பட்டினி நிலையைத் தவிர்க்க சமூக பாதுகாப்பு வலைப்பின்னல் ஏற்படுத்தப்பட வேண்டும் | தினகரன் வாரமஞ்சரி

பட்டினி நிலையைத் தவிர்க்க சமூக பாதுகாப்பு வலைப்பின்னல் ஏற்படுத்தப்பட வேண்டும்

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் நடைபெறும் யுத்தம் முடிவின்றித் தொடர்கிறது. உக்ரைனில் மிகப்பெரிய அழிவுகள் ஏற்பட்டுவரும் நிலையில் ரஷ்ய இராணுவத்திற்கும் எதிர்பார்க்கப்படாதளவுக்கு மிகப்பெரும் சேதங்கள் நாளுக்கு நாள் எற்பட்டு வருகின்றன.

உக்ரைனுக்கு நேட்டோ நாடுகள் தொடர்ச்சியாக வழங்கிவரும் அதிநவீன இராணுவுத் தளவாடங்களும் பயிற்சிகளும் ரஷ்ய ஆக்கிரமிப்பு இராணுவத்திற்கு எதிராக தொடர்ந்து போராடும் வல்லமையை உக்ரைனுக்கு வழங்கி வருகிறது என்ற போதிலும் தமது தரப்பில் நாளாந்தம் சுமார் 60பேர் வரையில் உயிரிழந்து 600பேர் வரையில் காயப்படுவதாகவும் உக்ரைன் கூறுகிறது. ரஷ்யத்தரப்பிலிருந்து இதுபற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை. எனினும் உயிரிழப்புகளும் காயப்பட்டோர் எண்ணிக்கையும் உயர்வாக இருக்கும் என்று அமெரிக்கா கூறுகிறது. 

மேற்கு நாடுகளின் உதவிகள் சிலவாரங்களில் முடிவடைந்துவிடும் என ரஷ்யா எதிர்பார்த்தது. எனினும் மேற்கத்திய உதவிகள் உக்ரைனின் இராணுவரீதியிலான வீழ்ச்சியைத் தடுத்து வருவதாக ரஷ்யா குற்றம் சாட்டுகிறது. மூன்றாம் உலகப்போர் தொடங்கிவிட்டதாக அந்த நாடு முழங்கிவருகிறது. நேட்டோ உள்ளிட்ட மேற்குலக நாடுகள் தமது புதிய இராணுவ ஆயுதங்களை பரீட்சித்துப் பார்ப்பதற்கான சிறந்ததொரு களத்தை இப்போர் திறந்து விட்டிருக்கிறது. 

குறிப்பாக, துருக்கியின் ஆளில்லா சிறிய ரக ட்ரோன்கள் மற்றும் இங்கிலாந்தின் ஜவலின் ஏவுகணைகள் போன்ற சாதனங்கள் ரஷ்ய ராணுவத்திற்கு மிகப்பெரிய சேதங்களை ஏற்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.  

இதுதவிர உக்ரைனுக்கு தேவையான நிதியுதவிகளை மேற்கு நாடுகள் தொடர்ச்சியாக வழங்கி வருகின்றன. எனவே இது நடைமுறையில் ரஷ்யாவுக்கும் அமெரிக்காவை முதன்மையாகக் கொண்ட மேற்குலக நாடுகளுக்கும் இடையிலான போராக மாறிவருகிறது.  

ஐரோப்பாவில் உள்ள நாடுகள் புதிதாக நேட்டோ அங்கத்துவத்தைப் பெற விண்ணப்பித்துள்ள நிலையில் ரஷ்யா அவற்றை கடுமையாக விமர்சித்து வருகிறது. நேட்டோவின் விரிவாக்கம் தமது கொல்லைப்புறத்திற்கு வருவதை ரஷ்யா விரும்பவில்லை. பழைய சோவியத் ஒன்றியக் கனவில் மிதந்துவரும் ரஷ்ய அதிபர் உக்ரைனியப் போரில் எப்படியாவது வெற்றிபெற்றுவிட வேண்டும் என்பதில் முனைப்பாக இருக்கிறார்.  

முன்னரங்கப் போர்க்களத்தில் முக்கியமான தளபதிகள் பலரை இழந்தவிட்ட போதிலும் தளர்வுப்போக்கை ரஷ்யா காட்டுவதாக இல்லை. அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை இறுக்கமாக்கி ரஷ்யாவுக்கு நெருக்கடி கொடுக்க முனைந்தாலும் அந்நாட்டின் எரிபொருள் இறக்குமதியில் தங்கியுள்ள ஐரோப்பிய நாடுகள் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளன. மறுபுறம் ரஷ்யா உக்ரைனின் பிரதான துறைமுகங்களிலிருந்து ஏற்றுமதிகள் நிகழாவண்ணம் தடுத்துவருகிறது. உலக உணவு ஏற்றுமதியில் உக்ரைன் கணிசமான பங்களிப்பை வழங்கிவந்நது. அது தடைப்பட்டுள்ள நிலையில் ஆபிரிக்க நாடுகள் உணவுப் பற்றாக்குறையை எதிர்நோக்கி வருகின்றன.  

ஒருபுறம் ரஷ்யாவின் எரிபொருள் ஏற்றுமதி வர்த்தகம் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உலக சந்தையில் எரிபொருள் விலைகள் துரிதமாக அதிகரித்து வருகின்றன. மறுபுறம் உக்ரைனின் உணவு மற்றும் தானிய ஏற்றுமதிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் உலக சந்தையில் உணவுப் பொருள் விலைகள் அதிகரிப்பதோடு உணவுப் பொருள் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. எல்லா உலக நாடுகளிலும் பெற்றோலியப் பொருட்களின் விலைகள் துரிதமாக அதிகரித்துள்ளன. உணவுப்பொருட்களின் விலைகளும் ஏற்றம் கண்டுள்ளதுடன் நிரம்பல் சங்கிலியில் தொய்வு நிலை தோன்றியுள்ளது.  

குறிப்பாக, ஆபிரிக்க நாடுகளில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளமைக்கு உக்ரைனிலிருந்தான உணவுப்பொருட்கள் கிடைக்காமை காரணமாகக் கூறப்படுகிறது. எரிபொருள் விலையதிகரிப்பு உணவுப் பொருள் பற்றாக்குறை என்பவற்றோடு உலகளாவிய ரீதியில் ஒரு பொருளாதாரப் பின்னடைவை நோக்கி நாடுகள் சென்று கொண்டிருக்கின்றமை தெரிகிறது.  

உலகின் பல நாடுகளில் வறுமையும் பட்டினியும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டு வருவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். உலகில் எந்தவொரு யுத்தமும் எவருக்கும் வெற்றியை ஏற்படுத்துவதில்லை. மாறாக முழு உலகமுமே அதனால் பாதிக்கப்படுகிறது.  

நாட்டுத் தலைவர்களாக ஒரு சிலர் எடுக்கும் தீர்மானங்களும் அவர்களது வரட்டுப் பிடிவாதங்களும் பல மில்லியன் கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் என்பதை அவர்கள் ஒருபோதும் உணர்வதில்லை. மனித வரலாற்றில் இவ்வாறான சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் நிலையில் இடையில் அகப்பட்டுக்கொண்டு பாதிக்கப்பட்டவர்களின் அழுகுரல்கள் எவருக்கும் கேட்பதில்லை.  

உலக அரசியல் பொருளாதாரத் தளத்தில் நிலவும் இத்தகைய ஒரு நிச்சயமற்ற நிலையில் இலங்கை இப்போது எடுத்துவரும் நடவடிக்கைகள் அதன் பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வாக அமையுமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

கடந்த சிலமாதங்களாக இலங்கை அரசாங்கம் எடுத்துவரும் தீர்மானங்கள் காரணமாக சாதாரண பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் மிகப்பெரிய பொருளாதாரச் சுமையை ஏற்படுத்தியுள்ளது. முதலில் அரசாங்கத்தால் பின்பற்றப்பட்ட விலைக் கட்டுப்பாடுகள் முற்றாக நீக்கப்பட்டன. அதனால் பால்மா, கோதுமை, சீனி போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் பாரிய அதிகரிப்பைக் கண்டன.  

டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்து தேய்வடைந்தபோது விலைகள் மீண்டும் அதிகரித்தன. மேலே நாம் கண்ட உக்ரைன் ரஷ்ய யுத்தசுூழல் காரணமாக உலக சந்தையில் பொருள் விலைகள் அதிகரித்தபோது இங்கே மீண்டும் ஒரு தடவை பொருள் விலைகள் அதிகரித்தன.  

இப்போது இலங்கையில் வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்த வரி அதிகரிப்புகளைக் காரணம் காட்டி வியாபாரிகள் மீண்டும் பொருள் விலைகளை அதிகரித்துள்ளனர். அது மிக அண்மையில் மின்சாரக் கட்டணங்களும் போக்குவரத்துக் கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதனால் இன்னொரு தடவை விலைகள் எகிறியுள்ளன.  

சாதாரண மக்களால் கற்பனை செய்துபார்க்க முடியாதளவுக்கு பொருள் விலை அதிகரிப்பு காணப்படுகிறது. இலங்கை அரசாங்கம் முந்திரிக் கொட்டையாக சர்வதேச நாணய நிதியம் எவற்றையெல்லாம் செய்யச் சொல்லுமோ அவற்றையெல்லாம் செய்ய ஆரம்பித்துள்ளது.  

பொதுமக்கள் மீது அந்த நடவடிக்கைகள் ஏற்படுத்தும் பாதிப்புகள் பற்றி அது கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. இலங்கையின் பொருளாதாரத்தில் முக்கிய சீர்திருத்தங்களைச் செய்வது அவசியம் என்ற போதிலும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பினால் மிகமிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு குறைந்தபட்ச வாழ்க்கையையேனும் கொண்டு நடத்துவதற்குத் தேவையான அடிப்படை நிவாரணங்களையேனும் வழங்காமல் தொடர்ந்து சுமைகளைச் சுமத்திச் செல்வது நாகரிகமான ஒரு அரசாங்கத்தின் நடவடிக்கையாக அமையாது. 

அண்மையில் தமிழ் நாட்டு மக்களால் அன்பளிப்புச் செய்யப்பட்ட ஒரு தொகுதி உதவிப் பொருட்கள் நாட்டை வந்தடைந்தது. இப்போது அவை பங்கீடு செய்யப்பட்டு வருகின்றன. அதைத் தவிர மக்களுக்கு வேறெந்த உதவியும் செய்யப்பட்டதாகத் தெரியவில்லை.  

பாராளுமன்றத்தில் அண்மையில் ஏற்பட்ட வன்முறைகள் காரணமாக கொளுத்தப்பட்ட மாளிகைகள் பற்றி கண்ணீர்க்கதைகள் கூறப்பட்டனவேயன்றி பொதுமக்கள் கண்களில் வடியும் கண்ணீர் துயர் துடைக்க வழிகள் செய்யப்பட்டதாகத் தெரியவில்லை.  

இலங்கை மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டிய காலப்பகுதி இது. மாறாக பொருளாதாரச் சீர்திருத்தம் என்ற பெயரில் எல்லாச் சுமைகளையும் ஒரே தடவையில் மக்கள் மீது சுமத்துவது மனிதாபிமானமற்ற ஒரு நடவடிக்கையாகும்.  

தற்போது தீவிரமாகியுள்ள பொருளாதார நெருக்கடிகள் பற்றாக்குறைகளை ஓரளவுக்கு நீங்கி மக்கள் வாழ்க்கை ஓரளவுக்கு இயல்பு நிலைக்கு திரும்பும் வரையில் அவற்றை பிற்போடுவதுதான் நல்லது. சர்வதேச நாணய நிதியமும் பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் அதற்கென சமூக பாதுகாப்பு வலைப்பின்னல் ஒன்றை உருவாக்கிச் செயற்பட வேண்டும் என்றும் சிபாரிசு செய்கிறது.  

இந்த சமூக பாதுகாப்பு வலைப்பின்னலை உருவாக்கி அதை நடைமுறைப்படுத்தம் அதேவேளை விலைச் சீர்திருத்தம் வரிச் சீர்திருத்தம் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறுகிறது. நாட்டின் மக்கள் வாழ்க்கைச் செலவுச் சுமை அதிகரித்து பற்றாக்குறைகள் காரணமாக எரிவாயுவுக்காக பாதைகளில் படுத்துறங்கும் அவலநிலையின் மத்தியில் சமூகத்தின் பாதுகாப்பு பற்றி எதுவித கரிசனையும் கொள்ளாமல் தான்தோன்றித் தனமாக விலையதிகரிப்பு கட்டண அதிகரிப்பு மற்றும் விரி அதிகரிப்பு என்பவற்றை மேற்கொள்வது துப்பாக்கியைத் தன்பக்கம் நீட்டித் தன்னைத்தானே சுட்டுக்கொள்வதை ஒத்ததாகும்.     பட்டினி நிலையைத் தவிர்க்க

கலாநிதி
எம்.கணேசமூர்த்தி
பொருளியல்துறை,
கொழும்பு பல்கலைக்கழகம்

Comments