புதிய மீட்பர்? | தினகரன் வாரமஞ்சரி

புதிய மீட்பர்?

நாட்டில் ஏற்பட்டிருக்கும் அரசியல், பொருளாதார நெருக்கடிக்களுக்கு மத்தியில் ரணில் விக்கிரமசிங்க புதிய பிரதமராகப் பொறுப்பேற்றுள்ளார். ரணிலின் பதவியேற்பு அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. இதனை இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரும் இந்தியத் தூதரும் வெளிப்படுத்தியுள்ளனர். இந்தியத் தூதர் கோபால் பாக்லே ரணிலை நேரில் சந்தித்து வாழ்த்துச் சொல்லியிருக்கிறார். அமெரிக்கத் தூதர் ஜூலி சுங் ட்விற்றரில் உற்சாகமான முறையில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். கூடவே IMF வின் உதவியோடு நீண்டகால அடிப்படையில் இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காணமுடியும் என்றும் சொல்லியிருக்கிறார்.

ஆகவே இந்திய, அமெரிக்க நோக்கு நிலையில் ரணில் விக்கிரமசிங்க மீட்பராகத் தோன்றுகிறார்.

இதேவேளை புதிய பிரதமரை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவும் முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவும் வாழ்த்தியுள்ளனர். இதற்குக் காரணம், இன்றைய நெருக்கடிச் சூழலிலின் மீட்பராகவும் தம்மைக் காப்பவராகவும் ரணில் விக்கிரமசிங்கவே உள்ளார் என்று இவர்களும் கருதுகின்றனர்.

ஆனால், இவற்றுக்கு அப்பால் ரணிலின் பதவியேற்பை உண்மையான அர்த்த்தில் பொறுப்புச் சுமத்தல் என்றே சொல்ல வேண்டும். ராஜபக்ஷவினரின் அரசியலுக்கும் ஆட்சிக்கும் ஏற்பட்ட நெருக்கடியைத் தணிப்பதற்கு அவர்கள் மேற்கொண்ட பொறுப்புச் சுமத்தலை ரணில் விக்கிரமசிங்கவின் மீது ஏற்றியுள்ளனர் எனலாம். இது அவர்களுடைய விருப்பத்தின் பாற்பட்ட ஒன்றல்ல. தவிர்க்க முடியாத சூழலில் விளைவாகும்.

ஆகவே யார் யாருக்கெல்லாம் ஒரு தலை இப்பொழுது தேவையோ அவர்கள் அனைவரும் இணைந்து அந்தத் தலையைத் தேர்வு செய்துள்ளனர். அந்தத் தலை பலியிடப்படுமா? வென்று கொடியேற்றுமா என்பதே இப்போதுள்ள கேள்வி. ஆனால், இந்தத் தலையைத் தவிர பொருத்தமான வேறு தலைகள் எதுவும் இந்த அரசியற் கட்டமைப்புச் சுழலுக்குள் இப்பொழுது இல்லை என்பது கசப்பான உண்மை.

சஜித் பிரேமதாச, அநுரகுமார திஸநாயக்க இருவரும் இந்தச் சூழலையும் தங்கள் முன்னுள்ள சவாலையையும் எதிர்கொள்ளத் தவறி விட்டனர். அவர்களுடைய கோரிக்கைகள் என்னதான் வலுவானதாக, நியாயமாக இருந்தாலும் அவற்றைக் கையாளக் கூடிய திறனை இருவரும் தவற விட்டுள்ளனர். அரசியலில் ஒவ்வொரு கணமும் முக்கியமானது. அதுவும் நெருக்கடிச் சூழலில் உள்ள ஒவ்வொரு நொடியும் முடிவெடுப்பதில் முக்கியமானது. இதைப் புரிந்து கொள்ளத் தவறியதால் அந்த வெற்றிடத்தை ரணில் எடுத்திருக்கிறார்.

ரணில் விக்கிரமசிங்கவின் இந்தப் பதவியேற்புத் தொடர்பாக பலவிதமான வாதப்பிரதிவாதங்கள் உண்டு. “ஜனநாயகத்துக்கு விரோதமான முறையிலேயே இந்தப் பதவியேற்பு நடைபெற்றுள்ளது. இதனால்தான் அவரை முந்திய காலத்தில் ஆதரித்து வந்த நாம் இப்பொழுது எதிர்க்கிறோம்” என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்திருக்கிறார். ஏறக்குறைய இதே தொனியில்தான் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரான மனோ கணேசனும் கூறியிருக்கிறார். காலிமுகத்திடலில் நிலை கொண்டிருக்கும் போராட்டக்காரர்களின் நிலைப்பாடும் ரணிலுக்கு எதிரானதாகவே உள்ளது. இதைத் தவிர, ஐக்கிய மக்கள் சக்தி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி போன்றனவும் எதிர்க்கின்றன. பொதுஜனபெரமுனவிலும் அதனோடு இணைந்த பங்காளிகளிலும் எத்தனைபேர் ரணிலை ஆதரிப்பர் என்று தெரியவில்லை.

இவ்வளவுக்கு மத்தியிலும் தன்னுடைய ஐ.தே.கவிலிருந்து தனியொரு பிரதிநிதியாக நின்றே புதிய ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளார். ஆயிரம் விமர்சனங்களுக்கு அப்பாலும் இந்தத் துணிச்சல் கவனத்திற்குரிய ஒன்று. எதையும் சமாளிக்க முடியும், எதிர்கொள்ள முடியும் என்ற துணிச்சலா? அல்லது ஆட்சியைப் பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம் என்று உற்சாகமூட்டும் அவருடைய உள்நாட்டு வெளிநாட்டு ஆட்களின் தூண்டலா? அல்லது கடந்த ஐம்பது ஆண்டுகால அரசியல் அனுபவமும் ஐந்து தடவைகள் பிரதமராக இருந்ததன் விளைவா என்று தெரியவில்லை.

ஆனால், அடுத்து வரும் நாட்களில் தன்னை அவர் எப்படிப் பலப்படுத்தப்போகிறார்? பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை எப்படி நிரூபிக்கப்போகிறார்? யார் யாரெல்லாம் அவருடைய அமைச்சரவையில் இடம்பெறப்போகின்றனர்? ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவுக்கும் அவருக்கும் இடையில் என்னமாதிரியான உடன்பாடும் (இணக்கமும்) புரிந்துணர்வும் உள்ளன? இது எவ்வளவு காலத்துக்கு நீடிக்கும்? (இப்படித்தான் தேனிலவாகத் தொடங்கப்பட்ட மைத்திரி – ரணில் நல்லாட்சிக்கால உறவு பின்னர் பாவற்காயாகக் கசப்படைந்தது) என்ற பல பரீட்சைகளை அவர் வெற்றிகரமாகக் கடந்து செல்ல வேண்டும்.

இதேவேளை இங்கே நாம் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். ரணில் விக்கிரமசிங்கவின் பதவியேற்புப் பலரும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வரும்போது அதை ஜனநாயகத்தை உயர்த்திப்பிடிக்கும் அமெரிக்காவும் இந்தியாவும் பாராட்டியுள்ளன என்பது.

சரி, தன்னைச் சுற்றியுள்ள நெருக்கடிகளைக் கடந்து அல்லது வென்று ஆட்சியமைத்தாலும் நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடிகளை எப்படி அவர் வெல்லப்போகிறார்?

இரட்டை நெருக்கடியை எதிர்கொள்ளும் ஒரு இக்கட்டான வரலாற்றுச் சூழலில் – அரசியலில் - ரணில் இருக்கிறார் என்பதே அவருடைய அரசியல் வெற்றியும் எதிர்காலமுமாகும்.

தன்னைச் சுற்றியுள்ள நெருக்கடிகளை வெற்றி கொள்வதை அடுத்த ஒரு வார காலம் நிரூபித்து விடும். அல்லது அடுத்த சில வாரங்களில் தெரிந்து விடும். ஆனால், நாடு எதிர்நோக்கியிருக்கும் நெருக்கடியை அவர் எப்படி வெற்றி கொள்ளப்போகிறார் என்பதற்கு எவ்வளவு காலம் பொறுத்திருக்க வேண்டும்?

இன்றைய நிலையில் ஒரு நாளைக் கூட பொறுத்துக் கொள்வதற்கு மக்கள் தயாராக இல்லை. அவர்களுடைய வாழ்க்கைச் சுமை குறையும் வரை, பொருளாதார நெருக்கடி தீரும் வரை அவர்கள் பொறுதியடையப்போவதில்லை. ஆகவே சூழல் எப்போதும் கொதிநிலையில்தான் இருக்கப்போகிறது.

இதைத் தணிப்பதற்கு உடனடியான – நீண்டகால அடிப்படையிலான பொருளாதார மறுசீரமைப்புத்திட்டங்களும் நடவடிக்கைகளும் அவசியம். இந்த நடவடிக்கைகள் வழமையைப்போல மந்த கதியிலானவையாக இல்லாமல் துரித கதியிலானதாக இருக்க வேண்டும். இதைக் கண்காணிப்புச் செய்யும் பொறிமுறையும் அவசியம். அப்படிச் செய்தால்தான் நிலைமையை ஓரளவுக்கேனும் சீர் செய்ய முடியும்.

இதற்கெல்லாம் பொருத்தமான விதிமுறைகளும் சட்டங்களும் உருவாக்கப்பட வேண்டும். உதாரணமாக, இலவசங்கள், நிவாரணங்களை மட்டுப்படுத்துவதை எடுத்துக் கொள்ளலாம். பாடசாலை மாணவர்களுக்கான சீருடையும் பாடப்புத்தகங்களும் இப்பொழுது அனைவருக்கும் இலவசமாகவே வழங்கப்படுகின்றன. இதைக் குறைக்கலாம். வசதியுள்ளோருக்கு வழங்கலை இடை நிறுத்தலாம். அதற்கான விதிமுறை உருவாக்கப்பட வேண்டும். கற்பித்தல் அனைவருக்கும் வழமையைப்போல இருக்கும். சீருடையும் பாடப்புத்தகமும் மட்டும் தரப்படுத்தலின் அடிப்படையில் வழங்கப்படுவதாக அமையும்.

இதைப்போல மதுபோதையில் விபத்துக்குள்ளாவோர், அடிதடி சண்டை வன்முறைகளில் காயமடைவோருக்கெல்லாம் மருத்துவம் அரச மருத்துவமனைகளில் வழமையைப்போல மருத்துவம் செய்யப்படும். ஆனால், அவர்கள் பொலிஸ் விசாரணையின் அடிப்படையில் மருத்துவக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். இவ்வாறே போதை வஸ்துப்பயன்படுத்தலுக்குச் செய்யப்படும் புனர்வாழ்வு மற்றும் சிகிச்சைக்கு கட்டணம் செலுத்தப்பட வேண்டும்.

இதைப்போல நீதி மன்றத்தினால் சட்டரீதியாக ஏற்கப்படும் உடமைகள் நீண்ட கால தாமதமின்றி ஏலத்தில் விடப்பட வேண்டும். அதற்கிசைவாக நீதி விசாரணைகள் துரிதமாக்கப்படுவது அவசியம். அதற்கான ஏற்பாடுகளைச் செய்தல் வேண்டும்.

விதி மீறல்களுக்காக விதிக்கப்படும் பொலிஸ் தண்டப்பணம் உடனடியாகச் செலுத்தப்படத்தக்க மாற்றம் செய்யப்பட வேண்டும். குற்றம் மற்றும் தண்டப்பணத்தைச் செலுத்துவதற்காக நீதி மன்றத்துக்குச் செல்லுதல் அல்லது பொலிஸ் மற்றும் தபால் நிலையத்துக்குச் செல்ல வேண்டியிருத்தலின் சிரமங்களால் பொலிஸூக்குக் கையூட்டுக் கொடுத்துத் தப்பி விடுவதே வழமையாக உள்ளது. இது ஊழலை வளர்ப்பதோடு அரசுக்குச் சேரவேண்டிய வருமானத்தையும் இழக்க வைக்கிறது.

பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் என மக்கள் பிரதிநிதிகள் தமது பிரதேசங்களில் மக்களோடு இணைந்து பணியாற்ற வேண்டும். அந்தப் பணிகளின் விவரம் பகிரங்கப்படுத்தப்படுதல் அவசியம். அதாவது, அந்தப் பணிகளின் அடைவுமட்டம் குறித்த விவரம். இல்லையெனில் அதற்கான பொறுப்புச் சொல்லுதல் – காரணமுரைத்தல் வேண்டும்.

இப்படி ஒவ்வொரு விடயங்களிலும் மாற்றங்களைச் செய்ய வேண்டும். அதற்கான விதிமுறைகளையும் சட்டங்களையும் உருவாக்குவது அவசியம். ஒட்டுமொத்த நிர்வாக முறைமைகளில் திருத்தங்களும் மாற்றங்களும் செய்யப்பட வேண்டும்.

பலரும் சொல்லது அல்லது கருதுவது அரசியலமைப்பில் திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என. அதுவும் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழித்து, பாராளுமன்றத்துக்கு அதிகாரமுள்ள வகையிலான திருத்தம் தேவை என. அதோடு வங்கிச் சட்டங்கள் தொடக்கம் நிதி நிறுவனங்கள், நிர்வாக முறைமைகள், பிற அமைப்புகள், துறைகள் போன்றவற்றில் எல்லாம் புதிய திருத்தங்களும் மாற்றங்களும் தேவை.

இதைப்போல முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் விதமாக இலகு நிர்வாக நடைமுறைகளை அறிமுகப்படுத்த வேண்டும். கூடவே இதற்கென தனியான ஒரு அமைப்பும் தேவை. அதோடு முதலீட்டாளர்களை ஈர்க்கத்தக்க வகையிலான நிபுணத்துவத்தையுடைய குழுவின் அறிமுக ஊடாட்டமும் வேண்டும்.

ஒட்டு மொத்தத்தில் நாட்டு மக்கள் அனைவரிடத்திலும் நெருக்கடிகளிலிருந்து மீள வேண்டும் என்ற எண்ணமும் தேசத்துக்காக உழைக்க வேண்டும் என்ற சிரத்தையும் ஒரு நிகழ் பண்பாடாக உருவாக்கப்படுவது அவசியம். ஒரு நிமிடத்தைக் கூட பயனற்றதாகச் செலவழிக்கக் கூடாது, செலவழிக்க முடியாது என்ற வகையில் வாழ்க்கை முறையில் மாற்றம் வேண்டும்.

இப்பொழுது அரசு வேறு. மக்கள் வேறு. அதாவது நாம் வேறு என்ற வகையிலான சிந்தனை முறையே பலரிடத்திலும் உள்ளது. இதனால்தான் தாம் என்னவும் செய்யலாம் என்ற எண்ணத்தோடு பொறுப்பற்ற விதமாகப் பலரும் நடக்கின்றனர்.

அப்படியல்ல. நாம் செய்கின்ற ஒவ்வொரு தவறும், ஒவ்வொரு பொறுப்பின்மைகளும் தேசத்தையே பாதிக்கிறது. தேசத்தின் பாதிப்பு மறுவளமாக நம்மையே தாக்குகின்றது என்ற புரிதலை – என்ற உண்மையை - உணர்த்த வேண்டும்.

இவ்வாறு செய்யப்படும்போது கிட்டத்தட்ட அடிப்படை மாற்றம் ஒன்று நிகழும். அது தற்போது கோரப்படும் கட்டமைப்பு மாற்றத்துக் (System change) கிட்டவாகச் செல்லக் கூடியதாக இருக்கும். இதுவே நெருக்கடிகளிலிருந்து விடுதலை பெறுவதற்கான வழியை ஏற்படுத்தும்.

இவ்வாறு பலவற்றைக் குறித்துச் சிந்திக்க வேண்டும். ஆனால், இவற்றைக் குறித்துச் சிந்திக்காமல் தனியே ஒற்றைப் பரிமாணத்தில் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி ஆட்சி முறை ஒழிக்கப்பட வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

இனவாத அடிப்படையில் செயற்படும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையினர் எப்படிச் சிந்திப்பர், செயற்படுவர் என்பதை இவர்களிற் பலரும் சிந்திப்பதில்லை. நிறைவேற்று அதிகாரமுறை அறிமுகமாகுவதற்கு முன்பு இருந்த பாராளுமன்றத்தில் என்ன வகையான நடைமுறைகளும் நல்விளைவுகளும் இருந்தன? இனப்பிரச்சினை கூட எப்படிக் கையாளப்பட்டது என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.

இது ஒரு புறமிருக்க, விரும்பும் மாற்றங்கள் அனைத்தும் நடக்கின்றனவோ இல்லையோ நாம் சாத்தியமாகும் மாற்றங்களைக் குறித்துச் சிந்திக்க வேண்டும். ரணில் என்பது எதன் குறியீடு என்று இன்னும் சில நாளில் புரிந்து விடும்.

கருணாகரன்

Comments