16 மில்லியன் டொலர் பெறுமதியான தமிழக நிவாரண பொருட்கள் | தினகரன் வாரமஞ்சரி

16 மில்லியன் டொலர் பெறுமதியான தமிழக நிவாரண பொருட்கள்

(கடந்த இதழ் தொடர்ச்சி...)தமிழரை விரோதிகளாகவும், தமிழ் மொழி மற்றும் கலாசாரத்தை தரம் குறைந்ததாகவும் பார்ப்பது என்பது அரசியல் இலாபங்களை அறுவடை செய்வதற்காக சிங்கள அரசியல்வாதிகளினால் உருவாக்கப்பட்ட ஒரு பொறிமுறை. இன்றைய மொழியில் மாயை அல்லது அதை ஒரு செயலி என்றும் சொல்லலாம். வடக்கு கிழக்கை எடுத்துக் கொண்டால் சிங்கள வெறுப்பு என்பதும் தமிழர் வாக்குகளை அறுவடை செய்வதற்காக போஷித்து வளர்க்கப்படும் ஒரு மனப்பான்மைதான். அரசியல் அறுவடைகளுக்காகத்தான் இரு சமூகத்துக்கு மிடையேயும் இரும்புத்திரை விலக்கப்படாமல் உள்ளது என்பதை இரு தரப்பிலும் எத்தனை சாமானியர் புரிந்து கொண்டிருக்கிறார்களோ தெரியவில்லை.

தமிழருக்கு உரிமைகள் கொடுக்கப்பட்டால் திறமைசாலிகளாகக் கருதப்படும் அவர்கள் சிங்களவர்களையும் விஞ்சி விடுவார்கள் சிங்கள பிரதேசங்களுக்குள்ளும் ஊடுருவ ஆரம்பிப்பதோடு தனிநாட்டுக்கான ஏற்பாடுகளையும் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். எனவே காணி, பொலிஸ், நீதிமன்ற அதிகாரங்களை எல்லாம் வழங்கிவிடக் கூடாது என்ற கருத்தை சிங்கள மக்களின் மண்டையில் அடிஅடியென அடித்து இறக்கி வைத்திருக்கிறார்கள் அரசியல்வாதிகளும், படித்தவர்களும் மற்றும் ஊடகங்களும். சிங்கள ஊடகங்கள் தொடர்ச்சியாக ஒரு பக்க சார்பான கருத்துகளையும் செய்திகளையும் தான் அளித்து வருகின்றன என்பது பொதுவான மனிதர்களின் நீண்டகால குற்றச்சாட்டு.

தமிழர் தரப்பை எடுத்துக் கொண்டாலும் இதே கதைதான். சிங்கள சமூகத்துக்கு எதிராக கொம்பு சீவி வைத்தால்தானே தமிழ் சமூகத்தின் வாக்குகளை கச்சிதமான சேகரிக்கலாம்! சிங்கள தரப்பிலோ கொம்பு சீவுவதற்கு தமிழகத்தை கூர்மையான கத்தியாக பாவிக்கிறார்கள். ஒரு காலத்தில் வறுமை மற்றும் வணிக காரணங்களின் பேரில் இலங்கைக்கு தமிழர்கள் அனுமதி பெற்றும் பெறாமலும் வரத்தான் செய்தார்கள். 1967இல் தமிழக ஆட்சியைக் கைப்பற்றிய தி.மு.க. அரசும் பின்னர் அ.தி.மு.க. அரசும் ஏராளமான திட்டங்களை வகுத்து விவசாயத்தையும் தொழில்துறையையும் பிரமாண்டமான அளவுக்கு வளர்ந்தெடுத்தன. ஐ.டி.தொழில்துறை பெரிய அளவில் முன்னேற்றம் கண்டது. இன்று வறுமை அங்கு பிய்த்து பிடுங்கும் அளவில் இல்லை. உழைப்பதற்கான வாய்ப்புகள் ஏராளம். அப்படியும் கூட அங்கே ஏழைகளை ஆதரிப்பதற்காக இன்றைக்கும் நியாய விலைக் கடைகள் இயங்குகின்றன. இலவசமாக அரிசி, குடும்ப அட்டைக்கு மளிகைப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.

ஐம்பது வருடங்களின் பின்னர் தமிழகம் இந்தியாவின் முன்னணி வகிக்கும் மாநிலங்களில் ஒன்றாகக் திகழ்கிறது. கழக அரசியல்வாதிகள், தலைவர்கள் லஞ்ச, ஊழல் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டது உண்மைதான். அதேசமயம் அந்தக் குற்றவாளிகளைத் தேடிக் கண்டுபிடித்து தண்டனை வழங்கும் பொறிமுறையும் அங்கே இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது. சமீபத்திய உதாரணம் ஜெயலலிதா. குற்றவாளியாகவே அவர் இறந்தார்.

இலங்கையில் கடந்த எழுபது ஆண்டுகளில் எந்தவொரு அரசியல்வாதியும் அல்லது உயர் அரச அதிகாரியும் லஞ்ச, ஊழல், முறைகேடுகளில் சிக்கி குற்றவாளியாக சிறை சென்றதுமில்லை. அவ்வாறு சென்றிருந்தாலும் மன்னிப்பளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டதை நாம் அவதானிக்கவே செய்தோம். கடந்த ஐம்பது ஆண்டுகளில் தமிழகம் பெருவளர்ச்சி அடைந்து பொருளாதார ரீதியாக ஸ்திர நிலையை அடைந்திருக்கிறது.

அதே ஐம்பது ஆண்டுகளில் இலங்கை பின்னடைவை சந்தித்து, லஞ்ச லாவணியங்களில் திளைத்த அரசியல்வாதிகளினால் மொட்டையடிக்கப்பட்ட நாடாக மாறியுள்ளது.

வீட்டு வாசற்படியில் கோட்டான் கூவிய பின்னர்தான் சிங்கள சமூகம், குறிப்பாக இளைஞர் சமூகம் விழித்துக் கொண்டுள்ளது தாமதமாகத்தான்.

2009யுத்தத்தால் வன்னிப் பெருநிலத்து மக்கள் சின்னா பின்னமாக்கப்பட்ட சமயத்தில் தமிழகத்தில் இருந்து நிவாரண பொருட்கள் கொழும்புக்கு அனுப்பப்பட்டன. அவை பாதிக்கப்பட்ட மக்களுக்காக அனுப்பப்பட்டவை. தற்போது தமிழக மக்கள், கடுமையான பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கியிருக்கும் ஒட்டு மொத்த இலங்கையர்களுக்காகவும் நிவாரண பொருட்களை அனுப்பி வைத்துள்ளனர். மொத்தம் 123கோடி ரூபா (இந்திய) பெறுமதி கொண்ட பொருட்களே சேகரிக்கப்பட்டு மூன்று சரக்கு கப்பல்களில் அவை ஏற்றப்பட்டன.

கடந்த 22ம் திகதி கொழும்பு துறைமுகம் வந்து சேர்ந்த 'டொன்பின் 99' என்ற கப்பலில் ஒன்பதாயிரம் மெற்றிக்தொன் அரிசி, 50மெட்றிக் தொன் பால்மா, 55வகையான மருந்து வகைகளைக் கொண்ட 25மெட்றிக் தொன் மருந்து பொருட்கள் என்பனவே முதல் தொகுதியாக வந்தடைந்த நிவாரண பொருட்களாகும்.

சென்னை துறைமுகத்தில் இக்கப்பலை தமிழக முதல்வர் கொடி அசைத்து அனுப்பி வைத்தார். தமிழக அரசின் இந்த நிவாரண பொருட்களை இலங்கையில் உள்ள இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசிடம் உத்தியோகபூர்வமாக ஒப்படைத்தார். இவை இரண்டு பில்லியன் இலங்கை ரூபா பெறுமதி கொண்டவை. மேலும் இரண்டு கப்பல்கள் வரவுள்ளன. மூன்றாவது கப்பல் ஜூன் 5ம் திகதி சென்னையில் இருந்து புறப்படுகிறது. தமிழக அரசின் இந் நிவாரண உதவியின் மொத்தப் பெறுமதி 16மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். 40ஆயிரம் மெட்றிக் தொன் அரிசி, 500மெட்றிக் தொன் பால்மா மற்றும் மருந்துகள் இவற்றில் அடக்கம்.

தமிழக அரசு நிவாரண பொருட்களை இலங்கைக்கு அனுப்பத் தீர்மானித்தபோது அது தமிழர்களுக்கு மட்டுமே என்ற முடிவு செய்யப்பட்டிருந்தது. அதற்கு இலங்கையில் இருந்தே எதிர்ப்பு கிளம்பியது. தமிழர்களுக்கு மட்டுமே உதவி என்பது சரியல்லளூ இன்றைய பொருளாதாரக் கஷ்டம் அனைத்து இலங்கையருக்கும் பொதுவானது. எனவே அனைவரும் பயனடையம் வகையில் பொருட்களை அனுப்பி வையுங்கள் என்று இங்கிருந்து விடுக்கப்பட்ட கோரிக்கையை தமிழக முதல்வர் ஸ்டாலின் ஏற்றுக் கொண்டார். எங்களுக்கு மட்டுமல்ல; அனைத்து இலங்கையருக்கும் உதவுங்கள் என விடுக்கப்பட்ட கோரிக்கையைக் கேட்டு தான் நெகிழ்ந்து போனேன் என்று அவர் கூறவும் செய்தார்.

இதேசமயம் இலங்கையில் நிலவும் கடும் மருந்து தட்டுப்பாட்டை ஓரளவுக்கு குறைக்கு வகையில் இந்தியா 25தொன் மருந்து வகைகளை அன்பளிப்பாக வழங்கியுள்ள செய்தியும் தற்போது வந்துள்ளது. இம் மருந்து வகைகளின் இலங்கை பெறுமதி 26கோடி ரூபாவாகும். இது தவிர இந்திய மத்திய அரசு இதுவரை ஐந்து பில்லியன் டொலர்களுக்கும் மேல் கடனாக வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த அளவுக்கு வேறெந்த நாடும், இலங்கைக்கு இக்கஷ்ட காலத்தில் உதவவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எந்த இந்தியாவை இலங்கை பெரும்பான்மை சமூகம் தவறான கண்ணோட்டத்தில் பார்த்து வந்ததோ அல்லது அவ்வாறு பார்க்க பழக்கப்படுத்தப்பட்டதோ அதே நாடு தான் இன்றைக்கு இலங்கையின் உற்ற தோழனாக உதவியும் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 22ம் திகதி கொழும்பு வந்தடைந்த முதல் கட்ட நிவாரண பொருட்களை வடக்கு, கிழக்கு, நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் ஏற்கனவே ஆரம்பமாகி விட்டதாகவும் யாழ்ப்பாணத்துக்கு அரிசியும் பாலும் அனுப்பப்பட்டு விட்டதாகவும் எம்முடன் பேசிய செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

'மூன்று கப்பல்களிலும் வரும் பொருட்கள் மொத்தம் 40லட்சம் குடும்பங்களை சென்றடையும் வகையில் திட்டமிட்டுள்ளோம். தோட்டங்களில் விநியோகிப்பதில் பிரச்சினை எழாது.

ஒரு குடும்பத்துக்கு பத்து கிலோ அரிசி என்ற வகையில் பங்கீடு செய்யப்படவுள்ளது. குழந்தைகள் உள்ள குடும்பத்துக்கு பால்மா வழங்கப்படும். வடக்கில் குடும்ப அட்டை வழக்கில் உள்ளதால் வருமானம் குறைந்த குடும்பங்களை தெரிவு செய்வதில் சிக்கல் இருக்காது. நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு அரச அதிபர் ஊடாக குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டு தமிழக நிவாரண உதவி பகிர்ந்தளிக்கப்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது' என்று சொல்கிறார் செந்தில் தொண்டமான்.

கள்ளத்தோணி என எள்ளிநகையாடப்பட்ட தமிழகத்து தமிழர்களின் சட்டமன்ற பிரதிநிதிகள் 123கோடி ரூபா நிவாரண உதவிகள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்ற முதல்வரின் தீர்மானத்தை ஏகமனதாக அங்கீகரித்திருந்தார்கள். அங்கே யாசகர்களும் இந் நிதிக்கு பணம் வழங்குகிறார்கள். மொய் விருந்து நடத்தியும் பணம் சேகரித்துத் தருகிறார்கள். இலங்கை குடிமக்களுக்கு உதவ வேண்டும் என்ற உயிர்த்துடிப்பை எம்மால் உணர முடிகிறது.

இலங்கை வீழ்ந்துவிட்டது. அதில் இரண்டாவது கருத்து கிடையாது. இப்போது இது யாசிக்கும் காலம். எவ்வளவு காலத்துக்கு இது நீடிக்கும் எனத் தெரியவில்லை. எம்மிடம் ரூபாவும் இல்லை, டொலரும் இல்லை என்பதே யதார்த்தம். வெளிநாடுகளில் வாழ்வோர், தொழில்கள் செய்வோர் முதலில் இலங்கைக்கு பணம் அனுப்ப வேண்டும். இண்டாவது, உல்லாசப் பயணிகள் இலங்கைக்கு பெருமளவில் வருகை தர வேண்டும். எல்லாம் பற்றாக்குறையாக காணப்படும் இக் காலத்தில் வெளிநாட்டுப் பயணிகள் இந்நாட்டுக்கு வருவார்களா என்பது பெரியதொரு கேள்வி. மூன்றாவதாக பெருமளவு வெளிநாட்டு முதலீடுகள் வந்துசேர வேண்டும். கனரக கைத்தொழில் துறையிலும் தொழில்நுட்பத் துறையிலும் பெருமளவு முதலீடு செய்யப்பட வேண்டியது அவசியம்.

இவை எல்லாம் உடனடியாக நடந்துவிடப் போவதில்லை. கடந்த 50ஆண்டுகளில் எந்தவொரு ஆசிய நாடும் வங்குரோத்தடைந்ததில்லை.

இன்று இலங்கை தோற்றுப்போன நாடு. நாம் எழுந்து கொண்டாலும் கூட அச்சமயத்தில் எம்மைச் சுற்றியுள்ள அனைத்து நாடுகளுமே அபிவிருத்தியில் வெகுதூரம் சென்றிருக்கும். பிரதமர் மோடி ஐரோப்பிய ஒன்றியத்துடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை ஒன்றை செய்து கொள்ளவுள்ளார். மேலும் குவாட் நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் இந்தியா, இந்தோ பசுபிக் நாடுகளுடன் வர்த்தக உடன்படிக்கைகளைச் செய்து கொள்ளவுள்ளது.

இலங்கை அரசியல்வாதிகள் வாய்ப்பந்தலுடன் நிற்க, ஏனைய பிராந்திய நாடுகள் காரியத்தில் கண்ணாக உள்ளன.

இலங்கையின் மிகப்பெரிய குறைபாடு, அது எவற்றை எல்லாம் களைந்திருக்க வேண்டுமோ அவற்றை எல்லாம் இன்றைக்கும் கட்டிப்பிடித்துக் கொண்டிருப்பதுதான். இலங்கையின் பிரதான பலவீனம் அதன் மதவாதம். அடுத்தது இனவாதம். இவை இண்டும் அரசியல்வாதிகளை வளர்த்தெடுக்க உதவியதே தவிர நாட்டின் அபிவிருத்திக்கு எள்ளளவும் உதவவில்லை.

இனிமேலாவது இந்த பலன்தராத உத்திகளில் இருந்து அரசியல்வாதிகள் மாறவேண்டும். ஏனெனில் மக்கள் விழித்துக் கொண்டிருக்கிறார்கள். பழைய ஏமாற்று வேலைகள் எல்லாம் அத்துப்படி அவர்களுக்கு தமிழக நிவாரண உதவியை எடுத்துக் கொண்டால் அதற்கு போதுமான ஊடக வெளிச்சம் தரப்பட்டதாகத் தெரியவில்லை. குறிப்பாக சிங்கள ஊடகங்களில். தமிழக மக்களின் உதவிக்கரம் பற்றி போதிய தகவல்கள் சிங்கள ஊடகங்களுக்கு தரப்பட்டிருப்பதாகவும் அறிய முடியவில்லை. அந்த மனிதாபிமான உதவிக்கு அதிகபட்ச ஊடக வெளிச்சம் தரப்பட வேண்டும் என்பதற்கான நியாயங்களை நாம் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம். இதே சமயம் இப் பொருட்களின் பங்கீடு தொடர்பாக செந்தில் தொண்டமானிடம் மேலதிக விவரங்களைப் பெறுவதற்காக அவருடன் தொடர்பு கொள்ள பல தடவைகள் முயன்றபோதிலும் அது சாத்தியப்படவில்லை.

அருள் சத்தியநாதன்

Comments