விபுலானந்தரும் யாழ்நூலும் | தினகரன் வாரமஞ்சரி

விபுலானந்தரும் யாழ்நூலும்

இனமொன்று உருவாகி நிலைத்து வாழ்வதற்கும், அந்த இனம் அழிந்து போவதற்கும், அவர்கள் பேசும் மொழியும், கலாசாரமும் காரணமாகும். இதனை அடிப்படையாக வைத்து உலகத் தமிழ் மக்களுக்காக முத்தமிழில் முழு மூச்சாக பணிபுரிந்து தமிழ் மொழி அழியாமல் இருக்க தனிமனிதனாய் சாதனை புரிந்தவர் சுவாமி விபுலாநந்த அடிகள். தமிழ் கூறும் நல்லுலகத்திற்குப் பொதுவான தமிழறிஞராக விபுலானந்தர் மாறியமைக்கு அவரது பன்முகப்படுத்தப்பட்ட பணிகள் மட்டுமன்றி அவரது மனுக்குல நேசிப்பும் காரணமாகும். அவர் முத்தமிழ் வித்தகர் மாத்திரமன்றி பல்துறைப் பேரறிஞராக ஆசிரியராக, பண்டிதராக. விஞ்ஞானப் பட்டதாரியாக, பாடசாலைகளின் முகாமையாளராக, பல்கலைக்கழகங்களின் தமிழ்த்துறைப் பேராசிரியராக, அறிஞராக, ஆராய்ச்சியாளராக மொழிபெயர்ப்பாளராக, விளங்கிய விபுலானந்தர் துறவறம் பூண்டு துறவியாக வாழாமல் சமூகத் தொண்டனாகவும் வாழ்ந்து பல சேவைகள் செய்துள்ளார். 1892மார்ச் 27ஆம் திகதி இந்து சமுத்திரத்தின் முத்தான இலங்கைத் தீவில் மீன் பாடும் தேன் நாடாம் மட்டக்களப்பிலிருந்து தென் கிழக்கே அமைந்துள்ள காரைதீவில் சின்னத்தம்பி விதானையாருக்கும், ராசகோபாலப்பிள்ளை கண்ணம்மைக்கும் புதல்வனாக மயில்வாகனன் என்ற நாமத்தோடு பிறந்தார். சிறுவயது முதல் ஒழுக்கம் , வாய்மை, நேர்மை, தெய்வ வழிபாடு , அதிசயத்தக்க ஞாபக சக்தி போன்ற குணங்களுடன் திகழ்ந்த மயில்வாகனனின் மரபுவழிக் கல்வி காரைதீவில் ஆரம்பிக்கின்றது. தந்தையாரின் வழிகாட்டலின் கீழ் அவர் கல்வி பயில ஆரம்பித்தாலும் காரைதீவு வைத்தியலிங்க தேசிகர், தென்கோவை கந்தையா பண்டிதர், தமிழ் கற்றார். கைலாயப்பிள்ளை முதலியோரிடம் பின்பு லீஸ் பாதிரியாரின் மெதடிஸ்த பாடசாலையில் ஆங்கிலக் கல்வியை கற்ற சுவாமி அவர்கள் 1904ஆம் ஆண்டு மட்டக்களப்பு மெதடிஸ்த ஆங்கிலகு கல்லூரியிலும் பின்பு 1906 - ல் புனித மைக்கேல் கல்லூரியிலும் ஆங்கிலம் பயின்றார் .

1916இல் விஞ்ஞான கல்வி கற்று விஞ்ஞான டிப்ளோமா சான்றிதழை தனதாக்கிய அதே ஆண்டில் மதுரைத் தமிழ்ச்சங்கம் நடத்திய பண்டிதர் பரீட்சையில் சித்தியடைந்ததன் மூலம் இலங்கையில் முதற் பண்டிதர் என்னும் பெருமைக்கு உரியவரானார். 1920ஆம் ஆண்டு இலண்டன் பல்கலைக்கழக விஞ்ஞான ( B.sc ) பட்டத்தையும் இவர் தனதாக்கிக்கொண்டார்.

*கல்விச் சேவைகள்*

1908இல் கேம்பிரிஜ் சீனியர் பரீட்சையில் சித்திபெற்றதை தொடர்ந்து அவருடைய கல்வி சேவைகள் ஆரம்பமாகின்றது. 1910ஆண்டில் தான் கல்வி கற்ற புனித மைக்கல் கல்லூரியிலேயே ஆசிரியராக நியமிக்கப்பட்டார். 1911இல் கல்முனை கத்தோலிக்க மிஷன் பாடசாலையில் ஆசிரியராக பணியாற்றிய அவர்கள் கொழும்பு ஆசிரிய பயிற்சிக் கல்லூரியில் 1912இல் பயிற்சியை முடித்துக்கொண்டு மீண்டும் மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரியில் ஆசிரியராக பணிபுரிந்தார். 1917இல் அரசினர் பொறியியற் கல்லூரியில் உதவி ஆசிரியராகி, 1920இல் புனித பத்திரிசியார் கல்லூரியில் வேதி நூல் ஆசிரியராக சேவையாற்றினார். " துறவு வாழ்க்கை " 1922ஆம் ஆண்டில் மானிப்பாய் இந்துக்கல்லூரியின் அதிபராக கடமையாற்றிய அடிகளார் உடைய புனிதமான துறவற வாழ்வு 1922இல் மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடத்தில் "பிரபோதசைதன்யர்" என்னும் துறவறப்பெயரோடு ஆரம்பமாகின்றது. யாழ்ப்பாணம் யோகர் சுவாமிகளுடைய பழக்கம் துறவுள்ளம் படைத்த மயில்வாகனரை விபுலாநந்தராக மாற்றியது 1974ஆம் ஆண்டில் சென்னை மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடத்தில் ஞானோபதேசம் பெற்று இராமகிருஷ்ணரின் நேர் சீடரான சுவாமி சிவானந்தரினால் விபுலாநந்தர் என்னும் நாமம் சூட்டப்பட்டு தமிழ் கூறும் நல்லுலகிற்கு விபுலானந்த அடிகளார் என்னும் புதுப்பொலிவோடு அறிமுகமானார். இவர் துறவு பூண்டு சமூகத்தை விட்டும் ஒதுங்கி வாழாமல் சாதி, மத, பேதமின்றி மக்களோடு ஒன்றி வாழ்ந்தார். 1975ஆம் ஆண்டு நாடு திரும்பிய விபுலானந்தர் மட்டக்களப்பு விவேகானந்த சபையின் பாடசாலைகளின் மேற்பார்வை பொறுப்பை ஏற்று கிழக்கிலங்கையின் கல்வித்துறைக்கு கலங்கரை விளக்காக திகழ்ந்தார்

மொழி அறிவு

இவர் இந்துவாக பிறந்து, ஆங்கில பாடசாலையில் கல்வி பயின்று தமிழ், ஆங்கில மொழிகள் மாத்திரமன்றி லத்தீன், கிரேக்கம், வங்காளம், பாளி, சிங்களம், அரபு, சமஸ்கிருதம் (வடமொழி) போன்ற பன்மொழி அறிவு பெற்றவராக காணப்படுகின்றார். பௌத்த நாட்டில் பிறந்து, கண்ணகி அம்மன் கோயிலருகில் இந்து சமய பற்றுடன் வாழ்ந்து, தன் சிற்றூரை சூழவுள்ள முஸ்லிம் மக்களுடன் நல்லுறவு கொண்டு, வடமொழியையும் கற்றாலும் தாய்மொழியாம் தமிழை முழுமூச்சாக நேசித்தார். அவர் நிறுவிய கல்விக் கூடங்கள் "ஆங்கிலேயரின் ஆட்சியின் விளைவால் தமிழ் மறைந்து போவதை கண்டு தமிழ் பல நிறுவனங்களிற்கு வித்திட்டார். அந்த வகையில் இலங்கையில் தமிழ் மொழியை போற்றி வளர்க்க ஓர் அமைப்பு இல்லாததைக் கண்டு தனது அயராத முயற்சியினால் யாழ்ப்பாணம் ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கம் என்னும் கழகத்தை அமைத்து கிழக்கில் பிறந்து வடக்கில் தமிழ் வளர்த்தார். தான் பிறந்த காரைதீவில் சாரதா வித்தியாலயத்தை நிறுவி பிறந்த மண்ணிற்கு தன் கடமை தீர்த்தார். கல்லடி உப்போடையில் தனக்கு குருவாக நின்று அபிஷேகம் செய்த சிவானந்தரின் பெயரில் சிவானந்த வித்தியாலயத்தை நிறுவினார்.

தலைநகரான கொழும்பில் தமிழ் பாடசாலை இல்லாததைக் கண்டு பல்வேறு முயற்சிகளின்  பின் கொழும்பில் விவேகானந்த வித்தியாலயத்தை ஆரம்பித்து தமிழ் கூறும்  நல்லுலகிற்கு முன்னோடியானார். முதல் தமிழ் பேராசிரியர் 1921ஆம் ஆண்டு  சென்னைப் பல்கலைக்கழகத்தின் அழைப்பை ஏற்று சென்று இராமநாதபுரத்து  அரசர் முன்னிலையில் சிதம்பரத்தில் பல்கலைக்கழகம் கட்டாயம் தேவையானது என  தக்க சான்றுகளுடன் எடுத்துக் கூறினார். இவ்விசாரணைக் குழுவில்  முதன்முதலில் தக்க சான்றுகளுடன் எடுத்துக் கூறிய பெருமை சுவாமி  விபுலானந்தரையே சாரும். இந்த விசாரணைகளின் பின்னர் பல்கலைக்கழகம் அமைக்க  வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. அதன் விளைவாக சிதம்பரத்தில் அண்ணாமலைப்   பல்கலைக்கழகம் தோற்றம் பெற இன்றியமையாதவராக இருந்த செட்டிநாட்டு அரசர்  அண்ணாமலை செட்டியார் பல்கலைக்கழகத்தில் 

முதல் தமிழ் பேராசிரியர் பதவியை ஏற்கும்படி சுவாமி அவர்களை  கேட்டுக்கொண்டதற்கு இணங்க 1931ஆம் ஆண்டு சுவாமி அவர்கள் தமிழ்ப் பேராசிரியர் பணியை ஏற்று கொண்டார் .

தமிழ் பிறந்த தமிழ்நாட்டில் சென்னை  பல்கலைகழகத்தில் கூட அக்காலத்தில் தமிழ்த்துறைப் பேராசிரியர் பதவி  இருக்கவில்லை. எனவே தமிழ்நாட்டின் முதல் தமிழ்ப் பேராசிரியர் என்ற  பெருமையும் புகழும் நம் நாட்டை சேர்ந்த சுவாமி விபுலாநந்தரிற்கே  உரியதாகும்.

யாழ் நூல் தோற்றம் இவ்வாறு தன்னுடைய வாழ்க்கையை வாழ்ந்து  வந்த சுவாமி அவர்களுடைய நாற்பத்தி ஐந்து வருட கனவு யாழ்நூல். அவருடைய 45  வருட கனவும் 15வருட முயற்சியுமே இன்று நூலாக உருமாறியுள்ளது. தமிழ்  பக்தி இலக்கிய மரபில் முக்கியமான ஒன்றாகும்.

அத்தோடு தமிழில்  தமிழர்களிடையே தோன்றிய முதல் இசைக்கருவி யாழ் ஆகும். இந்த யாழ் வகைகளை  கூறும் யாழ் நூல் உருவாக்கத்திற்கு விபுலானந்தரினது ஆரம்ப சூழல் மிகவும்  முக்கியமானது . குறிப்பாக அவரது ஆரம்ப ஆசிரியர்களிடமிருந்து கற்றுக்கொண்ட  தமிழ் அறிவும் அதனோடு நாகரீக பண்பாட்டு விழுமியச் சிந்தனை மிகவும்  அடிப்படையாக இருந்தது. குடும்ப பின்னணியில் உள்ள விடயங்கள் இசையில்  ஆர்வத்தை இணைத்தது என்றால் மிகையாகாது. சிறு வயதிலே பாரதம், திருக்குறள், சூடாமணி நிகண்டு ஆகியவற்றுடன் ஆங்கிலம் வடமொழி ஆகியவற்றை வீட்டிலேயே  கற்கும் சூழ்நிலையும் ஏற்பட்டது. அடுத்து அவரது தாய் தந்தையரின் குல  தெய்வமான கண்ணகி வழிபாடு அங்கு காணப்பட்ட பக்தி நெறிமுறைகள், அத்தோடு  அங்கு வருடாவருடம் பாடப்படும் சிலப்பதிகார விளக்க உரைகள், அதன் மூலம்  தமிழிசை பற்றிய ஞானம் தோற்றம் பெறுவதோடு இச் சிலப்பதிகாரம் மிக  முக்கியமானது என்பதை இளமையிலே உணர்வதற்கான சந்தர்ப்பமும், சூழலும்  ஏற்பட்டது. இவற்றுடன் தன்னிடம் உள்ள அறிவையும், விஞ்ஞான அறிவையும்,  இரசாயனவியல் உணர்வையும் அடிப்படையாகக் கொண்டு இயல், இசையை அறிவதற்கு  முக்கியத்துவம் கொடுத்தது ஏனெனில் எமது நாகரிகத்தையும் பண்பாட்டையும் இயல், இசை மூலம் அவர் வெளிப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் காணப்பட்டமையே ஆகும்.

அடுத்து சுவாமி அவர்கள் சிவானந்தா வித்தியாலயத்தில் கற்பிக்கும் போது  அப்போது இருந்த சூழல் மிக முக்கியமான ஒன்றாக காணப்படுகின்றது. அன்று  மட்டக்களப்பு புளியந்தீவு என அழைக்கப்பட்டது புளியந்தீவிலிருந்து அவர்  கற்பிக்கும் பாடசாலைக்கு கல்லடி செல்வதற்காக கல்லடி ஆற்றை கடக்க வேண்டும்.  அவ்வாறு அவர் ஆற்றை கடக்க படகில் போகும் போதும் , 

வரும் போதும் அந்த நீர் நிலைகளில் ஓசைகள் ஒலித்தன. அவை  எங்கிருந்து வருகின்றன என்பதை பற்றிய தேடல் அடிகளாருக்கு எழுந்தது.  அதுதான் பின்னர் மீன் பாடும் தேன் நாடு மட்டக்களப்பு என்று  வர்ணிக்கப்பட்டது. இதுவும் யாழ்நூல் தோற்றம் காரணமாக இருந்தது.

ஒரு இசைத்துறை பேராசிரியராக நியமனம் பெற்ற  போது சென்னை பல்கலைக்கழக மேற்பார்வை செய்யுமாறு அன்னாருக்கு கூறப்பட்டது.  அத்துடன் அழிந்து போன தமிழ் நூல்களைப் பற்றிய தேடலில் நாட்டம் ஏற்பட்டது.  அதிலும் சிலப்பதிகாரத்தில் கிடைக்கப்பெறாத சிந்தனைகளைப் பற்றிய தேடலின்  போது யாழின் வகைகள் அதன் முக்கியத்துவம் பற்றி அறிய சந்தர்ப்பம் கிடைத்தது. இவ்வாறான பின்னணியே அவருடைய இசை ஆர்வம் தோற்றம் பெற காரணமாக அமைந்தது.  சுவாமி விபுலாநந்தர் காலமும் கருத்தும் என்ற நூலின் ஆசிரியரான கலாநிதி  சி.மௌனகுரு அவர்கள் " யாழ் நூல் பற்றி பல அறிஞர்கள் போற்றிப்  புகழ்ந்துள்ளனர் .

எனினும் முறையான மதிப்பீடு ஒன்றினை யாரும் இதுவரை செய்ய  முயன்றதில்லை" என்று குறிப்பிடுகின்றார். சுவாமிகள் இயற்றிய யாழ்நூல்  என்னும் இசைத்தமிழ்நூல் செந்தமிழ்ப் பேரன்பர் நச்சாதுப்பட்டி பெ.ராம  சிதம்பரம் செட்டியார் அவர்களின் பொருளுதவி கொண்டு 1947கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டது.

சுமார் 45வருட கனவினால் 15  ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து பல இன்னல்களின் பின் இசைத்தமிழ் நூல் தோற்றம்  பெற்றது .  

யாழ் நூலார் கடந்த பாதைகள்  

யாழ் நூல் தோற்றம் பெறுவதற்கு அவருடைய ஆரம்ப சூழல் ஒரு  காரணமாக காணப்பட்டதோடு அதற்கு அவர் பல துயரங்களை சந்தித்தார், 1937இல்  இமயமலையை காண வேண்டும் என்ற ஆவலால் அதனை காணச் சென்று ராமகிருஷ்ண மிஷன்  நடத்தும் மயாவதி என்ற ஆசிரமத்தில் தங்கினார். அங்கு இருந்தபொழுது ஒரு  ஆங்கில சஞ்சிகை எடுத்து நடாத்தும் பொறுப்பும் அவருக்கு ஏற்பட்டது. இயற்கை  எழில் கொஞ்சும் அமைதியான சூழ்நிலையில் யாழ் நூல் பற்றிய ஆராய்ச்சியில்  ஈடுபட்டார். இந்த ஆராய்ச்சிக்காக ஆசிரியப் பணியை இழக்கும் நிலையும்  ஏற்பட்டது. தன் ஆராய்ச்சிக்காக தமிழ் நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்று  அதன் ஆய்வை அவர் மேற்கொண்டார். இவ்வாறு பல இன்னல்களை கடந்து பதினைந்து  ஆண்டு காலம் ஆராய்ந்து கண்டுணர்ந்த யாழினை கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின்  ஆதரவுடன் திருக்கொள்ளம்பூதூர் திருக்கோயிலில் நாளும் செந்தமிழ் இசை  பரப்பிய ஞானசம்பந்தனின் சந்நிதானத்தில் 1947ஆம் ஆண்டு ஆனித் திங்களில்  அரங்கேற்றினார். யாழ் நூல் அரங்கேற்றத்திற்கு முன்பே உடல்நிலை  பாதிப்புற்றார். வைத்தியர் நீண்ட தூரம் சுவாமி அவ்களை பயணிக்க வேண்டாம்  என்ற கோரிக்கை விடுத்தார். 45வருட கனவு நிறைவேறப் போகிறது என்ற  அவாவினால் வைத்திய ஆலோசனையை மீறி அன்னார் திருக்கொள்ளம்புதூர் யாழ்நூல்  அரங்கேற்றத்துக்கு கலந்து கொண்டார். அதன்பின் உடல் நிலை மிக மோசமாக  பாதிக்கப்பட்டு தன் நாடு திரும்பினார். தமிழ் மொழிக்கும்.  தமிழர்களுக்கும் விடிவை தேடி தொலைதூரம் பயணித்த அன்னார் ஈழத்தின் சுதந்திர   விழாவிற்கு முன்பு 1947ஆம் ஆண்டு ஜூலை மாதம் 19சனிக்கிழமை தன் தொலை தூர   பயணத்தில் மீளா துயில் கொண்டார். அன்னாரின் பூதவுடல் மட்டக்களப்பிற்கு  எடுத்துச் செல்லப்பட்டு சுவாமி அவர்கள் உருவாக்கிய சிவானந்த  வித்தியாலயத்தின் முன்றலிலுள்ள மரத்தின் கீழ் அடக்கம் செய்யப்பட்டது. அவர்  அடக்கம் பெற்ற கல்லறை சமாதி மேல் அவர் எழுதிய உயிர்த்துடிப்பு மிக்க கவி   வரிகள் பொறிக்கப்பட்டுள்ளன. " வெள்ளை நிற மல்லிகையோ ? வேறெந்த மாமலரோ ?  வள்ளல் அடியினைக்கு வாய்த்த மலரெதுவோ? வெள்ளைநிறப் பூவுமல்ல வேறெந்த  மலருமல்ல உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது இவ்வாறு அவருடைய கவிவரிகள்  அவருடைய கவித்திறனிற்கும்.

அவருடைய தமிழ்ப் புலமைக்கும் , அவருடைய  பக்திக்கும் மிக முக்கிய ஓர் எடுத்துக்காட்டாக காணப்படுகின்றது. அவருடைய  130ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு அவருடைய வரலாற்றை மீட்டிப்பார்ப்பதில்  தென்கிழக்கு பல்கலைக்கழக நூலகம் பெருமிதம் கொள்கின்றது .

எம்.ஏ.எப் நஸீரா
மொழித்துறை
தென்கிழக்கு பல்கலைக்கழகம்

Comments