நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு பொறுமை, அமைதி அவசியம் | தினகரன் வாரமஞ்சரி

நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு பொறுமை, அமைதி அவசியம்

நாட்டில் அந்நிய செலாவணி இழப்பு உள்ளிட்ட பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கம்முழுமையான முயற்சிகளை எடுத்து வருவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாட்டுமக்களுக்குத் தெரிவித்திருந்தார். மக்களின் பிரச்சினைகள் குறித்து உரிய புரிதல்அரசாங்கத்துக்கு இருப்பதாகவும், இந்த மோசமான நிலையிலிருந்துமீள்வதற்கு அனைவரும் இணைந்து செயற்படுவது அவசியம் என்றும் பிரதமர் கூறியிருந்தார்.

'வீதியில் இறங்கி நடத்தப்படும் போராட்டத்தின் ஒவ்வொரு நிமிடத்திலும் டொலர்கள் இழக்கப்படுகின்றன. எனவே மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கு முன்னர் நாட்டை அழிவிலிருந்து மீட்க வேண்டும்' என்றும் பிரதமர் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.

எதிர்க்கட்சியினருக்கு ஆட்சியமைக்க வருமாறு விடுத்த அழைப்பை, அவர்கள் எவரும் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதால், மக்களின் ஆணையைப் பெற்றவர்கள் என்ற ரீதியில் ஆட்சியமைத்து பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும் என்றும் பிரதமர் தெரிவித்திருந்தார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் ஏற்கனவே நடவடிக்கை எடுத்திருப்பதை நாம் மறுக்க முடியாது. இதில் முக்கிய விடயமாக மத்திய வங்கிக்கு புதிய ஆளுநர் நியமிக்கப்பட்டமையைக் குறிப்பிடலாம். மத்திய வங்கியின் பிரதி ஆளுநராகவிருந்த கலாநிதி நந்தலால் வீரசிங்ஹவை ஜனாதிபதி மத்திய வங்கியின் ஆளுநராக நியமித்துள்ளார்.

நீண்ட கால அனுபவத்தைக் கொண்ட இவர், சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து பணியாற்றியவர் என்பதால் நாட்டை சரியான பாதையில் இட்டுச் செல்வார் என்ற நம்பிக்கை பெரும்பாலானவர்கள் மத்தியில் காணப்படுகிறது.

இலங்கை மத்திய வங்கியின் 17ஆவது ஆளுநராகப் பதவியேற்ற பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த கலாநிதி நந்தலால் வீரசிங்ஹ, மத்திய வங்கி அரசியல் தலையீடு இன்றி சுயாதீன நிறுவனமாக இயங்கும் என்ற உறுதிமொழியை வழங்கினார். தான் அரசியல்வாதிகளுக்குப் பணியாற்ற வரவில்லையென்றும், நாட்டு மக்களுக்கே பணியாற்ற வந்திருப்பதால் பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்க்க வங்கி அரசியல் தலையீடு இன்றி சுதந்திரமாக செயற்பட இடமளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

"நாட்டின் உண்மையான பொருளாதார நிலைமையை மக்களுக்கு எடுத்துக் கூறி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். கட்டுப்பாடு இல்லாத வாகனம் பள்ளத்துக்குள் வேகமாகச் செல்வதைப் போல உள்ளதை, உடனடியாக கட்டுக்குள் கொண்டுவர முடியாது. மக்கள் மேலும் சில சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதன் பின்னரே மீட்சியை எதிர்பார்க்க முடியும்" என்றும் கலாநிதி நந்தலால் வீரசிங்ஹ தெளிவாகக் கூறியிருந்தார்.

கடந்த காலங்களில் உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட பொருளாதாரப் பாதிப்புக்களைப் போல இலங்கையும் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்திருந்தது. எனினும், இதிலிருந்து மீளக்கூடியதாக இருந்த நிலையில் மீண்டும் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளது. தற்போதைய சிக்கலில் இருந்தும் மீளமுடியும் என்ற நம்பிக்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநரால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், மத்திய வங்கியின் நாணய சபைக்குப் புதிய உறுப்பினர்களையும் அவர் நியமித்துள்ளார்.

இது இவ்விதமிருக்க, சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பைப் பெறுவது குறித்த கலந்துரையாடல்களை நடத்துவதற்கு நிதியமைச்சர் அலி சப்ரி, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்ஹ, புதிய திறைசேரி செயலாளர் உள்ளிட்ட குழுவினர் அமெரிக்கா செல்லவுள்ளனர். நாளை 18ஆம் திகதி ஆரம்பமாகவிருக்கும் கலந்துரையாடல்கள் ஐந்து நாட்கள் நடைபெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் உதவி தொடர்பில் பல தரப்பினரும் வலியுறுத்தி வந்த நிலையில் அரசாங்கத்துக்கும், நாணய நிதியத்துக்கும் இடையில் நடைபெற்ற பூர்வாங்க கலந்துரையாடல்களின் வரைபு கடந்த வாரம் பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டில் ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்க குறித்த வரைபை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். இதற்கு இணங்கிய அரசாங்கம், குறித்த வரைபை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தது மாத்திரமன்றி, இது குறித்து சபை ஒத்திவைப்பு விவாதமொன்றையும் நடத்தியிருந்தது.

நாடு தற்பொழுது எதிர்கொண்டிருக்கும் நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பெறக் கூடிய உதவி ஓரளவுக்கு நன்மை அளிக்கும் என்பதே பொருளாதார நிபுணர்களின் கருத்தாக உள்ளது. நாட்டின் ஒட்டுமொத்தப் பிரச்சினைக்கும் இது முழுமையான தீர்வாக அமையாவிட்டாலும் உடனடிப் பிரச்சினைகளை சமாளிக்க முடியும் என்பது அவர்களின் நம்பிக்கையாகும். அதேநேரத்தில், குறித்த கடன் உதவியை வழங்க நாணய நிதியம் ஏற்றுக் கொண்டால் அவர்களால் விதிக்கப்படும் நிபந்தனைகளை நடைமுறைப்படுத்த வேண்டியது கட்டாயமாகவிருக்கும். நாடு முழுமையான அழிவை நோக்கிச் செல்வதை விட நாணய நிதியத்தின் நிபந்தனைகளைப் பின்பற்றி நாட்டை மீட்சிப் பாதைக்குக் கொண்டு வருவதே தற்போதைய தேவையாகும்.

இவ்வாறான பின்னணியில், முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார போன்றவர்கள் சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை அரசு செல்லும் முயற்சி குறித்து விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

அவர்களின் இந்தக் கருத்தை சந்தர்ப்பவாத அரசியலின் வெளிப்பாடாகவே பார்க்க முடியும். அவர்கள் கூறுவதைப் போல சர்வதேச நாணய நிதியத்திடம் செல்லாவிட்டால் அதற்கான மாற்றுத் தீர்வு என்ன? மாற்றுத் தீர்வை அவர்கள் முன்வைத்துள்ளனரா என்றால் அதற்கான பதில் இல்லையென்றே கூற வேண்டும்.

எனவே, நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்வதற்கு மத்திய வங்கி உரிய பாதையை காண்பிக்கும் போது அதற்கான கொள்கைகளைத் தயாரித்து அவற்றை நடைமுறைப்படுத்துவதில் அரசியல்வாதிகள் பொறுப்புடன் செயற்பட வேண்டும். அவ்வாறு அனைவரும் இணைந்து செயற்படுவதன் ஊடாகவே இந்தப் பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டு வரமுடியும். அதேநேரம், ஒரே இரவில் எல்லாப் பிரச்சினைகளையும் தீர்த்துவிட முடியாது என்பதையும் எதிர்க்கட்சியில் உள்ளவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தற்போதுள்ள நிலையில் எதிர்க்கட்சியில் உள்ளவர்கள் ஆட்சி அதிகாரத்தைப் பெற்றுக் கொண்டாலும் இவ்வாறான நடைமுறைகளைக் கடைப்பிடிப்பதன் ஊடாகவே முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும்.

அதனால், வங்கித் துறையிலும், பொருளாதாரம் குறித்தும் நன்கு அனுபவம் மிக்க ஒருவர் மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் அதேநேரம், அனுபவம் மிக்க மற்றுமொரு வங்கியியலாளரான மத்திய வங்கியின் பிரதி ஆளுநராகப் பணியாற்றிய கே.எம்.எம்.சிறிவர்த்தன நிதியமைச்சு மற்றும் திறைசேரியின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர்களின் சரியான வழிகாட்டுதல்களின் கீழ் நாடு பிரச்சினைகளிலிருந்து விடுபடும் என எதிர்பார்க்க முடியும்.

பி.ஹர்ஷன்

Comments