1970களில் உணவுத் தட்டுப்பாடு இலங்கையில் ஏற்படக் காரணம் என்ன? | தினகரன் வாரமஞ்சரி

1970களில் உணவுத் தட்டுப்பாடு இலங்கையில் ஏற்படக் காரணம் என்ன?

1953ஹர்த்தால் இலங்கை அரசியலில் ஒரு புதிய பாதையைத் திறந்துவிட்டது. ஹர்த்தாலின் பின்னரும் அரிசி அரசியல் இலங்கையில் முக்கியத்துவம் பெற்றிருந்த போதிலும் மக்களின் அரசியல் சிந்தனையில் ஒரு மாற்றத்தையும் கொண்டு வந்தது.

காலனித்தவ பிரிட்டிஷ் ஆட்சி நாட்டை விட்டு நீங்கினாலும் முதலாளித்துவ ஆட்சி முறை நாட்டில் ஐ.தே.க மூலமாக தொடரும் என்பதை பிரித்தானியா தெரிந்து வைத்திருந்தது. ஆனால் அதுவரை அதிக மக்கள் கவனம் பெறாத இடதுசாரி கட்சிகளான பிலிப்குணவர்தனவின் மஹாஜன எக்சத் பெரமுன, என்.எம். பெரேராவின் சமசமாஜ கட்சி, பீட்டர் கெனமன் தலைமையில் செயல்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி என்பன ஹர்த்தாலின் பின்னர் மக்கள் மத்தியில் பெயர் பெற்ற கட்சிகளாக மாறின. இலங்கையின் வலதுசாரிகள் இதை விரும்பவில்லை.

1953இல் டட்லியின் இராஜிநாமாவையடுத்து பிரதமராக பதவியேற்ற சேர்.ஜோன் கொத்தலாவல ஒரு முதலாளித்துவாதி. ஏறக்குறைய ஒரு வௌ்ளைக்காரரைப் போலவே நடையுடை பாவனையுடன் வாழ்ந்தவர். அச் சமயம் ஐதே.கவில் இருந்து பிரிந்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி என்ற புதிய கட்சியை 1951ம் ஆண்டு எஸ்.டபிள்யூ. ஆர்.டீ. பண்டாரநாயக்க ஆரம்பித்தார். சிங்கள இனவாதத்தை அரசியலுக்கு அறிமுகம் செய்தவர் இவரே, சிங்களத்தை முறையாக எழுதவோ, வாசிக்கவோ தெரியாத இவரே, சிங்களம் மட்டுமே அரச மொழியாக, உத்தியோக மொழியாக இருக்க வேண்டும் என்ற கோஷத்தை முதலில் முன்வைத்து அதை அரசியல் கொள்கையாக முன்னெடுத்தவர். எனவே, பிரதமராக பதவி வகித்த ஜோன் கொத்தலாவலையை வீழ்த்துவதற்கு சரியான ஓர் ஆயுதமாக இனவாதம் பயன்படுத்தப்பட்டது. அவருக்குப் பின் இனவாதமும் மதவாதமும் என்னவெல்லாம் சாதித்து நாட்டைக் குட்டிச் சுவராக்கியது என்பது தனிக் கதை.

பண்டாரநாயக்கா 1959ம் ஆண்டு ஒரு பௌத்த துறவியினால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவருக்குப் பின் அவரது பாரியார் பிரதமராகப் பதவியேற்றார். பின்னர் 1965இல் ஐ.தே.கவிடம் ஆட்சியைப் பறிகொடுத்த ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க மீண்டும் 1970ம் ஆண்டு மிகப்பெரிய வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தார். அது வேலைவாய்ப்பின்மை தலைவிரித்தாடிய ஒரு காலக்கட்டம். அரிசி விலை உலகச் சந்தையில் அதிகரித்துக் காணப்பட்ட காலம், 1952ஹர்த்தாலின் எச்சங்கள் மக்களிடையே காணப்பட்ட காலமும் கூட இடதுசாரிகளுடன் இணைந்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தேர்தலில் இறங்கியதால் இந்த சோஷலிச அணியை வெற்றிபெற்ச் செய்ய வேண்டும் என சிங்கள மக்கள் முடிவு செய்திருந்தார்கள். 2019தேர்தலிலும் இப்படித் தான் சிங்கள மக்கள் முடிவு செய்திருந்தார்கள் என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

இத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 91இடங்களை கைப்பற்றியது. லங்கா சமசமாஜ கட்சி 19இடங்களையும் கம்யூனிஸ்ட் கட்சி ஆறு இடங்களையும் கைப்பற்றி மொத்த 116ஆசனங்களை வென்றிருந்தது, அக் கூட்டணி. ஐக்கிய தேசிய கட்சி இத்தேர்தலில் படுதோல்வி அடைந்தது. அதற்கு மொத்த 17ஆசனங்களே கிடைத்திருந்தது.

ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவுக்கு அப்போது போதிய அரசியல் அனுபவம் இருக்கவில்லை. அவர் தன்னந்தனியாகவே செயல்பட வேண்டியிருந்தது. கணவர் காலமாகி விட்டார். மூன்று பிள்ளைகளும் சிறியவர்கள். அன்றைய தேசாதிபதி வில்லியம் கோபல்லாவ அவருக்கு உறவினரான போதிலும் எதிர்ப்புகள் நிறைந்த அரசியலில் அவருக்கு வழிகாட்டக் கூடியவராக அவர் இருக்கவில்லை. எழுபதுகளில் செல்வாக்கு மிக்க அமைச்சராகத் திகழ்ந்த பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்கவும் ஸ்ரீமாவின் உறவினர்தான். எனவே பீலிக்சை அவர் பக்கத்தில் வைத்துக் கொண்டார். எனினும் அவரைச்சுற்றி இடதுசாரி தலைவர்கள் இருந்தனர். அவர்கள் போதிய அரசியல் அனுபவம் நிறைந்தவர்கள். அவர்களில் ஒருவர் காலநிதி என்.எம். பெரேரா. மற்றவர் கொல்வின் ஆர்.டி சில்வா, புகழ்பெற்ற சட்டத்தரணி. மற்றவர் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பீட்டர் கெனமன். ஸ்ரீமாவின் அரசு சோஷலிச பாதையில் செல்ல வேண்டும் என அவர்கள் கருதினார்கள். தமது கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு இதைவிடச் சரியான தருணம் இனி வாய்க்காது என அவர்கள் நம்பினார்கள். ஸ்ரீமாவும் அப்படியே நினைத்தார். எனினும் பீலிக்சுக்கு தனி சோஷலிச அரசில் முழுமையான உடன்பாடு இருக்கவில்லையானாலும் அரசாங்கத்தில் அதை ஒரு விவாதப் பொருளாக்க அவர் விருப்பவில்லை. ஐ.தே.க 17ஆசனங்களுடன் மெலிந்து, சோர்ந்து காணப்பட்டாலும் அரசியல் குள்ளநரி என அழைக்கப்பட்ட ஜே.ஆர். ஐயவர்தன எதிர்க்கட்சித் தலைவராக அமர்ந்து ஆட்சியைக் கவிழ்க்க தருணம் பார்த்துக் கொண்டிருப்பதையும் அவரிடம் பிடியைக் கொடுத்துவிடக் கூடாது என்பதையும் பீலிக்ஸ் நன்கு உணர்ந்து வைத்திருந்தார்.

தன் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு ஸ்ரீமா அரசு தயாராகிக் கொண்டிருந்த போதுதான் 1971மாதம் விஜேவீர தலைமையிலான ஜே.வி.பி ஆயுதங்களை ஏந்தியடி அரசுக்கு எதிராக ஆயுத கிளர்ச்சியில் ஈடுபட்டது. ஸ்ரீமா அரசு சற்றும் எதிர்பாரா தருணம் இது. முதல் நாள் தாக்குதலில் நாட்டின் சில பகுதிகளை ஜே.வி.பி. தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருந்தது. அன்றைய இராணுவம் யுத்தத்துக்காக தயார்படுத்தப்பட்ட இராணுவம் அல்ல. இந்த இராணுவத்தை, 'அரசு விழாக்களில் வைபவ ரீதியாகக் கலந்து கொள்ளும் படை' என்று ஒரு முறை கே. ஆர். ஜயவர்தன வர்ணித்திருந்தார். இதை அவர் சொன்னது 1983ஆம் ஆண்டின் பின்னர் என்றால் 1971இல் இலங்கை இராணுவமும் பொலிஸ் படையும் எவ்வளவு மோசமான நிலையில் காணப்பட்டிருக்கும் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

ஜே.வி.பியை பொறுத்தவரை அரசைக் கவிழ்க்க அது மிகச்சிரியான தருணம் போதிய யுத்த அனுபவமோ, பெரும் கலகங்களை அடக்குவதில் பயிற்சியோ, போதுமான ஆயுதங்களோ இல்லாத சூழலிலேயே ஜே.வி.பியின் ஆயுத போராட்டத்தை ஸ்ரீமா அரசு எதிர்கொண்டது. இக்காலப்பகுதியில் பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க ஸ்ரீமாவுக்கு ஆலோசகராக நின்று எதிர்த்தாக்குதலில் படைகளை ஈடுபடுத்தினார். ஐந்து நாட்களில் அரசு தன்னை ஸ்தீரப்படுத்திக் கொண்டு ஜே.வி.பியினரை வேட்டையாடத் தொடங்கியது. தீவிர இடது சாரிகளான ஜே.வி.பியினர் ஆயுத கிளர்ச்சியில் ஈடுபட்டதால் அரசாங்கத்தில் உயர் பதவிகளை வகித்த என்.எம். பெரேரா, கொல்வின், பீட்டர் கெனமன் மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் பேச்சு மூச்சற்றவர்களானார்கள்.

ஜே.வி.பி. கிளர்ச்சி ஒடுக்கப்பட்ட போதிலும் அரசாங்கத்துக்கு அது பெரும் செலவை ஏற்படுத்தியது. இலங்கையை முற்றாக மறுசீரமைக்க வேண்டிய தேவை எழுந்தது தென்னிலங்கை சார்ந்த சிங்கள இளைஞர்களே பெருமளவில் கிளர்ச்சியில் ஈடுபட்டிருந்தனர். படித்த இளைஞர்கள் தொழில் வாய்ப்பின்றி வீடுகளில் முடங்கிக் கிடந்ததே அவர்கள் கிளர்ச்சி அரசியலுக்கு வரக் காரணம் என்பது தெரியவந்தது. எனினும் வேலையில்லாத் திண்டாட்டத்தை நீக்கி புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கும் நிலையில் அரசு இருக்கவில்லை.

ஏற்கனவே இரண்டு பில்லியன் வெளிநாட்டுக் கடன் சுமையை அரசு எதிர்கொண்டிருந்தது. ரஷ்ய மற்றும் சீன சார்பு சோஷலிச அரசுக்கு உதவி வழங்க சர்வதேச நாணய நிதியமும் உலக வங்கியும் முன்வரவில்லை. இலங்கை கேட்கும் போதெல்லாம் உதவிகளை இப்போது வழங்கிவரும் இந்தியா அப்போது உதவும் நிலையில் இல்லை. வறுமை மற்றும் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டிருந்த இந்தியாவும் உணவுக்காக கப்பல்களை எதிர்பார்த்திருந்த நேரம் அது. எழுபதுகளிலும் அரிசிக்கு உலக சந்தையில் தட்டுப்பாடும் விலை அதிகரிப்பும் காணப்பட்டது. 1953ஹர்த்தால் நடைபெறுவதற்கு எவை எல்லாம் காரணமாக இருந்தனவோ இவை எழுபதுகளிலும் அப்படியே தான் இருந்தன.

அப்போது இலங்கையின் சனத்தொகை 13மில்லியன், மிகக் குறைந்த விலையில் அரிசி மற்றும் ஏனைய பண்டங்கள் கிடைத்தன. தலைவலி காயச்சலுக்கும் மக்கள் இலவச மருத்துவ சேவையை ஆஸ்பத்திரிகளில் பெற்றுக் கொண்டனர். பல்கலைக்கழகம் வரை கல்வி இலவசம் இவ்வாறு குஷியான ஒரு வாழ்க்கைக்கு பழகிப்போயிருந்த இலங்கை மக்களை தொடர்ந்தும் அவ்வாறே கஷ்டம் புரியாமல் வைத்திருப்பது ஸ்ரீமா அரசுக்கு முடியாத காரியமான இருந்தது. வருமானத்தை விட அதிக பணத்தை அரிசிக்காகவும் ஏனைய உப உணவுகளுக்காகவும் இலங்கை செலவிட்டுக் கொண்டிருந்தது.

நாட்டின் பெரும்பாலான வயல் காணிகள், அரசின் நேரடி உதவிகள் கிடைக்காமையினாலும், உணவு உற்பத்தியில் பெரும் ஆதாயம் கிடைப்பதில்லை என்பதாலும், கைவிடப்பட்ட நிலயில் காணப்பட்டன. புதியரக நெல் வகைகள், போதிய உரங்கள் மற்றும் இரசாயன மருந்துகள் என்பன தாராளமாகக் கிடைக்காத காலம் அது. இதே சமயம் அரசாங்கம் வெளிநாட்டு கம்பனிகளுக்கும் உள்ளூர் தனவந்தர்களுக்கும் சொந்தமான பல்லாயிரக்கணக்கான தேயிலை, இறப்பர், தென்னந் தோட்டங்களை காணி சுவீகரிப்பு சட்டத்தின் கீழ் தன் வசம் எடுத்துக் கொண்டதால் பெருந்தோட்டங்களில் குழப்ப நிலை தோன்றி, பயிர் உற்பத்தியும் அவற்றின் ஏற்றுமதியும் பாதிப்புக்குள்ளாகி இருந்தது. தகுதியற்றவர்கள், ஆங்கில மொழி அறிவற்றவர் முன் அனுபவமற்றவர்கள், கட்சி ஆதரவாளராக இருந்தால் போதும் என்ற அடிப்படையில், பெருந்தோட்ட பணிகளில் அமர்த்தப்பட்டனர். மதுபான பாரில் மதுவிற்பவராக பணியாற்றிய ஒருவருக்கு தோட்ட சுப்பிரிண்டன் பதவி வழங்கப்பட்டதாக அப்போது ஒரு பத்திரிகையில் செய்தி வெளியாகி இருந்ததையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

ஒரு சமயத்தில் இரண்டு வார காலத்துக்கு போதுமான அரிசியே கையிருப்பில் இருந்ததாகவும் உடனடியாக சீனாவுக்கு இந் நெருக்கடி நிலையைத் தெரிவிக்கவே அந்நாடு 40ஆயிரம் தொன் அரிசியை கொழும்புக்கு அனுப்பி வைத்ததகவும் செய்திகள் வெளியாகி இருந்தன.

தேர்தல் பிரசாரத்தின் போது சந்திரனில் இருந்தாவது அரிசி கொண்டுவந்து தருவேன் என்று ஸ்ரீமா போட்ட கோஷம் வெறும் கோஷமாக மட்டுமே நீடிக்க, ஒரு அரிசி மற்றும் - மா பஞ்சத்தை நோக்கி இலங்கை நகர ஆரம்பித்தது. (தொடரும்)

அருள் சத்தியநாதன்

Comments