இலங்கையின் அரசியல் பாதையை திசைதிருப்பிய மக்கள் போராட்டம்! | தினகரன் வாரமஞ்சரி

இலங்கையின் அரசியல் பாதையை திசைதிருப்பிய மக்கள் போராட்டம்!

சுதந்திர இலங்கையில் கடந்த காலத்தில் பல்வேறு மக்கள் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு, ஆட்சி அதிகாரங்களை மாற்றுவதற்கு அவை பங்களிப்புச் செலுத்திய வரலாறு காணப்படுகிறது. இருந்தபோதும், ஆட்சியாளர்களுக்கு எதிராக தற்போது மக்கள் ஆரம்பித்த போராட்டம் அதிகாரத்தில் உள்ளவர்களை வெளியேற்றும் அளவுக்குப் பலம்மிக்க ஒன்றாக அமைந்து விட்டது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் எடுக்கப்பட்ட சில கொள்கைத் தீர்மானங்களால் ஏற்பட்ட பாதகமான சூழல் மற்றும் உலகப் பொருளாதார நெருக்கடியால் நாடு எதிர்கொண்ட சவால்கள் போன்ற பல்வேறு காரணங்களால் நாட்டில் உருவான மிக மோசமான வீழ்ச்சியினால்  மக்கள் போராட்டங்கள் ஆரம்பமாகின.

குறிப்பாக ஜனாதிபதி தனது பதவியில் இருந்து வெளியேற வேண்டும் என்பதை கோஷமாகக் கொண்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற மக்கள் எதிர்ப்புப் போராட்டங்கள் கடந்த ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் நிரந்தர போராட்டமாக முன்னெடுக்கப்பட்டன.

காலிமுகத்திடல் பகுதியில் ஜனாதிபதி செயலகத்துக்கு அருகில் போராட்டக்காரர்கள் கூடாரங்களை அமைத்து தங்கியிருந்து தொடர் போராட்டங்களை முன்னெடுத்தனர்.

'கோட்டா கோ கம' என இந்தப் போராட்ட இடத்துக்குப் பெயரிடப்பட்டது. இளைஞர்கள், கலைஞர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் தொடர்ச்சியாக இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதன் தொடர்ச்சியாக அலரி மாளிகைக்கு முன்னால் முன்னால் ஒன்றுதிரண்ட போராட்டக்காரர்கள், அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பதவி விலகக் கோரி மற்றுமொரு போராட்டத்தை ஆரம்பித்தனர்.

காலிமுகத்திடலுக்கு அருகில் ஆரம்பமான போராட்டம் ஒரு மாதத்தை எட்டியிருந்த நிலையில், கடந்த மே 09ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான அரசியல் தரப்பினர் அலரிமாளிகைக்கு முன்னாலிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதும், காலிமுகத்திடலில் இருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதும் தாக்குதல் நடத்தியிருந்தனர்.

இதற்குப் பதிலடிவழங்கும் வகையில், மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்து கொழும்புக்கு வந்தவர்கள் தாக்குதல்களுக்கு உள்ளானதுடன், அவர்களை ஏற்றி வந்த பல பஸ்களும் சேதப்படுத்தப்பட்டன. அவை தீவைக்கப்பட்டன. அது மாத்திரமன்றி மஹிந்தவுக்கு ஆதரவாக செயற்பட்ட பல்வேறு அரசியல்வாதிகளின் வீடுகளும் தீயிட்டு சேதமாக்கப்பட்டிருந்தன.

இவ்வாறான சூழ்நிலையில், பிரதமராகப் பதவி வகித்த மஹிந்த ராஜபக்ஷ கடந்த மே மாதம் 09ஆம் திகதி பதவி விலகியிருந்தார். அத்துடன் அப்போதிருந்த அமைச்சரவையும் இராஜினாமாச் செய்தது.

இருந்தபோதும் ஜனாதிபதியை பதவி விலகுமாறு கோரிய ஆர்ப்பாட்டங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்தன. இவ்வாறான நிலையில், கடந்த ஜுன் 09ஆம் திகதி முன்னாள் நிதியமைச்சராகவிருந்த பசில் ராஜபக்ஷ தனது தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்திருந்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகினாலும் செயற்பாட்டு அரசியலில் இருந்து விலகப் போவதில்லையென்றும் அவர் கூறியிருந்தார். இதுபோன்ற பதவி விலகல்களின் மத்தியில் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியை ஏற்றுக் கொண்டார்.

இதுபோன்ற அரசியல் அதிரடி மாற்றங்களுக்கு மத்தியில் எரிபொருள் பற்றாக்குறை, எரிவாயு பற்றாக்குறை போன்ற பல்வேறு சவால்களுக்கு சாதாரண பொதுமக்கள் தொடர்ந்தும் முகங்கொடுத்துக் கொண்டே வந்தனர். எரிபொருள் பற்றாக்குறை அதிகரித்து வாகனப் போக்குவரத்து வெகுவாகக் குறைந்தமையால் மக்கள் பல்வேறு அழுத்தங்களுக்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்பட்டது.

இவ்வாறு பல்வேறு சவால்களுக்கு பொதுமக்கள் முகங்கொடுத்துக் கொண்டிருந்த சூழ்நிலையிலேயே, கடந்த 09ஆம் திகதி பாரியதொரு ஆர்ப்பாட்டத்துக்கு அனைத்து மக்களையும் வருமாறு காலிமுகத்திடல் போராட்டக்காரர்களால் அழைப்பு விடுக்கப்பட்டது. இது தொடர்பான பிரசாரம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டது. பல்கலைக்கழக கல்விசார் சமூகம் மற்றும் பல்வேறு தொழிற்சங்கங்கள் இந்தப் பிரசாரத்தை மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்த்திருந்தன.

இந்தப் போராட்டத்தில் மக்கள் கலந்து கொள்வதைத் தடுக்கும் வகையில் கடந்த 08ஆம் திகதி இரவு கொழும்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொலிஸ் ஊடரங்குச் சட்டம் போடப்பட்டது. எனினும், பொலிஸ் ஊரடக்குச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கான அதிகாரம் பொலிஸ்மா அதிபருக்கு இல்லையென பல்வேறு சட்டத்துறை நிபுணர்கள் சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து மறுநாள் அதாவது 09ஆம் திகதி காலை 08மணிக்கு ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டது.

ஊரடங்குச் சட்டத்தைக் காரணம் காட்டி அன்றைய தினம் ரயில் போக்குவரத்தை முடக்குவதற்கான திட்டமும் போடப்பட்டிருந்தது. எனினும், அன்றைய தினம் அதிகாலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் ரயில் நிலையங்களில் குவிந்தனர். ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து ரயில சேவைகளை இயக்க வேண்டிய கட்டாயம் ரயில்வே திணைக்களத்துக்கு ஏற்பட்டது.

அதேநேரம், எரிபொருள் பிரச்சினையைக் காரணம் காட்டி தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபையின் தொழிற்சங்கங்கள் தமது போராட்டத்தைக் கைவிட்டு சேவையை ஆரம்பித்தன.

இதனால் ஏராளமான பொதுமக்கள் தன்னார்வத்துடன் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து கொழும்பை நோக்கி வந்தனர். எரிபொருள் நெருக்கடி காணப்படும் சூழ்நிலையிலும் ஏராளமானவர்கள் லொறிகளில் ஏறி கொழும்புக்கு வந்தனர்.

பல்வேறு நெருக்கடிகளாலும் அழுத்தங்களுக்கும், சவால்களுக்கும் முகங்கொடுத்துள்ள மக்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்த தன்னார்வத்துடன் சென்றதைக் காணக் கூடியதாகவிருந்தது.

சனிக்கிழமை காலை முதல் கொழும்பை வந்தடைந்த மக்கள் காலிமுகத்திடலில் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் ஒன்றுகூடினர். இவர்கள் பேரணியாக முதலில் ஜனாதிபதி செயலகத்தை நோக்கிச் சென்றனர். பொலிஸார், இராணுவத்தினர் பல்வேறு வீதித் தடைகளை அமைத்து இவர்களைத் தடுத்த போதும் ஆயிரக்கணக்கில் திரண்ட மக்கள் சகல தடைகளையும் மீறி ஜனாதிபதி மாளிகையைக் கைப்பற்றினர். இதன் பின்னர் அங்கிருந்து ஜனாதிபதி செயலகத்துக்குச் சென்ற அவர்கள், பாதுகாப்புத் தரப்பினரின் தடைகளையும் மீறிச் சென்று அதனையும் கைப்பற்றியிருந்தனர்.

இதன் தொடர்ச்சியாக கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரிமாளிகையும் ஆர்ப்பாட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்டது. முக்கியமான இடங்கள் ஆர்ப்பாட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து ஜனாதிபதி பாதுகாப்பான இடத்துக்குச் செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

இந்தப் போராட்டமானது இலங்கை வரலாற்றில் முக்கியமான ஒன்றாகப் பதிவாகி விட்டது. இதுவரை காலமும் முன்னெடுக்கப்பட்ட மக்கள் போராட்டங்கள் அரசியல் சாயம் பூசப்பட்டு அரசியல் கட்சிகளால் ஏற்பாடு செய்யப்பட்டவையாகவே இருந்தன.

எனினும், இம்முறை இடம்பெற்ற போராட்டங்கள் பொதுமக்களால் தன்னெழுச்சியுடன் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களாகவே அமைத்தன. அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் நாட்டின் எதிர்காலம் மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு மக்கள் மேற்கொண்ட எழுச்சிப் போராட்டமாகவே அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

சுதந்திர இலங்கையில் மாறிமாறி ஆட்சி நடத்திய அனைத்து அரசியல்வாதிகளுக்கும் இந்தப் போராட்டம் சிறந்ததொரு செய்தியைக் கூறியிருப்பதாகவே தெரிகிறது. மக்களுக்கான ஆட்சி அமைக்கப்பட வேண்டும் என்பதையே இந்தப் போராட்டம் உணர்த்தியுள்ளது. போராட்டத்தின் ஊடாக மக்கள் வழங்கிய செய்தியை சரியாகப் புரிந்து கொண்டு அரசியல்வாதிகளும் நடந்து கொள்வது காலத்தின் தேவை என்பது மட்டுமல்ல, நாட்டின் எதிர்காலத்துக்கும் இதுவே அவசியமாகும்.

 

Comments