து 74 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இ.தொ.காவே பெருந்தோட்ட மக்களின் தலைவிதியை நிர்ணயிக்கும் சக்தியாக விளங்கி வருகிறது. தொழிற்சங்க ரீதியில் பல சாதனைகளைப் புரிந்த அக்கட்சி, அரசியல் ரீதியில் உரிய பரிமாணத்தை ஏற்படுத்த தவறியுள்ளன என்பதை உணர்த்தும் வகையிலேயே ஜீவனின் கருத்தை நாம் உள்வாங்கிக் கொள்ள முடியும்.

ஏனெனில், இந்திய வம்சாவளி மக்களுக்கான காணி உரிமை என்பதையும் தான்டி அவர்களுக்கான உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதற்்கான வேலைத் திட்டங்களை செய்து வருவதாக அண்மையில் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் பணிமனையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜீவன் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது. முக்கியமாக ஆட்சிக்கு வரும் அரசாங்கங்களின் வேலைத்திட்டங்கள் பலவும் கிராமப்புறங்களை வந்தடையும் அளவிற்கு தோட்டப்புறங்களைச் சென்றடைவது இல்லை.

பெருந்தோட்டக் கட்டமைப்பு இலகுவில் விலக்கிவிட முடியாதபடி பல சுருக்குகளை தன்னகத்தே கொண்டுள்ளது. இதன் பிணைப்புகளை உடைத்துக் கொண்டு வெளியே வருவது சவாலுக்குரிய காரியம். இப்படி நிகழும் பட்சத்தில் அதன் மூலம் ஏற்படப்போகும் பின் விளைவுகள் அரசியல் ரீதியில் பல தாக்கங்களுக்கு வழிவகுக்கலாம். எனவே தான் இதனை இனவாத சக்திகள் இம்மியும் விரும்புவது இல்லை.

தோட்டச் சமூகம் நிலவுடைமை, வீட்டுரிமைப் பெறுவது என்பது சுதந்திர வாழ்வின் ஒர் பகுதி. இதன் பின்னணியில் பெருந்தோட்டச் சமூகம் தமது தோட்டங்களை விட்டு வெளியேறுவதை ஊக்குவிக்கும் சதித் திட்டத்துக்கு பெருந்தோட்டக் கம்பனிகள் ஒத்துழைக்கின்றதா என்னும் சந்தேகத்தையும் சிலர் எழுப்புகிறார்கள்.

இவ்வாறான சக்திகளுக்கு ஜீவனின் பதிவு ஒரு அவதானத்தை ஏற்படுத்தவே செய்யும். மனதில் பட்டத்தை சொன்னோம், மறந்தோம் என்று ஆகிவிடக்கூடாது.

சுதந்திரத்தின் சுவாசம் சுதந்தரித்துக் கொள்ளப்படாமைக்கு காரணிகள் ஆராயப்பட்டு இனம் காணப்பட வேண்டும். தளைகள் தகர்க்கப்பட வேண்டும். முண்டு கொடுக்கும் அரசியல் செல்நெறியை விட மக்களுக்கு நேர்மையாக தொண்டு செய்யும் நன்நெறி உள்வாங்கப்படுவது அவசியம். ஜீவனின் அடுத்தக்கட்ட நகர்வினை பலரும் அவதானிக்கவே செய்கிறார்கள். குறிப்பாக இளைஞர்கள்.

Comments