இன ஒற்றுமைக்கும் கல்வித்துறைக்கும் ஷம்ஸ் வழங்கிய பங்களிப்பு | தினகரன் வாரமஞ்சரி

இன ஒற்றுமைக்கும் கல்வித்துறைக்கும் ஷம்ஸ் வழங்கிய பங்களிப்பு

பன்முக எழுத்தாளர் எம்.எச்.எம். ஷம்ஸின் 20ஆவது நினைவு தினம் கடந்த வெள்ளிக்கிழமையாகும் (15). அதனை முன்னிட்டு இந்தக் கட்டுரை பிரசுரமாகிறது

ஷம்ஸ்  அன்றாடம் போராட்ட வாழ்க்கை தான் வாழ்ந்து வந்தார். எதிர்ப்புகளுக்கு  அவர் சாதுரியமாக பதில் கொடுத்தார். பெரும்பான்மையினரால் அவரது சமூகத்திற்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட போது சரியான பதிலடி கொடுத்து வந்துள்ளார். எந்த அறிஞரும் செய்யாத பணியை ஷம்ஸ் செய்திருக்கிறார்.

'எரிந்த பின்பு தான் தெரிந்தது அது சந்தனக் கட்டையென்று' கவிஞர் ஒருவரின் இந்த வரிகள் எம்.எச்.எம் ஷம்ஸை பொறுத்தவரை மிகவும் பொருத்தமானது  எனலாம்.

இலங்கையில் விரல் விட்டு எண்ணக் கூடிய பன்முக ஆற்றல் உள்ள எழுத்தாளர்களில் ஷம்ஸ் குறிப்பிடத்தக்க ஒருவர். 18-/19துறைகளில் தடம் பதித்துள்ளார். பாலர் கவிதை முதல் பாடல், சித்திரம், புகைப்படக் கலை, ஊடகத்துறை, விமர்சனம், கவிதை, சிறுகதை என  அவர் தடம்பதித்த நீண்ட பட்டியலை முன்வைக்கலாம்.

பல்வேறு பரிமாணங்களில் அவர் தன்னை வெளிப்படுத்தியிருந்தார். அவற்றில் கல்வித்துறைக்கு ஆற்றிய பணி மற்றும் இன ஒற்றுமைக்காக செய்த பணிகள்   பாரியன. அவை பாரிய அளவில் வெளிப்படுத்தப்படவில்லை.

முஸ்லிம் இலக்கியவாதிகள்   சகல சமூகத்துடனும் இணைந்து முன்னின்று செயற்பட்டதில் ஷம்ஸ் முக்கியமானவர். இஸ்லாமிய வரையறைகளுக்கு உட்பட்டு இஸ்லாமிய இலக்கியப் பரிச்சயத்தோடு நீண்ட போராட்டம் நடத்தியிருக்கிறார் அவர்.

பல எழுத்தாளர்கள் எழுதுவதோடு தமது பணி முடிந்தது என்று நினைக்கும் நிலையில் ஷம்ஸ் அதற்கு மாற்றமானவர். அவர் தனது இளவயது முதல் இயக்க ரீதியாக பலரோடு சேர்ந்து செயற்பட்டு வந்துள்ளார். ஆசிரியராக   தொழிற்சங்கவாதியாக இருந்தாலும் சரி

அஷ்ஷரா, பாமிஸி, செய்திமடல் போன்றவற்றில் பணியாற்றிய போதும் சரி, தினகரனில் பணியாற்றிய போதும் சரி ஷம்ஸ் என்ற பெயர் பரிணமிக்கும் ஆசையுடன் அவர் செயற்பட்டது கிடையாது. அனைவரையும் வளர்த்து விடும் உயரிய கொள்கை அவருக்கு இருந்தது. தென்னிலங்கையின்  கலை இலக்கியத் துறையில் தன்னிரற்ற நபராக இருந்தார் ஷம்ஸ்.

திக்குவல்லை கமால் தான்  இவரை எனக்கு அறிமுகம் செய்தார். சுமார்  40ஆண்டுகள் இவருடன்  அவருடன் பரிச்சயம் இருந்தது.  எழுத்தாளர்களாக மனித நேயத்தையும் தத்துவத்தையும் எழுதிக் கொண்டு உதாரண புருஷர்களாக உலகுக்குக் காட்டிக் கொண்டிருப்பதை விட செயலில் வாழ்ந்து  காட்டுவதில் அவர் விசேடமானவர்.

ஆசிரியராக இருந்த காலத்தில் சிறந்த ஆசிரியராக மாணவர்களுக்கு நண்பராக புதிய விடயங்களை அறிமுகம் செய்து வைப்பார். இலங்கையில் பல பாகங்களில்  அவர் கற்பித்துள்ளார். இன்றும் கூட அவர்  அங்கு   பேசப்படுகிறார். ஆசிரியராக  இருந்த காலம் அவர் கற்பித்த பாடசாலைகளுக்கு பொற்காலமாக இருந்துள்ளது.   அவர் எங்கு பணியாற்றினாலும் ஷம்ஸ் என்ற முத்திரை அங்கு நிச்சயம் பதியப்பட்டிருக்கும். பாடசாலை கல்விக்கு மேலதிகமாக மாணவர்களுக்கு இலக்கிய அறிவு, தமிழ் அறிவு என்பவற்றையும் அவர் புகட்டியது குறிப்பிடத்தக்கது.

தினகரனில் ஜவாத் மரைக்கார் தொகுத்து வழங்கிய குருபீடம், கல்விச்சுடர் ஆகிய வெளியீடுகள் மூலம் எனக்கு அவருடன் நெருங்கிய தொடர்பு உருவானது. 1998முதல் 2002வரை 5வருடங்கள் அந்த உன்னதமான பணி  முன்னெடுக்கப்பட்டது. 1964தினபதி சஞ்சிகையில் இவ்வாறான பக்கம் பிரசுரமாகியது. பிரதான பத்திரிகையில் இத்தகைய முயற்சிக்கு அர்ப்பணித்தது  வரவேற்கத்தக்கது. நான் அதிபராக இருந்த போது நானும் ஆக்கங்களை அனுப்பி பங்களித்திருக்கிறேன்.

நல்லிணக்கத்தை பற்றி பேசும் போதும்  ஷம்ஸ் கட்டாயம் பேசப்பட வேண்டிய ஒருவர். 'வெண்புறாவே' பாடல் நீண்டகாலமாக உயிர்வாழும் பாடல். இன ஐக்கியத்தை பேணுவதற்கு   அவர்  செய்த பங்களிப்பை எடுத்துக் கூறுவதற்கு இந்த பாடல் ஒன்றே போதுமானது.

இனங்களுக்கிடையில் இணைப்புப் பாலமாக அவர் செயற்பட்டார். அவரின் பன்முக ஆளுமைகளில் மொழிபெயர்ப்பும் முக்கிய ஒரு துறை. தமிழில்  நல்ல விடயங்களை சிங்களத்தில் வழங்கவும் சிங்களத்தில் நல்ல விடயங்களை தமிழில் வழங்கவும் அவர்  வழங்கிய பங்களிப்பு முக்கியமானது.  அவருக்கு சிங்கள மொழியிலும் நல்ல பரிச்சயம் இருந்தது.

ஷம்ஸ்  அன்றாடம் போராட்ட வாழ்க்கை தான் வாழ்ந்து வந்தார்.   எதிர்ப்புகளுக்கு  அவர் சாதுரியமாக பதில் கொடுத்தார். பெரும்பான்மையினரால் சமூகத்திற்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட போது சரியான பதிலடி கொடுத்து வந்துள்ளார். எந்த அறிஞரும் செய்யாத பணியை ஷம்ஸ் செய்திருக்கிறார்.

இவருடைய படைப்புகளில் ஒருசிலவே புத்தகமாக வெளியாகியுள்ளன. மகாகவியும் தானும் குறும்பாவில் முன்னோடி என்று இவர் சொல்வார்.  அதில் எந்த சந்தேகமும் கிடையாது.

ஆனால் ஷம்ஸின் குறும்பா மிகவும் ரசிக்கத் தக்கதாகவும் ஹாஸ்யம் மிக்கதாகவும்  இருக்கிறது. அவை  புத்தகமாக வெளியிடப்படவேண்டும். இவரின் ஆய்வுகள் பெட்டகமாக வேண்டும் என்பதே எனது அவா.

(கடந்த வருடம் சூம் தொழில் நுட்பம் மூலம் இடம்பெற்ற எம்.எச்.எம்.ஷம்ஸ் நினைவேந்தல் நிகழ்வில் அன்பு ஜவஹர்ஷா முன்வைத்த கருத்துக்களின் தொகுப்பு)

அன்பு ஜவஹர்ஷா

Comments