"ரணில் விக்கிரமசிங்கவை ஒரு கட்சியின் தலைவராக அல்லாமல் நாட்டின் தலைவராக பாருங்கள்" | தினகரன் வாரமஞ்சரி

"ரணில் விக்கிரமசிங்கவை ஒரு கட்சியின் தலைவராக அல்லாமல் நாட்டின் தலைவராக பாருங்கள்"

 
ஐக்கிய தேசியக் கட்சியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளராகவும் திருகோணமலை மாவட்ட அரசியலின் தனிப்பெரும் அரசியல் அடையாளமாகவும் திகழ்ந்த முன்னாள் துறைமுகங்கள், மற்றும் கப்பல் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் M.E.H. மஹ்ரூபின் இரண்டாவது புதல்வியும் கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளராக போட்டியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் மூதூர் தொகுதி அமைப்பாளருமான ரோஹினா மஹரூப் தினகரன் வாரமஞ்சரி நேயர்களுக்காக வழங்கிய நேர்காணல்......  
 
தினகரன்:- உங்கள் சமூக சேவை மற்றும் அரசியல் பிரவேசம் தொடர்பாக ஓர் அறிமுகத்தை தரமுடியுமா?   
 
ரோஹினா மஹரூப்:-  எனது தந்தை அரசியல் தலைமையாக இருந்ததால் எனது இரத்தத்திலேயே சமூக உணர்வு இயல்பாகவே இருந்தது. 2016 ம் ஆண்டில் ஒரு நாள் சமூக வலைதளத்தில் பயணிக்கலாம் என முகப்புத்தக கணக்கொன்றைத் திறந்தேன். பெண்களுக்கு எதுவும் பாதுகாப்பில்லை எனினும், பல ஆண் நண்பர்களை இணைத்துக் கொண்டு எனது பதிவுகளை, சமூக அரசியல் சார்ந்த கருத்துகளைப் பதிவு செய்தேன். நல்ல வரவேற்பையும் பெற்றுக்கொண்டேன். பல ஆண்கள் என்னை ஊக்குவிக்கும் முகமாக தங்கள் பின்னூட்டங்களை இட்டிருந்தார்கள். இது என்னை செயல்ரீதியாக மேலும் சமூக சேவைகளைச் செய்யத் தூண்டியது. ஊரின் பல பகுதிகளுக்கும் விஜயம் செய்து பலரது அபிப்பிராயங்களைக் கேட்டறிந்த போது, அரசியல் அங்கீகாரம் இருந்தால் மேலும் பல விடயங்களை சாதிக்கலாம் என்ற எண்ணம் மேலோங்கியது. படிப்படியாக UNP இன் " லக்வனிதா" மகளிர் அமைப்புடன் எனது அரசியல் பயணம் மெல்லத் தொடர்ந்தது.   
 
கடந்த 2020 ல் நடந்த பொதுத்தேர்தலின் போது கட்சியில் ஏற்பட்ட பிளவு காரணமாக, ஐ.தே.கட்சி சார்பாக திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளராக களமிறங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டமையே எனது திடீர் அரசியல் பிரவேசத்திற்கு ஏதுவாக அமைந்தது.   
 
தினகரன்:- முஸ்லிம் அரசியலில் பெண் தலைமைத்துவத்திற்கு வழங்கப்பட்டுள்ள இடம் குறித்து உங்கள் கருத்தை தெரிவிக்க முடியுமா?   
 
ரோஹினா மஹரூப்:- 52% பெண்க வாக்காளர்களைக் கொண்ட நமது நாட்டில் முஸ்லிம் சனத்தொகை வெறும் 9.7% மாத்திரமே. அதிலும் நமது திருகோணமலை மாவட்டத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்கேனும் பெண்கள் அரசியலில் இல்லை என்பதுதான் உண்மை. பெண்களுக்கு 25% ஒதுக்கப்பட வேண்டுமென்ற ரணில் விக்ரமசிங்கவின் 2016 உள்ளூராட்சி மன்ற கோட்டா நடைமுறைக்கு வந்த போதே சில பெண்கள் நமது மாவட்டத்திலும் அரசியலில் உள்வாங்கப்பட்டனர்.   
எனினும் நம் சமூகத்தைப் பொறுத்தவரை பெண்களுக்கான இடமென்பது விலக்காகவே இன்றளவும் கருதப்படுகிறது. தலைமைத்துவப் பண்பை ஒரு பெண் முன்வந்து வளர்த்துக் கொண்டாலும் அதற்கான அங்கீகாரம் பல வேளைகளில் பெண்களாலேயே மறுக்கப்படுகின்றதும் யதார்த்தம்தான். அதற்கான காரணம் பெரும்பாலான ஆண்களின் ஆதிக்க மனப்பாங்கே. எல்லா விமர்சனங்கள், முட்டுக்கட்டைகள் என்பவற்றைத் தாண்டி பெண்களால் அரசியலில் சாதிக்க முடியாதுள்ளதும் முஸ்லிம் சமூகத்தின் சாபக்கேடாகும். பெண் தலைமைத்துவத்தின் கீழ் ஆண்கள் எதற்கு அணிதிரள வேண்டுமென்ற தாழ்வு மனப்பான்மையும் இதற்கான முக்கிய காரணமாகும். காலங்காலமாக அடிபணியக் கற்றுக்கொண்ட பெண்கள் மேலும் விழிப்படைந்தால் அரசியலில் பெண்கள் பலர் எதிர்காலத்தில் மேலோங்கக் கூடிய சந்தர்ப்பம் அமையலாம் என்பது எனது தாழ்மையான கருத்தாகும்.   
 
தினகரன்:- உங்கள் தந்தையின் அரசியல் பயணத்தையும் திருகோணமலை மாவட்ட அரசியலின் தவிர்க்க முடியாத அவரின் அடையாளத்தையும் எப்படிப் பார்க்கிறீர்கள்?   
ரோஹினா மஹரூப்:- எனது தந்தையைப்போல இன்னொருவர் இனி ஒருபோதும் உருவாகவே முடியாது. அவரது சாயலையோ குணாதிசயங்களையோ எந்த அரசியல்வாதியிடமும் நான் கண்டதில்லை. அவர் நடந்து சென்ற பாதை இன்னும் வெறிச்சோடிக் கிடக்கின்றது. யாருடைய கால்தடங்களும் அதில் பதியப்படவில்லை. அதில் என்னுடையதும் அடங்கும். திருகோணமலை அரசியலில் அவர் ஒரு பொக்கிஷம். மீண்டும் அது உருவாவதில்லை. எனது சிறுவயதுமுதல் அவரை நான் அவதானித்திருக்கிறேன். அவரது அணுகுமுறையும் பிரச்சினைகளைக் கையாளும் விதமும் மிக அலாதியானது. எதற்கும் கோபப்பட மாட்டார். பொறுமைக்கு மறுபெயர் என்றால் M.E.H. மஹரூப் என்று சொல்வேன். சாந்தமான அவர் முகத்தில் எப்போதும் ஒரு புன்னகை இருக்கும். சிங்கள , தமிழ், முஸ்லிம் மக்கள் என மூவினமும் தூக்கி வைத்துக் கொண்டாடிய ஒரு தலைமை அவர். எனது தந்தை சிறுபான்மைக் கட்சிகளை வெறுத்தார். அவை மக்களிடையே பெரும் பாகுபாட்டைத் தோற்றுவிக்கும் என்று அன்றே எதிர்வு கூறினார், இப்போதுள்ள இனவாதமும், கட்சி வெறியும் அவர் எதிர்வு கூறியதையே பறை சாற்றுகின்றன. இயலுமான வகையில் அவரது உத்திகளை நானும் கையாள முயற்சிக்கிறேன், ஆனால், இக்காலகட்டத்தில் அவை எந்தளவுக்கு சாத்தியப்படும் எனப் புரியவில்லை.   
 
தினகரன்:- திருகோணமலை மாவட்டத்தில் உமது தந்தைக்குக் கிடைத்த இடம் உங்களுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கின்றதா?   
 
ரோஹினா மஹரூப்:- அவரது இடம் இப்போதும் காலியாக இருப்பதால் அந்த இடத்தைப் பிடிக்க முயற்சி செய்வதில் தவறில்லை. ஆனால், 100% அவரது இடம் எனக்கு கிடைக்குமா என்பது சந்தேகமே. ஏனெனில், அவரது காலப்பகுதி 1972 முதல் -1997 என்பது வித்தியாசயமான அரசியல் , சமூக நிலைமைகளைக் கொண்டிருந்தது, இப்போதயை நிலைமை நாம் நினைப்பது போலல்லாமல் பாரியளவு வித்தியாசத்தைக் கொண்டுள்ளது. மூலைக்கொரு கட்சி கட்சிக்கொரு தலைவன் என எங்கே பார்த்தாலும் யாரைப் பார்த்தாலும் அரசியலையே அலசிக் கொண்டிருக்கிறார்கள். Quantity கூடுதலாக இருக்கிறதே தவிர quality எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. முன்பெல்லாம் வாயை மூடிக்கொண்டு, காதைத் திறந்து வைத்திருந்த வாக்காளர் மத்தியில் நாம் வாழ்ந்தோம். இப்போது அநேகர் வாயைத் திறந்து கொண்டு காதுகளை மூடிக் கொண்டிருக்கிறார்கள். எனவே, அரசியலில் குறிப்பாக, பெண்ணாக களமிறங்குவதில் நம் மாவட்டத்தில் பல சவால்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது.   
 
தினகரன்:- உங்கள் சகோதரரான பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூபின் அரசியல் உங்கள் அரசியல் பயணத்திற்கு தடைகளை ஏற்படுத்துகிறதா?   
 
ரோஹினா மஹரூப்:- இல்லை. அவரது பயணம் வேறு எனது பாதை வேறு. இருவரும் ஒரே இலக்கை நோக்கிச் செல்லும் போதுதான் ஒருவருக்கொருவர் போட்டியாக இருக்க முடியும். அவர் அரசியலில் நிலைத்து நிற்பதற்கு பல உத்திகளைக் கையாளுகிறார். குறிப்பாக அனுதாப வாக்குகளைச் சேகரிப்பதில் அவரது அணுகுமுறை, நான் வாக்கு சேகரிப்பதிலிருந்து மாறுபடுகிறது அது. நான் பரிதாப அலையை என் பக்கம் திருப்ப முயற்சிக்கவில்லை. நாம் எதை இழந்தோம் என்பதைவிட நம்மால் என்ன முடியும் என்பதையே வாக்காளர்களுக்கு உணர்த்த வேண்டும். நான் எனது தலைவர் ரணில் விக்ரமசிங்க போல சில வியூகங்களை அமைத்து அதன் மூலம் வெற்றிபெறப் போராடுபவள்.   
 
தினகரன்:- திருகோணமலை மாவட்டத்தில் பெண்களின் மேம்பாட்டுக்காக உங்களிடமுள்ள செயற்றிட்டங்களை விபரிக்க முடியுமா?   
 
ரோஹினா மஹரூப்:- வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை அழிவுகளாலும் முன்பு சுனாமியின் தாக்கத்தாலும் வன்செயல்களாலும் பெரிதும் பாதிக்கப்பட்ட மாவட்டம் நம் திருகோணமலை. இதில் பெரும்பாலானவர்கள் விதவைகள் மற்றும் வயோதிபத் தம்பதியினர். பெண்களுக்கான பாதுகாப்பான சுயதொழில் திட்டங்கள் பலவற்றை அறிமுகப்படுத்தி அவர்களது வருமானத்தைப் பெருக்க வேண்டுமென்பது எனது பொதுவான குறிக்கோள். வெளிநாட்டுக்கு பணிப்பெண்களாக வேலைக்குச் செல்வதனால் பல குடும்பங்கள் இன்று சிதறிப்போய் இருக்கின்றது. சிறுவர் துஷ்பிரயோகங்கள் , சிறுபிள்ளைகளை வேலைக்கு அமர்த்துதல் போன்ற அடிப்படை உரிமை மீறல்கள் இடம்பெறுகின்றன. எனவே, இதற்கான தீர்வாக பயிற்றப்பட்ட பெண்களைக் கொண்ட ஒரு ஆடைத் தொழிற்சாலை என்பதை நம் ஊரிலேயே அமைத்துக் கொடுத்தால் பாதி சனத்தொகையின் வருமானம் அதிகரிக்கின்ற வாய்ப்பு ஏற்படும்.   
 
மேலும் தூரப் பிரதேசங்களிலிருந்து நடந்து பாடசாலை வருகின்ற பிள்ளைகளுக்கான ஒரு வாகன வசதி சேவைகளைப் பெற்றுக்கொடுப்பதும் இதில் முக்கியமாக அமையும். பின்தங்கிய கிராமப்புற பிரதேசங்களில் உள்ள மருத்துவ க்ளினிக் களின் தரத்தை மேம்படுத்துவதன் மூலம் பிறக்கின்ற குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க முடியும். இடியப்பம் அவித்தல், அப்பம் சுடுதல் போன்ற சில்லறை வியாபாரம் செய்கின்றவர்களுககு உபகரணங்கள், மற்றும் எரிபொருள் வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலமும் அவர்களது வருமானத்தை உறுதிப்படுத்த வழிவகுக்கலாம் என்பது எனது செயற்பாட்டுத் திட்டங்களில் சிலவாகும்.   
 
தினகரன்:- இலங்கை அரசியலில் பெண்களுக்கான இடம் தொடர்பில் திருப்தியடைகிறீர்களா?   
 
ரோஹினா மஹரூப்:- இல்லை. ஏனெனில் 225 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட நம் நாட்டில் வெறும் 10/ 12 பேர் மாத்திரமே பெண் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இது எந்த வகையிலும் யாராலும் திருப்திப்பட முடியாத காரணியாகும். நான் முன்பே சொன்னதுபோல பெண்களை ஓரம் கட்டுவதில் சில நேரங்களில் பெண்களே கூட காரணமாக இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. 52% பெண் வாக்காளர்கள் நினைத்தால் குறைந்தது 100 பெண்களையாவது பாராளுமன்றம் அனுப்ப முடியும். அவ்வாறான ஒரு மாற்றம் வரவேண்டும். வந்தால் நாட்டின் பாதிப்பிரச்சனை தீர்ந்து விடும் என்பதே எனது கருத்து. காரணம் பெண்கள் குரல் கொடுக்கும்பொழுது நம் சமூகம் அதனைக் கூர்ந்து அவதானிக்கிறது.   
 
தினகரன்:- ஒரு நெருக்கடியான சூழலில் ரணில் விக்கிரமசிங்க ஆட்சி பொறுப்பை ஏற்றிருக்கிறார். இந்த சூழ்நிலையை அவர் வெற்றிகொள்வார் என்ற நம்பிக்கை இருக்கிறதா?   
 
ரோஹினா மஹரூப்:- நம்பிக்கை இருக்கிறது. அந்த நம்பிக்கையை அவர் நிரூபித்தும் இருக்கிறார். பதவிக்கு வந்து குறைந்தது 20 நாட்களுக்குள் எரிபொருள் வரிசையை இல்லாமல் செய்திருக்கிறார். 1 1/2"வருடங்களுக்குத் தேவையான கேஸ் கையிருப்பில் வைத்திருக்கிறார். பல மணிநேரங்கள் இருந்த மின்துண்டிப்பு தற்போது ஒரு மணி நேரமாக மாறி இருக்கிறது. எனவே, மக்கள் எதிர்பார்த்தவைகள் மெல்ல வழமைக்குத் திரும்புகின்றன. எனவே, இதுவே ஒரு நல்ல சகுனம்தான். மேலும், நமது பொருளாதாரத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக மீட்டெடுப்பதற்கு சர்வதேச நாடுகளின் நன்மதிப்பைப் பெற்ற ஒரே தலைவர் என்ற பெருமையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிச்சயம் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. கட்சி அரசியல் பேசிக் கொண்டு பலரும் அந்த மூளைசாலியை புறக்கணிக்கப் பார்க்கிறார்கள். நான் சொல்வது என்னவென்றால், அவரை ஐ.தே.கட்சித் தலைவராகப் பார்க்காமல், நாட்டு மக்களின் ஜனாதிபதியாக குறைந்தது ஆறுமாத காலமாவது அவகாசம் கொடுங்கள் என்பதே ஆகும்.   
 
தினகரன்:- ஐக்கிய தேசியக் கட்சியை மீளக்கட்டி எழுப்புவதற்கான செயற்றிட்டத்தில் திருகோணமலை மாவட்டம் வெற்றியடையுமா?   
 
ரோஹினா மஹரூப்:- வெற்றியடையும்.ஆனால் அந்த வெற்றி மிக மெதுவாகவே நடைபெறும் என்பதுதான் இன்றைய சூழ்நிலையின் யதார்த்தம். ஏனென்றால், கிட்டத்தட்ட பூஜ்ஜியத்திற்குள் விழுந்து விட்ட கட்சியை உடனே தூக்கி நிறுத்திவிட முடியாது. அதற்கான காலமும் இதுவல்ல. பொருளாதார நெருக்கடியில் வரலாறு காணாத விலையேற்றத்தில் மக்கள் தினமும் அல்லலுரும் இவ்வேளையில், கட்சியின் நல்லது கெட்டதைச் சொல்லி மக்களைத் திசை திருப்பும் மனநிலையில் எந்த அமைப்பாளரும் இல்லை. ஆனால், தேசிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பக் கூடிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற்றுவிட்டால், கட்சியின் தலைவராக அவர் வெற்றி பெறுவதோடு, ஐ.தே.கட்சியை திருகோணமலை மாவட்டத்திலும் வெற்றி பெறச் செய்யலாம். மாற்றம் என்பது சாத்தியம் ஆனால் உடனே சாத்தியமில்லை.    
 
நேர்காணல்:- 
இர்ஷாத் இமாமுதீன் 
(கிண்ணியா தினகரன் நிருபர்)   

Comments