ஆயிஷா: சேற்றில் புதைந்த செந்தாமரை | தினகரன் வாரமஞ்சரி

ஆயிஷா: சேற்றில் புதைந்த செந்தாமரை

நமது நாட்டிலே ஏற்பட்டுள்ள அரசியல் கொந்தளிப்பு, பொருளாதார நெருக்கடி, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, கேஸ் தட்டுப்பாடு, எரிபொருள் தட்டுப்பாடு, என இன்னோரன்ன பிரச்சினைகளைமையப்படுத்தி செய்திகள் ஒன்றன்பின் ஒன்றாக கைபேசியில் குறுஞ்செய்திகளாக வந்து மறைந்து கொண்டிருந்தன. திடீரென வித்தியாசமான செய்தி ஒன்று வரவே திடுக்குற்றேன். அச்செய்தி இப்படி இருந்தது

"பண்டாரகம, அட்டுலுகமயில் கோழி இறைச்சி வாங்க கடைக்குச் சென்ற ஒன்பதுவயது சிறுமியைக் காணவில்லை."

இச்செய்தி காட்டுத்தீபோல நாடெங்கும் பரவியது.

நமது நாட்டில் உயிர்களுக்கு பெறுமதியே இல்லாதுபோன இக்காலகட்டத்தில் அதிலும் நாளைய வச்சிரத்தூண்களான இன்றைய சிறார்களை கொடூரமாக கொலைசெய்யப்படுவது முடிந்தபாடில்லை இதற்கு முற்றுப்புள்ளி எப்போது  என்று நினைக்க தோன்றுகிறது,

1984இல் சமன்குமார, 1999  இல் அளுத்தகம சதீபலக்க்ஷான், 2015  இல் சேயா சந்தெவுமி, 2015  இல் யாழ்ப்பாணம் வித்யா, செவ்வந்தி, பியோமி, இஷாலினி, என்ற பட்டியலில் தான் அட்டுலுகம ஆயிஷாவும் இணைகிறாள். இந்த சூடுதணிய முன் மற்றுமொன்று,  30ஆம் (30.05.2022) திகதி வவுனியாவின் கணேசபுரத்தில் ராஜேந்திரன் யதுர்ஷி பாழடைந்த கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டாள் என்ற செய்தி வெளிவந்தது.

 

அன்று வெள்ளிக்கிழமை

27  ஆம் திகதி..

அட்டுலுகமை முஸ்லிம் கொலனியைச் சேர்ந்த பாத்திமா ஆயிஷா அக்ரம் என்ற ஒன்பது வயது சிறுமிபோன இடம் தெரியவில்லை.

அட்டுலுகமை அல்கஸ்ஸாலி ஆரம்ப வித்தியாலயத்தில் தரம் நான்கில் கல்வி கற்பவள் சொல்லிக்கொடுக்கும் விடயங்களை நுணுக்கமாக அவதானித்து புரிந்து கொள்ளக் கூடியவர். வசீகரமான அழகு. இவள் குடும்பத்தில் மூன்றாவது பிள்ளை. அண்ணன் இம்முறை க.பொ.த. சாதாரணதர பரீட்சை எழுதியவர். இரண்டாவதும் ஒரு அண்ணன் ஆண்டு பத்தில் பயில்பவர். கொலை செய்யப்பட்ட ஆயிஷா மூன்றாவது. நான்காவது மூன்றுமாதக் குழந்தை. ஆயிஷாவின் தந்தை கூலி வேலை உட்பட ஏதாவது செய்து வீட்டு செலவைத்தேடி வாழ்க்கை நடத்துபவர், இடையில் கொடிய போதைபொருள் பழக்கத்திற்கு அடிமையானவர்..

தனது குடும்பநிலை கண்டும், தந்தையின் நிலை கண்டும் ஆயிஷா பெரிதும் மனம் வருந்தினாள். கவலையோடு வாழ்க்கை நடத்தும் தாயை நினைத்து வருந்தி தாய்க்கு மேலும் கவலையை கொடுக்காமல் உதவிசெய்து ஒத்தாசையாக விளங்கினாள். சம்பவதினம் பரீட்சைக்கு செல்லும் அண்ணனுக்கு தேநீர் தயாரித்துக் கொடுத்து அனுப்பியதாக குடும்பத்தினர் கூறினார். 

அட்டுலுக்கமை வழமையாக வெள்ளிக்கிழமைகளில் பெருநாள் போன்று காட்சியளிக்கும். அதிகமான வர்த்தகர்கள் வியாபாரத்தில் ஈடுபட மாட்டார்கள்.

சம்பவதினம் ஒரு வெள்ளிக்கிழமை. ஆகையால் ஏனைய வீடுகளைபோல் நமது வீட்டிலும் ஜும்மா தினத்தில் கோழிக்கறி ருசியாக சமைக்க வேண்டும் என்று ஆசைகொண்டு காலை பத்துமணியளவில் தாயிடம்  300  ரூபாகேட்டுக்கொண்டு 250  கிராம் கோழி இறைச்சி வாங்க வீட்டில் இருந்து சுமார் 350  மீற்றர் தூரத்தில் உள்ள கோழிக்கடைக்கு போனாள் ஆயிஷா. ஆயிஷா கோழி இறைச்சி வாங்கிக்கொண்டு வீடு திரும்புவது எதிரில் உள்ள வர்த்தகநிலைய சிசிடிவீ கமராவில் பதிவாகி இருந்தது. அச்சிறுமி அங்கிருந்து திரும்பும்போது ஒரு வான் அங்கு குறுக்கிட்டு செல்வதால் , அந்த வானில் வந்தவர்கள் சிறுமியை கடத்திக்கொண்டு சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தை சமூக வலைத்தளங்களில் பலரும் பதிவிட்டனர்.  

கோழி இறைச்சி வாங்கச்சென்ற சிறுமி மாயமாக மறைந்தது அனைவரையுமே வியப்புக்குள்ளாக்கியது. இதைக் கேள்வியுற்ற அனைவரும் சிறுமி ஆயிஷாவின் வீட்டுக்கு வந்தனர். ஆரம்பத்தில் கூறியதுபோல் வெள்ளிக்கிழமை என்பதால் பலரும் கூடினார்கள்.

ஆயிஷாவின் தயார் உட்பட பலரும் பல இடங்களில் தேடிவிட்டு இறுதியில் பண்டாரகம பொலிஸ் நிலையம் சென்று முறைப்பாடு செய்தனர். உடன் செயல்பட்ட பொலிசார் மோப்ப நாயை வரவழைத்து பொதுமக்களின் தேடியதிலும் பலன் கிடைக்கவில்லை.

அட்டுலுகமை பெரிய பள்ளிவாசல் முன்னால் உள்ள ஒழுங்கையில் சுமார் 150  மீற்றர் அளவில் சென்று வலதுபக்கம் திரும்பினால் ஆயிஷாவின் சிறிய வீடு வரும். பெரிய பள்ளிவாசல் முன்னால் ஒழுங்கை ஆரம்பமாகும் இடத்தில் சிறுமி பேக்குடன் நிற்பதைக்கண்ட அயலவர் ஒருவர் விசாரித்தபோது அப்பா வரும்வரை நிற்கிறேன் என்று சிறுமி பதிலளித்துள்ளார்.

காணமற்போன ஆயிஷா பாணந்துறை, புறக்கோட்டைப் பகுதிகளில் காணப்பட்டதாக போலித் தகவல்கள் கிடைக்கப்பெற்ற போது பாணந்துறை, புறக்கோட்டைப் பொலிசார் அதையும் விசாரித்தனர்.

அட்டுலுக்கமை பெரியபள்ளிக்கு முன்உள்ள வீதிக்கு அருகில் ஆரம்பமாகும் காட்டுப்பகுதி ஆயிஷா வசித்த கொலனி வரை விரிந்திருந்தது. காட்டுப்பகுதியோடு ஒட்டியதாக கொலனிக்கு செல்லும் ஒழுங்கை. இதில் காட்டுப்பக்கமாக  மரக்கறி விளைச்சல் செய்யப்பட்டிருந்தது. அந்த விளைச்சல் பண்ணிய இடத்துக்குச் சென்றால் அக் காட்டின் அடர்த்தியான நடுப்பகுதியை அடையலாம்.  

காட்டுப்பகுதியில் சந்தேகம்கொண்ட பொலிசார் ஊர்மக்களின் ஆதரவோடு காட்டுக்குள் தேடும் பணியை ஆரம்பித்தனர். அந்த அடர்த்தியான காட்டில் நீர்நிரம்பிய இடத்தில் சதுப்பு நிலத்தில் சிறுமியின் கால்கள் தெரிந்தன. இதைக்கண்ட பலரும் முண்டியடித்து கொண்டு செயல்பட்டனர். உடல் மீட்கப்பட்டபோது முகம் சேற்றில் புதைந்த நிலையில் காணப்பட்டது.

சிறுமியின் கொலை செய்யப்பட்டு விட்டாரா என்பது தெரிந்ததுமே அட்டுலுகம கிராம மக்கள் சோகத்தில் மூழ்கினர். மீட்கப்பட்ட சிறுமியின் உடலைப்பார்க்க ஏராளமானோர் அந்த அடர்த்தியான காட்டுக்குள் கூடினர்.சிறுமியின் சடலம் இருந்த இடத்திற்கு நேரடியாக வருகைதந்த பாணந்துறை பதில் மாஜிஸ்திரேட் இந்திராணி உடவத்த அந்த ஸ்தலத்திலே விசாரணைகளை மேற்கொண்டார். பாணந்துறை ஆதார வைத்தியசாலை உதவி மருத்துவ அதிகாரி ரொஷான் விஜேதுங்கவும் நேரடியாக வருகைதந்து விசாரணைகளை மேற்கொண்டார்.

பிரேதத்தை பாணந்துறை ஆதார வைத்தியசாலை பிரேத அறைக்கு அனுப்புமாறும் அங்கு பிரேத பரிசோதனை மேற்கொண்டு நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் பதில் மாஜிஸ்திரேட் பொலிசாருக்கு உத்தரவிட்டார்.

பண்டாரகம பொலிசாருடன் அலுபோமுல்லை, பாணந்துறை வடக்கு ஆகிய பொலிஸ் நிலைய அதிகாரிகளும் புலனாய்வுத்துறை அதிகாரிகளும் ஈடுபடுத்தப்பட்டதாக பாணந்துறை பொலிஸ்பிரிவின் சிரேஷ்ட அத்தியட்சகர் சமந்தாவெதகே தகவல் தெரிவித்தார். இதையடுத்து ஜனாதிபதியின் டுவிட்டர் பக்கத்தில் அனுதாபத்தை தெரிவித்ததுடன் குற்றவாளியை உடனடியாக கண்டுபிடித்து சட்டத்தின் முன்நிறுத்துமாறு அறிவுரை வழங்கி இருந்தார்.

ஜனாதிபதியின் பணிப்பை அடுத்து இரகசியப் பொலிசார், பாணந்துறை பொலிஸ் பிரிவின் விசேட புலனாய்வுப் பிரிவினர், களுத்துறை விசேட பொலிஸ் பிரிவு , பண்டாரகம பொலிஸ், என்று பல கோணங்களில் விசாரணைகளை பொலிசார் மேற்க்கொண்டனர்.

ஆயிஷாவின் தந்தை உட்பட அயலவர்கள் மற்றும் சந்தேகத்திடற்கிடமானவர்கள் என்று  20க்கும் மேற்பட்டவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டன. வீடுகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

விசாரணைக்கு உட்படுத்தப்பட ஆயிஷாவின் தந்தை தனது போதைப்பொருள் பாவனையால்தான் இந்த அநியாயம் நடைபெற்றதாகவும் எனது தவராலே மகளை இழந்ததாகவும் வருந்தி அழுதார்.

கடந்த சனிக்கிழமை சந்தேகத்தின் பேரில் கைதான இருவருள் ஒருவர்மீது பொலிசாரின் சந்தேகம் வலுவானது. அவரிடம் விசாரணைகளை பொலிசார் தொடர்ந்து மேற்கொண்டனர். அயல் வீடொன்றில் வசித்த 27வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையேயையே பொலிஸார் கடுமையாக சந்தேகித்தனர்.

இச்சந்தேகநபரின் வீட்டிலிருந்துதான் சேறுபடிந்த சாரம் ஒன்றை கட்டிலுக்கு அடியில் இருந்து பொலிசார் மீட்டனர். இவரது கழுத்து உட்பட மேனியில் பல இடங்களில் நகக்கீறல்கள் காணப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர். சந்தேகநபரின் மனைவி காலி நகரைச் சேர்த்தவர் என்றும் அவர் மீண்டும் கர்ப்பமுற்றுள்ளார் என்பதும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

இச்சந்தேகநபர் ஆயிஷாவின் தந்தையைப்போல் போதைப்பொருள் (ஐஸ்) பாவனையுள்ளவர் என்றும் இருவரும் ஒன்றாக பாவனையில் ஈடுபடுகிறவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

இச்சிறுமியை தேடும்பணியில் ஊரார் ஈடுபட்டிருந்தபோது சந்தேகநபரும் சுறுசுறுப்பாக பற்றைகளை துப்பரவு செய்த்து உதவினா். என்னும் பிரேதம் இருந்த பக்கமாக நாட்டம் கொள்ளாமல் எதிர்த்திசையிலே அவர் நாட்டம் கொண்டிருந்தார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

தான்செய்த குற்றத்தை ஒப்புக்கொண்ட சந்தேகநபர் கொலைசெய்த விதத்தையும் பொலிசாரிடம் விபரித்துள்ளார்.

சிறுமி கோழி இறைச்சி வாங்கிக்கொண்டு வந்த பள்ளிக்கு முன்னால் உள்ள ஒழுங்கையால் நடந்து சனநடமாட்டம் இல்லாத விளைச்சல் செய்ந்திருந்த இடத்துக்கு வந்தபோது சிறுமியை இழுத்துச் சென்று காட்டின் அடர்ந்த மத்திய பகுதியை அடைந்ததாக பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

அடுத்தநாள் அதாவது  30ஆம் திகதி ஆயிஷாவின் பிரேதம் பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. பாணந்துறை வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி எச்.கே.ஜே.விஜேவீர, உத்பல ஆட்டிக்கல, அனுர ஆகிய மூவர்கொண்ட மருத்துவ குழுவினரால் இப்பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது.

சிறுமியின் முகத்தை சேற்றில் அழுத்தும்போது சிறுமி உயிருடன் இருந்துள்ளார். எனவே சேற்றுநீரில் முகத்தை பல தடவைகள் அழுத்திய போது  சிறுமி அவசரமாக மூச்சை உள்வாங்க வேண்டியிருந்தது. இச் சமயத்தில் மூச்சுடன் நீர் கலந்த சேறு மூக்கு மற்றும் வாய் வழியாக உள்ளே சென்றுள்ளதாகவும் இது நுரையீரல் உட்பட உள் உறுப்புக்களுக்கு போய் சேர்த்துள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் மூச்சு திணறி மரணம் சம்பவித்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தோடு சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படவில்லை என்றும், அது தொடர்பான எந்த தடயங்களும் காணப்படவில்லை என்றும் வைத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்படியெனில் இக்கொலைக்கு காரணம் என்ன என்பது புரியாத புதிராகவே உள்ளது. சிலவேளை சந்தேகநபர் செய்திருக்கக் கூடிய தவறுகளை/ குற்றங்களை சிறுமி கண்டிருக்கக் கூடும். அவற்றை சிறுமி வெளியே சொல்லிவிடலாம் என்ற அச்சத்தால் இக் கொலை நிகழ்ந்ததா என்ற கேள்வி உள்ளது.

இக்கொலை தொடர்பில் அதே கொலனியைச் சேர்ந்த முஹம்மது பாரூக் என்பவரே பொலிசாரால் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டவர். இவர் நாட்டாமி, கொத்துரொட்டி பாஸ் போன்ற தொழில்களை செய்துவந்தவர். பின்னரேயே போதை வஸ்துக்கு அடிமையானார். சமீப காலத்தில் இரண்டு வீடுகளில் புகுந்து பொருட்களை திருடிச் சென்றிருப்பதாகவும் பொலிஸார் தகவல் தெரிவிக்கின்றனர். இவரை இரண்டு நாட்கள் தடுத்துவைத்து விசாரணை செய்ய பொலிசாருக்கு அனுமதியை மாஜிஸ்திரேட் சென்ற  30ஆம் திகதி வழங்கினார். அதன்படி மீண்டும் சென்ற முதலாம்திகதி புதனன்று சந்தேகநபரை ஆஜர்படுத்தியபோது சந்தேகநபரை எதிரவரும் ஒன்பதாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு பாணந்துறை பிரதான மாஜிஸ்திரேட் ஜயருவான் திசாநாயக்க உத்தரவிட்டார்.

எம். கே. எம். அஸ்வர்
படங்கள்  : மொறட்டுவை மத்திய விசேட நிருபர்

 

Comments