இவ்வாரம் ஆரம்பமாகும் இந்தியன் பிரிமீயர் லீக் | தினகரன் வாரமஞ்சரி

இவ்வாரம் ஆரம்பமாகும் இந்தியன் பிரிமீயர் லீக்

கிரிக்கெட் திருவிழாவான இந்தியன் பிரிமியர் லீக் ரி/20தொடர் இவ்வார இறுதியில் மும்மையில் ஆரம்பமாகவுள்ளது. 15வது தடவையாக நடைபெறும் இத்தொடரில் முதன் முதலாக 10அணிகள் பங்குபற்றவுள்ளன. 26ம் திகதி ஆரம்பமாகும் இத்தொடரில் எதிர்வரும் மே மாதம் 29திகதி நடைபெறும் இறுதிபோட்டி வரை மொத்தம் 65நாட்களில் மூன்று நகரங்களில் மொத்தம் 74போட்டிகள் நடைபெற ஏற்பாடாகியுள்ளன. கடந்த ஐ.பி.எல் தொடர்களைப் போலல்லாமல் இம்முறை 10அணிகளையும் 5அணிகள் வீதம் இரு குழுக்களாக பிரித்து போட்டிகளில் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இப்பத்து அணிகளையும் அவ்வணிகள் ஏற்கனவே நடைபெற்ற தொடர்களின் போது கிண்ணம் வென்ற எண்ணிக்கையின் அடிப்படையிலும், இறுதிப் போட்டிக்குத் தெரிவான எண்ணிக்கையின் அடிப்படையிலும் அணிகள் இரு குழுவாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அந்தடிப்படையில் 5முறை கிண்ணம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு குழுவிலும் 4முறை கிண்ணம் வென்ற சென்னை சுப்பர் கிங்ஸ் அணி ஒரு குழுவிலும் இடம்பெற்றுள்ளன.

இதில் மொத்தம் 70லீக் போட்டிகள் நடைபெறவுள்ளதுடன் மும்​பையிலுள்ள வென்கடே, பிராபோர்ன், ஏ. எம். சி ஆகிய மூன்று மைதானங்களில் 55லீக் சுற்றுப் போட்டிகளும் மீதமுள்ள லீக் சுற்று ஆட்டங்கள் பூனேயிலுள்ள டீ. வை. பட்டேல் மைதானத்திலும் நடைபெறவுள்ளன. இறுதிச் சுற்றான பிளே ஓப் சுற்று, இறுதிப் போட்டி மே மாதம் 24முதல் 29ம் திகதி வரை அஹமதாபாத்திலுள்ள நரேந்திரமோடி மைதானத்தில் நடைபெற ஏற்பாடாகியுள்ளன. மகாராஷ்டிர மாநில அரசின் நிபந்தனையின் அடிப்படையில் மைதானத்தில் பார்வையாளர்களுக்கு அனுமதி 25வீதமாக அல்லது 50வீதமாக என்று தீர்மானிக்கப்படும் எனவும் இந்திய கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இதுவரை நடைபெற்ற 14ஐ. பி. எல். தொடர்களில் மும்மை இந்தியன் 5முறையும், சென்னை சுப்பர் கிங்ஸ் 4முறையும், கொல்கொத்தா நைட்ரைடர்ஸ் 2முறையும், ராஜஸ்தான் ரோயல், டெகன் சார்ஜர்ஸ், சன்ரைசஸ் ஹைதராபாத் அணிகள் தலா ஒரு முறையும் கிண்ணங்களைக் கைப்பற்றியுள்ளன. பஞ்சாப் கிங்ஸ், ரோயல் செலேஞ்சர்ஸ் பெங்களூர், டெல்லி கெபிடல்ஸ் அணிகள் இதுவரை கிண்ணம் வென்றதில்லை.

குழு ஏயில் 1. மும்பை இந்தியன்ஸ், 2. கொல்கொத்தா நைட் ரைடர்ஸ், 3. ராஜஸ்தான் ரோயல், 4. டில்லி கெபிடல்ஸ், 5. லக்னோ சுபர் ஜெயன்ட் அணிகளும்,

குழு பியில் 1. சென்னை சுப்பர் கிங்ஸ், 2. சன்ரைசஸ் ஹைதராபாத், 3. ரோயல் செலெஞ்சர்ஸ் பெங்களூர், 4. பஞ்சாப் கிங்ஸ், 5. குஜராத் டைடன்ஸ்

எதிர்வரும் 26ம் திகதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு சம்பியன் சி.எஸ்.கே., -கே.கே.ஆர் அணியை எதிர்த்தாடுகிறது.

இம்முறை ஐ.பி.எல். தொடரில் பல சர்வதேச வீரர்கள் ஆரம்ப போட்டிகளில் பங்கு கொள்வதில் சிக்கலேற்பட்டுள்ளது. தென்னாபிரிக்கா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, மேற்கிந்திய அணிகளுக்கிடையில் இக்காலப் பகுதியில் போட்டித் தொடர்கள் நடைபெறுவதால் அவ்வணிகளின் முக்கியமான வீரர்கள் பங்குகொள்ள முடியாதுள்ளது. மேலும் மிக நீண்ட காலமாக கொரோனா கட்டுப்பாட்டு வலயத்துக்குள் இருப்பதால் ஐ. பி. எல். தொடரிலும் இரண்டு மாதகாலம் மீண்டும் அவ்வாறு இருக்க முடியாது என்ற காரணத்தினால் பல சர்வதேச வீரர்கள் விலகியுள்ளனர்.

இம்முறை நடைபெற்ற மெகா ஏலத்தில் துடுப்பாட்ட வீரர்களை விட தீபக் சஹார், அவேஸ்கான், சர்குர் தாக்கூர், ஹர்சால் பட்டேல், பிரசித் கிருஷ்ணா, ரபாடா, பெர்குசன், லிவிங்டன், ஹசரங்க போன்ற பந்து வீச்சாளர்களே அதிக விலைக்கு அணிகளால் வாங்கப்பட்டுள்ளனர்.

இந்த மெகா ஏலத்தில் சிரேஷ்ட வீரர் சுரேஸ் ரெய்னாவை எந்த அணியும் எடுக்காதது முக்கிய நிகழ்வாக அமைந்தது. மேலும் 2008ம் ஆண்டு ஐ. பி. எல். தொடர் ஆரம்பமானது முதல் நடைபெற்ற 14சீசன்களிலும் ஏ. பி. டி. டிவிலியர்ஸ், கிறிஸ் கெயில், ஷோன் மார்ஷ், டுவைன் பிராவோ ஆகிய சர்வதேச வீரர்கள் தொடர்ந்து விளையாடி வந்துள்ளனர்.

இவர்களில் மேற்கிந்தியத்தீவுகள் வீரர் டுவைன் பிராவோவைத் தவிர மற்றைய மூவரும் இவ்வருட ஐ. பி. எல். இல் விளையாடவில்லை. இம்முறை நடைபெற்ற மெகா ஏலப்பட்டியலிலும் இவர்களது பெயர்கள் இடம்பெறவில்லை.

இதனால் தொடர்ந்து 15ஐ. பி. எல். போட்டிகளிலும் இடம்பெற்ற ஒரே வெளிநாட்டு வீரர் என்ற பெருமையை மேற்கிந்தியத் தீவுகள் அணியைச் சேர்ந்த பிராவோ பெற்றுள்ளார். மும்பை, குஜராத், சென்னை ஆகிய அணிகளுக்கு விளையாடியுள்ள பிராவோ இம்முறை 2கோடி ரூபா அடிப்படை விலைக்கு ஏலத்துக்கு தெரிவாகியிருந்தார். 3.50கோடிக்கு இவரை மீண்டும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் வாங்கியுள்ளது.

இலங்கை அணியின் சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்க ஏலத்தில் 1கோடி என்ற சுமாரான அடிப்படை விலையில் இருந்து 10.75கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார். பெங்களூர், ஹைதராபாத் ஆகிய அணிகள் விட்டுக்கொடுக்காமல் இவரை ஏலம் கேட்டன. இறுதியில் பெங்களூர் அணி மேற்படி தொகைக்கு அவரை வாங்கியது. இது ஐ. பி. எல். வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன இலங்கை வீரர் என்ற பெருமையையும் 24வயதான வனிந்து ஹசரங்க பெற்றுள்ளார். மேலும் இலங்கையிலிருந்து ஐந்து இளம் வீரர்கள் இம்முறை ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளனர்.

வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீரவை 2கோடிக்கு லக்னோ அணியும், மகேஷ் தீக்ஷனவை 70இலட்சத்துக்கு சென்னை அணியும், சாமிக்க கருணாரத்னவை 50இலட்சத்துக்கு கொல்கொத்தா அணியும், பானுக்க ராஜபக்ஷவை 50இலட்சதுக்கு பஞ்சாப் அணியும் ஏலத்தில் எடுத்துள்ளன. அஞ்சலோ மெத்தியூஸ், குசல் மெண்டிஸ், திக்வெல்ல போன்ற சிரேஷ்ட வீரர்கள் உட்பட 32வீரர்கள் இந்த ஏலத்துக்கு இலங்கை சார்பாக விண்ணப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆரம்ப முதல் ஐ.பி.எல். தொடரில் பங்கேற்று மும்மை இந்தியன்ஸ் அணிக்காக தனது திறமையான பந்து வீச்சால் அசத்திய இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க இம்முறை ராஜஸ்தான் ரோயல் அணியின் வேகப்பந்து வீச்சுப் பயிற்சியாளராக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

இதுவரை நடைபெற்ற ஐ.பி.எல். தொடர்களில் கிண்ணம் வென்ற அணிகள்:- மும்பை இந்தியன்ஸ்- 5, சென்னை சூப்பர் கிங்ஸ்- 4, கொல்கொத்தா நைட் ரைடர்ஸ்- 2, ராஜஸ்தான் ரோயல் 1, டெகன் சார்ஜஸ்- 1, சன்ரைசஸ் ஹைதராபாத்- 1

ஒரு அணி பெற்ற கூடிய ஓட்டம்: 273ஓட்டங்கள்

பெங்களூர் அணி 2013எதிர் புனே வாரியஸ்

ஒரு அணி பெற்ற குறைந்த ஓட்டம்:

49ஓட்டங்கள் பெங்களூர் அணி 2019எதிர் கேகேஆர்.

தனி நபர் கூடிய ஓட்டம்: 175 (66) கிறிஸ்கெயில்

பெங்களூர் அணி 2013எதிர் புனே வாரியஸ்

அதிக ஆறு கூட்டங்கள்: கிறிஸ்கெயில்

135போட்டிகள் 351

அதிக சதம்: கிறிஸ்கெயில்: -6

அதிக அரை சதம்: டேவிட் வோனர் - 52

சிறந்த பந்துவீச்சு: அல்சாரி ஜோசப் (மும்பை) 12/6

2019ம் ஆண்டு ஹைதராபாத் அணிக்கு எதிராக.

கூடிய மொத்த விக்கெட்டுகள்: லசித் மலிங்க (மும்பை)

125போட்டிகளில் 170விக்கெட்.

ஒரு சீசனில் கூடிய விக்கெட்: டெரன் பிரோவோ

(சென்னை) 2013ம் ஆண்டு 18போட்டிகள்

32விக்கெட்டுகள்.

ஒரு சீசனில் கூடிய ஓட்டங்கள்: விராட் கோஹ்லி (பெங்களூர்) 2016ம் ஆண்டு 17போட்டிகள் 973ஓட்டங்கள்.

விரைவான சதம்: கிறிஸ் கெயில் (பெங்களூர்)

30பந்துகள்

விரைவான அரைச் சதம்: கே. எல். ராஹுல் (பஞ்சாப்)

14பந்துகள்.

எம்.எஸ்.எம்.ஹில்மி

Comments