புவிதரனின் பாய்ச்சலும் இலங்கையின் எதிர்காலமும் | தினகரன் வாரமஞ்சரி

புவிதரனின் பாய்ச்சலும் இலங்கையின் எதிர்காலமும்

கொலுன்றிப் பாய்தல் பார்க்க அதிக சாகசமாக இருக்கலாம், ஆனால் ஆபத்தைத் தாண்டி அதற்கு ஒரு விலை இருக்கிறது. சுவரேறி குதிக்க மூங்கில் கம்பை பயன்படுத்த முடியும், விளையாட்டுக்கு சரிப்பட்டுவராது.

கோலூன்றிப் பாய்வதற்கு பயன்படுத்தும் கோல் ஒன்றின் விலை ஒரு இலட்சம் தொடக்கம் ஐந்து இலட்சம் வரை சந்தையில் போகும். எனவே திறமை இருக்கும் வீரராக இருந்தாலும் வறுமையில் இருந்தால் சாதிப்பது கஷ்டம் தான்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அருந்தவராச புவிதரனிடம் இருக்கும் கோலினால் 4.90மீற்றர் உயரம் வரை தாவ முடியும். ஆனால் அவரது திறமைக்கு அது போதாது. புதிதாக கோலொன்றை வாங்கும் வசதியும் அவரிடம் இல்லை.

நல்லவேளை இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த சக வீரர் சன்ன பெர்னாண்டோவின் கோல் இருந்தது. அதனைக் கொண்டு பயிற்சி செய்தார். அதனைக் கொண்டு தான் போட்டியிலும் பங்கேற்றார்.

தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டு அரங்கில் கடந்த வாரம் நடைபெற்ற தேசிய மெய்வல்லுனர் தகுதிகாண் போட்டியில் தேசிய சாதனையை முறியடித்த ஒரே வீரராக புவிதரன் முழு இலங்கையிலும் பேசப்படுவதற்கு அவர் எடுத்த முயற்சியை சாதாரணமாகக் கருதிவிட முடியாது.

இந்தப் போட்டியின் முதல் முயற்சியில் 4.70மீற்றர் உயரம் பாய்ந்த புவிதரன் அடுத்தடுத்து 4.80, 4.90, 5.00மீற்றர் வரை தனது முதல் முயற்சியிலேயே அநாயாசமாகத் தாண்டிவிட்டார்.

எனவே தேசிய சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு அதிகரித்தது. கோலூன்றிப் பாய்தலில் தேசிய சாதனை ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் நிறுவப்பட்டது. அதனைச் செய்தவர் இலங்கை விமானப்படை வீரர் இஷார சந்தருவன். அவர் 2017ஆம் ஆண்டு 5.11மீற்றர் உயர் பாய்ந்ததே இலங்கை சாதனையாக இருந்தது.

இந்த சாதனையை முறியடிக்கும் முயற்சியில் இறங்கிய புவிதரன் 5.12உயரத்தை தெரிவு செய்தார். அதனை முதல் முயற்சியிலேயே இலகுவாகத் தாண்டவும் செய்தார். 

தேசிய சாதனையை முறியடித்த அவர் அத்தோடு நிற்கவில்லை. தனக்கு கிடைத்த அடுத்த வாய்ப்பில் 5.15மீற்றர் உயரத்தை தாவி அந்த சாதனையை புதுப்பித்துக் கொண்டார். எனவே, அந்தப் போட்டியில் முதலிடத்தை பெரிதாகப் போட்டி இன்றியே பெற்றுக்கொண்டார்.

22வயதான புவிதரன் 5.15மீற்றர் உயரத்தை வந்த உடன் தாவவில்லை அதற்கு எடுத்துக்கொண்ட ஆண்டுகள் பல. தேசிய சாதனையை முறியடிக்கும் முயற்சி அவர் கையால் இதற்கு முன்னர் மூன்று தடவைகள் நழுவிப்போனது.

2016ஆம் ஆண்டு கண்டி போகம்பறை விளையாட்டு அரங்கில் நடைபெற்ற 32ஆவது அகில இலங்கை பாடசாலை விளையாட்டு அரங்கில் தங்கப்பதக்கம் வென்ற புவிதரன் தாவிய உயரம் 3.80மீற்றர்.  

2017செப்டெம்பரில் தியகமவில் நடந்த விளையாட்டுப் போட்டியில் அவரது உயரம் 4.40மீற்றராக அதிகரித்ததோடு 2018ஆகும்போது அது 4.70ஆக உயர்ந்தது.

இப்படி அவரது உயரும் அதிகரித்துக்கொண்டே போகும்போது அவர் மீதான அவதானமும் அதிகரித்தது. யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் பாடசாலை கல்வியை நிறைவு செய்த பின் விளையாட்டுக்கு ஒத்துழைப்பு அளிக்கும் இலங்கை இராணுவ விளையாட்டுக் கழகத்தில் இணைந்தார்.

அண்மைக் காலத்தை பார்த்தால் பல வெற்றிகளைக் குவித்து வருகிறார். கடந்த ஆண்டு ஒக்டோபரில் சுகததாச விளையாட்டு அரங்கில் நடைபெற்ற 99ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் 5.00மீற்றர் உயரத்தைப் பாய்ந்து தேசிய சம்பியனும் தேசிய சாதனைக்கு சொந்தக்காரருமான இஷார சந்தருவனை வீழ்த்தினார்.

தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்ற மெய்வல்லுனர் போட்டியில் புவிதரனின் உயரம் மேலும் அதிகரித்தது. அப்போது 5.10மீற்றர் உயரத்தைத் தாவிய அவர் இலங்கை சாதனையை முறியடிப்பது ஒரு சென்டி மீற்றரால் தவறிப்போனது. ஆனால் இஷார சந்தருவனை வீழ்த்தி முதலிடம் பெறுவது அவருக்கு இலகுவானது.

இலங்கை சாதனையை முறியடிக்கும் அவரது முயற்சி தொடர்ந்தது. கடந்த ஜூன் மாதம் கொழும்பு சுகததாச அரங்கில் நடைபெற்ற கனிஷ்ட தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் 5.00மீற்றர் உயரத்தை தாவிய புவிதரனுக்கு மீண்டும் ஒருமுறை தேசிய சாதனையை முறியடிக்க முடியாமல் போனது. 

எப்படியோ அவரது மூன்றாவது முயற்சியில் தேசிய சாதனையை முறியடித்திருக்கிறார். புவிதரனின் தேசிய சாதனை என்பது தெற்காசிய சாதனையையும் விஞ்சுகிறது. 2016இல் குவஹாத்தியில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் சந்தருவன் தாவிய 4.90மீற்றர் உயரமே இன்றும் சாதனையாக இருக்கிறது.

என்றாலும் அவர் ஆசிய மற்றும் உலக மட்டத்திற்கு செல்ல இன்னும் தூரம் போக வேண்டும். கோலுன்றிப் பாய்தலின் உலக சாதனை உயரம் 6.21மீற்றர். சுவீடன் நாட்டின் ஆர்மன் டுப்லான்டிஸ் படைத்தது.

ஆசிய சாதனைக்குச் சொந்தக்காரர் பிலிப்பைன்ஸின் எர்னஸ்ட் ஜோன் ஒபினா. அவர் பாய்ந்த உயரம் 5.94மீற்றர்.

இன்னும் இளம் வீரராக இருக்கும் புவிதரனுக்கு உற்சாகமும் ஆதரவும் வழங்கினால் அவர் இன்னும் உச்சம் போகும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

பொதுவாக கோலூன்றி பாய்தலில் ஒப்பீட்டளவில் வடக்கு பக்கம் அதிக திறமைகள் இருப்பது தெரிகிறது. பாடசாலை மட்ட விளையாட்டுப் போட்டிகளில் வட மாகாண மாணவர்கள் இதில் பதக்கம் வென்று வருகிறார்கள்.

அண்மையில் நடைபெற்ற சேர். ஜோன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் 16வயதின் கீழ் பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் சாவகச்சேரி இந்து கல்லூரியைச் சேர்ந்த பரந்தாமன் அபிலாஷினி 3.00மீற்றர் உயரம் பாய்ந்து புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வென்றிருந்தார்.

கடந்த வாரம் தியகமவுக்கு வந்த அவர் 3.30மீற்றர் உயரம் தாவி மூன்றாவது இடத்தை பிடித்தார். 16வயதான அவரின் சிறந்த திறமை இதுதான்.

கடந்த ஜூன் மாதம் கொழும்பில் நடந்த தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்சிப் தொடரில் 18வயதின் கீழ் பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் புதிய கனிஷ்ட தேசிய சாதனையுடன் அவர் தங்கப்பதக்கம் வென்றிருந்தார்.  

தொடர்ந்து தேசிய மட்டப் போட்டிகளில் வெற்றிகளைக் குவித்துவரும் அபிலாஷினி எதிர்காலத்தில் இலங்கைக்கு நல்லதொரு முதலீடாக இருக்கும்.

என்றாலும் தியகமவில் நடந்த தகுதிகாண் மெய்வல்லுனர் போட்டிகளில் புவிதரனைத் தவிர்த்து பெரிதாக சாதனைகளை பார்க்க முடியவில்லை.

அடுத்த ஆண்டு செப்டெம்பர் மற்றும் ஒக்டோபரில் சீனாவில் நடைபெறவிருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டி மற்றும் ஜூலை மாதத்தில் தாய்லாந்தில் நடைபெறவிருக்கும் ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்சிப் போட்டிகள் முக்கியமானவை. இலங்கைக்கு ஒன்றிரண்டு பதக்கங்களை வெல்வதற்கு வாய்ப்பு உள்ள போட்டிகளாக இந்த இரண்டு போட்டிகளையும் காண முடியும்.

இந்தப் போட்டிகளுக்கான வீரர்களை தேர்வு செய்வதற்காகவே இந்தத் தகுதிகாண் மெய்வல்லுனர் போட்டி இடம்பெற்றது. வெற்றிகள், தோல்விகளை தவிர புதிய சாதனைகள் படைத்த எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணி விடலாம்.

ஒரே ஒரு தேசிய சாதனை மாத்திரம் முறியடிக்கப்பட்ட இந்தப் போட்டியில் புவிதரன் தவிர, மேலும் இரு போட்டிகளில் தான் குறிப்பிடத்தக்க சாதனைகள் முறியடிக்கப்பட்டிருந்தன.

ஆண்களுக்கான 400மீற்றர் ஓட்டப்போட்டியில் காலிங்க குமார 45.70விநாடிகளில் போட்டியை முடிந்து தனது சிறந்த காலத்தை பதிவு செய்ததோடு பெண்களுக்கான ஈட்டி எறிதலில் 59.40மீற்றர் தூரம் எறிந்து சிறந்த சொந்த சாதனை பதிவு செய்யப்பட்டது.

எனினும் ஆண்களுக்கான 10ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் தேசிய சம்பியனான மலையகத்தைச் சேர்ந்த குமார் சண்முகேஸ்வரன் இரண்டாம் இடத்திற்கு பின்தங்கியதோடு, 200மீற்றர் ஓட்டப்போட்டியில் சம்பியனான மொஹமட் சபான் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டிருந்தார்.

எனினும் பெண்களுக்கான 1500மீற்றர் ஓட்டப்போட்டியில் தேசிய சம்பியன் கயன்திகா அபேரத்ன மற்றும் பெண்களுக்கான 100மீற்றர் ஓட்டப்போட்டியில் லக்ஷிகா சுகன்தி தனது வழக்கமான திறமையை வெளிப்படுத்தினார்.

இதில் சம்பியன்களை தோற்கடித்து புதிய வீர, வீராங்கனைகள் வெற்றிகளைக் குவித்தபோதும் அது புதிய சாதனைகளாக மாறவில்லை. அதாவது சம்பியன் வீரர்களின் பின்னடைவே புதிய வீரர்களுக்கு வெற்றியை தந்திருக்கிறது. மற்றபடி புதிய வீரர்கள் புதுச் சாதனையை படைத்து சம்பியன்களை முறியடிக்கவில்லை என்பது ஆரோக்கியமான ஒன்றல்ல.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆண்களுக்கான 100மீற்றர் ஓட்டப்போட்டியில் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த வை.சி.எம் யோத சிங்க வெற்றி பெற்றார். அவர் 10.53விநாடிகளில் போட்டியை முடித்திருந்தார். இந்தக் காலம் சர்வதேச மட்டத்திற்கு போதுமானதாக இல்லை.

என்றாலும் தற்போது சர்வதேச அளவில் பயிற்சி மற்றும் போட்டிகளில் பங்கேற்று வரும் யுபுன் அபேகோன் நம்பிக்கை தருபவராக இருந்து வருகிறார். பொதுநலவாயப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற அவர் அண்மையில் உலகத் தரவரிசையில் 20ஆவது இடத்திற்கு முன்னேறி இருந்தார்.

இந்த ஆண்டில் அவர் பங்கேற்ற கடைசி போட்டிகளில் 2தங்கப்பதக்கங்களை வென்றிருக்கிறார். கடந்த வாரம் நடந்த இத்தாலி கழக சம்பியன்சிப் போட்டியின் 100மீற்றர் ஓட்டப் போட்டியை 10.35விநாடிகளில் முடித்து தங்கம் வென்ற அவர் அஞ்சலோட்டப் போட்டியிலும் முதலிடம் பெற்றார்.

அவர் அடுத்த ஆண்டு இலங்கைக்கு பெரும் நம்பிக்கை தரும் வீரராக இருக்கிறார்.

தேசிய மெய்வல்லுநர் வீரர்களை தேர்வு செய்வதற்கான மேலும் இரு தேசிய மெய்வல்லுனர் தகுதிகாண் போட்டிகள் எதிர்வரும் பெப்ரவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெறவிருக்கின்றன. இலங்கை சர்வதேச மட்டத்தில் பதக்க எதிர்பார்ப்பை அதிகரிக்க இந்தப் போட்டிகள் முக்கியமானதாக இருக்கும். இதற்கு புவிதரன் உட்பட வீரர்கள் தமது திறமையை மேலும் அதிகரிப்பது அவசியம்.

 

Comments