வாழ்வோரை வாழ்த்திய அஸ்வர் ஹாஜியார் | தினகரன் வாரமஞ்சரி

வாழ்வோரை வாழ்த்திய அஸ்வர் ஹாஜியார்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஏ. எச். எம். அஸ்வர்  ஹாஜியாரின் ஐந்தாவது நினைவு தினம் 2022ஆகஸ்ட்  29ம் திகதியாகும். அதனை முன்னிட்டு இக்கட்டுரை பிரசுரமாகிறது

உலகில் பிறந்த ஒவ்வொருவரும் அவர் இறந்த பின் அவரைப் பற்றி மக்கள் மறக்காது நினைவில் வைத்திருக்கும் வகையில் சேவைகள் செய்து மரணிப்பதுதான் அவர் இவ்வுலகில் பிறந்து வாழ்ந்ததற்கான உண்மையான பயனாக இருக்க முடியும். இந்த வகையில், தான் இறந்த பின்னரும் தன்னைப் பற்றி மக்கள் பேசிக்கொண்டேயிருக்கும் வகையில் நல்ல பல சேவைகளை செய்த மனிதராக காலஞ்சென்ற ஏ.எச்.எம். அஸ்வர்   திகழ்கிறார் என்றால் மிகையல்ல.

பாடசாலையில் படிக்கும் காலம் தொடக்கி, தனது இறுதி நேரம்வரை பொதுநலச் சேவை, எழுத்து, கலை, இலக்கியம், அரசியல் என தன்னையே அர்ப்பணித்து வாழ்ந்தவர் "அஸ்வர் ஹாஜியார்" என்று பலராலும் “அஜீ” என்று மிக நெருங்கியவர்களாலும் அன்போடு அழைக்கப்படும், முன்னாள் அமைச்சர் அல்ஹாட் ஏ. எச். எம். அஸ்வர். பல்வேறு விதத்திலான அவரது சேவைகள் அவருடைய நெருங்கிய அன்பர்களால் மட்டுமன்றி அணைத்துத் தரப்பினராலும் நினைவு கூரப்படுகின்றன..

இலங்கையின் முன்னணி முஸ்லிம் இயக்கங்கள் அனைத்திலுமே அவரது பங்களிப்பு நிறைந்த அளவில் இருப்பது விசேட அம்சமாகும்.

மர்ஹூம் ஷாபி மரிக்கார் முதல் அவர் இறக்கும்வரை, அகில இலங்கை முஸ்லீம் கல்வி மாநாட்டின் அனைத்து உறுப்பினர்களோடும் இணைந்து செயலாற்றி, மாநாட்டின் செயற்பாடுகள் வெற்றி பெற உழைத்தார். இவரது பங்களிப்பு இல்லாத எந்தவொரு முக்கிய நிகழ்வும் முஸ்லீம் கல்வி மாநாட்டால் நடத்தப்படவில்லை என்றால் அது மிகைப்படுத்தப்பட்ட கூற்றல்ல.

இதேபோல், மர்ஹூம் பாக்கீர் மாக்கார், அகில இலங்கை முஸ்லீம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனத்தை ஆரம்பித்த நாளிலிருந்து அதன் ஒவ்வொரு செயற்பாட்டிலும் இவர் ஈடுபட்டுள்ளார். இலங்கை முழுவதும் ஐநூறுக்கும் மேற்பட்ட முஸ்லிம் ஊர்களில் முன்னணிகள் நிறுவப்பட்டு சிறப்பாக செயல்பட்ட போது அவை ஒவ்வொன்றினதும் சிறப்பான செயற்பாட்டுக்கு மர்ஹூம் பாக்கீர் மாக்காரோடு இணைந்து பெரும் பங்களிப்பு செய்தார். இவ்வாறான ஒவ்வொரு முன்னணியின் ஒரு சில அங்கத்தவர்களையேனும் பெயர் கூறி அழைக்கும் அளவுக்கு அவர்களோடு அவருக்கு தொடர்பு இருந்ததை நானறிவேன். இது அவருக்கே உரிய தனித்துவமாகும்.

அகில இலங்கை முஸ்லீம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் அன்றைய கால கட்டத்தில் வெளியிட்ட மாதமிருமுறை பத்திரிகையான "உதயம்", அதன் ஆங்கில வெளியீடான "டோன்" (Dawn) என்பவற்றை தொடர்ச்சியாகவும் சிறப்பாகவும் வெளியிட முழுமூச்சாக செயலாற்றினார். இவை ஒவ்வொன்றிலும் அவரது ஆக்கங்கள் இடம்பெற்றே வந்துள்ளது.

இலங்கை முஸ்லிம் இயக்கங்கள், அவற்றில் சேவையாற்றும் உறுப்பினர்கள், முஸ்லிம்  கலை இலக்கியவாதிகள், முஸ்லிம் தலைவர்கள், முஸ்லிம் அரசியல்வாதிகள், முஸ்லிம் நிறுவனங்கள் என்பன போன்ற விடயங்களில் இவர் ஒரு நடமாடும் கலைக்களஞ்சியமாக திகழ்ந்தார். இவற்றில் எந்தவொரு விடயத்தைப் பற்றி கேட்டாலும், எவரைப்பற்றி வினவினாலும் உடன் தகவல் தரும் ஆற்றல் அவருக்கு இருந்தது. அவர் அறிந்திருந்த இந்தத் தகவல்களை திரட்டி ஆவணப்படுத்த நடவடிக்கை எடுங்கள் என்று நான் அவரை பலமுறை வேண்டிக் கொண்ட போதும் அது சாத்தியப்படாமல் போனமை எம் சமூகத்தின் துரதிஷ்டமாகும்.

இலங்கையில் மட்டுமல்ல, தமிழ் நாட்டிலும் மலேசியாவிலும் கூட ஒரு முஸ்லிம் முக்கியஸ்தர் இறந்துவிட்டால் அவருக்காக அனுதாபத் செய்தியை உடனடியாக தவறாது வெளியிடுவார். அதில் இறந்தவர் பற்றிய முக்கிய குறிப்புகள் அடங்கியிருக்கும். ஒரு குக்கிராமத்த்தின் முக்கியஸ்தருக்காகவும் இவர் இவ்வாறு செய்வது அவர்களோடு இவருக்கிருந்த நெருங்கி தொடர்பை பறைசாற்றுவதாக இருந்தது. இவ்விடயத்தில் இவரைப் போன்ற ஒருவரை இனிமேலும் காண முடியுமா என்பது சந்தேகமே.

1950ல்  லங்கா சமசமாஜக் கட்சியில்  இணைந்து அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய அஸ்வர் ஹாஜியார் 1955ல் அரசியலில் ஐக்கிய தேசியக் கட்சியோடு தன்னை முழுமையாக இணைத்து இயங்கினார். முன்னாள் அமைச்சர்களான மர்ஹூம் எம். எச். முஹம்மத், மர்ஹூம் பாக்கீர் மாக்கார் இருவரோடும் அடுத்ததடுத்து நெருக்கமாக இணைந்து செயல்பட்டார். பின்னர் முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாசாவின் நெருங்கிய சகாவானார். அவராலேயே முதன்முதலாக தேசிய பட்டியல் பாராளுமன்ற அங்கத்தவராகவும்,  பின்னர் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சராகவும் நியமனம் பெற்றார்.

அதன் பின்னர், காலத்தின் கட்டாயத்தில் ஐ.தே க.விலிருந்து விலகி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவோடு சேர்ந்து நெருங்கிச் செயல்பட்டார். அவரும் இவரை தேசிய பட்டியல் அங்கத்தவராவும், அமைச்சராகவும் நியமித்தார். ‘தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நீண்டகாலம் இருந்தவர்’ என்ற சிறப்பு இவருக்கே உரித்தானது. ‘இவர் இக்காலகட்டத்தில் தனது பன்முகப்படுத்தப்பட்ட ஒதுக்கல்களின் கீழ் இலங்கையின் சகல மாவட்டங்களைச் சேர்ந்த பல கிராமங்களுக்கும், பல்வேறு அமைப்புகளுக்கும்  நிதியொதுக்கி சேவையாற்றியிருப்பது பலர் அறியாத விடயம்.

இவர் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சராக இருந்தபோது ஆற்றிய சேவைகள் தனித்த்துவமானவை. இக்காலப்பிரிவில் எழுத்தாளர்களையும், இலக்கியவாதிகளையும், கலைஞர்களையும், பத்திரிகையாளர்களையும் அவர்கள் வாழும்போதே வாழ்த்தி கௌரவிக்க வேண்டுமென்ற உன்னத செயற்பாட்டை ஆரம்பித்து வைத்தார். "வாழ்வோரை வாழ்த்துவோம்" என்ற அழகிய மகுடத்தின் கீழ் இத்தகையோரை தேர்வு செய்து "சவுத்துல் ஹக்", "தாஜுல் உலூம்", “சவுத்துல் அந்தலீப்" போன்ற அழகிய அரபுப் பட்டங்களையும், கூடவே பணமுடிப்பும் வழங்கி கௌரவித்தார். இன்றும், என்றும் தொடர வேண்டிய இந்த நற்பணியை, இவரைப் போன்று முறையாக தொடர இன்னும் எவரும் முன் வராமை கவலைக்குரியது.   துரதிர்ஷ்டவசமானது.

இதே போன்று பல எழுத்தாளர்களை, கலைஞர்களை, பத்திரிகையாளர்களை தனது பாராளுமன்ற உரைகளில் பெயர் குறிப்பிட்டு உரையாற்றி கௌரவித்து அவர்களது பெயர்களையும் "ஹன்சாட்"டில் பதிவு செய்துள்ளார் என்பது கவனிக்கத்தக்க விடயமாகும்.

தமிழ், சிங்களம், ஆங்கிலம் மும்மொழிகளிலும் நன்கு தேர்ச்சி பெற்ற, இம்மும்மொழிகளிலும் ஒன்றுபோல் சரளமாக பேச, எழுத, ஆக்கங்கள் படைக்க ஆற்றல் பெற்றவர். இவரது இம்மொழியாற்றல் இவர் எங்கு சென்றாலும் உயர் நிலையடைய உதவியது என்றால் மிகையல்ல. இதன் மூலம் சமுதாயத்தின் பிரச்சினைகளை மேடைகளிலும், கூட்டங்களிலும், பாராளுமன்றத்திலும் அவ்வப்போது உரத்து ஒலிக்கச் செய்தார்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் இவரது பங்களிப்பு தொடர்ச்சியாக இடம்பெற்றது. தமிழ் மொழியில் இவரது கிரிக்கட் நேர்முக வர்ணனையும் மறக்க முடியாதது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் இவரது சிறப்பான பங்களிப்புகள் தேவைக்கேற்ப இடம்பெற்றமையும் ஈண்டு குறிப்பிடத்தக்கது.

எனக்கும் அஸ்வர் ஹாஜியாருக்குமிடையில் பல்வேறு விடயங்களில் மிக நெருக்கமான உறவு இருந்தது. அகில இலங்கை முஸ்லீம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனத்தின் பொதுச் செயலாளராகவும், அதன் தேசிய தலைவராகவும் நான் செயலாற்றிய போதும், அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாட்டின் பொதுச் செயலாளராக இருக்கின்ற வேளையிலும் இவற்றினூடாக சமூக நலன் சார்ந்த விடயங்களை செயற்படுத்துவதில் பல்வேறு விடயங்களை நேரிலும் தொலைபேசி மூலமும் கலந்துரையாடுவது வழக்கம். எனது எழுத்தாக்கங்கள் பற்றியும் மிக ஆர்வத்தோடு பேசுவார். ஆலோசனைகள் வழங்குவார். எல்லா குடும்ப நிகழ்வுகளிலும் தவறாது பங்கு கொண்டுள்ளார்.

1991ல் நான் சட்டத்தரணியாக பதவிப் பிரமாணம் செய்தபோது அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம், கொழும்பு பிரதான வீதியில் இருந்த அதன் தலைமையகத்தில் எனக்கு ஒரு பாராட்டு நிகழ்வை நடாத்தியது. அதில் உரையாற்றிய அஸ்வர் ஹாஜியார் என்னிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தார். நான் எனது மாவட்டமான கண்டிக்குச் சென்று சட்டத்தரணி தொழிலைத் தொடங்கி தொடர  வேண்டும். கூடவே அரசியலிலும் என்னை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதன் மூலம் கண்டி பிரதேச அரசியல் ஜாம்பவான் ஏ .சீ .எஸ். ஹமீத்துக்குப் பின்னர் கண்டியில் ஏற்படக் கூடிய முஸ்லிம் அரசியல் வெற்றிடத்தை என்னால் நிரப்ப முடியும் என்றார். அரசியலில் எனக்கு அதீத ஆர்வம் இல்லாமையினால் இந்த ஆலோசனையை நான் பின்பற்றவில்லை. ஆனால் அவரது அந்த தீர்க்கதாசினத்தின் தாத்பரியத்தை இன்று என்னால் நன்கு உணர முடிகிறது.

எல்லோருடனும் அன்போடும், நட்போடும், தோழமையோடும் பழகும் அஸ்வர் ஹாஜியாரை நாம் அன்போடு "அஜீ" என்றுதான் எமது வட்டத்தில் அழைப்போம். அவர் இதனை தனது புனைப் பெயராகக் கொண்டு நிறைய எழுத்தாக்கங்கள் படைத்ததுமுண்டு.

 எல்லாம் வல்ல அல்லாஹ் அஸ்வர் ஹாஜியார் தான் வாழும் நாட்களில் செய்த நன்மைகளுக்கும், சேவைகளுக்கும்  பல மடங்கு அருள்களை வழங்கி, அன்னாரது மறுமை வாழ்வை வெற்றியானதாக ஆக்கியருள்வானாக! ஆமீன்!

இலக்கியச் செம்மல்,
கலாபூஷணம் சட்டத்தரணி
ரஷீத் எம். இம்தியாஸ்

Comments