அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் கானகமும் காட்டுயிர்களும் | தினகரன் வாரமஞ்சரி

அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் கானகமும் காட்டுயிர்களும்

எழுபதுகளில் இந்தியாவின் பெருமைக்குரியசின்னமாக விளங்கும் வங்காள வரிப்புலிகளின்எண்ணிக்கை மிகவும் குறைவடை ந்திருப்பதாவும் இப்படியே விட்டால் அவை மறைந்து விடலாம் எனவும் சூழலியலாளர்கள் அரசுக்குஅறிவித்தபோது அன்றைய பிரதமர் இந்திராகாந்தி அதில்தனிக்கவனம் எடுத்தார். அவர் இயல்பிலேயே ஒரு இயற்கை ஆர்வலர். எனவே புலிகளைக் காத்து எண்ணிக்கையைஅதிகரிக்கும் திட்டமொன்றுதயாரிக்கப்பட்டது. Project tiger என அதற்கு பெயர் சூட்டபட்டது. பாரதப் பிரதமரின் நேரடி கண்காணிப்பில் திட்டம் செயல்படத் தொடங்கியது.

58வருடங்களின் பின்னர் இன்று இந்தியாவில் தேவைக்கு அதிகமாகவே புலிகள் காடுகளில் உலவித் திரிகின்றன. 1400ஆகக் காணப்பட்ட எண்ணிக்கை இன்று ஐயாயிரத்தை தாண்டியிருக்கிறது. அது மட்டுமல்ல, இப் புலிளைப் பார்ப்பதற்காக இந்தியாவெங்குமிருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் இந்தியக் காடுகளை நோக்கி வருகின்றனர். அதன் மூலம் இந்தியா கோடிக்கணக்கில் வெளிநாட்டு பணத்தை சம்பாதிக்கிறது.

காடுகளையும் மிருகங்களையும் பாதுகாப்பதால் சுற்றுச் சூழல் மேம்படும் என்பது ஒரு புறம் இருக்க, அதன் மூலம் வெளிநாட்டு செலாவணியையும் பெருமளவில் சம்பாதிக்கலாம் என்பது ஊக்கமளிக்கும் ஒரு செய்தி. எனவே அரசு மட்டுமன்றி தனியார் நிறுவனங்களும் இதில் ஈடுபடலாம். நாட்டின் பெறுநிறுவனங்கள் பல சமூக மேம்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவதைக் கண்டிருக்கிறோம். அந் நிறுவனங்கள் காடு வளர்ப்பிலும் மிருக பாதுகாப்பிலும் கட்டாயம் ஈடுபட வேண்டும். ஏனெனில் சுற்றுச் சூழல் மேம்பாட்டுக்கும் வர்த்தக செழிப்புக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உள்ளது. சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையலாம் என்பது போன்ற தொடர்பு இது.

இவ்வாறான திட்டமொன்றை இலங்கை சினமன் ஹோட்டல்கள் நிறுவனம் தற்போது ஆரம்பித்துள்ளது. சினமன் மழைக்காடுகள் அமைக்கும் திட்டம் என இதற்கு பெயரிடப்பட்டுள்ளது. இலங்கை மரங்களைக் காப்போர் சங்கம் (ருக்ரெக்ககன்னோ) என்ற அமைப்புடன் இணைந்து இத்திட்டத்தை ஜோன்கீல்ஸ் பவுண்டேஷன் இலங்கை வனத்துறையுடன் கூட்டிணைந்து செயல்படுத்துகிறது.

இரத்தினபுரி மாவட்டத்தின் சுதுவெலிபொத்த என்ற பகுதியில் சரியாகச் சொன்னால் சிங்கராஜ வனப்பகுதியில் உள்ள ஒரு சீரழிக்கப்பட்ட வனப்பகுதியை ஜோன்கீல்ஸ்சின் சினமன் கானக மறுசீரமைப்பு திட்டக் குழுவினர் தத்தெடுத்துள்ளனர். இப் பகுதியில் காணப்படும் அவசியமற்ற புதர்கள் அகற்றப்பட்டு மரக் கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. இது ஒரு ஐந்து வருடகால திட்டம். இக்காலப்பகுதியில் பல்வகையான மரகன்றுகள் நடப்பட்டு போஷிக்கப்படும். அவசியமான பசளைகள் இடப்படும். ஊக்கமற்ற கன்றுகள் களையப்பட்டு புதிய கன்றுகள் நடப்படும். ஒரு மரக்கன்று வேர் பிடித்து ஊக்கமாக வளர்வதற்கு ஐந்து வருடங்கள் பிடிக்கும். அதன் பின்னர் தானாகவே அவை வளரத் தொடங்கி விடும். அதாவது ஐந்து வருடங்களின் பின்னர் மனிதனிடமிருந்து அம் மரக்கன்றுகளை இயற்கை பொறுப்பெடுத்துக் கொள்ளும். அந்த வகையில் தான் இந்தத் திட்டத்தை ஐந்து வருட காலமாக வரையறுத்துள்ளார்கள்.

மரங்கள், பழமரங்கள் வளரத் தொடங்கியதும் அப் பகுதிக்கு பறவைகள் வரத் தொடங்கும். வெவ்வேறு திசைகளில் இருந்து வரும் பறவைகள் தமது வாயோடு கொண்டுவரும் கொட்டைகள் பல்வகையான புதிய மரங்களையும் செடிகளையும் உருவாக்கும். உண்மையில் காடுகளை உருவாக்குவது பறவைகளே. அவை மரங்களையும் நிலத்தையும் போஷிக்கின்றன. இந்த முதல் ஐந்து வருட காலத்தில் ஜோன் கீல்ஸ் குழுமத்தைச் சேர்ந்த ஊழியர்கள் சுய விருப்பின்பேரில் இவ்வனப்பகுதியில் தொண்டு அடிபடையில் சேவையாற்ற முன்வந்துள்ளார்கள். அவர்களுக்கு விசேட பயிற்சியும் வழங்கப்படுகிறது. விரும்பும் வெளியாரும் இத்திட்டத்தில் இணைந்து கானக சேவையாற்ற முடியும். இத் திட்டத்தில் ஆர்வம் கொண்ட விருந்தினர்கள் தாம் விரும்பும் மரக்கன்றுகளை விலை கொடுத்துவாங்கி இவ்வனத்தில் நடுவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த மறுசீரமைப்பு பணிகள் 2024ம் ஆண்டளவில் முடிவுக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீரழிக்கப்பட்ட வனப்பகுதியை மீளவும் கானகமாகும் இத் திட்டம் தொடர்பான விளம்பரங்கள் ஏனைய வர்த்தக மற்றும் சமூக நிறுவனங்களும் இந்தகைய காடு வளர்ப்புத் திட்டங்களை மேற்கொள்ள ஒரு ஊக்குவிப்பதாக அமையும்.

கொங்கோவிலும் ருவாண்டாவிலும் மிருகங்களுக்கு பாதுகாப்பற்ற நிலை காணப்பட்ட போது சிலர் மேற்கொண்ட விழிப்புணர்வு காரணமாக அந் நிலையில் மாற்றம் ஏற்பட்டது. ஐம்பது வருடங்களின் பின்னர் மிருகங்கள் நிறைந்த நாடாக அவை மாறின. கொங்கோ, ருவாண்டா, உகண்டா நாடுகளுக்கு வெளிநாட்டினர் மிருகங்களை அவற்றின் வாழ்விடங்களிலேயே பார்த்து ரசிப்பதற்காக படையெடுக்கின்றனர். கானக சவாரி செய்து மிருகங்களை ஒரு மணித்தியாலயம் பார்வையிடுவதற்கு 500டொலர் அறவிடப்படுகிறது. அதுவும், பட்டியலில் பெயர் பதிந்து காத்திருக்க வேண்டுமாம்!

அவுஸ்திரேலியா humpback எனப்படும் திமிலங்களை வர்த்தக ரீதியாக ஏக்கச் சக்கமாக வேட்டையாடியதில் அவை பெருமளவில் மடிந்தன. பின்னர் திமிங்கில வேட்டைக்கு 1986இல் தடை விதிக்கப்பட்டதால் அத் திமிலங்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. அத்திமிங்கிலங்களைப் பார்ப்பதற்காக ஏராளமானோர் அவுஸ்திரேலியா செல்கின்றனர்.

இலங்கையில் இந் நாட்டுக்குரிய மரங்கள், மிருகங்கள், பறவைகள், வண்டினங்கள் உள்ளன. சிலவற்றை வேறெங்கும் காணமுடியாது. யானைகள் மிகவும் சிறப்பான மிருகம், உலகின் 36உயிரியல் பன்முகத்தன்மை உயிர்ப்புடன் இயங்கும் இடங்களில் இலங்கையும் ஒன்று. இலங்கையின் தென்மேற்கு பிரதேசம் இயற்கை செழிப்புடன் காணப்படுகிறது. நாட்டின் 90சதவீதமான பிரதேசத்துக்குரிய உயிர்களும் மரங்களும் இங்கே காணப்படுகின்றன. ஈரலிப்பு, வலய காடுகளில் மரமேறும் நண்டுகள் மரத் தவளைகள் போன்ற அரிய உயிரினங்கள் காணப்படுகின்றன. இவை வாழவும், வளரவும் மற்றும் இயல்பான இனப் பெருக்கம் செய்யவும் கானகச் சூழல் அவசியம்.

சில விஷயங்களை தர்க்க ரீதியாகவோ அல்லது அவற்றின் இன்றியமையாத் தன்மைகளையோ விலாவரியாக விளக்கினாலும் பலரும் அவற்றை புரிந்துகொள்ள மாட்டார்கள். ஆனால் அந்த விஷயமங்களை பயன்படுத்துவதன் அல்லது கையாள்வதன்மூலம் வருமானம் பெற முடியும் என்று கூறப்படுமானால் அவற்றை பலரும் புரிந்து கொள்வார்கள். கானக வளர்ப்பு, பாதுகாப்பு என்பதன் அவசியம், ஒக்சிசனின் அவசியம் என்பதைப் பற்றிச் சொன்னால் அலட்சியமாக இருந்து விடுவார்கள். கானகமும் அங்கு வாழும் காட்டுயிர்களும் எமக்கு வருமானம் தரும் என்றால் பலரும் புரிந்து கொள்வார்கள்.

இலங்கையில் யானைகள் அட்டூழியம் செய்யும், வருமான மற்றும் சொத்துக்களுக்கு சேதம் இழைக்கும் மிருகம் என்றே பலரும் பார்கிறார்கள். ஒருபுறம் தெய்வீக அந்தஸ்தைக் கொண்டிருந்தாலும் மறுபக்கம் 'அக்கபட்டாஸ்' வைத்து வாயைக் கிழிக்கவும் செய்கிறார்கள். உண்மையில் யானை சுற்றுலா பயணிகளுக்கு ஒரு விருந்து. எமக்கு அந்நிய செவாணி. காடுகளை ஒழுங்காகப் பராமரிப்பதன் மூலமும் காட்டுயிர்களுக்கு போதிய பாதுகாப்பையும் சுதந்திரவாழ்க்ைகயையும் அளிப்போமானால் அதன் மூலம் பெறுமளவு சுற்றுலாப் பயணிகளையும் டொலர் வருமானத்தையும் பெறமுடியும் என்பதற்கு இந்தியாவின் புலிகள் பாதுகாப்புத் திட்டமும் கொஸ்கோ ருவாண்டா அனுபவங்களுக்கும் நமக்கு கற்றுத் தருகின்றன.

சினமன் மழைக்காடு மறுசீரமைப் புதிட்டமும் இச் சிந்தனைக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிக்கும் ஒரு திட்டமாகவே பார்க்கப்பட வேண்டும்.

அருள்

Comments